Saturday, September 3, 2011

ஆசிரியர் பக்கம்

மரணம் தண்டனையா?
வாழ்வது தண்டனை என்றால்
மரணமும் தண்டனை தான்
பிறந்தவர்க்கெல்லாம்
மரணம் உண்டு.

மரணம் தண்டனை என்றால்
எல்லோருக்கும் தண்டனை உண்டு.
விரும்பி, மரணத்தை ஏற்பவர்கள்
தண்டனை என்று நினைக்கிறார்களா?

விரும்பாமலும் மரணம் உண்டு
“சாதலின் இன்னாதது இல்லை”
ஆனால்
சாகாமல் இருக்கவும் முடிவதில்லை.
விரும்பாவிட்டாலும்
மரணத்திலிருந்து தப்பிக்கமுடியாது.
மரணம் இயற்கை எனில்
இயற்கை தண்டனை ஆகலாமோ?
இயற்கை, தண்டனைப்பட்டியலில்
இடம் பெறக்கூடுமோ?

உலகில்
96 நாடுகளில்
மரணதண்டனைக்கு
மரணம் நடந்திருக்கிறது
56 நாடுகளில்
இப்போதும் மரணதண்டனை
சுதந்திரமாகத் திரிகிறது.

மரணதண்டனைக்குச் சுதந்திரம் தருவதில்
தொடர்ந்து முதலிடம் சீனாவுக்குத்தானாம்
தம்மபதம் சொல்கிறது..
“Every one fears punishment;
Every one fears death,
Just as you do.
Therefore you don’t kill or
Cause to be killed”

புத்தமத நாடுகளில்
பூட்டானில் தடை; தாய்லாந்தில் நடைமுறை
கிறித்துவத்தில் பாவமன்னிப்பு
இருந்த போதிலும்
கிறித்துவநாடுகள் சிலவற்றில்
மரணம் தண்டனையாக சிலுவை சுமக்கிறது.
20 ஆம் நூற்றாண்டு இரத்தத்தில் கிடந்தது
உலகயுத்தங்கள்
ஆர்மேனியன் மக்கள்
ஐரோப்பிய யூதர்கள்
கம்போடியர்கள்

1937-&38 இல் ருஷ்யர்கள்
1949 இல் சீனர்கள் என்று
இலட்சக்கணக்கில் மரணதண்டனைகள்.
இந்த நூற்றாண்டிலும்
ஈழத்தில்
இப்போதும் எங்காவது...
சாதி, இனம், மதம், கட்சி, அரசியல்,
சொத்து, காமம் என்று
கொத்துக்கொத்தாக
மரணம் தண்டனையாக
அப்பாவிப் பொதுமக்களுக்கும்.
மரணம் இயற்கை எனில்
காரணம் வேண்டாம்.

தண்டனை எனில் காரணம் சொல்லப்படும்.
தண்டனைக்கு உரியவர்
தண்டனையை அனுபவிக்கவேண்டும்
மரணம் தண்டனை என்று
உயிரைப் போக்கினால்
உயிரைவிட்டபின்
அவருக்குத் தண்டனை எப்படி?
மரண தண்டனை
அவர் குழந்தைகளுக்கும் குடும்பத்திற்கும்
வாழ்நாள் தண்டனை.
குற்றமிழைத்தே தண்டனை பெற்றாலும்
மரணம்,
அவருக்குத்
தண்டனையாவதில்லை
விடுதலையாகிறது.
சுவடிக்கட்டுக்குள் மறைத்திருந்த
கத்தியால் குத்தியவனைப்
பிடிக்க ஓடிய காவலரிடம்
“தத்தாநமரேகாண்” என்று சொல்லித்
தப்பிக்கவைத்தே தண்டனை வழங்கிய
மெளிணிப்பொருள் நாயனாரைப்
பெரியபுராணம் காட்டுகிறது.

மரணம் உடலுக்கென்றால்
தண்டனை உயிருக்கும் தானே
இருந்து வருந்துவதைவிடவும்
இறந்துபோவது நல்லதென்று
தற்கொலை செய்து கொள்கிறவர்களுக்கு
மரணம் தண்டனையா? விடுதலையா?

மரணம்
இயற்கையாகவே இருக்கட்டும்
வாழ்க்கையைப்போல
யாருக்கும்
யாரும்
எதன் பொருட்டும்
மரணத்தைத் தண்டனையாக்குவது
நன்னயம் செய்யும் நாகரிகச் சமுதாயத்தின்
அடையாளமாகுமோ?
அவமானமாகாதோ?

-ம. ரா.

No comments:

Post a Comment