Saturday, September 3, 2011

மகாகவி பாரதியும் அதிசயப்பிறவி வ.ராவும்

காலம் கொன்ற விருந்து 2 - (தொடர்)
நரசய்யா

மகாகவி பாரதியும் அதிசயப்பிறவி வ.ராவும்


பாரதியார் மறைந்து (1921 செப்டம்பர் 11) தொண்ணூறு வருடங்கள் ஓடிவிட்டன. சுதேசமித்திரன், பாரதி மறைந்த மறுநாள் (செப். 12) வெளியிட்ட செய்தி இன்னும் பசுமையாக உள்ளது. சிதைக்குத் தீயூட்டியவர் ஹரிஹர சர்மா (பாரதியின் உறவினர்). சடங்குகளுக்கு ரூபாய் 50- கொடுத்துதவியவர் எஸ். துரைஸ்வாமி அய்யர். (விவரம் பி. மஹாதேவனின் ஆங்கில நூல்). கிரியை நடந்த இடத்தில் சக்கரைச் செட்டியார், கிருஷ்ணஸ்வாமி சர்மா, ராமச்சந்திரய்யர் தமிழில் பேச, சுரேந்திர நாத் ஆர்யா தெலுங்கில் அஞ்சலி செலுத்தினார். பாரதியின் உடல் விரைவிலேயே தீக்கு இரையானது. அவர் மூட்டிய தீ வளர ஆரம்பித்தது.

அவருக்கு உரிய இடம் இலக்கிய உலகில் அப்போது அளிக்கப்படவில்லை அவரது நினைவுகளை மண்டயம் ஸ்ரீனிவாசாச்சார்-யாரின் புதல்வி ஸ்ரீமதி யதுகிரி அம்மாள் எழுதி வைத்ததைத் சுமார் பதினைந்து வருடங்களுக்கு அச்சிட எவருமே முன்வரவில்லை என்பதை ரா. அ. பத்மநாபன் கூறுகிறார்! யதுகிரி அம்மாள் காலம் சென்றபிறகு, 1954 இல் தான் இச்சிறு நூல் வெளிவந்திருக்கிறது, திரு ரா. அ. பத்மநாபன், பாரதியார் பற்றிக் குறிப்பிடுகையில், “பல நூற்றாண்டுகளுக்கோர் முறை தோன்றும் மகாமேதை ஒருவரின் வாழ்வு இவ்வாறு முடிவெய்தியது. தம்மிடையே ஒரு அதிசய புருஷர் வாழ்ந்தா-ரென அவர் காலத்திய தமிழுலகம் அறியவில்லை. நண்பர் சிலரே உணர்ந்தி-ருந்தனர்” என்கிறார்.

பி. எஸ். ராமையா, “அன்றையத் தமிழ்ப் பேராசிரியர்களும் புலவர்களும் பாரதியாரை ஒரு கவி என்றே ஒப்புக்கொள்ளவில்லை” என்கிறார்.

சிட்டி, 1935 ஆம் ஆண்டு நடந்த விவரத்தைச் ‘சாதாரண மனிதன்’ எழுதுகையில் என்னிடம் கதை போலச் சொன்னார்.
பாரதிக்கு மஹாகவி எனப் பட்டம் சூட்டிமகிழ்ந்த முதல் மனிதர் வ. ராமஸ்வாமி அய்யங்கார் தான். அதைத் தொடர்ந்தவர்கள் சிட்டி சுந்தரராஜன், கு. ப. ராஜகோபாலன், ந. பிச்சமூர்த்தி, சி. சு. செல்லப்பா போன்ற பாரதி பக்தர்கள்.

முதலில் பாரதியாரை மகாகவிஞராக ஏற்க மறுத்தவர்களில் குறிப்பிடத்தக்கவர் கல்கி. பின்னர் அவரே முன்னின்று, பாரதிக்கு எட்டயபுரத்தில் மணிமண்டபம் எழுப்பினார். அதே நிகழ்வில் ஆல் இந்தியா ரேடியோவுக்காக, சிட்டியும் அங்கேயே இருந்து ஒலிபரப்பு நிகழ்ச்சியில் பங்கு கொண்டார்.

