Friday, July 6, 2012

கணையாழி இணைய இதழ் இன்று முதல் வாசகர்களுக்காக..!



நண்பர்களே,

கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் மீண்டும் கணையாழி அச்சு இதழாக வெளிவரத் தொடங்கியமை இலக்கிய உலகத்தைச் சேர்ந்தவர்கள் பலருக்கும் மகிழ்ச்சியளித்த ஒரு விஷயமாகும். இப்போது உலகின் எல்லா நாடுகளிலும் உள்ள தமிழ் பேசும் இலக்கிய ஆர்வலர்களுக்காக இணைய இதழாகவும் புதி வடிவம் எடுத்துள்ளது கணையாழி. இம்மாத இதழை இணையத்தில் வாங்கி வாசிக்கும் வகையில் இணையப் பதிப்பை கணையாழி ஆசிரியர் குழு இன்று முதல் தொடங்கியுள்ளது.





இணைய இதழின் சந்தா விபரங்கள்:

  • மாத இதழ் சந்தா - $2.50
  • 6 மாத இதழ்களின் சந்தா - $12.50
  • 1 வருட இதழ்களின் சந்தா - $20.00
  • 2 வருட இதழ்களின் சந்தா - $38.00
  • 5 வருட இதழ்களின் சந்தா - $90.00


இணைய இதழை http://kanaiyazhi.emagaz.in என்ற பக்கத்திலிருந்து வாசிக்கலாம்!!

இணையத்தில் வலம் வரும் கணையாழிக்கு உங்கள் ஆதரவு மேலும் வளம் சேர்க்கும். இச்செய்தியை உங்கள் நண்பர்கள் வட்டாரத்திலும் ஏனையை மடலாடற் குழுக்களிலும் பகிர்ந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கின்றேன்

கணையாழி இணைய இதழாகவும் வெளிவரும் இச்சமயத்தில் திண்ணை இணைய இதழில் வே.சபாநாயகம் எழுதி அண்மையில் வெளிவந்த ஒரு கட்டுரையையும் பகிர்ந்து கொள்வது பொறுத்தமாக இருக்கும் என்பதால் இங்கே இக்கட்டுரையை வழங்குகின்றேன். வாசித்து கருத்துக்கள் பகிர்ந்து கொள்ளலாம்.

அன்புடன்
சுபா

Thursday, July 5, 2012

கணையாழியின் கதை



வே.சபாநாயகம்

        இது அசோகவனத்தில் சந்தித்து அனுமன் பெற்ற கணையாழியின் கதை அல்ல. இலக்கிய உலகில் தனக்கென சிறப்பான ஒரு இடத்தை உருவாக்கி வைத்துள்ள கலை இலக்கியத் திங்கள் இதழான 'கணையாழி' யின் தோற்றம் முதல் இன்றைய வளர்ச்சி வரையிலான ஒரு 'திரும்பிப் பார்த்தல்'.

        'புது தில்லி பொழுது போகாத ஒரு மாலை வேளையில், நண்பர் ரங்கராஜனுடன் அரட்டை அடித்துக் கொண்டிருந்த போது, பத்திரிகை ஆரம்பிக்கும் யோசனை தோன்றியது.பேஷாகச் செய்து விடலாம் என்று சொன்ன ரங்கராஜன் தன் பங்குக்கு ஒவ்வொரு இதழிலும் எழுதுவதாக உறுதி அளித்தார். தமிழில் வெளிவந்து கொண்டிருந்த பத்திரிகைகளிலிருந்து வித்தியாசமாக இருக்க வேண்டும். அரசியல், ஆன்மீகம், மருத்துவம், அத்துடன் கொஞ்சம் இலக்கியம் என்று முடிவாயிற்று. ஆங்கிலப் பதிதிரிகைகளின் தரத்தில் அறிவார்த்தமாக இருக்க வேண்டும். ஜோக்குகள் கூடாது. 'கலைமகள்' போல் ஒரு தமிழ்ப் பெயராக இருக்க வேண்டும் என்று யோசித்து 'கணையாழி'என்று பெயர் வைத்தேன்' என்று 'கணையாழி' பத்திரிகையின் நதி மூலத்தை, அமெரிக்கப் பத்திரிகையான 'நியூயார்க் டைம்ஸ்' பத்திரிகையின் தில்லி நிருபராகப் பணியாற்றி வந்த திரு.கி.கஸ்தூரிரங்கன்  கூறியிருக்கிறார்.

        டெம்மி அளவில் 24 பக்கம் கொண்டதாக 40 காசு விலையில், ஜூலை 1965 என்று முதல் பக்கத்தில் அச்சடித்து வந்த முதல் 'கணையாழி' ஆகஸ்ட் 15ல் வெளி வந்தது. தில்லிக்கு அப்போது வந்திருந்த ஜெயகாந்தனுடன் ஒரு பேட்டி, கலைமகளில் அரசியல் கட்டுரை எழுதி வந்த கே.சீனிவாசன் கட்டுரை, ஓரிரண்டு கதைகள், சினிமா, நாடகம் பற்றிய தகவல்கள் விமர்சனங்கள், ந.பிச்சமூர்த்தி கவிதைகள் பற்றி ஒரு அலசல் என்றெல்லாம் அதில் இருந்தன. அட்டைப் படமாக இந்தியத் தேசம், அதற்குள் நேருவும் சாஸ்திரியும் - அதுதான் அட்டைப்படக் கட்டுரையும். .தில்லியில் அபோது தமிழ் அச்சகம் இல்லாததால் சென்னை வந்து ஒருமாதம் தங்கி அச்சகமே கதி என்று கிடந்து 2000 பிரதிகள் அச்சடித்து எடுத்துக்கொண்டு போய், பிரதிகளைப் பாதிக்கு மேல் விற்க முடியாமல், 500 பிரதிகளை இலவசமாக அனுப்பி மிகுந்த சிரமங்களுக்கு ஆளானாலும் படித்தவர்கள் 'நன்றாக இருக்கிறது, வித்தியாசமாக இருக்கிறது, நல்ல எதிர்காலம் இருக்கிறது' என்று பாராட்டியதால், உற்சாகம் குறையவில்லை என்று எழுதுகிறார் கி.க. ஆரம்பத்தில் அசோகமித்திரனின் பங்களிப்பு கி.கவுக்குப் பெரிதும் துணையக இருந்தது.கணையாழியின் பொறுப்பாசிரியராக சென்னையிலிலுருந்து அவர் செயல்பட்டார். மிகவும் பொறுப்புடன், பிரதிபலனை எதிர்பாராது மாதாமாதம் 'கணையாழி'யை அச்சடித்து அனுப்பி வைத்தார்.

