Sunday, May 15, 2011

மே மாத இதழ்




சந்தா விவரம்:


ஆண்டு சந்தா: (
உள்நாடு )ரூ220/- (வெளிநாடு)US$30
இரண்டு ஆண்டு சந்தா: (
உள்நாடு )ரூ440/- (வெளிநாடு)US$50
ஆயுள் சந்தா: (
உள்நாடு )ரூ5000/- (வெளிநாடு)US$300

அனைத்துத் தொடர்புகளுக்கும்.

பதிப்பாளர்: சேது.சொக்கலிங்கம்
கவிதா பப்ளீகேஷன்: 8, மாசிலாமணி தெரு, தியாகராயநகர், சென்னை-600 017
தொலைபேசி: 24364243, 24322177

Saturday, May 14, 2011

கணையாழிக்கு இன்னொரு பெயர் கஸ்தூரி ரங்கன்


கணையாழிக்கு இன்னொரு பெயர்
கஸ்தூரி ரங்கன்.
நியூயார்க் டைம்ஸ் நிருபர்
தினமணி ஆசிரியர் என்றெல்லாம்
பணியாற்றியவர்.
ஆனால்
கணையாழியில்
ஆயுட்காலத்தை சேமித்தவர்.

அரசியல் கட்டுரைகளில்
தொலைநோக்குப் பார்வை
அவரைப் பலர் அறியமுடிந்தது.
கலை இலக்கியத் தொலைநோக்குக்
கஸ்தூரி ரங்கனைக்
கவனிக்க வைத்தது.
நவீனத் தமிழிலக்கியத்தின்
இன்றைய சிகரங்கள் முதல்
அன்றைய இமையங்கள் வரை
கணையாழி காட்டிய முகங்கள்தாம்.
தரமான எழுத்துக்களைத் தமிழுக்கு
அறிமுகப்படுத்தியவர் என்பதோடு
படைப்பாளியாக முயற்சியும் செய்தவர்.
‘ஏஞ்சல் டஸ்ட்’
பேய்க்கு வாழ்க்கைப் பட்டால்
தொடர்கதைகளை எழுதியவர்.
கஸ்தூரி ரங்கனின் கவிதை
‘எழுத்து’ இதழில்
சி.சு.செல்லப்பா பாராட்டியிருக்கிறார்.
இக்கால இளைஞர்களிடமும்
காந்தியத்தைக் கொண்டு சேர்க்க
‘மனிதன் மகாத்மா ஆன கதை’ எழுதியவர்.
மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில்
இறப்பதற்கு இரண்டு நாட்களுக்கு முன்னர் கூட
‘கணையாழி அடுத்த இதழ் வந்துவிட்டதா?’
அருகிலிருந்த மகளிடம் கேட்டிருக்கிறார்.

கைப்பொருளைச் செலவு செய்து
கணையாழியை வளர்த்துக் கொண்டிருந்தபோது
நண்பர்களும் முணுமுணுத்தனர்.
கணையாழி ஒரு பத்திரிகை இல்லை,
எனக்கு இரண்டாவது மகள்
ரங்கஸ்ரீக்கு தங்கை.
இன்னொரு மகளிருந்தால்
செலவு செய்ய யோசிப்போமா?
வாயடைத்திருக்கிறார்.
புன்னையைக் காட்டி
‘நும்மினும் சிறந்தது நுவ்வையாகுமென்று
அன்னை கூறினாள் புன்னையது நலனே’ என்று
இரண்டாவது மகளை மூத்தமகளுக்கு
அடையாளம் காட்டிய தாயாய்க்
கஸ்தூரி ரங்கன்
கணையாழியைக் காட்டியிருக்கிறார்.

உடலியங்கும் உலகில்
மனம் இயங்க மருளுகிறது.
மன உலகில் மறைந்து கொள்ளாமல்
எழுத்தில் மன உலகை நிறுவித்
தானும் தன்னைப் போன்றோரும் வாழ
கஸ்தூரி ரங்கன்
வாய்ப்பளித்திருக்கிறார்.
மனவெளி உலகில் வாழ்பவர்கள்
கணையாழியை நினைக்கிற போதெல்லாம் கஸ்தூரி ரங்கன் நினைக்கப்படுவார்.

