Tuesday, July 26, 2011

ஆகஸ்டு மாத இதழ்


சந்தா விவரம்:


ஆண்டு சந்தா: (
உள்நாடு )ரூ220/- (வெளிநாடு)US$30
இரண்டு ஆண்டு சந்தா: (
உள்நாடு )ரூ440/- (வெளிநாடு)US$50
ஆயுள் சந்தா: (
உள்நாடு )ரூ5000/- (வெளிநாடு)US$300

அனைத்துத் தொடர்புகளுக்கும்.

பதிப்பாளர்: சேது.சொக்கலிங்கம்
கவிதா பப்ளீகேஷன்: 8, மாசிலாமணி தெரு, தியாகராயநகர், சென்னை-600 017
தொலைபேசி: 24364243, 24322177

Sunday, July 24, 2011

களங்கமற்ற வர்கள் கல்லெறியட்டும்!

வேத சங்கக் காலத்திலேயே
ஜன நாயகத்தின்
வேர் இருக்கிறது.
இன்றைய உலகில் மிகப்பெரிய
ஜனநாயக நாடு
முதல் தேர்தலில் (1952) 173 மில்லியன்
2009 தேர்தலில் 714 மில்லியன்
வாக்காளர்கள் கணக்கில்
ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் அமெரிக்க நாடு
கூட்டணி சேர்ந்தாலும் கிட்டே வர இயலாது.
இந்தியாவோடு சுதந்திரம் பெற்ற
ஏனைய நாடுகளோடு ஒப்பிட்டாலும்
நெஞ்சு நிமிர்த்தி நடக்க
நியாயங்கள் உள்ளன.
அரசியல் அதிகாரமும்
அறிவியல் கலை இலக்கியச் சாதனைகளும்
அடித்தட்டு மக்களுக்கும்
கைமாறிக் கொண்டிருக்கின்றன.
உலகமே ஆடிப் போன
பொருளாதாரச் சரிவிலும்
நிலைகுலையாத இந்தியா.
குடியரசுத் தலைவர்
சில மாநில முதல்வர்கள் என்று
அதிகாரப் பகிர்வு
பெண்களுக்கும் சாத்தியமாக்கியிருக்கிறது.
ஏழை எளிய மக்கள்
கல்வி பெறவும்
அரசு நிர்வாகத்தில் பங்கேற்கவும்
இந்திய ஜனநாயகம் இடம் தந்திருக்கிறது
ஆனாலும்
ஊடகம் காட்டும் ஜனநாயகம்
ஊழல் பாழ்கிணற்றில்...
ஏழ்மை என்றால் இந்தியா என்று
உலகம் கருதியது ஒரு காலம்.
இன்று
வல்லரசுகள் திரும்பிப் பார்க்க
வளர்கிறது இந்தியா
இந்தப் பிம்பத்தைச் சிதைக்க
யாருக்கோ நாம் அடியாள் ஆகிறோமோ?
இந்தியப் பிரதமர் யார் வரவேண்டும்?
திட்டக்குழுத் தலைவர் யார் வரவேண்டும்?
இந்திய மக்களே தீர்மானித்த காலம் இருந்தது.
ஜனநாயகம் என்றால் தேர்தல் இருக்கும்.
தேர்தல் என்றால் கட்சிகள் வரும்.
ஆட்சியைப் பிடிக்க கட்சிகள் நடத்த
தொழிலதிபர்களின் கருணை வேண்டும்.
கருணை காட்டியவர்கள் அதிகாரச் செயற்பாட்டைக்
கட்டுக்குள் வைக்கும் கருத்தில் இருப்பார்கள்
நேரு சொல்கிறார்:

Elections bring out the evil side of a man
and they donot always lead to the
success of the better man....
We Compromise with some thing
that is wrong, then we have lost
the fight already and
it matters little to who tops the poll.”

இன்றைய ஜனநாயகம்
கட்சிகளின் ஜனநாயகம்
தேர்தலில்
கட்சிகளே வெற்றிபெறுகின்றன
கட்சிகளைக்
கட்டுப்படுத்தவும், ஆராதிக்கவும்
ஊடகங்கள்
ஊடகச் சிறையில்
நமது கண்களும் காதுகளும்
அதனால் தான்
ஊழல் பாழ்கிணற்றில்
இந்திய ஜனநாயகம் என்று
ஊடகம் காட்டுகிறது
உலகம் சிரிக்கிறது
நாமும் கல் எறிகிறோம்.
இந்தியாவில் ஊழலே இல்லையா?
என்பதல்ல நம் கேள்வி.
ஊழலைத் தவிர வேறொன்றுமே
இந்தியாவில்
உருப்படியாக இல்லையா?
இந்திய ஜனநாயகம்
மக்களின் ஜனநாயகமாக
மாறும் போது தான்
இமையம் உலகிற்குத் தெரியும்
ஏசுநாதர் சொல்கிறார்

“If any one of you is
without sin, let him
be the first to throw a
stone at her.”

ஆம்!
களங்கமற்றவர்கள்
கல்லெறியட்டும்!

-ம.ரா

Monday, July 18, 2011

பாகிஸ்தான் சிறுகதைகள் - வெ.சா

பாகிஸ்தான் சிறுகதைகள் தொகுப்பு இது. பாகிஸ்தான் இந்தியாவிலிருந்து மத அடைப்படையில், பிரிந்து அறுபது வருடங்களுக்கு மேலாகிறது. முஸ்லிம்கள் மத அடிப்படையில் மாத்திரம் ஹிந்துக்களிடமிருந்து வேறுபட்டவர்கள் இல்லை என்றும். அவர்கள் கலாசாரமும், வாழ்நோக்கும், சரித்திரமும் வேறு, என்றும் அவர்கள் ஹிந்துக்கள் பெரும்பான்மையாக உள்ள இந்தியாவில் சிறுபான்மையினராக இருந்துகொண்டு அவர்களது வாழ்வையும் அடையாளங்களையும் காத்துக்கொள்ள முடியாது என்றும் வாதித்து கலவரங்கள் செய்து பிரிந்து சென்றார்கள். அறுபது வருட காலம் இரண்டு தலைமுறைக்கும் மேற்பட்ட காலம் தான். இன்று அறுபது வயதாகிவிட்ட எந்த பாகிஸ்தானியும் அவன் பயந்த ஹிந்து அரசின் கீழும் வாழாதவன் தான். தன் சக மதத்தினராலேயே ஆளப்படுகிறவன். தான் அந்த வாழ்க்கை, அந்த மனிதர்கள் உலகம் அவன் கண்ட கனவுகள் பற்றி இந்தக் கதைகள் சொல்லும் அல்லவா?

நமக்குத் தோப்பில் முகம்மது மீரானோ, ஜாகீர் ராஜாவோ, சல்மாவோ காட்டும் உலகம் ஏதோ வேற்று நாட்டவர் உலகம் அல்ல. வாஸ்தவம் அவர்கள் வாழ்க்கை நியதிகள் கட்டுப் படும் தர்மங்கள், அவர்கள் நம்மிலிருந்து வேறு பட்டவை. எந்த சிறு பிரிவுகளுக்கும் இடையே இந்த வேறுபாடு காணப்படும் தான். ஆனால் அவை நமக்குப் பரிச்சயமானவை. பரிச்சயம் என்ற நிலையிலிருந்து இன்னும் கொஞ்சம் ஆழமாக நமக்கு உணர்த்துபவை. அத்தகைய புரிதலிலிருந்து வேறுபட்டவை அல்ல பாகிஸ்தானில் வாழும் சிந்திகளின் வாழ்க்கையோ பஞ்சாபிகளின் வாழ்க்கையோ. அதே போலத்தான் பங்களாதேஷில் வாழும் வங்க முஸ்லிம்களின் வாழ்க்கையும். அவை நமக்குப் பரிச்சயமானவை தான்.சாதத் ஹஸன் மண்டோ இந்தியாவிலிருந்து கொண்டு எழுதுவதும் பின்னர் பாகிஸ்தானுக்குக் குடிபெயர்ந்து எழுதுவதும் பின்னப்பட்டு விடுமா என்ன? பலூச்சிஸ்தானிலும் எல்லைப்புற பிரதேசங்களிலும் வாழும் மனிதர்களின் வாழ்க்கை வேண்டுமானால் நமக்குப் பரிச்சயமில்லாததாக இருக்கலாம்.

பாகிஸ்தான் பிரிவினைக்கு முன் லாகூர் பெரிய திரைப்பட கேந்திரமாக இருந்தது. அந்த இடத்தைப் பிரிவினைக்குப் பின் மும்பை பறித்துக் கொண்டது. நிகழ்ந்தது இட மாற்றம் தான். பம்பாய் ஹிந்தி படங்கள் என்றால் பாகிஸ்தானில், ஒரு வெறி பிடித்த வரவேற்பு என்று தான் சொல்ல வேண்டும். எவ்வளவு தான் அரசு தடைகள் விதித்திருந்தாலும், பாகிஸ்தானியர்களின் பம்பாய் ஹிந்திப் பட வேட்கையை ஒன்றும் செய்ய முடிவதில்லை. திருட்டு விஸிடி எந்தத் தடையுமில்லாமல் இங்கிருக்கும் அமீர், சல்மான், ஷாருக்கான்களையும், மாதுரி தீக்ஷித்தையும் பாகிஸ்தானின் அடிமட்ட திரைப்பட ரசிகனையும் கவர்ந்த நக்ஷத்திரங்களாக்கியுள்ளன. (ஒரு ஜோக் பரவலாக எந்த பாகிஸ்தானியும் சொல்வது, “மாதுரி தீக்ஷித்தைக் கொடுத்தால், கஷ்மீரை நீங்கள் வைத்துக்கொள்ளலாம்”} எந்த பாகிஸ்தானி அதிகாரியோ, மந்திரியோ ப்ரெசிடெண்டோ எவனானாலும் அவனது இந்தியாவுக்கு எதிரான பகை உணர்வு எவ்வளவு தீவிரமாக இருந்தாலும் அவன் இங்கு காலடி வைத்ததும் பார்க்க விரும்புவது மொகலே ஆஸம் படம் தான். அதோடு அவன் மிக எளிதாக ஆர்வத்தோடு தன்னை ஐக்கியப் படுத்திக் கொள்ள முடிகிறது.

இது ஒரு காட்சி. ஒரு தரத்து மக்களின் ஆசைகளும் எதிர்பார்ப்புகளும் என்று சொல்லவேண்டும். இது சாதாரண மக்களின் ரசனையையும் சந்தோஷத்தையும் சொல்கிறது. ஆனால் பாகிஸ்தான் என்று முஸ்லிம்களுக்கான ஒரு தேசத்தை உருவாக்க வேண்டும் என்று முனைந்தவர்கள் இந்திய மண்ணின் பண்பாட்டிலிருந்தும், கலாசாரத்திலிருந்தும், வரலாற்றிலிருந்தும் வேறு பட்ட ஒன்றை பாகிஸ்தான் மக்களின் நாட்டின் அடையாளமாகக் காணவிரும்பினர்கள். அப்படி ஒன்று இருப்பதாகவும் அதைக் கண்டெடுத்து வளர்க்க விரும்பினார்கள். பாகிஸ்தான் 1947-இல் உருவானதாக, அறுபது வருடங்களே ஆன ஒரு புதிய நாடாக நமது சரித்திரம் சொல்லும். ஆனால் பாகிஸ்தானியர் தம் வரலாற்றை இஸ்லாம் தோற்றம் கொண்ட கணத்திலிருந்து தொடங்குவார்களா அல்லது முதல் இஸ்லாமியப் படையெடுப்பைத் தன் வரலாற்றுத் தொடக்கமாகக் கொள்வதா என்பதில் தான் அவர்களுக்குள் சர்ச்சை. படையெடுத்து தன் முன்னோர்களையும் நாட்டையும் நாசப்படுத்தியவர்களை, பலவந்தமாக மதம் மாற்றியவர்களைத் தம் தேச ஸ்தாபகர்களாகக் கொள்ளும் விசித்திரம் அது. அவர்கள் தம்மை இந்தியத் துணைக்கண்ட பண்பாட்டையும் வரலாற்றையும் பகிர்ந்து கொண்டவர்கள் தாம் பின்னர் மதம் காரணமாகப் பிரிந்தவர்கள் என எண்ணுவதில்லை. அவர்கள தம்மை அடையாளப் படுத்திக் கொள்வது மத்திய கிழக்கு முஸ்லிம் நாடுகளோடு. உலக முஸ்லிம் இனத்தோடு சேர்ந்தவர்களாகவே அவர்கள் தம்மைக் காண்கிறார்கள். அல்லது காண விரும்புகிறார்கள். காணத் தொடங்கி யுள்ளார்கள் என்று சொல்ல வேண்டும்.
அதிகார வர்க்கமும் அது சார்ந்த அறிவு ஜீவிக் கூட்டமும், மதத் தலைமைகளும் விரும்புவதும் திட்டமிட்டுச் செயல்படுவதும் ஆனால் சாதாரண மக்கள் தம் இயல்பான வாழ்க்கையை காண்பதும் நேர் எதிரானதாக உள்ளன. முதலில் சொன்னது லதா மங்கேஷ்கரையும் ஹிந்தி சினிமாவையும் உள்ளே வர அனுமதிக்காது. ஹிந்துஸ்தானி சாஸ்திரிய சங்கீத கலைஞர்கள் பெரும்பாலோர் முஸ்லிம்களாக இருந்த போதிலும் அங்கு அந்த சங்கீதத்துக்கு இடமில்லை. ஆனால் ஹிந்திப் படங்களையும் லதா மங்கேஷ்கரின் பாடல்களையும் தாங்கிய திருட்டு டிவிடிக்கள் லாகூரிலிருந்து பெஷாவர் வரை எல்லா பஜார்களிலும் தடையின்று எளிதாகக் கிடைக்கும். காபூலில் கூட கிடைத்து வந்தது இடையில் தடை செய்ய்பட்டு இப்போது மறுபடியும் கிடைக்கத் தொடங்கியுள்ளன.