        பிறகு கொஞ்சம் கொஞ்சமாக சந்தாக்கள் வரத் தொடங்கியுள்ளன. விற்பனை ,உற்சாகம் தராதிருந்தும் எழுத்தாளர்களின் ஆதரவு பெருகியதால் கி.க உற்சாகமாகவே தொடர்ந்தார். 'தில்லி எழுத்தாளர்கள் சுப்புடு,'கடுகு' என்கிற பி.எஸ்.ரங்கநாதன், பூர்ணம் விஸ்வநாதன், லா.சு.ரங்கராஜன், இ.பா. , தி.ஜானகிராமன், என்.எஸ்.ஜகந்நாதன், கே.எஸ்.சீனிவாசன் என்று ஒரு ஐந்து நட்சத்திரத் தரத்தில் படைப்புகள் கணையாழியில் வெளிவரத் தொடங்கின' என்று பெருமிதப்படுகிறார் கி.க. இளம் எழுத்தாளர்கள் ஆதவன், சம்பத், மாலன், பாலகுமாரன் ஆகியோர் கணையாழி மூலம் முத்திரை பதித்தார்கள். ஞானக்கூத்தன், எஸ.வைத்தீஸ்வரன்,தி.சொ வேணுகோபாலன், சி.மணி முதலான 'எழுத்து'க்கவிஞர்கள் புதுக்கவிதை எழுதினார்கள்.அசோகமித்திரனின்  கதை, சுஜதாவின் கடைசிப் பக்கம், என்.எஸ் ஜெயின் 'என்னைக்கேட்டால்', சுப்புடுவின் சங்கீத வித்வான்கள் அறிமுகம் போன்றவை ஒவ்வொரு இதழையும் சுவாரஸ்யப்படுத்தின.இந்திராகாந்தி,மொரார்ஜி, காமராஜ், அண்ணா, கருணாநிதி, பெரியார் போன்ற பெரிய அரசியல் புள்ளிகளுடன் நேர்முகப்பேட்டிகள் மூலம் 'கணையாழி'க்கு ஒரு அந்தஸ்து ஏற்படத் தொடங்கியது.பின்னாளில் அரசியல் கைவிடப்பட்டு முழுக்க முழுக்க இலக்கிய ஏடாகப் பரிணாமம் கொண்டது.

        முப்பது ஆண்டுகள் நடத்தி பல சாதனைகள் செய்தபின், 'கணையாழி'யின் பொருளாதாரமும் கி.கவின்  உடல் நிலையும் நலிந்துபோன நிலையில் யாரிடமாவது அந்த இனிய சுமையைத் தோள் மாற்றிவிட விரும்பினார். அப்போது தமன்பிரகாஷ், சுவாமிநாதன், ம.ராஜேந்திரன் ஆகிய நண்பர்கள் தங்களது 'தசரா' அறக்கட்டளை மூலம் எடுத்து நடத்த முன் வந்தபோது மிகுந்த மகிழ்ச்சியோடு கி.க அவர்களிடம் 'கணையாழி'யை ஒப்படைத்தார். இதனை மிகுந்த உணர்ச்சிப்பெருக்கோடு, 1996ல் நடைபெற்ற 'கணையாழி'யின் 31வது ஆண்டு தொடக்கவிழாவின் போது, 'கணையாழி'யைத் தன் வளர்ப்பு மகளாக வர்ணித்து இந்தக் கல்யாண விழாவில் தான் மகிழ்ச்சியோடு இருப்பதாகவும், கணையாழியின் சஷ்டியப்தபூர்த்தி விழாவையும் தான் ஆவலோடு எதிர் பார்ப்பதாகவும் குறிப்பிட்டார். ஆனால் பதினைந்தாண்டுகளுக்கு மேலாக சிறப்பாக நடத்திய பின் 2006ல் ' தொடர்ந்து நடத்த முடியாத நிலைமை ஏற்பட்டது. திரும்பவும் 2011 மே முதல் கவிதா சொக்கலிங்கம் தனது 'கவிதா பதிப்பகம்' மூலம் வெளியிடும் பொறுப்பை ஏற்க, தசரா 'கணையாழி'யை புதிய பாய்ச்சலுடன் நடத்தத் தொடங்கியது. ஒராண்டு வெற்றிகரமாக நடந்த பிறகு தற்போது மே - '12 முதல் திரு.ம.ராஜேந்திரனின் முழுப்பொறுப்பில் வெளிவருகிறது.

        'கணையாழி', கி.க பொறுப்பில் வெளியானபோது பல சோதனை முயற்சிகளைச் செய்து சாதனைகள் பல நிகழ்த்தி இலக்கிய ரசிகர்களின் நெஞ்சில் நீங்காத இடத்தைப் பெற்றது. புதிய இளம் எழுத்தாளர்களைக் 'கணையாழி'யில் எழுத வைத்து இன்றைய நட்சத்திர எழுத்தாளர்கள் பலரை உருவாக்கியதை முதல் சாதனையாகச் சொல்லலாம். வாசகர் கடிதத்தை இலக்கிய அந்தஸ்க்கு உயர்த்தியதை அடுத்துச் சொல்லலாம். புதியவர்களும் புகழ்பெற்ற மூத்த படைப்பாளிகளும் வாசகர் கடிதம் மூலம் பல சிறப்பான விவாதங்களை நடத்திப் பரபரப்பை ஏற்படுத்தினர். இலக்கியத்திலும் இட ஒதுக்கீடு கேட்டு கவிஞர் பழமலய் குரலெழப்ப  சு.சமுத்திரம்  போன்றவர்கள் வழி மொழிந்ததும், என்.எஸ்.ஜகந்நாதனின் கட்டுரை ஒன்றில் மணிப்பிரவாள நடை பற்றி எழுதிய கருத்துக்களுக்கு தி.க.சி எதிர் வினையாற்றியதும் இன்றும் நினைவில் நிற்பவை.