பாரதியைத் தெய்வமாகவேக் கருதியவர் வ. ரா. புதுச்சேரி சென்று பாரதியைக் கண்ட விவரத்தைத் தமது ‘மகாகவி பாரதியார்’ என்ற நூலில், “அந்தக் கீதங்களைப் படித்துப் பரவசமானவர்களில் நானும் ஒருவன். இது 1910 ஆம் ஆண்டுக்கு முன்னர்” என்று தன்னை அறிமுகம் செய்துகொள்கிறார். இவ்வாறு பாரதியைத் தனது குருவாகவே ஏற்றுக்கொண்ட வ. ரா. பின்னர் மணிக்கொடியுடன் ஐக்கியமானார்.

ஒரு வேள்வி போல, ஸ்டாலின் ஸ்ரீனிவாசன், டி. எஸ். சொக்கலிங்கம் வ. ராமஸ்வாமி அய்யங்கார் மூவருமாக மணிக்கொடியை உருவாக்கினர். 1933 செப்டம்பர் 17 ஆம் தேதி “...மணிக்கொடி ஒரு முயற்சி. முடிவு, காலம் காட்டும். மணிக்கொடி ஒரு பிறவி. இதன் வாழ்வும் வளர்ச்சியும் எங்கள் லட்சியத்திலே. உங்கள் அன்பிலே, இறைவன் அருளிலே” என்ற பிரகடனத்துடன் மணிக்கொடி வாரப்பத்திரிகையாக வெளி வந்தது. அந்த மும்மூர்த்திகளும் இப்-பிரகடனத்தில் கையெழுத்-திட்டனர். பத்திரிகை வெளிவந்த ஒரு மணி நேரத்திற்குள், கல்கி மணிக்கொடி அலுவலகத்திற்கு வந்து தமது உள்ளக்களிப்பை வெளியிட்டதை பி. எஸ். ராமையா சொல்கிறார். பாரதியைப் பாடி மகிழ்ந்தது மணிக்கொடி!

மறுமலர்ச்சி இயக்கமாக வளர்ந்து ஏறு நடை போட்ட மணிக்கொடியுடன் வ. ரா தொடர்பு அறுந்தது ஒரு சோகமான கதை. 1934 அக்டோபரில் காங்கிரஸ் கட்சிக்குப் பிரசாரம் செய்ய வ. ரா, கோயம்புத்தூரில் பயணம் மேற்கொண்டிருந்தார். அப்போது மணிக்கொடியின் நிர்வாகப் பொறுப்பை ஏற்றிருந்த சொக்கலிங்கத்திற்கும் வ. ரா. விற்கும் இடையில் ஏதோ காரணத்தால் விரிசல். அக்டோபர் 21 தேதியிட்ட மணிக்கொடியில் இவ்வாறு ஒரு அறிக்கை வெளியிடப்பட்டிருந்தது:
“மணிக்கொடி ஆசிரியர் ஸ்ரீ வ. ராமசாமி ஐயங்கார் பல இடங்களில் பேசியதாகப் பத்திரிகைகளில் செய்திகள் பிரசுரிக்கப்படுகின்றன. இது தவறு. ஸ்ரீ ராமசாமி ஐயங்காருக்கும் மணிக்கொடிக்கும் இம்மாதம் ஒண்ணாம் தேதியிலிருந்து யாதொரு சம்பந்தமும் கிடையாது என்பதை அறிவித்துக் கொள்கிறோம். - ஆசிரியர்”.

சிட்டி இதை ஒரு விபத்தாகவே கருதினார். ஆனால் அவருக்கும் இந்நிகழ்வின் பின்புலம் தெரியாது. உடனே வ. ரா. வீரகேசரியில் (கொழும்பு) பணியில் சேர்ந்தார். பலருக்குத் தெரியாத விஷயம் - வீரகேசரியில் அவர் சேர்ந்தது வ. உ. சி யின் விருப்பப்படியாகும்.
வ. ரா. இதைப் பற்றிச் சொல்கையில், “நான் சென்னையை விட்டுச் சிறிது காலம் வெளியே இருக்க நேர்ந்தது பழங்கதை. அதை இப்போது அவிழ்ப்பதில் இலாபமில்லை. அவசியமேற்பட்டால் பிறகு சொல்கிறேன்” என்றார். ஆனால் அவர் பிறகு அதைப் பற்றி எங்கேயும் சொன்னதாகத் தெரியவில்லை. சிட்டியும் என்னிடம் பேசிய போது, தெரிந்ததாகக் காட்டிக்கொள்ளவில்லை.
வ. ரா இலங்கையில் இருந்த போது தான் தமிழகத்தையே குலுக்கிய பாரதியைப் பற்றிய மாபெரும் இலக்கியச் சர்ச்சை நிகழ்ந்தது. அச்சர்ச்சையின் விவரங்களைக் காணுமுன்னர் அன்றைய தமிழ் எழுத்தாளர்களின் பின்புலத்தையும் நோக்கவேண்டும்.