- ம.ரா.

Friday, May 13, 2011

நான் பேசிப் பழகாத சிட்டி

தீபம். எஸ். திருமலை

தீபம் இலக்கிய மாத இதழ் ஏப்ரல் 1965-இல் ஆரம்பமானது. பத்திரிகையைத் தவிர மாதா மாதம் தீபம் அலுவலக மாடியில் ‘பவர்’ என்ற அமைப்பு மூலம் எழுத்தாளர்கள் பலரும் கலந்துகொள்ளும் இலக்கிய நிகழ்ச்சி களும் நடக்கும். அதில் கலந்து கொள்ளாத எழுத்தாளர்களே இல்லை என்று சொல்லலாம். அந்த வகையில் சிட்டியும் எங்கள் அலு வலகத்திற்கு வந்திருக்கிறார். நான் பத் திரிகை எழுத்தாளர்கள் மத்தியிலேயே வாழ்ந்ததால் நான் எந்த எழுத்தாளரைக் கண்டும் வியந்ததில்லை. அவர்கள் எழுத்துக் களைப் படித்திருந்தாலும், எழுத்தைப் பாராட்டிப் பேசும் வழக்கமும் இல்லை.



பவர் கூட்டம் நடக்கும் முன்பு மாடியைச் சுத்தம் செய்து வைப்பதுடன் என் பணி சரி. தீபம் அலுவலகம் முதல்மாடி. பவர் கூட்டம் நடப்பது இரண்டாவது மாடி. நான் தீபத்தில் அமர்ந்துகொண்டு பவர் கூட்டத்துக்கு வருகிறவர்களை மேலே அனுப்பி வைக்க வேண்டும். கூட்டத்தில் கலந்து கொள்பவர் களுக்கு தேநீர் எதுவும் வழங்கப் படுவ தில்லை. கூட்டம் முடிந்த பின்பு நண்பர்கள் தனித்தனி குழுக்களாகப் பிரிந்து அருகில் உள்ள தர்பார் ஹோட்டலுக்கு டீ குடிக்கவோ அல்லது உடுப்பி கிருஷ்ணா-வில் காபி குடிக்கவோ சென்று விடுவார்கள். அதன்பின் தான் நான் அலுவலகத்தைப் பூட்டிக் கொண்டு வீடு செல்ல முடியும். தீபத்தில் அச்சகம் இருந்ததால் பவர் கூட்டங்களுக்கு அழைப்பிதழ் கார்டு அடிப்போம். சமயங்களில் தீபத்திலும் அறிவிப்பு வரும்.

இந்த பவர் கூட்டத்திலேயே இலங்கை, மலேசிய எழுத்தாளர்களுக்கு வரவேற்பு உபசாரமும், தி. ஜனாகிராமன் சென்னையி லிருந்து தில்லிக்கு மாறுதல் ஆகிச் சென்ற போது பிரிவுபசார விழா நடத்தியதாகவும் நினைவு. ஆக சிட்டியை தீபம் அலுவலகத்தி லேயே பார்த்துள்ளேன். ஆனால் இவர்தான் சிட்டி என்று என்னிடம் யாரும் அறிமுகம் செய்து வைக்கவில்லை. நான் பேசியதும் இல்லை.
முதன்முதலில் வாசகர்வட்டம் வெளி யிட்ட ‘நடந்தாய் வாழி காவேரி’ நூலைப் படித்து மகிழ்ந்தேன். இருவர் சேர்ந்து ஒரு நூலை எப்படி எழுத முடியும் என்பது அப்போது என் சந்தேகமாயிருந்தது. அடுத்து தீபத்தில் சிட்டி சிவபாதசுந்தரம் இணைந்து ஒரு கட்டுரைத் தொடர் எழுதினார்கள். ஆனால் அதை சிவபாதசுந்தரம் வீடு சென்று தான் பெற்று வருவேன். சிட்டியைப் பார்த்த தில்லை. தீபம் நின்றதால் அந்தத் தொடரும் பாதியில் நின்றது.