        அடுத்து கணையாழிக் கதைகளும் கவிதைகளும் தனித் தொகுப்புகளாக வருமளவுக்குச் சிறப்பாக இருந்ததைக் குறிப்பிடலாம். கணையாழியில்தான் குறுநாவல்களுக்கு ஒரு இலக்கிய அந்தஸ்து ஏற்பட்டது என்றால் அது மிகை இல்லை. அதிலும் குறிப்பாக 'தி.ஜானகிராமன் நினைவுக் குறுநாவல் போட்டிகளில் வெளியானவை அத்தனையும் முத்துக்கள் என்றே சொல்லலாம். மேலும் இந்திரா பார்த்தசாரதி, தி.ஜானகிராமன், அசோகமித்திரன் வண்ணநிலவன் போன்றோரது அற்புதமான தொடர் நாவல்களும் 'கணையாழி'க்குப் பெருமை சேர்த்தன. 'கணையாழி' கிடைத்ததும் முதலில் கடைசிப்பக்கத்தைப் பார்க்குமளவுக்குப் பரபரப்பை ஊட்டியவர் 'ஸ்ரீரங்கம் எஸ்.ஆர்' ஆக ஆரம்ப காலங்களில் அறியப்பட்ட சுஜாதா அவர்கள். பல சித்திர விசித்திரங்களை சோதனை முயற்சிகளாக மேற்கொண்டு எழுத்தாளனை ஒரு நட்சத்திர அந்தஸ்க்கு உயர்த்திய அவரது சாதனை 'கணையாழி'யில்தான் நிகழ்ந்தது. புத்திலக்கியத்துடன் பழைய காவிய நயங்களைக் காட்டும் கே.எஸ்.சீனிவாசன் அவர்களது 'காவ்ய ராமாயாணம்' தொடரையும் வெளியிட்டது கணையாழி. 'முஸ்தாபா' என்ற பெயரில் யார் என்று தெரியாத மர்மத்தில் வாசகரை ஆழ்த்திய கி.க அவர்களது 'உள்ளது உள்ளபடி..' ஒவ்வொரு இதழையும் ஆவலுடன் எதிர்பார்க்க வைத்தது.  காலஞ்சென்ற அற்புதப் படைப்பாளி ஜெயந்தன் தனது 'நினைக்கப்படும்' நாடகத்தின் மூலம் தன்னை எழுத்துலகம் திரும்பிப் பார்க்கச் செய்தார். 'கணையாழி'யின் முகத்துக்குப் புதியதொரு பொலிவினை இத்தகைய பதிவுகள் கொடுத்தன. கிருஷ்ணன்நம்பியின் புகழ் பெற்ற சிறுகதையான 'மருமகள் வாக்கு' 'கணையாழி'யில்தான் வெளியாயிற்று, மற்றும் இதழ்தோறும் வாசகர்களை ஈர்த்த சுந்தரராமசாமி அவர்களது கேள்வி-பதிலும், கே.சீனிவாசன் அவர்களது கூர்மையான அரசியல் கட்டுரைகளும், திருப்பூர் கிருஷ்ணன் அவர்களது சுவாரஸ்யமான 'இலக்கிய விசாரமு'ம் குறிப்பிடத்தக்கவை. இன்னும் 'கணையாழி'க்குப் பெருமை சேர்த்தவர்களும், 'கணையாழி'யால் வெளிச்சம் பெற்றவர்களும் வழங்கிய அரிய படைப்புகள் பற்றி எழுதி மாளாது.

        தில்லியில் கி.க வுக்கு உதவியாக திரு லா.சு.ரங்கராஜன் - அசோகமித்திரன் போலவே கணையாழியின் பொறுப்பாசிரியராக சிறப்பாகப் பணியாற்றினார். கி.க சென்னைக்கு வந்ததும் சி.அண்ணாமலை என்பவர் உதவியாசிரியரகவும் இ.பா. கௌரவ ஆசிரியராகவும் கணையாழியை நடத்தினார்கள். இ.பா இன்றுவரை கணையாழியின் சிறப்பாசிரியராகத் தொடர்கிறார்.

        கணையாழியின் வெள்ளி விழா ஆண்டில் 'கணையாழி-25' என்ற தலைப்பில் கவிஞர் ஞானக்ககூத்தன் தொடர் எழுதி வந்தார். 30 ஆண்டுகள் முடிந்த போது, தசராவின் கணையாழியில் கடந்த காலப் பதிவுகளை நினைவூட்டும் வகையில் 'கணையாழியின் பரிணாம வனர்ர்ச்சி' என்ற தலைப்பில் வே.சபாநாயகம்  எழுதிவந்தார். 1997 பிப்ரவரியில் 'கணையாழி'யின் முதல் இதழ் முதல் இணையத்தில் பதிவு செய்து வைக்க, அரவிந்தன், கவிஞர்கனிமொழி மூலம் கி.க முயன்றார். கொஞ்சம் பதிவானபிறகு ஏனோ அம்முயற்சி கைவிடப்பட்டது. 30 ஆண்டுகாலத்தில் கணையாழியில் வந்த சிறப்பம்சங்களைக் கொண்ட கணையாழி தொகுப்பைக்   கஸ்தூரி ரங்கன்  வே.சபாநாயகம், இ,பா, என்.எஸ்.ஜெ மூலம் நான்கு தொகுதிகளாகக் 'கணையாழி களஞ்சியம்' என்ற தலைப்பில் கலைஞன் பதிப்பக வெளியீடாகக்  கொண்டு வந்ததார்..

        31ஆவது ஆண்டுமலர் வெளியீட்டைத் 'தசரா' ஒரு விழாவாகவே கொண்டாடியது. இலக்கிய அன்பர்களாலும் படைப்பாளிகளாலும் நிரம்பி வழிந்த அரங்கம், 'தசரா'வுக்குக் கிடைத்த அமோக வரவேற்பைக் காட்டியது. அது 'தசரா'வுக்கு 'கணையாழி'யை மிகுந்த உற்சாகத்துடன் தொடர வழி வகுத்தது.

        'தசரா' பொறுப்பில் வந்த பிறகும் கணையாழிக்குப் பெருமை சேர்த்த அதன் ஆஸ்தான எழுத்தாளர்கள் சுஜாதா. என்.எஸ்.ஜெ, இ.பா. கி.க அசோகமித்திரன் எல்லோரும் தொடர்ந்து கணையாழியில் எழுதி வந்தார்கள்.  சுஜாதா கணையாழியில் எழுதாமல்  போனதும். அவரது கடைசிப் பக்கத்தை தோழர் தியாகு போன்றோர்களின் தொடர்கள் அணி செய்தன. பழைய எழுத்தாளர்கள் ந.முத்துசாமி, பா.செயப்பிரகாசம், சா.கந்தசாமி. இரா.முருகன், பிரபஞ்சன், த.பழமலய், அறிவுமதி, கல்யாண்ஜி, புவியரசு போன்றோரும் தொடர்ந்து எழுதினார்கள். வெங்கட் சாமிநாதன், கே.எஸ் சுப்பிரமணியன், மார்க்ஸ் போன்றோரின் விமர்சனங்களும் வெளியாயின. பழைய கணையாழியில் துடிப்பான இளைஞர்கள் இடம் பெற்றது போலவே இப்போதும் பின்னாளில் புகழ் பெற்ற புதிய  படைப்பாளர்கள்  கவிஞர் நா.முத்துகுமார், யூமா வாசுகி, பாப்லோ அறிவுக்குயில், அழகிய பெரியவன். இளம்பிறை, அ.வெண்ணிலா , நிஷார் மற்றும் கணையாழியில் இடம் கிடைக்காதா என்று ஏங்கிக்கொண்டிருந்த ஆரம்ப எழுத்தாளர்களும் இடம் பெற்றார்கள். ஈழத்து எழுத்தாளர்கள் கார்த்திகேசு சிவத்தம்பி, அ.முத்துலிங்கம், மாத்தளைசோமு, எஸ்.பொ, தேவகாந்தன் ஆகியோரது படைப்புகளும் தொடர்ந்து இடம் பெற்றன.

