Monday, April 25, 2011
மீண்டும் கணையாழி - இந்திரா பார்த்தசாரதி
‘கணையாழி’ தொடங்கி இரண்டு மூன்று இதழ்கள் வரத் தொடங்கிய பின்தான் அதன் நிறுவன ஆசிரிராகிய கி.கஸ்தூரிரங்கன் என்னை தில்லிப்பல்கலைக்கழகக் கல்லூரியில் 1966ல் சந்திக்க வந்தார். அவருடைய மனைவியின் தங்கை என் மாணவி. அவர் இப்பொழுது லண்டனில், பிரிட்டிஷ் நூலகத்தில் தென்னிந்திய மொழிகள் பிரிவின் இயக்குநராக இருக்கிறார். அவர்தான் கஸ்துரிரங்கனிடம் என்னைப் பற்றிச் சொல்லியிருக்கிறார். கஸ்தூரி ரங்கராஜனுடன்(சுஜாதா) வந்தார். ஒத்த உணர்ச்சிகள் நட்பாங்கிழமையைத் தந்து, ‘கணையாழி’யுடன் என்னைப் பிணைத்தன. ஆங்கிலத்தில் கூறுவது போல், ‘the rest is history’.
‘கணையழி’யின் தொடக்கக் கால இதழ்கள் அரசியல் விவகாரங்களை அதிகம் அலசின.
பிறகு, அசோகமித்திரன், சுஜாதா, நான் ஆகிய மூவருடைய தொடர்பின் காரணமாகவோ என்னவோ அதற்கு ஓர் இலக்கிய முகமும் ஏற்பட்டுவிட்டது. கஸ்தூரிரங்கன் புதுக் கவிதைகள் எழுதியிருக்கிறார். அவருடைய தந்தை தமிழாசிரியர். ஆகவேதான், அமெரிக்க ‘நியூயார்க்டைம்ஸ்’ சிறப்பு நிருபராக இருந்தும் அவருக்குத் தமிழில் ஒரு பத்திரிகை நடத்த வேண்டும் என்ற ஆர்வம் ஏற்பட்டது. சுஜாதாவும் அவரும் பள்ளித் தோழர்கள்.
தில்லியிலிருந்து அக்காலக் கட்டத்தில் ஓர் அரசியல்-இலக்கியப் பத்திரிகை கொண்டு வருவதென்பது அவ்வளவு எளிய காரியமன்று. பல பிரச்னைகளை எதிர்நோக்க வேண்டியிருந்தது. கஸ்தூரியின் ஒரு தனித் தன்மை என்னவென்றால், எந்தச் சவாலினலும் அவர் அவ்வளவு சுலபமாகப் பாதிக்கப்படுவதில்லை. முக்கியமாக, பணப் பிரச்னை. அமெரிக்கப் பத்திரிகையில் பணி புரிந்து கொண்டிருந்த காரணத்தினால் அவருக்கு நல்ல சம்பளம் வந்து கொண்டிருந்தது. ‘கணையாழி’யின் நஷ்டத்துக்கு அது ஓரளவு ஈடுகொடுத்துக் கொண்டிருந்தது. ‘ஹிந்து’வில் தில்லியில் பணி புரிந்து கொண்டிருந்த பி.எஸ்.பத்மநாபன் ஒரு சில விளம்பரங்கள் வாங்கித் தருவதற்குக் கடுமையாக உழைத்து வந்தார். கஸ்தூரியின் பொருளாதாரக் கொள்கை: ‘ செலவு எத்தனை என்று தீர்மானித்தால், வருவாய் தானே வரும்’. அப்படி வரவில்லை என்பதுதான் பிரச்னையாக இருந்தது. ஆணால்,’கணையாழி’ ஒரு மாதம் கூட தடையில்லாமல் பல ஆண்டுகள் வந்தது என்பதுதான் மாபெரும் சாதனை.