பாகிஸ்தான் சிறுகதைகளைத் தொகுத்துத் தந்துள்ள இந்தஜார் ஹுஸேனுக்கு இந்த பிரசினைகள் முன்னின்றன. அதைப்பற்றியும் தன் முன்னுரையில் விரிவாக எழுதியுள்ளார்.

பிரிவினைக்குப் பிறகு, பாகிஸ்தான் என்ற ஒரு தனி நாடு உருவான பிறகு ஒரு புதிய தேசிய உணர்வு பிறக்க வேண்டும். அப்படி ஒரு உணர்வு இருப்பதாகச் சொல்லித் தானே தனியாகப் பிரிந்து செல்ல சண்டையிட்டனர். மேலும் பிரிவினைக்குப் பிறகு அதன் சரித்திரமும், அரசியல் சூழலும் தனியாகத் தான் உருவெடுக்கத் தொடங்கின. ஜனநாயகம் என்பது அவ்வப்போது பேருக்கு எட்டிப் பார்த்தாலும், பெரும்பாலும் ராணுவ சர்வாதிகார ஆட்சிதான் பாகிஸ்தானில் நிலவியது. உறவுகளும் மத்திய கிழக்கு நாடுகளோடு தான் விரும்பபட்டது.. மத உணர்வு ஒரு உச்சகட்ட தீவிரத்திற்கு புகட்டப்பட்டது. எழுப்பப்பட்டது. ஹிந்துக்களும் சீக்கியர்களும் இரண்டாம் தர குடிகளாகி ஒதுக்கப்பட்டனர். கிறித்துவர்களும் அப்படியே. ஹிந்துக் கோயில்கள் ஒவ்வொன்றாக மறைந்தன. ஆனால் தக்ஷசீலம் இன்றும் ஒரு புராதன சின்னமாக பாதுகாக்கப்பட்டு வருகிறது. தக்ஷசீலத்தின் வரலாறு 500 கி.மு.விலிருந்து தொடங்குகிறது. அந்த புராதன நகரம் நாலந்தா போல ஒரு புராதன பல்கலைக் கழகத்துக்கு பிரஸித்தி பெற்ற பௌத்தர்களையும் ஹிந்துக்களையும் வரலாற்றோடு பிணைக்கும் நகரம். அது பாகிஸ்தான் அரசு சொல்வது போல, முகம்மது நபி தோன்றி உலகிற்கு ஒளி வீசும் முன் இருந்த இருண்ட யுகத்தைச் சேர்ந்தது. ஹிந்துக் கோயில்களை விட்டு வைக்காத அரசு இதை ஏன் பாதுகாக்கிறது என்பது புரியவில்லை. ஒரு வேளை பாமியான் புத்தரை வெடி குண்டு வைத்துத் தகர்த்த தாலிபான்களின் வருகைக்குக் காத்திருக்கிறார்களோ என்னவோ.

இந்த மாதிரியான குழப்பமான ஊஞ்சலாட்டத்தில், யதார்த்தத்திற்கும், மத அதிகார அரசியலுக்கும் .இடையேயான இழுபறியில் எழுத்தாளர்கள் உலகம் என்னவாக இருந்திருக்கும்? இருக்க அரசும் மதஸ்தாபனங்களும் விரும்பும்?. எது பாகிஸ்தானின் இலக்கியமாக, தேசிய இன அடையாளம் கொண்ட எழுத்தாகக் கருதப் படும்? பாகிஸ்தான் உருவான அதற்கு முந்தியும் பின்னரும் ஆன சமீப கால கட்டத்தை ஒதுக்கிவிட வேண்டும். அது இந்திய தேசிய உணர்வுகளின் எச்ச சொச்சங்களை பிரதிபலிப்பதாக இருக்கும். ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தை ஒதுக்கி பின்னர் எழும் எழுத்துக்களை மாத்திரம் எடுத்துக்கொள்ள வேண்டும், அதாவது பாகிஸ்தான் தேசிய உணர்வுடன் பாகிஸ்தானின் இன்றைய சூழலிலிருந்து எழுந்த எழுத்துக்களை மாத்திரம் தேர்வுக்கு எடுத்துக்கொள்ள வேண்டும் என்பது தொகுப்பாளர் இந்தஜார் ஹுஸேனின் அணுகலாக இருந்திருக்கிறது என்று அவரே எழுதியிருக்கிறார். இன்னமும் அவர் சொல்கிறார். பிரிவினையை ஒட்டியும் அதன் பின் சற்றுக் காலம் யதார்த்த வகை எழுத்துக்களே எழுதப்பட்டன என்றும் அதன் பின் விட்டு விட்டுத் தொடர்ந்த ராணுவ யதேச்சார அரசுகளின் கட்டுப்பாட்டில் யதார்த்த வகை எழுத்துக்கள் சாத்தியமில்லாமல் போயின. காரணம் ராணுவ அடக்குமுறையில் படும் துன்பங்களை, ஏமாற்றங்களை வெளிப்படையாக சொல்லும் யதார்த்த வகை எழுத்துக்கள் எப்படி எழக்கூடும்?. யாருக்கு அந்த தைரியம் இருக்கும்? எனவே எதையும் நேரடியாகச் சொல்லாத எழுத்து முறை கையாளப்பட்டது. ”குறியீடுகளும், அருவுருவங்களும் ஒன்றோடென்று கொளுவிக்கொண்டு ஒரு புதிய அவதாரம் எடுத்தது” என்று .

கதைகளைத் தேர்ந்தெடுத்த தொகுப்பாளர் இந்தஜார் ஹுஸேன் சொல்கிறார். அதுவும் கண்டனங்களுக்கும் வரவேற்புக்கும் ஆளாகியது என்றும் சொல்கிறார். இருந்தாலும் தான் அனேக சிறந்த கதைகளை எடுத்துக்கொள்ள முடியவில்லை என்றும், பாகிஸ்தானின் 50 ஆண்டு கால சிறுகதை வளர்ச்சியை இது பிரதிபலிக்கும் என்றும் சொல்கிறார்.