        இதழ் தோறும் நிறைய புதிய நூல்களின் அறிமுகமும் பிரபஞ்சன், சா.கந்தசாமி ஆகியோர் தாம் படித்த நூல்களை விமர்சித்ததும் வாசகர்களின் வரவேற்பைப் பெற்றன. 'இந்த நூற்றாண்டின் எனக்குப்பிடித்த சிறந்த கதை' என்ற தலைப்பில் பல மூத்த எழுத்தளர்கள் எழுதினார்கள். தி.க.சி யின் 'காலத்தின் குரல்', தோழர் தியாகுவின் 'மார்க்சின் தூரிகை' போன்ற தொடர் கட்டுரைகள் பாராட்டுகள் பெற்றன.

        மீண்டும் குறுநாவல் போட்டிகள் மூலம் வெளியான குறுநாவல்கள் இலக்கியத்தரம் வாய்ந்தனவாய் இருந்தன.ஓவியர்கள் ஆதிமூலம், மருது இவர்களுடன் புதியவர்களான புகழேந்தி, செல்வம், மாரிமுத்து ஆகியோர் கணையாழியைத் தொடர்ந்து அழகு படுத்தினர். கி.க வின் 'எட்டுத்திக்கும்' அரசியல், கலை, இலக்கியம் ஆன்மீகம் என்று பல துறைகளைப் பற்றியும் சாரமான தகவல்களைத் தந்தது. ம.ராஜேந்திரன் தலையங்கம் மட்டுமின்றி, 'நினைக்கப்படும்' என்ற தலைப்பில்  'மரன்' என்ற பெயரில்  தொடர் எழுதி வந்தார். மற்றும் 'படித்துப் பாருங்கள்' என்று பிரபஞ்சன் பல சிறந்த நூல்களைஅறிமுகப்படுத்தியதும் 'பார்வை' என்ற தலைப்பில் 'பார்வையளர்' என்பவரின் பதிவுகளும், சினிமா பற்றி அம்ஷ்குமார், எஸ்.சாமிநாதன் ஆகியோரின் ஆக்கபூர்வமான விமர்சனங்களும் வாசகர்களுக்கு விருந்தாய் அமைந்தன. வெங்கட் சாமிநாதன் போன்றோரின் நூல்விமர்சனங்களும் குறிப்பிடத் தக்கன. வாசகர் கடிதங்கள் 'எதிரொலி', 'எதிர்வினை' என்ற பெயர்களில் பாராட்டியும் விமர்சித்தும் 'கணையாழி'க்கு உற்சாகமூட்டின.

        சிறப்பான நேர்காணல்களும், பேட்டிகளும் இக்கால கட்டத்தில் வெளியாயின. முதல் இதழில் பேட்டி காணப்பட்ட ஜெயகாந்தன் 'தசரா' பொறுப்பேற்றபோதும் ை பேட்டி காணப்பட்டார்.  ஒவ்வொரு தடவையும் அவரது பேட்டிகள் பல புதிய தகவல்களைக் கொண்டதாய் இருந்தன. மற்றும் மறுபிரசுரம் ஆன ஆர்.சூடாமணி, இந்திரா கோஸ்வாமி ஆகியோரது பேட்டிகளும், புதிய இளம் படைப்பாளிகளான கண்மணி குணசேகரன், இளம்பிறை பொன்றோரது நேர்காணல்களும் கணையாழியின் பாரபட்ச மற்ற பார்வையை உணர்த்தின.

         காலஞ்சென்ற முத்திரை பதித்த படைப்பாளிகள் கு.ப.ரா,  பு.பி,  சி.சு.செ, மௌனி, வையாபுரிப்பிள்ளை எனப் பலரது நினைவு தினங்களையொட்டி அட்டையில் அவர்களது படங்களை வெளியிட்டு அவர்களைப்பற்றிய கட்டுரைகளையும் வெளியிட்டு கணையாழி கௌரவவித்தது. பல்வேறு சிறப்பிதழ்களுடன் மலேசிய, ஆஸ்திரேலிய, கனடா சிறப்பிதழ்களையும் கொண்டு வந்து பாராட்டுக்குரியதாயிற்று.

        இக்கால கட்டத்தில் பாவண்ணன். ஜெயமோகன், ம.ந.ராமசாமி, அசோகமித்திரன். பா.செயப்பிரகாசம், ஸிந்துஜா. ம.ரா, விழி.பா இதயவேந்தன்.கீரனூர் ஜாகிர்ராஜா எனப் பல பழைய புதிய எழுத்தளர்களின் கதைகள் பிரசரமாயின. எஸ். வைத்தீஸ்வரன், பழமலய், இளம்பிறை போன்றோர் நிறைய கவிதைகளை எழுதினார்கள். வெங்கட் சாமிநாதன், கே.எஸ், சுப்பிரமணியன், ஆர். நடராஜன் இன்னும் பல திறனாய்வாளர்களது சிறந்த கட்டுரைகள் வெளிவந்தன. பதிப்பாளர் தமன்பிரகாஷ் சட்டசபைத்தேர்தல் பற்றி எழுதிய கட்டுரை பலரது பாராட்டுக்கு உள்ளாயிற்று.

        ஆசிரியர் மய்திலி ராஜந்திரனும்  சில  கால இடைவெளிக்குப் பிறகு மீண்டும் தொடர்கிறார். அந்த இடைக்காலத்தில் பா.இராம்ஜி என்பவர் பொறுப்பிலும் பின்னர் ஆசிரியர் குழுவின் பொறுப்பிலும் கணையாழி தொடர்ந்தது. கவிஞர் யுகபாரதி உதவியாசிரியராகச் சில ஆண்டுகள் இருந்திருக்கிறார்.

        1995 முதல் 2006 வரை பதினாறு ஆண்டுகள் இவ்வளவு சாதனைகளை நிகழ்த்திய கணையாழி 2006 செப்டம்பர் இதழோடு தடைபட்டு நின்று போயிருந்தது , கணையாழி அன்பர்களுக்கும், இலக்கியப் படைப்பாளிகளுக்கும் பெரிய ஏமாற்றத்தை அளித்தது. மீண்டும் அது ஏப்ரல் 2011ல் புத்துயிர் பெற்றபோது இலக்கிய உலகுக்குப் பெரும் ஆறுதல்  ஏற்பட்டது.

        கடந்த ஓராண்டிலும் கணையாழி தனது ஆரம்ப காலத்தை நினைவூட்டுவதாய், நவீன உள்ளடக்கங்களுடன் சிறப்பான பதிவுகளை வெளியிட்டுள்ளது. இ.பா .இப்போதும் சிறப்பாசிரியர் என்பதோடு, சுஜாதா போல கடைசி பக்கங்களில் பழைய இலக்கியங்களிலிருந்து அன்றாட நடப்பை ஒட்டியும் நல்ல விஷயங்களை அளித்து வருகிறார். பாரவி, வாசந்தி,  அசோகமித்திரன், சா.கந்தசாமி, எஸ்.சங்கர நாராயண் போன்றோரது கதைகளும், எஸ்.வைத்தீஸ்வரன், நீலமணி, ஈரோடு தமிழன்பன் போன்ற மூத்த கவிஞர்களின் கவிதைகளும், தமிழவன், மு.ராமசாமி, கி.நாச்சிமுத்து, அன்பாதவன் போன்றோரது கட்டுரைகளும் மீண்டும் கணையாழிக்குக் கனம் சேர்த்துள்ளன. நரசய்யாவின் 'காலம் கொன்ற விருந்து' அரிய ஆவணங்களை வாசகர் பார்வைக்கு  கொண்டு வந்தது. மரன் என்ற பெயரில் 'நினைக்கப்படும்' தொடர் எழுதிய ம.ரா. இப்பொது நடுப்பக்கத்தில் 'காணப்படும்' என்ற தலைப்பில் தான் கலந்து கொண்ட இலக்கிய விழாக்கள் பற்றியும் அங்கு, தான் கண்டவை பற்றியும் சுவாரஸ்யமாக எழுதி வருகிறார்.