கரைந்துவிட்ட கனவுகளுடன் சொக்கலிங்கம் தினமணியில் சேர்ந்துவிட்டார். கே ஸ்ரீனிவாசன் பம்பாய் சென்றுவிட்டார். மணிக்கொடி, பி. எஸ். ராமையா கைகளில், சிறுகதைக்கென ஒரு பத்திரிகையாகப் பரிணமித்தது. ஜனரஞ்சக பத்திரிகையான ஆனந்த விகடன், வாசன் தலைமையில், கல்கி கிருஷ்ணமூர்த்தியின் புரட்சிகரமான மாற்றங்களால், அவரது நேர்த்தியான திறமையால், தமிழ் நாட்டின் வணிக நோக்கில் சிறந்த பத்திரிகையாகத் தனக்கு ஈடின்றி வெளிவந்து-கொண்டிருந்தது. கல்கியின் எழுத்து ஒரு தனி இடத்தை வாசகர்கள் மத்தியில் பிடித்து விட்டது. அதன் தேசிய இயக்கத்திற்குப் பாரதியின் பாடல்கள் கை கொடுத்து உதவின. அவரது தலையங்கங்கள் மக்களைக் கவரும் வகையில் அமைந்திருந்தன.

ஆனால் இவற்றிற்கெல்லாம் திருஷ்டி பரிகாரமாக, இவர்கள் காலத்தில்தான் பாரதி மஹாகவியா இல்லையா என்ற மேலே குறிப்பிட்ட பிரச்சினை தமிழ் நாட்டில் ஆரம்பித்தது. அதுவும் மணிக்கொடி, கல்கி குழுவினருக்கு இடையில்!

சர்ச்சையின் ஆரம்பம்.

பாரதி மறைந்து சுமார் கால் நூற்றாண்டுக்குப் பிறகு, மணிக்கொடி 1934 ஆகஸ்ட் இதழில் ந. ராமரத்தினம் என்பவர் தமது தொடர்க்கட்டுரையில், “வ. ரா. வுடன் மூன்று நாள்” என்ற தலைப்பில் ஒரு பகுதியை எழுதியிருந்தார். அதில் வ. ரா. பாரதியைப் பற்றிக் காரைக்குடியில் பேசுகையில், ‘ஆங்கிலத்தில் கவி சிரேஷ்டர்களாகக் கருதப்படுபவர்களைப் படித்துள்ளேன்... இவர்களுடைய புத்தகங்கள் யாவும் சேர்ந்தால் கூட பாரதியாரின் ஒரு வரிக்கு ஈடாகாது” என்று கர்ஜித்ததாகக் குறிப்பிட்டார். இதே கருத்தை வ. ரா. வீரகேசரி 11.-09.-35 பாரதி நாள் கட்டுரையிலும் சொல்லியிருந்தார்.

விஷயம் விஷமமாக உருவெடுத்தது, பாரதி மலராக வெளியிடப்பட்ட, 1935 தினமணி முதல் ஆண்டு மலரில் நெல்லை நேசன் என்பவர் எழுதிய ‘வீரகேசரி’ என்ற கட்டுரையில் தான்! அக்கட்டுரையில் அவர் “பாரதியை தேசபக்திக் கவி என்று ஒரே வார்த்தையில் சொல்லிவிடலாம் அல்லவா? பாரதி ஒரு நல்ல கவி; மகா கவி அல்லர்” என எழுதியிருந்தார். (நெல்லை நேசன் என்பது, பி. ஸ்ரீ. ஆச்சார்யா அவர்கள். இவரும் அப்போதைய ஆனந்த விகடன் எழுத்தாளர்களில் ஒருவர்)

