மய்திலி ராஜேந்திரனுக்கு முன் கூட்டியே தெரியும் அறிவு (premonition) இருக்க வேண்டுமென்று தோன்றுகிறது, கஸ்தூரிரங்கனின் பூத உடல் மறைந்தாலும், அவருடைய புகழ்உடம்பு நிலை பெற்று நிற்க வேண்டுமென்று அதனால்தான், ஏப்ரல் 14ம் தேதி, சில ஆண்டுகள் ‘மோன’ நிலையில் இருந்த ‘கணையாழியை’ உயிர்ப்பித் திருக்கிறார். இது எதேச்சையாக நடந்ததா, அல்லது, இக்கால விஞ்ஞானிகள் கூறுவதுபோல், ‘வண்ணத்துப் பூச்சி விளைவா’ (butterfly effect) தெரியவில்லை. கஸ்தூரி இறந்தார்:
கணையாழி வாழ்க!
கஸ்தூரிரங்கன் கடைசியாகக் கேட்டு முகம் மலர்ந்த செய்தி, ‘கணையாழி’யின் வெளியீட்டு விழாதான் என்று அவர் மகள் ரங்கஸ்ரீ சொன்னார். வெளியிடப் பட்ட இதழையும் வாங்கிப் புரட்டிப் பார்த்திருக்கிறார். சிறிது நேரம் சிந்தனையில் ஆழ்ந்த நிலையில் இருந்தாராம்.
46 ஆண்டுகள் வரலாறு.
அவர் மனக் கண்முன் ஓடியிருக்கக் கூடும்!
நான் அவரைக் கடைசியாகப் பனிப் பெட்டியில் பார்த்தபோது, புறக் கண்முன் தெரிந்த உடம்பு கொஞ்சம் கொஞ்சமாக மறைந்து, என் அகக்கண் முன், 1966ல், இளைமை துடிப்புடன், சூட் அணிந்து (அப்பொழுது தில்லியில் குளிர்ப் பருவம்) புன்னகையுடன் நின்ற ‘நியூயார்க் டைம்ஸ்’ சிறப்பு நிருபர்தாம் தோன்றினார்! இக்காட்சி, என் முதுமையை நாற்பத்தாறு ஆண்டுகள் பின்னுக்குத் தள்ள உதவியது!
பிசிராந்தையார் கூறுவது சத்தியமான வார்த்தை. ‘நட்பாங்கிழமை’ தருவதற்கு நண்பர்களுக்கிடையே ஒத்த சிந்தனை அலைவரிசை போதும். பிறகு, அவர் தில்லியில் இருந்த வரை, வாரம் மூன்று தடைவைகளாவது நாங்களிருவரும் சந்திக்காமலிருந்ததில்லை. பத்திரிகை நிருபர் என்ற வகையில், அரசாங்கக் குடியிருப்பில் அவர் இருந்ததால், என் வீட்டு முகவரிதான், (A/134 Defence colony, New Delhi 3) கணையாழியின் அலுவலக முகவரியாக இருந்தது.
(ஒரு நாளைக்கு நூறு தபால் அட்டைகள் புதுக்கவிதைகளைத் தாங்கி என் முகவரிக்கு வருவது என் நினைவுக்கு வருகிறது!)
அமெரிக்கப் பத்திரிகை என்பதால் அவர் வேலை, இக்காலத்திய பி.பி.ஓக்கள் (ஙிறிளி) பணி போல, பின்னரே மாலைப் பொழுது களில்தாம். நான் அப்பொழுது தில்லிப் பல்கலைக்கழக மாலை நேரக் கல்லூரி ஒன்றில் வேலை பார்த்ததால், பகற்பொழுதில் இருவரும் சந்தித்துப் பேசுவதென்பது சுலபமாக இருந்தது.
தேசிய அரசியல் விவகாரங் களைப் பற்றி ஆழமான விமர்சனக் கட்டுரைகள் அப்பொழுது தமிழ்ப் பத்திரிகைகளில் வருவதில்லை. இந்தக் குறையைப் போக்கத்தான், தமிழில் ஒரு மாத இதழ் கொண்டு வரவேண்டுமென்று கஸ்தூரிக்குத் தோன்றியிருக்கிறது. இதை, ‘ஹிந்துஸ்தான் டைம்ஸ்’ நிருபர் கே. ஸ்ரீநிவாசன், ‘ஹிந்து’ நிருபர் பி.எஸ். பத்மநாபன் போன்றவர்கள் வரவேற்றிருக்கிறார்கள்.