    கஸ்தூரிரங்கன் காலத்திலேயே கணையாழியில் எழுதிவந்த ம.ராஜேந்திரன்,தசரா கணையாழியிலும் கவிதா வெளியீட்டிலும்  தொடர்ந்து கொண்டிருக்கிறார்.     இப்போது கணையாழிக்கு மறுபடியும்  சோதனை. கவிதா பதிப்பகம், பதிப்பாளராகத்  தொடர இயலா நிலை.  
ம.ராஜேந்திரன் வேள்வி போன்ற இப்பெரும் பொறுப்பையும் தற்போது ஏற்கிறார்.

வாசகப் படைப்பாளர்கள் ,இலக்கிய அன்பர்கள் ஆதரவில் கணையாழியின் கதை தொடரவேண்டும்.

Monday, March 5, 2012

கடைசிப்பக்கம் - இறைவன் விரும்பும் மொழி தமிழ்



இந்திரா பார்த்தசாரதி

தமிழ் இலக்கிய வரலாற்று நூல்களில், ஆழ்வார்களின் நாலாயிர திவ்யப் பிரபந்தச் செய்யுட்களுக்கு எழுதப்பட்ட உரைகளைப் பற்றிய குறிப்புகள் அதிகமாக இல்லை. காரணம், இவ்வுரைகள் 'வியாக்கியானங்கள்' என்று அழைக்கப் பட்டதாலோ என்னவோ, சமயத்தோடு மட்டும் வைத்து எண்ணப்பட்டன.

இவ்வுரையாசியர்களுடைய ஆழ்ந்த தமிழ்ப் பற்றைப் பற்றியோ, இவ்வுரைகளின் அற்புதமான உரை நயங்களைப் பற்றியோ பரவலாக யாருக்கும் தெரியாமலே  போய்விட்டது. நஷ்டம், தமிழ் ஆர்வலர்களுக்குத் தான்.

சம்ஸ்கிருதத்துக்கு இணையான இலக்கிய, சமய ஏற்றம் தமிழுக்குத் தந்தவர்கள் வைணவர்கள்தாம். தமிழ்ப் பிரபந்தத்திலும், சம்ஸ்கிருதவேத நூல்களிலும் ஒத்த தேர்ச்சி உடையவர்கள் 'உபய வேதாந்திகள்' என்று அழைக்கப்பட்டனர்.

ஆழ்வார் பாசுரங்கள், சம்ஸ்கிருத வேதங்களுக்குச் சமமாகவோ அல்லது உயர்ந்தவையாகவோ கருதப்பட்டன. பெரியவாச்சான் பிள்ளை வியாக்கியானத்தில் வரும் ஒரு செய்தியை இதற்குச் சான்றாகக் கூறலாம்.

வங்கிபுரத்து நம்பி என்கிற ஆந்திரப் பூரணர், ஒரு சமயம், ஏழை, எளிய இடைக் குலப் பெண்களுடன் உரையாடிக் கொண்டிருந்தாராம். அதைப் பார்த்த, ராமானுஜருடைய உறவினரும், சிஷ்யருமாகிய முதலியாண்டான், ‘அவர்களுடன் என்ன பேசிக்கொண்டிருக்கிறீர்கள்?’ என்று கேட்டாராம். ‘அவர்களை வேத ஸ்லோகங்களைச் சொல்லி ஆசிர்வதித்தேன்’ என்றாராம் வங்கிபுரத்து நம்பி.

‘அவர்கள் ஈரத்தமிழ் பேச, நீங்கள் அவர்களை முரட்டு சம்ஸ்கிருதத்தில் ஆசிர்வதித்தீரோ?’ என்று சிரித்துக் கொண்டே கேட்டாராம் முதலியாண்டான்!

ராமாநுஜர் பணித்ததற்கேற்ப திருவாய்மொழிக்கு உரை எழுதினார், அவருடைய தலை மாணாக்கராகிய திருக்குருகைப்பிள்ளான். நாலாயிர திவ்ய பிரபந்தத்தை வேதங்களுக்கு நிகராக ராமானுஜரும், வியாக்கியானக்காரர்களும் நிறுவியதற்கு ஆசார வைணவர்களிடமிருந்து எதிர்ப்பு இல்லாமிலில்லை. இதைப் பற்றி  நஞ்சீயர் குறிப்பிடுகிறார். நஞ்சீயருக்கும் ஆசார வைணவர்களுக்குமிடையே நிகழ்ந்த விவாதம் சுவாரஸ்யமானது.
எதிர்ப்பு அணி வைத்த முதல் வாதம்: ‘சம்ஸ்கிருதம் தேவ பாஷை. தமிழ் மானிட பாஷை. தமிழில் எழுதப்பட்டவற்றை சம்ஸ்கிருதத்தோடு இணைத்துப் பேசுவது தெய்வ நிந்தனை’. நஞ்சீயர் கூறினார்: ‘இறைவனை வழிபடும் மொழி எதுவாயினும் அது தேவ பாஷைதான்.’ எதிர்ப்பு அணியினர் கூறியது: ‘தமிழ் நான்கு சாதியினராலும் பேசப் படுவதால் அது தீட்டுப் பட்ட மொழி’. நஞ்சீயர் கோபத்துடன் சொன்னார்:’ இதைப் போன்ற அபத்தம் எதுவுமிருக்கமுடியாது. மக்கள் பேசும் மொழியே இறைவன் விரும்பிக் கேட்கும் மொழி. இது தமிழாகத்தானிருக்க முடியும்’.
எதிர்ப்பு அணியினர்,-சம்ஸ்கிருதத்தை தெய்வ மொழியாகப் போற்றியவர்கள்- சொன்னார்கள்:
‘நம்மாழ்வார் நாலாவது வருணத்தைச் சார்ந்தவர்.  அவர் பாசுரங்களை வேதங்களுக்குச் சமமாக வைத்துப் பேசுவது தெய்வ அபசாரம், இறைவனுக்கு அடுக்காது’.