தொடர்ந்து, இலக்கிய இரட்டையர்களான, கு. ப. ரா வும், ந. பிச்சமூர்த்தியும் தினமணியில் ஒரு கடிதம் எழுதினார்கள். அதில் “நெல்லை நேசன் எப்படி பாரதியாரை மகாகவி அல்ல என்று முடிவு கட்டினார் என்பது விளக்கப் படவில்லை; தமிழ்க் கவிதை ஆராய்ச்சி இப்பிரச்சினைகளைத் தீர்ப்பதைப் பொறுத்துத்தான் இருக்கிறபடியால், இப்போது அவற்றைச் சோதிக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுவிட்டதாக” குறிப்பிட்டிருந்தனர்.

ஆனந்த விகடன் ஆசிரியரான கல்கி கிருஷ்ணமூர்த்தி 3-1.1.-35 ஆம் விகடன் பிரதியில் ஒரு வாசகரின் கடிதமும் அதற்குப் பதிலாக விளக்கமும், பிரசுரித்திருந்தார்.

இலக்கிய மாணாக்கன் என்ற பெயரில் ஒருவர் ‘விகடன் தபால்’ பகுதிக்கு எழுதியதாக உள்ள கடிதத்தில் காரைக்குடியில் ஒருவர் பேசியது சரியா எனக் கேட்கப்பட்டிருந்தது. அக்கடிதம் எழுதியவரும் அதற்குப் பதிலெழுதி-யவரும் ஆசிரியரே (கல்கியே) எனச் சிட்டி கருதினார்.. அவரது அக்கருத்தைப் பற்றி என்னிடம் விளக்குகையில் சிட்டி சொன்னார்.. “முதலில் வ. ரா. இலக்கிய மாணாக்கன் என்பது பி. ஸ்ரீ. ஆச்சார்யா தான் என்றுதான் நினைத்திருந்தார். ஆனால் கல்கியே வ. ராவிடம், அக்கடிதம் எழுதியது பி. ஸ்ரீ. ஆசார்யா அல்ல என்று மட்டும் குறிப்பிட்டா-ராம். ஆனால் அது எவரெனச் சொல்லாமல் மழுப்பிவிட்டதாகத் தெரிகிறது. எழுதியுள்ள பாணியை வைத்துப் பார்த்தால், அது கல்கியால் தான் எழுதப்பட்டிருக்க வேண்டும் என நினைக்கவேண்டியுள்ளது.”

அக்கடிதத்திற்கு ஆசிரியரின் பதில், சற்று அநாகரீகமாகவே இருந்தது. இவை வெளியான நாள் நவம்பர் 3, 1935. (அக்கடிதங்கள் இணைக்கப்பட்டுள்ளன. நான் கேட்டவுடன் தமது பத்திரிகைக் காப்பகத்திலிருந்து எடுத்து அனுப்பிவைத்த விகடன் காரியாலத்தினருக்கு நன்றி.)

ஆசிரியரின் பதிலில், கல்கி, “..மேற்கண்ட அபிப்ராயத்தை உண்மையாகவே யாராவது வெளியிட்டிருந்தால் அவருக்கு இலக்கியம், கவிதைகளைப் பற்றி ஒன்றுமே தெரியா-தென்பது வெளிப்படை. அவர் நிரட்ச-குக்ஷியோ என்று சந்தேகிப்பதற்குக் கூட இடமுண்டு..” என எழுதியிருந்தார்.