பி..எஸ். பத்மநாபன் ஆச்சர்யமான மனிதர். அவர் தமிழில் எழுதுவ தில்லையே தவிர பத்திரிகை நடத்துவதைப் பற்றிய நிர்வாக விஷயங்கள் அனைத்தும் அவருக்கு அத்துப்படி. ‘கணையாழி’க்கு அவ்வப்பொழுது கிடைத்து வந்த விளம்பரங் களுக்கும் அவர்தாம் காரணம். நட்புக்காகத் தம்மை அர்ப்பணித்துக் கொண்ட அவரைப் போன்றவர்கள் நம் சமூகத்தில் மிக அருமை.
ரங்கராஜன் (சுஜாதா) கி.கவின் பள்ளித் தோழர். ‘கோபக்கார இளைஞர்’. (Angry young man) தமிழ் சினிமா, தமிழ் நாடகம், வணிக மயமான தமிழ் இலக்கிய உலகம் எல்லாவற்றையும் காரசாரமாக கஸ்தூரிரங்கனிடம் விமர்சித்துக் கொண்டிருப்பார்.
கஸ்தூரி அவரிடம் பத்திரிகை ஆரம்பிக்கப் போவதைப் பற்றிச் சொல்லிவிட்டு, ‘ உன் கோபத்தையும், கிண்டலையும் எழுத்தில் காண்பி’ என்று கூறியததுதான் ‘ஸ்ரீரங்கம் எஸ்.ஆரின்’ ஜனனத்துக்குக் காரணமாயிற்று.
மறுபடியும், ‘வண்ணத்துப் பூச்சி விளைவை’ச் சொல்ல வேண்டி யிருக்கிறது. கஸ்தூரி சென்னையில் அசோகமித்திரனைச் சந்தித்து அவரை இப்பத்திரிகையின் பொறுப்பாசிரியராக ஆக்கியது எப்படி நேர்ந்ததென்பதற்குக் காரணம் ஏதும் சொல்ல இயலாது. ‘கனையாழி’யின் பரிணாம வளர்ச்சிக்கு அவரும் ஓர் முக்கியக் காரணம்.
‘‘கணையாழி’ என்ற பெயர் சூட்ட வேண்டுமென்று உங்களுக்கு எப்படித் தோன்றிற்று?’ என்று நான் ஒரு தடவைக் கேட்டேன்.
என் ‘பாஸ்’ ஒரு சமயம் எனக்கு கல்யாணம் ஆகிவிட்டதா என்று கேட்டார். ஆகிவிட்டது என்றேன். மோதிரம் எங்கே என்றார். நகை அணிவது எனக்குப் பிடிக்காது என்றேன். அன்றுதான் பிரஸ் கிளப்பில் பத்திரிகை தொடங்குவதைப் பற்றிப் பேசியதால், நான் மோதிரம் அணியாவிட்டாலும், நான் நடத்தப் போகும் பத்திரிகையாவது, அணிகலனாக ஜொலிக்கட்டுமென்று, ‘கணையாழி’ என்ற பெயர் தோன்றிற்று’ என்றார்.
‘கணையாழி’ வாசகர்கள் மனதில் ஒரு நிரந்தரமான இடம் பிடிப்பதற்குக் காரணம், அது பலவிதமான மாறுபட்ட கருத்தோட்டங்களுக்கும், கோட்பாடுகளுக்கும் இடம் அளித்த ஒரு திறந்த மேடையாக (public forum) இருந்தது என்பதால் தான்.
கஸ்தூரி ரங்கனின் உள்ளார்ந்த உருவத்தோற்றத்தை (Personality) பிரதிபலிப்பதாக இருந்தது. ‘நூறுவிதமான பூக்கள் மலரட்டும்’ என்ற மாவோவின் கொள்கைதான் கஸ்தூரியின் இலக்கியச் சிந்தாந்தம்.
ஆனால், கொள்கை முரண்பாடு என்ற பேரில், தனிநபர் தாக்குதல்களை அவர் கணையாழியில் பிரசுரிக்க விரும்பியதேயில்லை.
கணையாழியும் கஸ்தூரி ரங்கனும் என் வாழ்க்கையில் நிகழ்ந்திராவிட்டால், நான் ‘குருதிப் புனலையும்’, ‘நந்தன் கதை’யையும் மற்றைய அரசியல் நாவல்களையும் எழுதியிருப்பேனா என்பது சந்தேகம்தான்.