இத்தொகுப்பில் பாகிஸ்தானில் பேசப்படும், உருது, பஞ்சாபி, சிந்தி, புஷ்டோ, சரைக்கி, பலூச்சி ஆகிய எல்லா மொழிகளிலிருந்தும் கதைகள் இத் தொகுப்பில் உள்ளன. மொத்தம் 32 கதைகளில், 23 உருது, 3 சிந்தி, 2 பஞ்சாபி, பலூச்சி, சரைக்கி இரண்டிலும் ஒவ்வொன்றும் பலூச்சியிலிருந்து இரண்டு. உருது மொழியில் எழுதியவர்கள் எந்தப் பிராந்தியத்தையும் சேர்ந்தவராக இருக்கலாம்.. அது எல்லோராலும் பேசப்படும், புரிந்து கொள்ளப் படும் அதிகார மொழியும் ஆகும்.
மிகுந்த எதிர்பார்ப்புடன் இத்தொகுப்பைப் படிக்கத் தொடங்கிய எனக்கு இது மிகுந்த ஏமாற்றத்தையே தந்தது. இந்தஜார் ஹுஸேனும் சிறுகதை எழுதுபவர் தான். எனினும் தன் முனைப்போடு அவர் செயல்படவில்லை. ஆஸிஃப் ஃபரூக்கி என்பவருடன் கூட்டாகவே இத் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

இந்தஜார் ஹுஸேனின் கதையையே எடுத்துக் கொள்வோமே. அவர் தந்தது இந்தக் கதையை தன் எழுத்தின் சிறந்த அடையாளமாக, பாகிஸ்தானின் இன்றைய தேச உணர்வுகளின் பிரநிதித்வப் படுத்தும் ஒன்றாக,த் தான் கருதியிருப்பார். படகு என்று அந்தக் கதையின் தலைப்பு.. அந்தக் கதை எங்கோ ஆரம்பித்து எங்கோவெல்லாமோ தன்னிஷ்டத்துக்குப்பயணம் செய்கிறது. பயணிகள். ஒயாது பெய்யும் மழை. எப்போது தம் பயணத்தைத் தொடங்கினார்கள் என்று நினைத்துப் பார்க்கிறார்கள். மழை பெய்யத் தொடங்காத அன்று தான் கிளம்பியிருப்பார்கள். வீடுகள் அடித்துச் செல்லப்படுகின்றன. அடுத்து கில்காமேஷும் தன் சக பயணிகளுடன் பேசுகிறான். உத்னாபிஷ்டமிடம் கடவுள் சொன்னாராம்.” நீ தப்ப விரும்பினால் வீட்டை இடி, படகைக் கட்டு” என்றாராம். ஒவ்வொரு உயிரினத்திலிருந்து ஒன்றை படகில் ஏற்றிக்கொள், தப்பிச் செல்” என்றாராம். பின் லாமாக் வருகிறான். நோவா வருகிறான். அடுத்து “ஒரு பிரும்ம முகூர்த்தத்தில் தொட்டியில் ஒரு மீன் வளர்ந்து தொட்டியை விட பெரிதாகிறது. அது மனு முந்தின நாள் தர்ப்பணம் செய்தபோது ஆற்றில் கிடந்த மீனாம். அது அடைக்கலம் கேட்டு முதலில் தன் கமண்டலத்தில் அடைக்கலம் தந்து எடுத்துவரப்பட்டு, வளர்ந்து பின் தொட்டியில் விடப்பட்டு பின் தொட்டியையும் மீறி வளரவே கங்கையில் விடப்பட்டு பின்னும் அது ஆற்றையும் மீறி வளரவே அதை சமுத்திரத்தில் விடுகிறார் மனு. மீன் இப்படி வளர்வது விஷ்ணு குள்ளனாக வடிவெடுத்து பின் திரிவிக்கிரமனாக உலகை அளந்த நினைவு வருகிறது. மனு பயந்து போய் இறைவனை வேண்டுகிறார். இறைவன் ஒரு பிரளயம் வரப் போகிறதென்றும், அதிலிருந்து தப்ப “ஒரு படகைக் கட்டு. ஒவ்வொரு ஜீவராசிக்கும் ஒன்றாக படகில் ஏற்றித் தப்பித்துக்கொள்” என்றாராம். ஒரு பெரிய சர்ப்பம் தோன்ற இந்த சர்ப்பத்தால் இந்தப் படகை மீசையோடு இறுக்கிக் கட்டு” என்று இறைவன் பணிக்க, அடுத்த பாராவில் ஹஸரத் நோவாவின் மனைவி அவனை நோக்கி வருகிறாள். அவள் முகத்தில் சாம்பல் துகள். கைகளில் கோதுமை மாவு’’ இப்படி கதை போகிறது. “போதுமடா சாமீ” என்று கதறத்தான் தோன்றுகிறது. கஜினி முகம்மதுவிலிருந்து பாகிஸ்தான் வரலாற்றைத் தொடங்குகிறவர்கள் கற்பனையில் விஷ்ணுவும், மனுவும், தர்ப்பணமும், பிரும்ம முகூர்த்தமும் கில்காமேஷும் நோவாவும் வந்து தொந்தரவு செய்வது வேடிக்கைதான்.

இது போன்று தான் பெரும்பாலான கதைகள் இத்தொகுப்பில் நிறைந்துள்ளன. என் எளிய மூளைக்கு இதெல்லாம் ஒன்றும் புரியவில்லை. நம்ம ஊர் ஸ்ட்ரக்சுரலிஸ்டுகள், போஸ்ட் மாடர்னிஸ்டுகள், மந்திர யதார்த்த வாதிகளுக்கு புரியலாமோ என்னவோ. யதார்த்தம் மீறிய கற்பனை, கதை புனைவு என்பது நம் மரபில் உள்ளது தான். பல நூற்றாண்டுகளா,க ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாக. நமது புராணங்கள், பஞ்ச தந்திரக் கதைகள், நமது பழம் காவியங்கள், (பகுத்தறிவாளர்கள் கோஷமிடும் சிலப்பதிகாரத்தையும் சேர்த்து) விக்கிரமாதித்தன் கதைகள் என நிறைய உண்டு. அவற்றை நாம் சலிப்பில்லாது படிக்க முடியும். அவை யதார்த்தம் மீறிய ஒரு உலகை சிருஷ்டித்தாலும், அவற்றின் பேச்சிலும் சம்பவங்களிலும், நடப்பிலும் ஒரு அர்த்தம் இருக்கும் தர்க்கம் இருக்கும்.