நஞ்சீயர் இதைக் கடுமையாகக் கண்டித்துக் கூறினார்:’ ஒருவர் ஒரு குறிப்பிட்ட ஜாதியில் பிறப்பதற்கு அவர் பொறுப்பில்லை  மேலும், மேன்மை என்பது ஜாதியினால் வருவதன்று. அறிவினாலும் ஒழுக்கத்தினாலும் வருவது. வேதங்களைக் காட்டிலும்  நம்மாழ்வார் பாடல்களைத்தான் இறைவன் விரும்பிக் கேட்கிறான். உற்சவர் உலாவிலே  வேதம் சொல்லுகின்றவர்கள் ஒருவர் கையை இன்னொருவர் பற்றிச் செல்லும்போது, திவ்யப் பிரபந்தம் சொல்கின்றவர்கள் ஒவ்வொருவரும் அவ்வாறு ஒருவர் கையை மற்றவர்  பற்றாமல் சுதந்திரமாகத் தம் கைகளை வீசிக் கொண்டு  செல்வார்கள். தமிழ்ப் பாசுரங்களை’ மெய்ந் நின்று கேட்டருளும்’ இறைவன் தங்களைத் தாண்டிப் போக மாட்டான் என்கிற அவர்களுடைய மன உறுதியினால்தான் அவர்கள் தனித்தனியே நடந்து செல்கிறார்கள்’

இரண்டாண்டுகளுக்கு முன்பு, சிதம்பரத்தில் தீட்சிதர்கள், இறைவன் சந்நிதியில் ஓதுவார்கள் தமிழ்த் திருமுறை இசைப்பது வேத மரபுக்கு விரோதம் என்று கூறியது நினவுக்கு வருகிறதா?

ஆனால் வைணவர்களால், பன்னிரெண்டாம் நூற்றாண்டிலேயே இப்பிரச்சினையை எதிர் கொண்டு, ராமானுஜர் போன்ற மாபெரும் சமயத் தலைவர் மூலம் இதற்கு முடிவு காண முடிந்தது.

தொடர்: காலம் கொன்ற விருந்து - 6



நரசய்யா

இரண்டாவது விரோதியும் நிரந்தர நண்பனும்


‘மணிக்கொடி’ க்கு எழுதும் துணிச்சலைச் சிட்டிக்குக் கொடுத்தவர்   1932-இல் இந்தியா நாளேட்டின் துணை ஆசிரியராக இருந்து பின்னர் சுதேசமித்திரனில் தலையங்கம் எழுதும் துணையாசிரியராகச் சேர்ந்த எஸ். எஸ். கிருஷ்ணமூர்த்தி என்பவர் என்று சிட்டி கூறுவார். அவரிடம் தான் சிட்டி பத்திரிகைத் துறை பயிற்சி பெற்றார். அப்போது சிட்டிக்குத் தனது தமிழ் சொல்லாட்சியின் மீது நம்பிக்கை இருக்கவில்லை. மாறாக ஆங்கிலத்தில் சிறப்பாகவே எழுதிக் கொண்டிருந்தார். ஒருநாள் கிருஷ்ணமூர்த்தி  மணிக்கொடி இதழொன்றைக் காட்டி, சிட்டியை அப்பத்திரிகையில் ஏன் எழுதலாகாது எனக் கேட்டாராம். “தமிழ் இலக்கிய உலகத்திற்கு இப்பத்திரிகை ஒரு பெரும் அதிர்ச்சியைக் கொடுத்துள்ளது”  என்று அவர் சொன்னது, தனக்கு அதிர்ச்சியைக் கொடுத்தது என்கிறார் சிட்டி. சிட்டி நகைச் சுவையுடன் சொன்னது - “தமிழ் இலக்கிய உலகம் என்று அவர் சொன்னது தான் எனக்கு அதிர்ச்சியைக் கொடுத்தது”

அப்பத்திரிகையைச் சிட்டி வாங்கி அதில் எழுதியிருந்த வ. ரா. வின் கட்டுரைகளைப் படித்தபோதுதான் அவருக்கு இப்படியும் எழுதுபவர்கள் தமிழில் உள்ளார்களா என்றும் அச்சில் உள்ள எழுத்துக்கு இவ்வளவு சக்தி உண்டா என்றும் தோன்றியதாம்!  சிட்டி, நான் சாதாரண மனிதன் எழுதும் போது சொன்னார்: “இவ்வளவு உயர்ந்த இலக்கியத்தரமிகுந்த பத்திரிகையில் நான் எழுதினால் பிரசுரிப்பார்களா என்ற சந்தேகம் இருந்தபோதிலும், நண்பர் கொடுத்த யோசனையை ஏற்று, ஒருவித அசட்டுத் தைரியத்துடன், அப்போது சென்னைக்கு காந்தி விஜயம் செய்ததை நினைவு கூர்ந்து, ஒரு நகைச் சுவை கட்டுரை எழுதி அனுப்பி வைத்தேன். சிலநாட்களில் மணிக்கொடியிலிருந்து ஒரு கடிதம் வந்தது. இனிமேல் எழுதாதே என்று புத்திசொல்லி எழுதியிருப்பார்கள் என்று நினைத்துக் கடிதத்தைப் பிரித்துப் பார்த்தேன். அது கு. ஸ்ரீனிவாசனால் எழுதப்பட்டிருந்தது. மணிக்கொடி காரியாலயத்துக்கு வரச்சொல்லி எழுதியிருந்தார்.”

அதைச் சொல்கையில் இவ்வளவு வருடங்களுக்குப் பின்னர் கூட சிட்டி உணர்ச்சிவசப்பட்டார்! அப்போதுதான் முதன் முறையாகச் சிட்டி வ. ரா. வைச் சந்தித்திருக்கிறார். அவருடன் பேசிக்-கொண்டிருந்த ஒருமணிநேரத்தில், அவர் கருத்துகளுக்கு அடிமையாகிவிட்டார் சிட்டி! அன்றிலிருந்து வ. ரா இறுதிவரை அவருடைய நிரந்தர நண்பனாகவும் ஆகிவிட்டார்.

வ. ராமஸ்வாமி பிறந்தது செப்டம்பர் மாதம் 17, 1889 ஆம் வருடத்தில்.  அவருடைய 60 ஆவது வயது நிறைவின் போது, அதாவது 1949 இல் அவரை ஆல் இந்தியா ரேடியோ, ஒலிபரப்பவேண்டி, ரேடியோவுக்கு ஒரு சொற்பொழிவு செய்யுமாறு கேட்டிருந்தது. ஒப்புக் கொண்டு தலைப்பை மட்டும் வ. ரா. தந்திருந்தார். அவர் கொடுத்திருந்த தலைப்பு, “எனது இரண்டாவது விரோதி” என்பதாகும். அன்றைய நிர்வாகியான், ஜி. டி சாஸ்திரிக்கும் சிட்டிக்கு மட்டும் தான் அத்தலைப்பின் பொருள் தெரியும். மற்ற நிர்வாகிகள் குழம்பிப் போயிருந்தனர். வ. ரா. பேச ஆரம்பித்த போதுதான் தலைப்பின் பொருளை விளக்கினார். “நான் பிறந்த வருடம் தமிழில் விரோதி எனப் பெயர் கொண்டது. இன்று எனது அறுபதாவது வயதில் இரண்டாவது விரோதி வந்துள்ளது” என்றார்!