இன்று பிரபலமாகப் பேசப்படும் பல தமிழ் எழுத்தளர்கள் அவர்களுடய தொடக்கக் காலத்தில் ‘கணையாழி’யிதான் எழுதியிருக்கிறார்கள். சுஜாதா, நீல பத்மநாபன், ஜெயந்தன், நகுலன்( நகுலன் ‘கணையாழி’ நடத்திய முதல் சிறுகதைப் போட்டியிலே
முதல் பரிசு பெற்றிருக்கிறார்.) பாலகுமாரன், ந.முத்துஸ்வாமி, ஞானக்கூத்தன், வைத்தீஸ்வரன்,என்.எஸ்.ஜெகந்நாதன், அடுக்கிக் கொண்டே போகலாம்.
‘கணையாழி’க்கு இன்னும் ஒற் சிறப்பும் உண்டு. ‘கணையாழி’யை ‘இலக்கியச் சிதனை’
அறக்கட்டளையால்( ப.லக்ஷ்மணன், ப..சிதம்பரம், பாரதி ) ஓராண்டு அதன் பொறுப்பில் நடத்தப்பட்டும் வந்திருக்கிறது.. ஓர் இதழில், ஜி.நாகராஜன் என்னைக் கடுமையாகத் தாக்கியும் எழுதிருக்கிறார்.
அசோகமித்திரனின் பெரும்பான்மையான சிறப்பு மிக்க நாவல்களும், சிறுகதைகளும் ‘கணையாழி’ யில்தான் வெளி வந்திருக்கின்றன. என்னுடைய ‘குருதிப் புனல்’, ‘சுதந்திரபூமி’, ‘நந்தன் கதை’ (நாடகம்), ‘வேர்ப்பற்று’ ஆகிய நாவல்களும் பல சிறுகதைகளும் ‘கணையாழி’யில் வெளிவந்தன.
கணையாழி’யின் இன்னொரு சிறப்பு, அது குறு நாவல்களுக்கும், புதுக் கவிதைகளுக்கும் செய்திருக்கக் கூடிய பங்களிப்புதான். அதன் மிக முக்கிய அடையாளம் இதுதான் என்று நினைக்கின்றேன்.
இன்னொன்று, மாதந்தோறும் போன் நூற்றாண்டு எழுபதுகளில் நடந்த இலக்கியக் கூட்டங்கள். தில்லியைத் தற்காலத் தமிழிலக்கியத் தலைநகர் என்று சொல்லும் அளவுக்கு அப்பொழுது அங்கு இலக்கியப் படைப்பாளிகள் இருந்தனர். க.நா.சு, தி. ஜானகிராமன், ஆதவன், சம்பத். வாஸந்தி.,என்.எஸ்.ஜெகந்நாதன், கே.எஸ்.ஸ்ரீநிவாசன்(‘’காவ்ய இராமாயணம்’) இன்னும் பிறர். விவாதங்கள் மிக ஆழமாகவே இருந்தன. நீல பத்மநாபனின் ‘தலைமுறைகளை’ க.நா.சு முதல் கூட்டத்தில் அறிமுகப்படுத்திப் பேசியது ஒரு குறிப்பிடத்தக்க நிகழ்வு.
எதற்குமே இரண்டாவது ‘உச்சக் கட்டம்’ ( second climax) இருக்க இயலாது என்பார்கள். ‘கணையாழி’ ஆசிரியர் ம.ராஜேந்திரனின் மன உறுதியைப் பார்க்கும்போது, இவ்வாறு சொல்வது தவறு என்று நிரூபிக்கப் படும் என்று தோன்றுகிறது.
Subscribe to:
Post Comments (Atom)
ஒரு குறிப்பிட்ட இலக்கிய வருகைக்கு முத்திரையிட்ட கட்டியம், அதனுள் அடங்கிய நேர்த்தியான பீடிகை, இ.பா. அவர்களிடமிருந்து வந்ததே, ஒரு கொடுப்பினை. வாழ்க கணையாழி.
ReplyDelete