ராணுவ அடக்கு முறைகளை மீறி எழுத வந்தவர்கள் இப்படி கற்பனைகளில் ஆழ நிர்ப்பந்திக்கப் பட்டார்கள் என்றால், இவை என்ன அர்த்தத்தில் ராணுவ அரசின் கண்களில் மிளகாய்ப் பொடியைத் தூவி நமக்கு ரகசியமாக என்ன செய்தியைச் சொல்கின்றன என்று தெரியவில்லை. இம்மாதிரியான ஜாலங்களே கதையாக உள்ளவை அனைத்தையும் நான் ஒதுக்கிவிடுகிறேன். மாதிரிக்கென ஒன்றைச் சொல்லியாயிற்று. உருது மொழியில்தான் இம்மாதிரியான கதைகள் நிரம்பத் தரப்பட்டிருக்கின்றன. மொத்தம் 503 பக்கங்களைக் கொண்ட இப்-புத்தகத்தைப் படிப்பது ரொம்பவும் பொறுமையைச் சோதிக்கிற காரியமாகப் பட்டது. கடைசியில் 32 கதைகள் தேர்ந்தெடுக்கப் பட்டவை படித்தும் பாகிஸ்தான் பற்றி ஏதும் பிம்பமோ உணர்வோ எழவில்லை.
ஆனால் எனக்குப் பிடித்திருந்த, படிக்க சுவாரஸ்யமாக இருந்த, இன்றைய, நேற்றைய பாகிஸ்தானைப் பற்றிச் சொன்ன கதைகளும் இருந்தன. முதலில் ஸதத் ஹஸன் மண்டோ வின் ஜன்னலைத் திறங்கோ. பிரிவினையின் போது நிகழ்ந்த கலவரத்தில் அம்ரித்ஸரிலிருந்து தன் மகளோடு தப்பி ஓடி வந்த சிராஜ்ஜுதீன் பாகிஸ்தானில் தன் அகதி முகாமில் சந்திப்பவர்களையெல்லாம் சகீனாவின் அடையாளம் சொல்லி சகீனாவைப் பார்த்தீர்களா என்று கேட்டு அலைகிறார். தடியும் லாரியுமாக அலையும் ஒரு வாலிபர் கூட்டத்திடமும் சொல்கிறார். அவர்கள் உதவுவதாகச் சொல்கிறார்கள். பின்னர் அம்ரித்சரில் வயல் வெளியில் பயந்து ஒடுங்கிக் கிடக்கும் ஒரு பெண்ணைப் பார்க்கிறார்கள். அவளுக்கு உணவும் ஆறுதலும் அளித்து லாரியில் எடுத்துச் செல்கிறார்கள். முகாமுக்குப் பக்கத்தில் ரயில் பாதைக்கருகில் ஒரு பெண் மூச்சற்றுக் கிடப்பதைப் பார்த்த சிலர் அவளை முகாமின் மருத்துவ மனையில் சேர்க்கிறார்கள். தன் மகளெனத் தெரிந்து பார்க்க சிராஜ்ஜுதீன் அங்கு வர டாக்டர் ஜன்னலைத் திறந்து வெளிச்சத்தில் பார்க்க அவள் விரல்கள் அசைய நல்ல வேளை உயிருடன் இருக்கிறாள் என்று சொல்கிறார். அந்தப் பெண்ணின் விரல்கள் அசைந்தது தன்னையறியாது தன் பாவாடை நாடாவைத் தளர்த்தத் தான். வெறி பிடித்த கும்பல் மதமும் அறியாது. மனிதாபிமானமும் அறியாது என்று மண்டோ யாரை நோக்கிச் சொல்கிறார்? ஹிந்துக்களையா முஸ்லிம்களையா?

பிரிவினைக்கு முன்னும் பின்னும், இந்தியாவிலிருந்தும் பாகிஸ்தானிலிருந்தும் எழுதியவர் மண்டோ. அவர் யார்?

இந்தஜார் ஹுஸேன் மண்டோ பாகிஸ்தானுக்குப் போன பின் எழுதிய கதையிலிருந்துதான் பாகிஸ்தானிய கதை என்று ஒன்றைத் தேர்ந்தெடுத்திருக்கிறார். இந்தக் கதையிலிருந்து மண்டோ எந்த வகைப் படுத்தலில் அகப்படுகிறார்?

பகவன் தாஸ் மேஸ்திரி என்று ஒரு கதை ஷௌக்கத் சித்திக் என்பவர் எழுதியது. யார் நிலத்துக்கு தண்ணீர் திறந்து விடுவது என்பது ஒரு கிராமத்துக் கலவரப் பிரசினை. கலவரம் வெட்டு குத்து என்று வளரும் ஒன்று. இரண்டு தரப்புகளும் மோதிக்கொள்ளும் போது பகவன் தாஸ் மேஸ்திரி எந்த அதிகாரமும் இல்லாத போதும் தன் எளிமையும் இல்லாமையுமே தன் தார்மீக பலமாக அவர்களைச் சமாதானப்படுத்துகிறார். இவர்கள் ஜீலம், சிந்து நதிக்கரையில் வாழும் நிலப் பிரபுக்கள் இல்லை. மலைப் பகுதிகளில் வாழும் இனக்குழு மக்கள். அவர்களுக்கு ஒரு பெரிய மனுஷர். நீதி மன்றமாக இருப்பவர். சர்தார் மஜாரி. அவர் எந்த வழக்கையும் தள்ளிப் போடும் சுபாவத்தவர். ஒரு பழைய வழக்கைத் தீர்த்தே ஆகவேண்டும். எத்தனை காலம் தான் தள்ளிப் போடுவது? இரண்டு தரப்பையும் அபராதம் கட்டச் சொல்லி அதை, அந்த அபராதத்தை பகவான் தாஸ் மேஸ்திரிக்குக் கொடுக்கிறார். இதுவும் ஒரு மாதிரியான கட்டைப் பஞ்சாயத்து தான். அதில் சர்தார் மஜாரியிடம் பாது காப்பு பெறுவது, அங்கு அந்த மலைப் பிரதேச இனக் குழு முஸ்லிம்களிடையே தனித்து விடப்பட்ட பலமற்ற ஹிந்து மேஸ்திரி.

கதவு எண் 34 ஒரு சிந்தி கதை. சக்கர் அணைக்கட்டை பார்வையிட வந்த காவலாளி அங்கு ஒரு கதவில் பிணம் ஒன்று கிடப்பதைப் பார்த்து ரொம்ப விசுவாசமாக, நல்ல பிரஜையாக போலீஸ் ஸ்டேஷனில் புகார் செய்கிறான். அங்குள்ள போலீஸும் நம்மூர் போலீஸ் மாதிரிதான். நீண்ட வாதத்திற்குப் பின், அதைத் தள்ளிவிட முடியாது ஒரு ஆளை அனுப்பி பார்த்து வரச் சொல்கிறான். பார்த்தவன் அது கதவு 35-இல் தொங்குவதால் தன் ஆணைக்குட்பட்டதல்ல என்று இன்னொரு போலீஸ் ஸ்டேஷனுக்கு அனுப்பி விடுகிறான். அத்தோடு அந்தப் பிணத்தை அடுத்த கதவில் தொங்கவிடச் செய்து விடுகிறான். இதே கதை அடுத்த போலீஸ் ஸ்டேஷனிலும் நடக்கிறது. அதைப் பார்வையிடச் சென்றவன் அது கதவு எண் 34-இல் தொங்குவதால் தன் அதிகார வரம்பிற்குட்பட்டதல்ல என்று சொல்லி அந்தப் பிணத்தை மறுபடியும் கதவு 35இலிருந்து 34-க்கு எடுத்துச் சென்று தொங்கவிடுகிறான். எந்த போலீஸும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளாத அந்தப் பிணம் கடைசியில் ஆற்றில் தூக்கி எறியப்பட்டு கேஸ் க்ளோஸ் செய்யப்படுகிறது விசாரணை இல்லாமலேயே. இவர்கள் நல்லவர்கள் என்று தோன்றுகிறது. நம்மூரில் புகார் சொல்லவந்தவன் கொலை காரனாவான், எந்த கட்சிக் காரன் என்று விசாரித்து. அல்லது அவனிடம் பணம் பிடுங்கலாமா என்று பார்ப்பான்.