நான் 1980-1990களில் தினமணி நூல் மதிப் புரையாளர். ஒருமுறை தினமணி நூல் மதிப் புரைக்கு சிட்டி எழுதிய ‘கண்ணன் என் கவி’ என்ற நூல் என்னிடம் மதிப்புரைக்கு வந்தது. அதற்கு தினமணியில் நான் மதிப்புரை எழுதி னேன். பின்னர் அகில இந்திய வானொலி யிலும் நூல் மதிப்புரை வாய்ப்பு வந்தது. அதிலும் கண்ணன் என் கவி நூலை மதிப்புரைக்கு கொடுத்தார்கள். மற்றும் இரு நூல்கள் அதில் ஒன்று ஓவியர் ஸாரதியின் ஜோக்குகள்.

ரேடியோவில் அதற்கு ஒதுக்கப்பட்ட நேரம் 15 நிமிடங்கள். நான் 10 நிமிடம்.

சிட்டி நூலைப் பற்றியே பேசினேன். மிகுதி 5 நிமிடத்தில் மற்ற இருநூல்களையும் விமர்சித்தேன்.
ஏ.என்.எஸ். மணியன் சிட்டியின் 80, 90 வயது நிறைவையொட்டி அவர் வீட்டில் நடந்த நிகழ்ச்சிக்கு சென்று வந்ததாகக் கூறுவார். எனக்கு நேரடித் தொடர்பு இல்லாமையால் அழைப்பு இல்லை. தகவலும் தெரியாது. அதனால் அதில் கலந்து கொள்ளவில்லை. சிட்டி மணியனுக்கு எழுதிய கடிதத்தைப் படித்துள்ளேன்.
குங்குமம் வார இதழிலும் சிட்டியைப் பேட்டி கண்டார்கள். பேட்டிக்குச் சென்ற வரிடம் ஆர்.சி. சம்பத் அவரது நகைக்சுவை நூலான ‘மண்ணாங்கட்டி’யை கொடுத்திருந் தார். அதை அவரிடம் இரவல் வாங்கி படித்து மகிழ்ந்தேன். சிட்டியின் இரு புதல்வர்களையும் இலக்கிய கூட்டங்களில் சந்திப்பதுண்டு. ஒரு முறை அவர் மகன் களில் ஒருவரிடம் இருவர் சேர்ந்து (சிட்டி - ஜானகிராமன், சிட்டி - சிவபாதசுந்தரம்) எப்படி எழுதுவார்கள் என்ற சந்தேகத்தி னைக் கேட்டேன்.

சிட்டி விஷயங்களை தகவல்களைச் சேகரித்து விடுவார். மற்றவர் நடை சிறப் பாக இருக்குமென்பதால் மற்றவர், தி. ஜானகிராமன், சிவபாதசுந்தரம் அதை எழுதத் துவங்குவார் என்று விளக்க மளித்தார். என் சந்தேகம் தீர்ந்தது.

ஆக சிட்டியுடன் எனக்கு நேரடிப் பழக்கம் இல்லாவிட்டாலும் அவர் எழுத்து மூலம் அவரை நன்கு அறிவேன்.

சிட்டி கிமிஸி-ல் பணி புரிந்ததாகக் கேள்வி. நானும் 15 ஆண்டுகள் கிமிஸி ஜிக்ஷி-யில் செய்திப் பிரிவில் தற்காலிகப் பணியாளராகப் பணி யாற்றியுள்ளேன். என்பதையும் நினைத்துக் கொண்டேன்.
சிட்டியின் நூற்றாண்டு விழாவை அவர் மகன்கள், மகள்கள் சிறப்புடன் பாரதி.

இல்லத்தில் நடத்தினர். அதில் கலந்து கொள்ளும் பேறு பெற்றேன். அவர் நினை வாக இருவருக்குப் பரிசு வழங்கப்பட்டது. அன்று சிட்டி பற்றிய குறும்படம் ஒன்று திரையிட்டப்படுவதாக அழைப்பிதழில் அச்சிடப்பட்டிருந்தது. முதலில் திரைப் படம், பின்னர்தான் நிகழ்ச்சி ஆரம்பம். ஆனால் ஒலி மாத்திரம் வந்தது. அது மாத்திரம் அன்றைய விழாவில் பெரும் ஏமாற்றமே. குறும்படத்தைப் பார்த்திருந் தால் சிட்டியையே அன்று நேரில் கண்டு பேசிய உணர்வு ஏற்பட்டிருக்கும்.

