Saturday, May 14, 2011
கணையாழிக்கு இன்னொரு பெயர் கஸ்தூரி ரங்கன்
கணையாழிக்கு இன்னொரு பெயர்
கஸ்தூரி ரங்கன்.
நியூயார்க் டைம்ஸ் நிருபர்
தினமணி ஆசிரியர் என்றெல்லாம்
பணியாற்றியவர்.
ஆனால்
கணையாழியில்
ஆயுட்காலத்தை சேமித்தவர்.
அரசியல் கட்டுரைகளில்
தொலைநோக்குப் பார்வை
அவரைப் பலர் அறியமுடிந்தது.
கலை இலக்கியத் தொலைநோக்குக்
கஸ்தூரி ரங்கனைக்
கவனிக்க வைத்தது.
நவீனத் தமிழிலக்கியத்தின்
இன்றைய சிகரங்கள் முதல்
அன்றைய இமையங்கள் வரை
கணையாழி காட்டிய முகங்கள்தாம்.
தரமான எழுத்துக்களைத் தமிழுக்கு
அறிமுகப்படுத்தியவர் என்பதோடு
படைப்பாளியாக முயற்சியும் செய்தவர்.
‘ஏஞ்சல் டஸ்ட்’
பேய்க்கு வாழ்க்கைப் பட்டால்
தொடர்கதைகளை எழுதியவர்.
கஸ்தூரி ரங்கனின் கவிதை
‘எழுத்து’ இதழில்
சி.சு.செல்லப்பா பாராட்டியிருக்கிறார்.
இக்கால இளைஞர்களிடமும்
காந்தியத்தைக் கொண்டு சேர்க்க
‘மனிதன் மகாத்மா ஆன கதை’ எழுதியவர்.
மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில்
இறப்பதற்கு இரண்டு நாட்களுக்கு முன்னர் கூட
‘கணையாழி அடுத்த இதழ் வந்துவிட்டதா?’
அருகிலிருந்த மகளிடம் கேட்டிருக்கிறார்.
கைப்பொருளைச் செலவு செய்து
கணையாழியை வளர்த்துக் கொண்டிருந்தபோது
நண்பர்களும் முணுமுணுத்தனர்.
கணையாழி ஒரு பத்திரிகை இல்லை,
எனக்கு இரண்டாவது மகள்
ரங்கஸ்ரீக்கு தங்கை.
இன்னொரு மகளிருந்தால்
செலவு செய்ய யோசிப்போமா?
வாயடைத்திருக்கிறார்.
புன்னையைக் காட்டி
‘நும்மினும் சிறந்தது நுவ்வையாகுமென்று
அன்னை கூறினாள் புன்னையது நலனே’ என்று
இரண்டாவது மகளை மூத்தமகளுக்கு
அடையாளம் காட்டிய தாயாய்க்
கஸ்தூரி ரங்கன்
கணையாழியைக் காட்டியிருக்கிறார்.
உடலியங்கும் உலகில்
மனம் இயங்க மருளுகிறது.
மன உலகில் மறைந்து கொள்ளாமல்
எழுத்தில் மன உலகை நிறுவித்
தானும் தன்னைப் போன்றோரும் வாழ
கஸ்தூரி ரங்கன்
வாய்ப்பளித்திருக்கிறார்.
மனவெளி உலகில் வாழ்பவர்கள்
கணையாழியை நினைக்கிற போதெல்லாம் கஸ்தூரி ரங்கன் நினைக்கப்படுவார்.
- ம.ரா.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment