உங்களுடன்
வழி பிறக்கட்டும்
தை பிறந்தால் வழி பிறக்குமாம்
பிறந்தால் வாழ்த்தவேண்டும்
வழிக்குப் பிறப்புண்டா?
ஆண்டுக்குப் பிறப்பிருந்தால்
வழிக்கும் பிறப்பிருக்கலாம்
ஆண்டு பிறக்கிறதா?
ஆண்டுதோறும் பிறக்கிறது
காலக்கணிப்பே ஆண்டின் பிறப்பு
காலத்தைக் கணிக்க முடிகிறதா?
இறந்தகாலம் இப்போது இல்லை
எதிர்காலமும் இப்போது இல்லை
எப்போதும் இருப்பது
நிகழ்காலம் மட்டுமே
நினைத்துப் பார்க்கிற நேரங்களில்
கடந்த காலமும் எதிர்காலமும்
நிகழ்காலங்கள் ஆகின்றனவா?
கடந்தகால நிகழ்காலம் நினைவுகளிலும்
எதிர்கால நிகழ்காலம் திட்டமிடலிலுமாக
நிகழ்காலம் காலங்களைச் சுமக்கிறது
நாகரிகத்தின் தோற்றப்புள்ளி
காலக்கணிப்பு
மெசபடோமியாவின் பாபிலோனில்
நான்காயிரம் ஆண்டுகளுக்கு முன்பே
வசந்தகாலத்தை வரவேற்றுப்
புத்தாண்டுக் கொண்டாட்டம்
சூரியனின் நகர்வைக் கொண்டு
ரோமானியர்களின் காலக்கணிப்பு.
சூரியமானம் சந்திரமானம்
சூரியசந்திரமானம் என்று
இந்தியாவின் காலக்கணிப்புகள்
தமிழ்நாட்டிலும் ஈழத்திலும்
சூரியக் கணக்குமுறை
விநாடி, நிமிடம், மணி, நாள்,
வாரம், மாதம், பருவம் எல்லாம்
உலகம் முழுதும் சுழற்சி முறைதான்
கடந்த காலத்திலிருந்து எதிர்காலத்திற்கான
நேர்கோட்டு ஆண்டுக் கணக்குமுறை
இந்தியாவில் சுழற்சி முறையில்
அறுபதாண்டுப் பெயர்களுக்கு ஆபாசக்கதைகள்
உலகம் முழுதும் காலத்தின் தலைவிதி
சூரியன் கால்களில்
சூரியனின் வடதிசைப் பயணத்தொடக்கம்
பொங்கல்
புதுப்பானை, புதுஅரிசி, புத்தாடையுடன்
காலப்புதுமைக்கு வரவேற்பு
காலம்
கணக்கியலின் மையப்புள்ளி
பிரபஞ்சப் புரிதலின் திறவுகோல்
காலக் கணக்கீட்டில்
நவீனத் தொழில் நுட்பமும்
கட்டுப்பட்டுக் கிடக்கிறது
காலம் ஏற்படுத்தும் மாற்றங்களுக்கு
அறிவியலும் கைகட்டி நிற்கிறது
மாற்றங்களே காலத்தைக் காட்டுகின்றன
நேற்றைய ஒரு விநாடி
இன்றைய ஒரு விநாடிக்குச் சமமில்லை
ஒரு விநாடிப் பொழுதும்
உலகெங்கும் ஒன்றாக இருப்பதில்லை
நியூட்டன் பார்த்த ஆப்பிள்
அதே கிளையிலிருந்து
மறுபடியும் விழுந்தால்
அதே இடத்தில் விழுமா?
இடத்தைக் காற்றும் மாற்றலாம்
கிளையும் பழமும்கூட
காலத்தால் மாறியிருக்கலாம்
ஒருநதியில் ஒருவரே
இருமுறை குளித்தாலும்
தண்ணீரையும் குளிப்பவரையும்
காலம் மாற்றியிருக்கலாம்
ஆனாலும்
நதி அதேதான்
ஆண்டுதோறும் ஆண்டுகள் வரலாம்
கொண்டாடுவோர் மாறியிருக்கலாம்
கொண்டாட்டம் தொடரும்
உறவையும் நட்பையும் புதுப்பித்துக்கொள்ள
அன்பளிப்புகளில் அதிகாரம் வளர்க்க
விடுமுறை, வியாபாரம், விளம்பரம் என்று
கொண்டாட்டம் தொடர ஊக்கப்படுத்தலாம்
ஒரு காலத்தில்
வெள்ளத்திலிருந்து காத்துக்கொள்ள
நதிக்கரை மக்களை யோசிக்கவைத்தது
காலக்கணக்கு
விதைக்க, நட, அறுக்க என்று
மழைபெய் காலத்தை அறிய உதவியது
காலக்கணக்கு
காலம் பொய்க்காமல் தொடர்ந்திட
கடவுள் வழிபாடு கணக்கில் வந்தது
காலக் கணக்கில் மதம் வந்தபின்
அரசியலும் வந்தது
ஆண்டுப்பிறப்பு அரசியல் ஆனது
காலம் இல்லாத இடமும்
இடம் இல்லாத காலமும்
எங்கே இருக்கின்றன?
மதமும் அரசியலும் இல்லாத கொண்டாட்டம்
பொங்கல்
கடந்தகாலம் நிகழ்காலத்தையும்
நிகழ்காலம் வரும்காலத்தையும்
கட்டமைப்பது சாத்தியம் என்றால்
கட்டுடைப்பும் சாத்தியம்தானே
வரலாற்றில் காலம் அடங்கினாலும்
வரலாற்றுக்கு முன்பே காலம் உண்டே!
பகலில்
கம்பத்து நிழலில் காலம் பார்த்தோம்
இரவில்
தண்ணீர் மணல் கடிகாரத்தில் நேரம் அறிந்தோம்
இன்று
கையில் அலைபேசியில் காலத்தைச் சுமக்கிறோம்
இதயக்கடிகார ஓசையில்
மனக்கடிகாரமும் ஓடுகிறது
மனக்கடிகாரமும் மணிக்கடிகாரமும்
ஒத்துப்போகிற வாழ்க்கை வேண்டும்
தை பிறந்தால்
வழிபிறக்குமா?
வழிபிறக்கட்டும்!
வாழ்த்துகள்!!
-ம.ரா