விளைவு
முதலில் அக்கடிதங்களுக்கு எவரும் மறுப்பு தெரிவிக்கவில்லை. வ. ரா. வே எழுதிய மறுப்பு “பாரதியும் இலக்கிய மதிப்புரையும்” என்ற தலைப்பில் 30-.11.-1935 தேதியிட்ட சுதேசமித்திரன் இதழில் வெளிவந்தது. அக்கட்டுரையில், “நண்பர் ரா. கி. மதிப்புரை எல்லையையும் மரியாதை வரம்பையும் கடந்து என் பேரில் வசை மாரி பொழியாமலிருந்திருந்தால் அவருடைய அபிப்ராயத்தில் மூளி ஏற்பட்டிருக்காது. தவறாக இருந்தலும், சரியாக இருந்தாலும் அதை அலட்சியமாகப் பேச இடமிருந்திருக்காது.” என்று குறிப்பிட்டார்.
ஆனால் கல்கி வாளாவிருக்கவில்லை. அதற்குப் பதிலாக, அடுத்தவாரமே, சற்றே தரக் குறைவாக (அன்றைய மணிக்கொடி எழுத்தாளர்களின் கணிப்பு) “பாரதியும் இலக்கிய விமர்சனமும்” என்ற தலைப்பில், சுதேசமித்திரனில் (07.-12.-1935 இதழில்) ஒரு பதில் கட்டுரை எழுதினார். அதில், கல்கி, காவிரி நதியைப் பாரதிக்கும், கங்கையை ஷேக்ஸ்பியர், தாகூருக்கு ஒப்பிட்டும், காவிரி மீது தமக்கு பிரியமிருப்பது என்பதற்காக, காவிரி கங்கையை விடப் பெரிது என்று ஒரு நாளும் சொல்லப் போவதில்லை யென்றும் கூறியிருந்தார். அது மட்டுமல்ல; அக்கட்டுரை-யில் கல்கி, “டால்ஸ்டாயிடம், பாரதியின் வள்ளிப்பாட்டைக் கொடுத்தால் பாரதியின் எல்லா புத்தகங்களையும் நெருப்பில் போட்டுக் கொளுத்தச் சொல்லியிருப்பார்” என்று எழுதியது, வ. ரா. குழுவினர் இடையில் மிகுந்த தாக்கத்தை ஏற்படுத்தியது. பாரதியைப் பற்றிய கல்கியின் இக்கருத்து அவர்களால் பொறுத்துக் கொள்ள முடியாத நிலையில் இருந்தாலும் அப்போதே சிட்டி கு. ப. ரா முதலானோர் ஒன்றும் செய்யவில்லை. ஆனால் மற்ற சிலர் விபரீதமாக எதிர் விளைவை உண்டாக்கினர்.

உதாரணமாக, 21.-12.-1935 தினமணியில் “டால்ஸ்டாய், பாரதி பாடல்களை எரித்திருக்க மாட்டார் ஸ்வாமி! மாம்பழம், புடலங்காய் என எழுதும் உம் எழுத்தைத்தான் ஒரு பெட்டியில் போட்டு சீல் பண்ணிக் கடலில் எறிந்திருப்பார்” என்று இளங்கோவன் என்பவர் எழுதினார்.
வ. ரா. கல்கியின் கட்டுரைக்குப் பதிலாக, டிசம்பர் 15 அன்று சுதேசமித்திரனில் ஒரு கட்டுரை எழுதியிருந்தார். அக்கட்டுரைக்குப் பதிலொன்றுமில்லை. ஆதலால், இந்த விவகாரம் முடிந்து விட்டதாகக் கருதப்பட்டது.

ஆனால் மனம் நொந்து போயிருந்த வ.ரா. 3-.12.-1935 அன்று கொழும்புவிலிருந்து, கு. ப. ரா. வுக்கு நான்கு பக்க நீண்ட கடிதமொன்று எழுதினார். அதிருஷ்ட வசமாக முக்கால் நூற்றாண்டுக்கு மேலான அக்கடிதம் இப்போது எனது கைகளில் முழுமையாகக் கிடைத்துள்ளது.

கா. சிவத்தம்பி கருத்தில், இளங்கோவன் போல உணர்ச்சி வசப்படாது, சீரான முறையில் சரியான தர்க்கத்தில் பதிலளிக்கப் பிரவேசித்தவர் சிட்டிதான்! அவ்வாறு அமைக்கப்பட்ட தர்க்கமேடையில் பிரசன்னமாகும் சிட்டி சுதேசமித்திரனில் 23-.12.-1935 அன்று ஒரு நீண்ட கட்டுரை எழுதுகிறார். (இக்கட்டுரையை சிட்டி சொல்லச் சொல்ல சி. சு. செல்லப்பா தமது கைகளால் எழுதியதாகச் சொல்வார்.)
(இவ்விடத்தில், இதை வாசிப்போர் நான் இந்தப் பழைய நிகழ்வைக் கல்கிக்கு எதிராகக் காலம் தாழ்த்தி காழ்ப்புணர்ச்சியுடன் எழுப்பிவிட்டதாக நினைக்க வேண்டாம். இதை என்னிடம் கூறுகையில் சிட்டியின் உணர்வை என்னால் புரிந்து கொள்ள முடிந்தது. அவர் அப்போது அகவை 93 தாண்டியிருந்தார். அப்போது கூட அவரால் அன்றைய இச்சொற்களைத் தாங்கிக் கொள்ள முடியவில்லை என்பது தான் எனது முடிவு. இந்நிகழ்வைக் குறித்து சிவத்தம்பியும் அ. மார்க்சும் தமது “பாரதி, மறைவு முதல் மகாகவி வரை” என்ற நூலில் பதிவு செய்துள்ளனர்.)