இக்கட்டுரைத் தொடரின் ஆரம்பத்தில் நான் குறிப்பிட்ட காலம் கொன்ற விருந்தாக நான் கண்ட கருவூலத்தில், (சிட்டியின் பாதுகாப்பிலிருந்த பழைய அட்டைப் பெட்டியில்) வ. ரா பற்றிய பல பழைய குறிப்புகள் கிடைத்தன. அவற்றை இங்கே பகிர்ந்து கொள்கிறேன்.
வ. ரா. எழுதிய மகாகவி பாரதியார் என்ற நூலின் பழைய பிரதியும் கிடைத்து. வ. ரா. பாரதியைச் சந்தித்த விவரம் அந்நூலின் 4, 5 பக்கங்களில் காணப்படுகிறது.



இந்த நூலை 1944 ல் வெளியிட்டவர் வை. கோவிந்தன் என்பவர். அவர் 23- 8- 55 அன்று மூன்றாவது பதிப்பாக சுந்தரி என்ற வ ராவின் நாவலை வெளியிடுகையில், வ. ரா வின் மகாகவி பாரதியார் நூலை இரண்டாவது பதிப்பாக 1946இ-ல் வெளியிட நேர்ந்த விவரத்தைப் பற்றி எழுதுகிறார்:
“1940 என்று நினைக்கிறேன். 46, முத்துமாரி செட்டி தெருவில் என்னுடைய காரியாலயம் இருந்தது. அங்கே மாடியில் என்னுடைய அறை. ஸ்ரீ தி ஜ. ரங்கநாதன் என் அறைக்கு வந்தார். அப்போது தி. ஜ. ர. நான் நடத்திய சக்தி மாதவெளியீட்டில் ஆசிரியராக இருந்தார். வந்ததும், ‘வ. ரா. வந்திருக்கிறார். உங்களைப் பார்க்கவேண்டுமாம்’ என்றார். ’சரி. வரச் சொல்லுங்கள்’ என்றேன். வ. ரா வும் தி. ஜ. ரவும் வந்தார்கள்.

‘வாருங்கள்’ என்றேன். ‘சரிதானையா. நீர் எனக்குத் தமிழ் எழுதத் தெரியாது என்று சொன்னீராமே’ என்றார். ‘ஆமாம் கொச்சையாக நீங்கள் எழுதுகிறீர்கள். நிறைய நிறையப் பிறமொழிச் சொற்களை உபயோகிக்கிறீர்கள். அதுவும் அல்லாமல் தமிழ்ப் பண்டிதர்களை - அவர்கள் பிழையில்லாமல் எழுதுவதை - வேறு கண்டிக்கிறீர்கள். ஆதலால் உங்களுக்கும் தமிழுக்கும் சம்பந்தமில்லை’ என்று சொன்னேன். ‘உமக்குப் பிடிக்காதையா, இன்னும் கொஞ்ச காலத்தில் நீர், நான் எழுதுவது தான் தமிழ் என்று சொல்லப்போகிறீர்’ என்றார்.

அப்படித்தான் அவர் எழுதிய மகாகவி பாரதியார் என்ற புத்தகத்தை 1944-ஆம் வருஷத்தில் வெளியிட்டேன். தொடர்ந்தாற்-போல, சுந்தரி, வாழ்க்கைச் சித்திரம் என்ற நூல்களையும் வெளியிட்டேன். காரணம் என்ன? ஸ்ரீ வ. ரா. தமிழ்ப் பண்டிதர் அல்ல., தமிழ் மொழியை வளப்படுத்த வந்த புரட்சிக் காரர் என்பதை அறிந்தேன். மக்கள் எல்லோரும் படித்துப் பயன் பெற வேண்டுமானால், வ. ரா. அவர்களின் ஆணித்தரமான தமிழ் நடைதான் வேண்டும் என்ற முடிவுக்கு வந்தேன். பிறகுதான் அவருடைய நூல்களை வெளியிட்டேன்.

ஸ்ரீ வ. ரா. அவர்களைப் புரட்சிக்காரர் என்று சொல்லலாம், தீர்க்கதரிசி என்று சொல்லலாம். மக்களின் எழுத்தாளர் என்றும் சொல்லலாம். அதற்குச் சான்று இந்தச் சுந்தரி என்ற நாவலே போதும்.

படித்துப் பாருங்கள், முப்பத்தெட்டு வருஷங்களுக்கு முன் வெளி வந்த இந்த நாவல் ஏன் இன்றும் வெளிவருகிறதென்று.
இந்த மூன்றாம் பதிப்பு வெளிவருவதைப் பார்க்க வ. ரா. உயிருடன் இல்லை. தமிழ் மக்கள் பயனடையத்தானே இந்தப் புத்தகத்தை எழுதினார். வ. ரா வின் எண்ணம் ஈடேறுகிறதல்லவா?”

இது எழுதப்பட்ட நாள் 25 - 5 - 1955. இந்த நூலின் முதற்பதிப்பு, 1917 இலும், இரண்டாம் பதிப்பு 1946 இலும், மூன்றாம் பதிப்பு மேலே குறிப்பிட்ட நாளிலும் வெளிவந்துள்ளன.

இந்த நாவலின் இரண்டாவது பதிப்புக்கு, வ. ரா. எழுதிய முன்னுரை, சுந்தரியின் புனர் ஜன்மம் என்று தலைப்பு இடப்படிருந்தது.  அதில் “. . .அந்த சமயத்தில் என் கற்பனையில் கருத்தரித்தவள் சுந்தரி. 1915 ஆகஸ்டில் ஆரம்பித்து 1916 மார்ச்சில் சுந்தரியை முடித்தேன். சுந்தரியை வெளியிடுவதற்கு நான் பட்ட கஷ்டத்தைச் சொல்லி முடியாது. சுமார் எண்ணூறு ரூபாய் வரையில் செலவாகும் என்று சொன்னார்கள் அச்சுத்தொழில் நிபுணர்கள். அவ்வளவு பணத்துக்கு நான் எங்கே போக? இதிலும் ஓரளவு டாக்டர் ராஜன் எனக்கு உதவி செய்தார்.  சுந்தரி 1917-ஆம் வருஷம் முற்பகுதியிலேயே வெளி வந்தாள். நான் போட்டது ஆயிரம் பிரதிகள். மூன்று மாதத்துக்குள் அத்தனையும் விற்றுப் போயிற்று. திருச்சியில் கையெழுத்துப் பிரதியிலேயே சுந்தரியயை படித்த நண்பர், சுந்தரி ரொம்ப கடுமையான பாஷையில் இருக்கிறது. உண்மையை, கலையழகோடு சேர்த்துச் சொல்லவேண்டும். இப்பொழுது நீங்கள் எழுதியிருக்கும் முறையினால் மேல் ஜாதிக்காரர்களுக்கும், மடாதிபதிகளுக்கும், சன்னியாசிகளுக்கும் உங்கள் பேரில் ஆத்திரம் உண்டாகும்’ என்றார். 'உண்டாகுமா' என்று கேட்டேன். ஆம் என்று அவர் அழுத்திச் சொன்னார். அப்படியானால் நான் எழுதின முறைதான் சரி என்று சொல்லிவிட்டு அவரிடம் விடை பெற்றுக்கொண்டேன்” என்கிறார்! இதை அவர் எழுதிய நாள் 20.03.1946. முதற் பதிப்பு வந்து கிட்டத்தட்ட முப்பது வருடங்களுக்குப் பின்னர் வந்த இரண்டாம் பதிப்பில்.