இந்த தகவலை எனது நண்பர் எஸ். சுவாமிநாதனிடம் ஒருநாள் பேச்சுவாக்கில் கூறினேன். சிட்டியை பற்றி குறும்படம் நான் எடுத்து வைத்துள்ளேன் என்று கூறியதும் எனக்கும் ஒரே மகிழ்ச்சி. அன்று விழாவில் பார்க்காத படத்தை இவர் இல்லத்தில் பார்க்கலாமே என்று. ஒரு ஞாயிறு அதற்கென்றே நேரம் ஒதுக்கி சுவாமிநாதன் இல்லம் சென்றேன். முதலில் பார்த்தது அவர் மறைந்தபோது மின்தகன மேடையில் எடுக்கப்பட்டிருந்தது. பல எழுத்தாளர்கள் அதில் கலந்து கொண்டிருந்ததைப் பார்க்க மகிழ்வை ஏற்படுத்தியது. அவர் மறைவு அன்று அவர் இல்லம் சென்று அதில் கலந்து கொள்ளாத குறையை அந்தக் குறும்படம் நீக்கிவிட்டது என்றுதான் சொல்வேன்.

அது தவிரவும் அவர் உயிருடன் இருந்த போது அவரது பிறந்தநாளின்போது அவரைச் சந்தித்துப் பேசிய நேர்காணல் பார்க்க முடிந்தது. அதில் அவர் சற்று இளமையாக இருந்தார். ஆனால் வார்த்தை களில் சற்று தெளிவில்லை. வயோதிகம்தான் காரணம்.

அவர் மகன் விஸ்வேஸ்வரனின் அறிமு கம் கிடைத்தது. அவரிடம் நானும் என் எழுத்தும் கட்டுரை கேட்டு வாங்கினேன். அதில் அவர் தன் தந்தைக்கு உதவியாளராக காலம் முழுவதும் இருந்தமை என் நெஞ் சைத் தொட்டது. இப்போதும் அவர் அப்பா பெயரைச் சொன்னால் சிலிர்த்துப் போய் விடுகிறார்.
வீரராகவன் (திருச்சி) அந்த நாள் முதலே சிட்டியின் குடும்ப நண்பர். அவர் சிட்டியின் மீதுள்ள அபிமானத்தால் சிட்டி யுடன் பழகியவர்களை சந்தித்து சிட்டியைப் பற்றி கட்டுரை வாங்கி ஒரு கையெழுத்து மலர் வெளியிடும் முயற்சியில் இருந்ததால் என்னைத் தேடி வந்து கட்டுரை கேட்டார். அவருக்கு வயது 80-க்கு மேல். நடக்கவே சிரமப்படும் நிலை. பார்வை மங்கல், இந்நிலையில் அவர் சிட்டிக்காக மலர் தயாரிப்பதில் இறங்கியது அவர்மீது எனக்கு கோபத்தையே உண்டாக்கிவிட்டது. அதை சொல்லவும் சொல்லிவிட்டேன். அவர் மகன்கள் இருக்கிறார்கள். அவர்கள் பார்த்துக் கொள்வார்கள். நீங்கள் ஏன் இப்படி சிரமப்படுகிறீர்கள் என்று கேட்டு விட்டேன்.

ஆனால் அதற்கு அவர் மலர் வெளியிடு வது என்று தீர்மானித்து விட்டேன். அதை வெளியிட்டே தீர்வேன் என்று உறுதியாக இருந்தார். அந்த வயதிலும் அந்த உறுதி யைக் கண்டு மலைத்துப்போனேன். என்

கட்டுரையை கொடுத்தேன். என் நண்பர் ஏ.என்.எஸ். மணியன் கட்டுரையும் கிடைக்கச் செய்தேன். நூற்றாண்டு விழாவில் அவர் ஊரில் இல்லை போலும். வர வில்லை. விழா வில் அவரைத்தான் முதலில் தேடினேன்.