இஸ்மெய்ல் கௌஹரின் ‘அப்பா’ கதை புஷ்டோ கதை. பட்டாணிய இன மக்களைத் தான் நமக்குத் தெரியுமே. ஒரு நிலத் தகராறு. வெளியில் வீட்டு வாசலில் சத்தம் கேட்டதும் துப்பாக்கி எடுத்து வெளியே வருகிறார் அப்பா. மனைவி தடுக்கிறாள். இரண்டு மகன்களும் அழுகிறார்கள். வெளியே வந்த அப்பா தகராறு செய்த குல்மீரின் இரண்டு மகன்களையும் சுட்டுக் கொன்றுவிட்டு தப்பி ஓடிவிடுகிறார். பின்னர் வெகுநாட்கள் கழித்து பிடிபட்டதும் அவர் கோபம் தணிந்து கிராமத்துப் பஞ்சாயத்துத் தீர்ப்புக்கு பணிவதாகச் சொல்கிறார். பஞ்சாயத்து பெரியவர்கள் தீர்ப்பு சொல்கிறார்கள். ஒரு லக்ஷம் பணம் நஷ்ட ஈடாகவும் அத்தோடு ஒரு பெண்ணையும், அப்பா. குல்மீருக்குக் கொடுக்கவேண்டும். கொடுப்பதற்கு அப்பாவிடம் இருக்கும் பெண் அவர் மனைவி தான். அப்பா தன் இரு மகன்களோடு தனித்து விடப் படுகிறார். குல்தீனுக்கு ஒரு லக்ஷம் பணமும் ஒரு பெண்ணும் கிடைக்கிறது. பஞ்சாயத்துத் தீர்ப்பை கிராமமே ஒத்துக்கொண்டு சமாதானமடைகிறது.

நீறு பூத்த நெருப்பு. சரைக்கி இலாகாவைச் சேர்ந்த கதை. இன்றைக்கான கதை. என்றைக்குமான கதை. தார் பாலை வனத்தில் தலைமறைவில் வாழும் ஒரு ரகசிய புரட்சியாளர் கூட்டம். ஹூஸ்னி தலை மறைவாக வாழ் இடம் தேடி வருகிறார். கடைசியில் விசாரித்து வந்த இடம் இரண்டு பெண்கள் தனித்து வாழும் ஒரு குடிசை. ஒரு பெண் ஆசிரியை. இன்னொருத்தி இளையவள் ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு தகவல் எடுத்துச் செல்பவள். கதை நிகழ்வுகள் என்று ஏதும் இல்லை. அவர்கள் அங்கு வாழும் சூழ்நிலையைச் சொல்கிறது. இரண்டு பெண்கள். ரகசிய வாழ்வில். பேப்பரில் ஹூஸ்னியின் பெயர் வந்து விடுகிறது. ஹூஸ்னி அந்த இடத்தை விட்டு மறுபடியும் வெளியேறுகிறார். வழியில் தான் வழி கேட்ட பக்கிரி ஹூஸ்னியைக் கடிந்து கொள்கிறார்.

இப்படி இன்னும் ஒரு சில கதைகள் உள்ளன. இன்றைய பாகிஸ்தானின் காட்சிகள் சிலவற்றை நமக்குச் சித்திரித்துக் காட்டுபவை.

ஆனால் மொத்தத்தில் 500 பக்கங்களில் ஒரு பெரும்பகுதி வெறும் மாயா ஜாலங்கள். நாம் அவை எதுவும் சொல்கின்றனவா என்று தலையைச் சொரிந்து கொள்ளவேண்டியது தான். அப்படி என்ன இந்த மாயா ஜாலங்கள் ராணுவ அரசை எதிர்த்து ரகசிய மொழியில் என்ன சொல்ல முயல்கின்றன, தெரியவில்லை.

பாகிஸ்தான் சிறுகதைகள் தொகுப்பு: இந்தஜார் ஹுஸேன். தமிழாக்கம் மா. இராமலிங்கம் “எழில் முதல்வன்” வெளியீடு சாகித்ய அகாடமி, குணா பில்டிங்ஸ், தேனாம்பேட்டை, அண்ணா சாலை, சென்னை-600 001
பக்கங்கள் 503 விலை ரூ 220

Saturday, July 16, 2011

இன்று பகல் உணவுக்கு...


ஈரோடு தமிழன்பன்

எந்தக் கவிதையும்
இந்தப் பகலில் கனவுகாண முடியாது
வார்த்தைகளின்
வெப்ப தட்ப நிலைகளைப் பொருத்தமாகப்
பராமரிக்க முடியவில்லை;
குளிரூட்டும் யாப்பு உறுப்பு எதையும்
யாப்பிலக்கணக்காரன்
கண்டுபிடித்துத் தரமுடியவில்லை
அர்த்தம் ஆவியாகப் போய்விடாமல்
பாதுகாப்பதற்குக் கவிஞனாலும் வழிசொல்ல
முடியவில்லை.

இன்று பகல் உணவுக்கு உன் வீட்டுக்கு
நீ சொன்னபடி வரமுடியவில்லை நண்பனே!

பகலை எழுத எழுதக்
காலம் கூடத் தனது கையைச்
சுட்டுக் கொள்கிறது
மரத்தின் அடியிலிருந்து வெளியே வர
அஞ்சுகிறது நிழல்
பறவைக் கூடுகள் சட்டிகளாக அவற்றுள்
வெயில்
வெள்ளைக் கிழங்குகளை வேகவைக்கிறது
இரவின் தூதர்கள் கைது செய்யப்பட்டும்
பூடகக் கவிதைகளுக்குள்ளும்
கடவுள் தரகர்களின் உதடுகளுக்குள்
ஒடுங்கியிருக்கும் உச்சாடனங்களிலும்
அடைக்கப்பட்டனர்.

எங்கிருந்து எதிர்ப்புக் கிளம்பும் என்று
வெப்பத் துப்பாக்கிகளோடு
வேவு பார்த்துக் கொண்டிருக்கிறது பகலின்
உளவுப் படை
இன்று பகல் உணவுக்கு உன்வீட்டுக்கு
நீ சொன்னபடி வரமுடியவில்லை நண்பனே!

பகல் தாள்களில்
பதிப்பிக்கப்பட்டிருக்கும் கோடை உத்தரவுகளால்
பச்சை உடைகள் களையப்பட்டுப்
பரிசோதிக்கப் படுகின்றன வனங்கள், காடுகள்,
மலைச்சரிவுகள்
கிணறு குளங்களின் திரவ வாழ்க்கை மீது
விசாரணைகள் நடத்தப்படுகின்றன
கருத்த காகங்கள் மேலும் கரித்து
கரைதல் தடைசெய்யப்பட்ட அச்சத்தில்,
உடைய இருக்கும் கிளைகள் மீது
உட்காருவதும் எழுவதுமாய் உள்ளன.

ஈரம் பறிமுதல் செய்யப்பட்ட
உரையாடல்களின் விக்கல்களுக்குள்
புழுங்கிப் புதைகின்றனர் மக்கள்
நதிகளின் ஓடைகளின் ஏரிகளின்
வெறுமைகளுக்குள் இருந்து மனிதர்களை
விழுங்க
ஒரு பெரிய சமாதியாக வாய்திறக்கிறது
பகல்
ஒருவேளை அங்கு நாம் பார்த்துக் கொள்ளலாம்
இன்று பகல் உணவுக்கு உன்வீட்டுக்கு
நீ சொன்னபடி வரமுடியவில்லை நண்பனே!