சிட்டி, தாம் எழுதிய கட்டுரையை மித்திரன் ஆசிரியர் சி. ஆர். ஸ்ரீனிவாசனிடம் தந்த போது, அவர் சிட்டியின் கருத்தை நிரூபிக்கத் தொடர்ந்து கட்டுரைகள் எழுதவேண்டுமெனத் தெரிவித்தார்.

அப்படியாக, சிட்டியும் கு. ப. ரா. வும் எழுதியவை தொகுக்கப்பட்டு “கண்ணன் என் கவி” என்ற நூலாக சங்கு கணேசனால் 1937இல் வெளியிடப்பட்டது. பாரதியின் எழுத்துக்கு இதுதான் முதல் திறனாய்வு என்று கூறிய சங்கு கணேசன் இரண்டாம் பதிப்பாகத் தனது முன்னுரையுடன் 1981இ-ல் பாரதி நூற்றாண்டு நினைவாக மறுபடியும் வெளியிட்டார். அதற்குப் பின்னணி என்ற பெயரில் சி. சு. செல்லப்பா மிகவும் விரிவாக ஒரு முன்னுரை வழங்கியுள்ளார். இந்த நூல் வெளிவரக் காரணமாக இருந்த வ. ராவினால் கு. ப. ராவுக்கு 3-1.2.1935 அன்று எழுதப்பட்ட நான்கு பக்கக் கடிதம் முன்னரே குறிப்பிட்டது போலக் காலம் தாழ்த்தியாயினும், என் கைகளில் வந்தடைந்தது.

ஆசிரியர் பக்கம்

மரணம் தண்டனையா?
வாழ்வது தண்டனை என்றால்
மரணமும் தண்டனை தான்
பிறந்தவர்க்கெல்லாம்
மரணம் உண்டு.

மரணம் தண்டனை என்றால்
எல்லோருக்கும் தண்டனை உண்டு.
விரும்பி, மரணத்தை ஏற்பவர்கள்
தண்டனை என்று நினைக்கிறார்களா?

விரும்பாமலும் மரணம் உண்டு
“சாதலின் இன்னாதது இல்லை”
ஆனால்
சாகாமல் இருக்கவும் முடிவதில்லை.
விரும்பாவிட்டாலும்
மரணத்திலிருந்து தப்பிக்கமுடியாது.
மரணம் இயற்கை எனில்
இயற்கை தண்டனை ஆகலாமோ?
இயற்கை, தண்டனைப்பட்டியலில்
இடம் பெறக்கூடுமோ?

உலகில்
96 நாடுகளில்
மரணதண்டனைக்கு
மரணம் நடந்திருக்கிறது
56 நாடுகளில்
இப்போதும் மரணதண்டனை
சுதந்திரமாகத் திரிகிறது.

மரணதண்டனைக்குச் சுதந்திரம் தருவதில்
தொடர்ந்து முதலிடம் சீனாவுக்குத்தானாம்
தம்மபதம் சொல்கிறது..
“Every one fears punishment;
Every one fears death,
Just as you do.
Therefore you don’t kill or
Cause to be killed”

புத்தமத நாடுகளில்
பூட்டானில் தடை; தாய்லாந்தில் நடைமுறை
கிறித்துவத்தில் பாவமன்னிப்பு
இருந்த போதிலும்
கிறித்துவநாடுகள் சிலவற்றில்
மரணம் தண்டனையாக சிலுவை சுமக்கிறது.
20 ஆம் நூற்றாண்டு இரத்தத்தில் கிடந்தது
உலகயுத்தங்கள்
ஆர்மேனியன் மக்கள்
ஐரோப்பிய யூதர்கள்
கம்போடியர்கள்

