இந்திரா பார்த்தசாரதி
தமிழ் இலக்கிய வரலாற்று நூல்களில், ஆழ்வார்களின் நாலாயிர திவ்யப் பிரபந்தச் செய்யுட்களுக்கு எழுதப்பட்ட உரைகளைப் பற்றிய குறிப்புகள் அதிகமாக இல்லை. காரணம், இவ்வுரைகள் 'வியாக்கியானங்கள்' என்று அழைக்கப் பட்டதாலோ என்னவோ, சமயத்தோடு மட்டும் வைத்து எண்ணப்பட்டன.
இவ்வுரையாசியர்களுடைய ஆழ்ந்த தமிழ்ப் பற்றைப் பற்றியோ, இவ்வுரைகளின் அற்புதமான உரை நயங்களைப் பற்றியோ பரவலாக யாருக்கும் தெரியாமலே போய்விட்டது. நஷ்டம், தமிழ் ஆர்வலர்களுக்குத் தான்.
சம்ஸ்கிருதத்துக்கு இணையான இலக்கிய, சமய ஏற்றம் தமிழுக்குத் தந்தவர்கள் வைணவர்கள்தாம். தமிழ்ப் பிரபந்தத்திலும், சம்ஸ்கிருதவேத நூல்களிலும் ஒத்த தேர்ச்சி உடையவர்கள் 'உபய வேதாந்திகள்' என்று அழைக்கப்பட்டனர்.
ஆழ்வார் பாசுரங்கள், சம்ஸ்கிருத வேதங்களுக்குச் சமமாகவோ அல்லது உயர்ந்தவையாகவோ கருதப்பட்டன. பெரியவாச்சான் பிள்ளை வியாக்கியானத்தில் வரும் ஒரு செய்தியை இதற்குச் சான்றாகக் கூறலாம்.
வங்கிபுரத்து நம்பி என்கிற ஆந்திரப் பூரணர், ஒரு சமயம், ஏழை, எளிய இடைக் குலப் பெண்களுடன் உரையாடிக் கொண்டிருந்தாராம். அதைப் பார்த்த, ராமானுஜருடைய உறவினரும், சிஷ்யருமாகிய முதலியாண்டான், ‘அவர்களுடன் என்ன பேசிக்கொண்டிருக்கிறீர்கள்?’ என்று கேட்டாராம். ‘அவர்களை வேத ஸ்லோகங்களைச் சொல்லி ஆசிர்வதித்தேன்’ என்றாராம் வங்கிபுரத்து நம்பி.
‘அவர்கள் ஈரத்தமிழ் பேச, நீங்கள் அவர்களை முரட்டு சம்ஸ்கிருதத்தில் ஆசிர்வதித்தீரோ?’ என்று சிரித்துக் கொண்டே கேட்டாராம் முதலியாண்டான்!
ராமாநுஜர் பணித்ததற்கேற்ப திருவாய்மொழிக்கு உரை எழுதினார், அவருடைய தலை மாணாக்கராகிய திருக்குருகைப்பிள்ளான். நாலாயிர திவ்ய பிரபந்தத்தை வேதங்களுக்கு நிகராக ராமானுஜரும், வியாக்கியானக்காரர்களும் நிறுவியதற்கு ஆசார வைணவர்களிடமிருந்து எதிர்ப்பு இல்லாமிலில்லை. இதைப் பற்றி நஞ்சீயர் குறிப்பிடுகிறார். நஞ்சீயருக்கும் ஆசார வைணவர்களுக்குமிடையே நிகழ்ந்த விவாதம் சுவாரஸ்யமானது.
எதிர்ப்பு அணி வைத்த முதல் வாதம்: ‘சம்ஸ்கிருதம் தேவ பாஷை. தமிழ் மானிட பாஷை. தமிழில் எழுதப்பட்டவற்றை சம்ஸ்கிருதத்தோடு இணைத்துப் பேசுவது தெய்வ நிந்தனை’. நஞ்சீயர் கூறினார்: ‘இறைவனை வழிபடும் மொழி எதுவாயினும் அது தேவ பாஷைதான்.’ எதிர்ப்பு அணியினர் கூறியது: ‘தமிழ் நான்கு சாதியினராலும் பேசப் படுவதால் அது தீட்டுப் பட்ட மொழி’. நஞ்சீயர் கோபத்துடன் சொன்னார்:’ இதைப் போன்ற அபத்தம் எதுவுமிருக்கமுடியாது. மக்கள் பேசும் மொழியே இறைவன் விரும்பிக் கேட்கும் மொழி. இது தமிழாகத்தானிருக்க முடியும்’.
எதிர்ப்பு அணியினர்,-சம்ஸ்கிருதத்தை தெய்வ மொழியாகப் போற்றியவர்கள்- சொன்னார்கள்:
‘நம்மாழ்வார் நாலாவது வருணத்தைச் சார்ந்தவர். அவர் பாசுரங்களை வேதங்களுக்குச் சமமாக வைத்துப் பேசுவது தெய்வ அபசாரம், இறைவனுக்கு அடுக்காது’.
நஞ்சீயர் இதைக் கடுமையாகக் கண்டித்துக் கூறினார்:’ ஒருவர் ஒரு குறிப்பிட்ட ஜாதியில் பிறப்பதற்கு அவர் பொறுப்பில்லை மேலும், மேன்மை என்பது ஜாதியினால் வருவதன்று. அறிவினாலும் ஒழுக்கத்தினாலும் வருவது. வேதங்களைக் காட்டிலும் நம்மாழ்வார் பாடல்களைத்தான் இறைவன் விரும்பிக் கேட்கிறான். உற்சவர் உலாவிலே வேதம் சொல்லுகின்றவர்கள் ஒருவர் கையை இன்னொருவர் பற்றிச் செல்லும்போது, திவ்யப் பிரபந்தம் சொல்கின்றவர்கள் ஒவ்வொருவரும் அவ்வாறு ஒருவர் கையை மற்றவர் பற்றாமல் சுதந்திரமாகத் தம் கைகளை வீசிக் கொண்டு செல்வார்கள். தமிழ்ப் பாசுரங்களை’ மெய்ந் நின்று கேட்டருளும்’ இறைவன் தங்களைத் தாண்டிப் போக மாட்டான் என்கிற அவர்களுடைய மன உறுதியினால்தான் அவர்கள் தனித்தனியே நடந்து செல்கிறார்கள்’
இரண்டாண்டுகளுக்கு முன்பு, சிதம்பரத்தில் தீட்சிதர்கள், இறைவன் சந்நிதியில் ஓதுவார்கள் தமிழ்த் திருமுறை இசைப்பது வேத மரபுக்கு விரோதம் என்று கூறியது நினவுக்கு வருகிறதா?
ஆனால் வைணவர்களால், பன்னிரெண்டாம் நூற்றாண்டிலேயே இப்பிரச்சினையை எதிர் கொண்டு, ராமானுஜர் போன்ற மாபெரும் சமயத் தலைவர் மூலம் இதற்கு முடிவு காண முடிந்தது.
No comments:
Post a Comment