Friday, July 15, 2011

வீதிதோறும் காமதேனு - இந்திரா பார்த்தசாரதிதமிழ் நாட்டில் இன்று பணத்தை அள்ளித்தரும் காமதேனுவாக இருப்பது கல்வி வியாபாரம். வியாபாரம் செவ்வனே நடப்பதற்கு உறுதுணையாக இருப்பவர்கள் ஆட்சியில் அமர்ந்திருக்கும் அரசியல்வாதிகள்.

கல்வியின் நோக்கம் இதுதானா? ‘கல்’ என்றால் ‘தோண்டுதல்’. இது ‘வி’ என்ற விகுதி பெற்றுக் ‘கல்வி’ என்றாகிறது. ‘தோண்டுதல்’ என்றால் துருவித்துருவி ஆராய்தல். அதாவது கல்வியின் நோக்கம் விசாரித்துத் தெளியும் அறிவு.

பிரமிப்பு உணர்வுதான் அறிவின் தொடக்க நிலை. முதல் அடிவைக்கக் கற்று நடக்கும் குழந்தைக்குப் பிரபஞ்சத்தின் எல்லையின்மையை அறிந்துகொள்ளத் தூண்டி விரியும் பிரமிப்பு உணர்வு. சந்திரனில் காலை வைத்த லூ யிஸ் ஆர்ம்ஸ்டாராங் சொன்ன முதல் வாக்கியம்‘ ‘மனிதனுக்கு ஓர் சிறிய அடி, ஆயினும் இது மனித சமுதாயத்துக்கு மாபெரும் பாய்ச்சல்’ அணுவாக(வாமனாக) வந்து அகிலத்தை அளந்த திருவிக்கிரமனைப் போல.

தற்காலக் கல்வித் திட்டத்தில் இப்பிரமிப்பு உணர்வின் உந்துதலினால் விளையும் விசாரணை அறிவுக்கு இடமிருக்கின்றதா? கல்வியை வியாபாரமாக்கிய பிறகு, விசாரணை அறிவைப் பற்றி ஏன் கவலைப்பட வேண்டும்?

பழங்காலத்தில் கல்வியை மூன்று நிலைகளில் கண்டார்கள்.
1. ஸ்ரவணம்
2. மனனம்
3. நிதிதியாசனம்.

‘ஸ்ரவணம்’ என்பது கேள்வி அறிவு. ’கற்றலில் கேட்டல் நன்று’
‘மனனம்’ என்பது கற்பவற்றை மனத்தில் நிறுத்துதல்.
சிந்தனையை ஒருமைப்படுத்தி விசாரித்தறியும் அறிவு ‘நிதிதியாசனம்’.
‘தொட்டனைத் தூறும் மணற்கேணி மாந்தர்க்கு
கற்றனைத் தூறும் அறிவு’ என்பது குறள்.

ஆனால் இன்றையக் கல்வித் திட்டத்தில் காலியாக இருக்கும் அறையைப் பொருள்கள் வைத்து நிரப்புவது போல், ஒரு மாணவனின் மூளையைத் தன்னளவில் செயல்பட வைக்காமல், ஏட்டுக் கல்வியை வைத்துத் திணிக்கிறார்கள்.

உபநிஷத்தில் சனத்குமாரன் நாரதரிடம் சொல்லுகிறான்: ‘நீ வேதங்களை மனனம் செய்திருப்பதாகக் கூறுகிறாய். நீ கற்றிருப்பவை அனைத்தும் வெறும் வார்த்தைகள்தாம்’.
‘வார்த்தைகள், வார்த்தைகள், வார்த்தைகள்’ என்று சலிப்புடன் அலுத்துக் கொள்கின்றான் ஷேக்ஸ்பியரின் ஹாம்லெட்.

இன்றையக் கல்வித் திட்டத்தின்படி, ஒரு கெட்டிக்கார மாணவன் என்பவன் சுயமாகச் சிந்திக்கத் தெரியாத, மற்றவர்களால் மூளையில் நிரப்பப்பட்ட ஒரு நடமாடும் கலைக்களஞ்சியம், அவ்வளவுதான். தன் அறிவை ஓர் ஆக்கப்பூர்வமான கருவியாகப் பயன்படுத்தத் தெரியாத ஒரு புத்தக அலமாரி.

முன்பெல்லாம், சுதந்திரம் பெற்ற பிறகு, ஒரு இளைஞனின் அதிக பட்ச ஆசை, ஐ.ஏ.எஸ் தேர்வுகளில் வெற்றிப் பெற வேண்டுமென்பது. இப்பொழுது மென்பொருள் விஞ்ஞானி ஆக வேண்டுமென்பது. காரணம், கவர்ச்சிகரமான வேலை, கைநிறையச் சம்பளம். ஐ.ஏ.எஸ். அதிகாரி என்றால் இப்பொழுதெல்லாம் அமைச்சர்களின் கொத்தடிமை என்பதால், அதில் இருந்த கவர்ச்சி போய்விட்டது.

உண்மையான கல்வி அறிவு நடைமுறை அறிவை (சிஷீனீனீஷீஸீ sமீஸீsமீ) விரிவாக்கும். இதை விளக்க ஒரு கதை உண்டு.

ராமானுஜருடைய சிஷ்யர் கூரேசர். அவருடைய மகன் பராசரப்பட்டர். கருவிலே திருவுடையவரான அவர், சிறுவனாக இருந்தபோது, அவர் தோழர்களுடன் விளையாடிக் கொண்டிருந்த தெருவில், வட இந்தியாவிலிருந்து அனைத்து நூல்களையும் கற்றறிந்த ஒருவர் விருது ஊதிக்கொண்டு வந்தார். (அதாவது, அந்தக் காலங்களில்,கல்வி கேள்விகளில் சிறந்த ஒருவர் வீதியில் வரும் போது, அவர் பெற்ற பட்டங்களையெல்லாம் ஒருவர் உரக்கச் சொல்லிக்கொண்டு வருவது வழக்கம். நாம் இன்றும் அந்த மரபை வேறு வகைகளில் பேணி வருகிறோம் என்பது அனைவரும் அறிந்த செய்தி.) பட்டர் வீதியிலிருந்த மண்ணைக் கையில் அள்ளி கொண்டு அந்த சர்வஞ்ஞரிடம் போய், ‘இதில் எவ்வளவு மண் இருக்கிறது?’ என்று கேட்டார். அந்த அறிஞர் அவர் கையை நெடுநேரம் உற்றுப் பார்த்து மனத்தில் கணக்குப் போட்டு யோசித்துப் பார்த்து விட்டு, ‘எவ்வளவு மண் என்று எப்படிச் சொல்ல முடியும்? எண்ணிப் பார்த்தால்தான் தெரியும்.” என்றார்.