1937-&38 இல் ருஷ்யர்கள்
1949 இல் சீனர்கள் என்று
இலட்சக்கணக்கில் மரணதண்டனைகள்.
இந்த நூற்றாண்டிலும்
ஈழத்தில்
இப்போதும் எங்காவது...
சாதி, இனம், மதம், கட்சி, அரசியல்,
சொத்து, காமம் என்று
கொத்துக்கொத்தாக
மரணம் தண்டனையாக
அப்பாவிப் பொதுமக்களுக்கும்.
மரணம் இயற்கை எனில்
காரணம் வேண்டாம்.

தண்டனை எனில் காரணம் சொல்லப்படும்.
தண்டனைக்கு உரியவர்
தண்டனையை அனுபவிக்கவேண்டும்
மரணம் தண்டனை என்று
உயிரைப் போக்கினால்
உயிரைவிட்டபின்
அவருக்குத் தண்டனை எப்படி?
மரண தண்டனை
அவர் குழந்தைகளுக்கும் குடும்பத்திற்கும்
வாழ்நாள் தண்டனை.
குற்றமிழைத்தே தண்டனை பெற்றாலும்
மரணம்,
அவருக்குத்
தண்டனையாவதில்லை
விடுதலையாகிறது.
சுவடிக்கட்டுக்குள் மறைத்திருந்த
கத்தியால் குத்தியவனைப்
பிடிக்க ஓடிய காவலரிடம்
“தத்தாநமரேகாண்” என்று சொல்லித்
தப்பிக்கவைத்தே தண்டனை வழங்கிய
மெளிணிப்பொருள் நாயனாரைப்
பெரியபுராணம் காட்டுகிறது.

மரணம் உடலுக்கென்றால்
தண்டனை உயிருக்கும் தானே
இருந்து வருந்துவதைவிடவும்
இறந்துபோவது நல்லதென்று
தற்கொலை செய்து கொள்கிறவர்களுக்கு
மரணம் தண்டனையா? விடுதலையா?

மரணம்
இயற்கையாகவே இருக்கட்டும்
வாழ்க்கையைப்போல
யாருக்கும்
யாரும்
எதன் பொருட்டும்
மரணத்தைத் தண்டனையாக்குவது
நன்னயம் செய்யும் நாகரிகச் சமுதாயத்தின்
அடையாளமாகுமோ?
அவமானமாகாதோ?

-ம. ரா.

Friday, September 2, 2011

செப்டம்பர் இதழ்: உள்ளடக்கம்

கவிதை
ஞானக்கூத்தன்
கோகிலாராஜ்
குடந்தை பரிபூரணன்
மு. சிபிகுமாரன்
வளவ. துரையன்
நா. விச்வநாதன்
ஸ்ரீரங்க கோபாலன்

கதை
கௌசல்யா ரங்கநாதன்
மணி ராமலிங்கம்
எஸ். அசோகன்
தேவராஜ்
மதிகண்ணன்
குமாரநந்தன்


கட்டுரை
நரசய்யா
ராஜ் கண்ணன்
மரன்
க. அம்சப்ரியா

சந்திப்பு
வெங்கட் சாவாமிநாதன் அவர்களுடன் ஒரு நாள் மாலை

நூல் மதிப்புரை
மு. ராமசாமி

கடைசிப்பக்கம்
இந்திரா பார்த்தசாரதி

செப்டம்பர் மாத இதழ்



சந்தா விவரம்:


ஆண்டு சந்தா: (
உள்நாடு )ரூ220/- (வெளிநாடு)US$30
இரண்டு ஆண்டு சந்தா: (
உள்நாடு )ரூ440/- (வெளிநாடு)US$50
ஆயுள் சந்தா: (
உள்நாடு )ரூ5000/- (வெளிநாடு)US$300

அனைத்துத் தொடர்புகளுக்கும்.

பதிப்பாளர்: சேது.சொக்கலிங்கம்
கவிதா பப்ளீகேஷன்: 8, மாசிலாமணி தெரு, தியாகராயநகர், சென்னை-600 017
தொலைபேசி: 24364243, 24322177