சொன்னபடியே கையெழுத்து மலர் தயாரித்து வீட்டிலேயே வெளியீட்டு விழா வும் ஏற்பாடு செய்துவிட்டார். ஒரு ஞாயிறு மாலை 3 மணி அளவில் விசாலாட்சி தோட்டம் அவர் இல்லத்தில் குறுகிய இடத்தில் (ஆனால் அவருக்கோ பரந்த மனசு) சிட்டி குடும்பத்தினர். பேரன் பேத்திகள் மூன்று தலைமுறையினர். திரு நரசய்யா கலந்து கொள்ள நானும் நான் அழைத்து சாருகேசியின் சகோதரர் லெம னும் கலந்து கொண்டோம். அனைவருக்கும் சிற்றுண்டி, இனிப்பு, காரம், காபி என்று முழுவிருந்து அளித்து விட்டார். சிட்டியைப் பற்றி ஒவ்வொருவரும் ஆத்மார்த்தமாக பேசினார்கள். பேரன், நானும் தாத்தாவும் என்று பேசியது மனதை தொட்டது. அவரிடம் தலைமுறை இடைவெளியே இல்லாதது கண்டு வியந்தேன். அந்த வயதிலும் கணினி இயக்கக் கற்றுக் கொண்டாராம். அந்த மலர் விஷயங்கள் இணையத்தில் வெளியிட்டிருப்பதாகக் கேள்வி.

எனக்கு என்னவோ, அந்த கட்டுரை களையும் மேலும் பலர் கட்டுரைகளையும் முக்கியமாக அவர் குடும்பத்தினர் கட்டுரை களையும் சேர்த்து ஒரு அச்சிட்ட மலராக வெளியிட வேண்டும் என்று ஆசை. அது எப்போது நடக்குமோ?

இன்னமும் என் பல நண்பர்கள் சிட்டி யின் எல்லா நூல்களையும் படிக்க வேண்டும். உங்களிடம் இருக்குமா என்று கேட்கிறார்கள். என்னிடம் ஒரு சில நூல்கள் தான் உள்ளன.

சிட்டி மறக்க முடியாத மனிதர், பின்னர்தான் எழுத்தாளர் என்று சொல்வேன்.

பணிவதற்கில்லை - நா. விச்வநாதன்

பணிவதற்கில்லை.

இருட்டு பிரிவதற்குள்
ஊர்ப்போய்ச்சேர்
என்றாள் அவள்
முகம் தலை என
முழுசாய் மூடிக்கொண்டு
போய்ச் சேருவதில்லை
சாகசம்.
காண்போர் மெச்ச
கம்பீரம் மிளிர
ஒருராஜ நடை
தேவை அப்போது.
எந்தச் சொல்
புண்படுத்தும் என்பதில்லை.
திசையெட்டும்
துள்ளிக் குதிக்கும்
என்பதுமில்லை
கோடாய் ஒரு புன்னகையின்
நடுவிலிருந்து
அசுரபலம் சேகரித்து
உயிர்த்தது
யாருமறியாதது.
என்ன முயன்றென்ன
போகின்ற காலம்
வருகின்ற காலம்
எதுவும்
அசைத்துப் பார்ப்பதில்லை.
என் அறத்தை
தானே உருவாக்குவேன்
பேணுவேன் எனும்போது
ஆணை எதற்கும்
அடிபணிவதற்கில்லை.

-நா. விச்வநாதன்

Thursday, May 12, 2011

கடைசிப்பக்கம் - கஸ்தூரியும் நானும்


மய்திலி ராஜேந்திரனுக்கு முன் கூட்டியே தெரியும் அறிவு (premonition) இருக்க வேண்டுமென்று தோன்றுகிறது, கஸ்தூரிரங்கனின் பூத உடல் மறைந்தாலும், அவருடைய புகழ்உடம்பு நிலை பெற்று நிற்க வேண்டுமென்று அதனால்தான், ஏப்ரல் 14ம் தேதி, சில ஆண்டுகள் ‘மோன’ நிலையில் இருந்த ‘கணையாழியை’ உயிர்ப்பித் திருக்கிறார். இது எதேச்சையாக நடந்ததா, அல்லது, இக்கால விஞ்ஞானிகள் கூறுவதுபோல், ‘வண்ணத்துப் பூச்சி விளைவா’ (butterfly effect) தெரியவில்லை. கஸ்தூரி இறந்தார்:
கணையாழி வாழ்க!

கஸ்தூரிரங்கன் கடைசியாகக் கேட்டு முகம் மலர்ந்த செய்தி, ‘கணையாழி’யின் வெளியீட்டு விழாதான் என்று அவர் மகள் ரங்கஸ்ரீ சொன்னார். வெளியிடப் பட்ட இதழையும் வாங்கிப் புரட்டிப் பார்த்திருக்கிறார். சிறிது நேரம் சிந்தனையில் ஆழ்ந்த நிலையில் இருந்தாராம்.

46 ஆண்டுகள் வரலாறு.

அவர் மனக் கண்முன் ஓடியிருக்கக் கூடும்!

நான் அவரைக் கடைசியாகப் பனிப் பெட்டியில் பார்த்தபோது, புறக் கண்முன் தெரிந்த உடம்பு கொஞ்சம் கொஞ்சமாக மறைந்து, என் அகக்கண் முன், 1966ல், இளைமை துடிப்புடன், சூட் அணிந்து (அப்பொழுது தில்லியில் குளிர்ப் பருவம்) புன்னகையுடன் நின்ற ‘நியூயார்க் டைம்ஸ்’ சிறப்பு நிருபர்தாம் தோன்றினார்! இக்காட்சி, என் முதுமையை நாற்பத்தாறு ஆண்டுகள் பின்னுக்குத் தள்ள உதவியது!

பிசிராந்தையார் கூறுவது சத்தியமான வார்த்தை. ‘நட்பாங்கிழமை’ தருவதற்கு நண்பர்களுக்கிடையே ஒத்த சிந்தனை அலைவரிசை போதும். பிறகு, அவர் தில்லியில் இருந்த வரை, வாரம் மூன்று தடைவைகளாவது நாங்களிருவரும் சந்திக்காமலிருந்ததில்லை. பத்திரிகை நிருபர் என்ற வகையில், அரசாங்கக் குடியிருப்பில் அவர் இருந்ததால், என் வீட்டு முகவரிதான், (A/134 Defence colony, New Delhi 3) கணையாழியின் அலுவலக முகவரியாக இருந்தது.

(ஒரு நாளைக்கு நூறு தபால் அட்டைகள் புதுக்கவிதைகளைத் தாங்கி என் முகவரிக்கு வருவது என் நினைவுக்கு வருகிறது!)

அமெரிக்கப் பத்திரிகை என்பதால் அவர் வேலை, இக்காலத்திய பி.பி.ஓக்கள் (ஙிறிளி) பணி போல, பின்னரே மாலைப் பொழுது களில்தாம். நான் அப்பொழுது தில்லிப் பல்கலைக்கழக மாலை நேரக் கல்லூரி ஒன்றில் வேலை பார்த்ததால், பகற்பொழுதில் இருவரும் சந்தித்துப் பேசுவதென்பது சுலபமாக இருந்தது.
தேசிய அரசியல் விவகாரங் களைப் பற்றி ஆழமான விமர்சனக் கட்டுரைகள் அப்பொழுது தமிழ்ப் பத்திரிகைகளில் வருவதில்லை. இந்தக் குறையைப் போக்கத்தான், தமிழில் ஒரு மாத இதழ் கொண்டு வரவேண்டுமென்று கஸ்தூரிக்குத் தோன்றியிருக்கிறது. இதை, ‘ஹிந்துஸ்தான் டைம்ஸ்’ நிருபர் கே. ஸ்ரீநிவாசன், ‘ஹிந்து’ நிருபர் பி.எஸ். பத்மநாபன் போன்றவர்கள் வரவேற்றிருக்கிறார்கள்.