பட்டர் சொன்னார்: ‘அறிஞரே! ஒரு கைப்பிடி மண் என்று சொல்லத் தெரியவில்லையே! உங்களுக்கா விருது?’ நூல்களைப் படித்தால் மட்டும் போதாது, படித்தவற்றின் அடிப்படையில், சுயமாகச் சிந்திக்கப் பழக வேண்டுமென்பதை விளக்க இக்கதை.
இன்று நம் பள்ளிக்கூடங்களோ, அல்லது பல்கலைக் கழகங்களோ அப்படி இயங்குகின்றனவா? வகுப்பறைகள் நாடக அரங்குகளாயிருக்கின்றன. ஆசிரியர் நிகழ்த்தும் கலைஞர். மனனம் செய்தவற்றை வசனமாக ஒப்பிக்கின்றார். மாணவர்கள் பார்வையாளர்கள். ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்குமிடையே அறிவுபூர்வமான உரையாடல் ஏதுமில்லை. எல்லாம் ஆசிரியரின் தனிமொழிதான். மாணவர்களைச் சிந்திக்கத் தூண்டினால்தானே உரையாடல் சாத்தியம்?
சாந்தோக்கிய உபநிஷத் கூறுகிறது:‘ சிஷ்யனைச் சிந்திக்கத் தூண்டுபவனே ஓர் உண்மையான குரு. அவர் சிஷ்யனைக் கைப் பிடித்துப் போய்ச்சேர வேண்டிய இடத்துக்கு அழைத்துச் செல்ல மாட்டார். அவர் இந்தத் திசையில் உன் நாடாகிய காந்தார தேசம் இருக்கிறது. வழியை விசாரித்துக் கொண்டு போ என்று சொல்லும் வழிகாட்டி. நீ இவ்வாறு விசாரித்துப் போவதனால் பெறும் அநுபவமே கல்வியறிவு’.

ஒவ்வொரு மாணவனின் உள் ஆற்றலை அவனுக்கே தெளிவிக்கும் ஒரு கலாசாரக் கருவியாகத்தான் ஆசிரியர் இருக்க வேண்டுமென்றால், அப்பணி அவ்வளவு எளிதன்று. எல்லா வகைகளிலும் பரிணாமமுற்று, நன்கு தேர்ந்த ஆசிரியரால்தான் இதைச் செய்ய இயலும்.
இன்று பல்கலைகழகப் பேராசிரியர்களில் பெரும்பான்மையோர் இப்பணிக்கு வேறு பல வாய்ப்புக்களை இழந்ததன் காரணமாக வந்தவர்கள். மற்றவர்கள், ஆட்சிபீடத்தின் ஆசிர்வாதத்தால் வந்தவர்கள். இவர்களில் மீனாட்சிசுந்தரம் பிள்ளைகளையோ, தியாகராசச் செட்டியார்களையோ எதிர்பார்க்க முடியாது.

கல்வியையும் கலாசாரத்தையும் பிரித்துக் காண இயலாது. கல்வியின் நோக்கமே, தனிமனித சுயசிந்தனையினால், சமூகப் பண்பாட்டைப் பேணுதல் என்பதுதான்.
கலையின் சாரத்தைத் தனதாக்கிக் கொள்ளுதல் கல்வி. ‘கற்கும் கல்விக்கு எல்லை இலனே’ என்னும் என்பது திருவாய்மொழி. அதாவது, கல்விக்கு நிலைக்களனாக இருக்கும் பிரமிப்பு உணர்வுக்கு ஓய்வே இல்லை என்று பொருள்.’ அறியுந்தொறும் அறியாமைக் கண்டற்றால்’ என்றார் வள்ளுவர்.

‘ஒழுக்கம் என்றால் நடை யழகு.
ரீபூக் கடையில் ஆயிரம் ரூபாய்’
என்பது போல், கல்வியைக் கடை வியாபாரமாக்கிவிட்டால், கலாசாரம் எங்கிருந்துவரும்?

Thursday, July 14, 2011

கவிதை

இந்த முறை
என்னைக் கொல்லப் போவதில்லையென
அறியலானேன்
கொலையாளி
பிறந்த நாளுக்கென
ரோஜாக்களைப் பரிசளிப்பதில்லை
பசித்த முகத்தின்
சுவாச மறிந்து
விருந்துச் சோறு தருவதில்லை
கொலை செய்கிறவன்.
தெருக் குழந்தையை
அள்ளியெடுத்து
இக்கத்தில் வைத்துக் கொள்கிறவன்
கொலை செய்யக் கூடுமென்று
யாரும் நம்பப் போவதில்லை
உதடுகளில் பொருத்திய
சொற்களைத் தூர வீசிவிட்டு
புன்னகையைப்
போவோர் வருவோர்க்கெல்லாம்
வாரியிறைக்கிறவனுக்கு
கொலை வெறி இருக்குமென
சந்தேகிக்க வேண்டியதில்லை
என்னை முத்தமிடுகிறாய்
அணைத்துக் கொள்கிறாய்
ஆயிரமாயிரம் ஆண்டு
வாழ்ந்துவிட வேண்டுமென்று
திரும்பத் திரும்ப பிரியமாகிறாய்
எனினும்
இவைகளின் வழியே
எப்போதும் மறைத்தே வைத்திருக்கிறாய்
எனைக் கொல்வதற்கான ஆயுதமொன்றை.

- க. அம்சப்ரியா.

Sunday, July 10, 2011

ஜூன் - ஜூலை : உள்ளடக்கம்

கவிதை
ஈரோடு தமிழன்பன்
குட்டி ரேவதி
முனைவர் ச. மகாதேவன்
பொ. செந்திலரசு
ஜனநேசன் ஆரூர். அ.கோ. விஜயபாலன்
சசி அய்யனார்
கணேச குமாரன்
உஷா தேவி
பிச்சினிக்காடு இளங்கோ
தீபச்செல்வன்

கதை
வாஸந்தி
சா. கந்தசாமி
கணேஷ் ராம்
இமையம்
கமலாதேவி அரவிந்தன்
கே.ஆர். மணி

கட்டுரை
மூன்றாம் அரங்கும் நானும் - - மு. ராமசாமி
கணையாழி கண்ட கஸ்தூரி ரங்கன் - தேவகோட்டை வா. மூர்த்தி
வாழ்க்கை ஒரு நெசவு - ஓவியர் சந்ரு

நூல் அறிமுகம்
பாகிஸ்தான் சிறுகதைகள் - வெங்கட் சாமிநாதன்

கடைசிப்பக்கம்
வீதிதோறும் காமதேனு - இந்திரா பார்த்தசாரதி

Saturday, July 9, 2011

ஜூன் - ஜூலை மாத இதழ்
சந்தா விவரம்:


ஆண்டு சந்தா: (
உள்நாடு )ரூ220/- (வெளிநாடு)US$30
இரண்டு ஆண்டு சந்தா: (
உள்நாடு )ரூ440/- (வெளிநாடு)US$50
ஆயுள் சந்தா: (
உள்நாடு )ரூ5000/- (வெளிநாடு)US$300

அனைத்துத் தொடர்புகளுக்கும்.

பதிப்பாளர்: சேது.சொக்கலிங்கம்
கவிதா பப்ளீகேஷன்: 8, மாசிலாமணி தெரு, தியாகராயநகர், சென்னை-600 017
தொலைபேசி: 24364243, 24322177