பி..எஸ். பத்மநாபன் ஆச்சர்யமான மனிதர். அவர் தமிழில் எழுதுவ தில்லையே தவிர பத்திரிகை நடத்துவதைப் பற்றிய நிர்வாக விஷயங்கள் அனைத்தும் அவருக்கு அத்துப்படி. ‘கணையாழி’க்கு அவ்வப்பொழுது கிடைத்து வந்த விளம்பரங் களுக்கும் அவர்தாம் காரணம். நட்புக்காகத் தம்மை அர்ப்பணித்துக் கொண்ட அவரைப் போன்றவர்கள் நம் சமூகத்தில் மிக அருமை.

ரங்கராஜன் (சுஜாதா) கி.கவின் பள்ளித் தோழர். ‘கோபக்கார இளைஞர்’. (Angry young man) தமிழ் சினிமா, தமிழ் நாடகம், வணிக மயமான தமிழ் இலக்கிய உலகம் எல்லாவற்றையும் காரசாரமாக கஸ்தூரிரங்கனிடம் விமர்சித்துக் கொண்டிருப்பார்.

கஸ்தூரி அவரிடம் பத்திரிகை ஆரம்பிக்கப் போவதைப் பற்றிச் சொல்லிவிட்டு, ‘ உன் கோபத்தையும், கிண்டலையும் எழுத்தில் காண்பி’ என்று கூறியததுதான் ‘ஸ்ரீரங்கம் எஸ்.ஆரின்’ ஜனனத்துக்குக் காரணமாயிற்று.

மறுபடியும், ‘வண்ணத்துப் பூச்சி விளைவை’ச் சொல்ல வேண்டி யிருக்கிறது. கஸ்தூரி சென்னையில் அசோகமித்திரனைச் சந்தித்து அவரை இப்பத்திரிகையின் பொறுப்பாசிரியராக ஆக்கியது எப்படி நேர்ந்ததென்பதற்குக் காரணம் ஏதும் சொல்ல இயலாது. ‘கனையாழி’யின் பரிணாம வளர்ச்சிக்கு அவரும் ஓர் முக்கியக் காரணம்.

‘‘கணையாழி’ என்ற பெயர் சூட்ட வேண்டுமென்று உங்களுக்கு எப்படித் தோன்றிற்று?’ என்று நான் ஒரு தடவைக் கேட்டேன்.

என் ‘பாஸ்’ ஒரு சமயம் எனக்கு கல்யாணம் ஆகிவிட்டதா என்று கேட்டார். ஆகிவிட்டது என்றேன். மோதிரம் எங்கே என்றார். நகை அணிவது எனக்குப் பிடிக்காது என்றேன். அன்றுதான் பிரஸ் கிளப்பில் பத்திரிகை தொடங்குவதைப் பற்றிப் பேசியதால், நான் மோதிரம் அணியாவிட்டாலும், நான் நடத்தப் போகும் பத்திரிகையாவது, அணிகலனாக ஜொலிக்கட்டுமென்று, ‘கணையாழி’ என்ற பெயர் தோன்றிற்று’ என்றார்.

‘கணையாழி’ வாசகர்கள் மனதில் ஒரு நிரந்தரமான இடம் பிடிப்பதற்குக் காரணம், அது பலவிதமான மாறுபட்ட கருத்தோட்டங்களுக்கும், கோட்பாடுகளுக்கும் இடம் அளித்த ஒரு திறந்த மேடையாக (public forum) இருந்தது என்பதால் தான்.

கஸ்தூரி ரங்கனின் உள்ளார்ந்த உருவத்தோற்றத்தை (Personality) பிரதிபலிப்பதாக இருந்தது. ‘நூறுவிதமான பூக்கள் மலரட்டும்’ என்ற மாவோவின் கொள்கைதான் கஸ்தூரியின் இலக்கியச் சிந்தாந்தம்.

ஆனால், கொள்கை முரண்பாடு என்ற பேரில், தனிநபர் தாக்குதல்களை அவர் கணையாழியில் பிரசுரிக்க விரும்பியதேயில்லை.

கணையாழியும் கஸ்தூரி ரங்கனும் என் வாழ்க்கையில் நிகழ்ந்திராவிட்டால், நான் ‘குருதிப் புனலையும்’, ‘நந்தன் கதை’யையும் மற்றைய அரசியல் நாவல்களையும் எழுதியிருப்பேனா என்பது சந்தேகம்தான்.