சமர்ப்பணத்தில், ‘எனது பரமகுரு ஸ்ரீமான் அரவிந்தருக்கு’ என்று எழுதியுள்ளார். அரவிந்தரைப்பார்க்க வ. ரா. புதுச்சேரி சென்றார். பாரதியைக் கண்டார். பாரதியுடன் அரவிந்தரைக் காணச் சென்றார். அரவிந்தரை பாரதி முரடன் என்றுதான் அப்போது குறிப்பிட்டாராம்!
இப்பதிப்புக்கு தி. ஜ ரங்கநாதன் முன்னுரை எழுதியிருந்தார். அதுவே அன்றைய் எழுத்துலககை வெளிச்சமிட்டுக் காட்டுகிறது. முக்கியமாக தமிழ் நாவ்ல்கள் நிலையைப் பார்க்கலாம்: தி. ஜ. ர. எழுதுகிறார்: “நான் ஏராளமாகத் தமிழ் நாவல்கள் படித்த காலம். இந்தக்காலம், அநேகமாகப் பதினைந்து வயதிலிருந்து இருபத்தைந்து வயதுக்குள் பெரும்பாலான வாலிபர்களுக்கு ஏற்பட்டிருக்கும். அந்தக் காலத்தில், நல்லது, கெட்டது, சுவையற்றாது, சுவையுள்ளது குப்பை, கூளம் முத்து மரகதம் அத்தகைய எல்லா நாவல்களும் ஒன்று தான். கதை என்றிருந்தால் போதும்; படித்து விடுவோம். பகுத்தறிய மாட்டோம். எல்லாம் பிடித்தாற்போலத்தான் இருக்கும். ஆனாலும் இதுதான் இலக்கியப்பிரஞ்ஞை உருவாகும் காலம். சுவை திரளும் காலம். கால ஓட்டமும் வாழ்க்கை அனுபவ்மும் சிந்தனைமுதிர்ச்சியும், படித்தவைகளை எல்லாம் சலித்துவிடும். காலவெள்ளம் அடித்துச் செல்லும் அவைகளில் ஒன்றிரண்டுதான் கரையேறும் என்மனதில் அப்படிக் கரையேறின ஒன்று ‘சுந்தரி’ “
வ. ரா வுக்கு உதவிய கணபதிராயன் பற்றிய விவரங்களை அவரே தருகிறார்.

1938 துவக்கத்தில் விரைவாக மக்களிடையே பரவி வந்த ஊடகமான திரைப்படத்தின் ஆற்றலை உணர்ந்து, வ. ரா. ராமானுஜர் வாழ்க்கை வரலாற்றைப் படமாக்க முயன்றார். அவர் வசனமெழு, அன்றைய பிரபல் எழுத்தாளர்கள் நடிக்க முன் வந்தனர். இளைய ராமானுஜராக ந. ராமரத்தினம், முதியவராக சங்கு சுப்பிரமணீயன், திருக்கச்சியூர் நம்பியாக பிச்சமூர்த்தி நடிக்க ஏ. நாராயணன் இயக்கத்தில் படம் எடுக்கப்பட்டது. தானே நடித்திருந்த-போதும், அன்றைய சிறந்த விமர்சகரான ராமரத்தினம், “ராமானுஜர் ஒரு கண்வலி” என்ற தலைப்பில் அப்படத்தை விமர்சித் திருந்தார்! வ. ரா வும் மற்றோர்களும் தெரிந்துகொண்ட-பாடம், சிட்டி சொற்களில், “திரைப்பட நடிப்புக்கும், இலக்கிய பணிக்கும் உள்ள அல்லது இல்லாத தொடர்பு கடும் சோதனைக் குள்ளாகியது.”

பின்னர் இந்நாடகம், வானொலி-யில் 1985  ல் ஒலிபரப்பப்பட்டது.

வ. ரா வின் மற்ற பழைய விவரங்களைத் தொடர்ந்து பார்ப்-போம்.
(அவர் எழுதிய சில நூல்களின் சிதைந்திருந்த சில முகப்புப் பக்கங்களையும் மற்ற சில பக்கங்களையும் காணலாம்)

மைதிலி மொழிக் கவிதை



டாக்டர் ஷெபாலிகா வர்மா
ஆங்கிலம் வழி தமிழில்: கி. சீனிவாச ராகவன்

பெண்


நான் ஒரு பெண்ணாய்ப் பிறந்து விட்டேன்
அது என் பிழையல்ல
ஆம், பெண்ணாய்ப் பிறந்தது என் பிழையல்ல
உன் கற்பனையின் ஒப்பனையில்
நான் ஒரு சாதாரண மானுட ஜன்மமல்ல --
மாதவம் செய்து பிறந்த மங்கை
தேவியென பூஜிக்கப்படும் தெய்விக நங்கை

ஆனால்,
எதார்த்தத்தில் என் நிலை என்ன தெரியுமா --
பாவம்செய்தோரை பாதாளப் படுகுழியில் தண்டிக்கும்
நரகதேவதையும் கதறியழுவாள் என் அவலக்குரல் கேட்டு
ஆற்றாது நான் வடிக்கும் கண்ணீர்
வற்றாத கோசி நதியாய் பிரவாகமெடுக்கும் --
இருள் சூழ்ந்த இரவுகள்,
வசந்தத்தைக்காணாத வாழ்க்கை
அசோகவனத்து சீதையின் ஆழ்ந்த சோகம்
என் விழிகளில் --

என் ஜாதகத்தில் மட்டுமல்ல
என் சேலைத்தலைப்பின் வேலைப்பாட்டில்கூட
நன்மைக்கு அதிபதியாகும் நட்சத்திரங்களில்லை
சாதகத்தைத்தரும் சந்திரனும் சஞ்சரிக்கவில்லை
பாதகத்தையே தரும் ராகுவும் கேதுவும்தான் அங்கு
அலங்கரிக்கும் சித்திரங்கள்

இந்த இழிநிலை இன்றோடு அகலட்டும்
இனி,
வீசும் காற்றும் என்னை மாசுபடுத்தாது விலகட்டும்
நரம்பும் சதையும், உடம்பில் ஓடும் குருதியும்
இருபாலர்க்கும் ஒன்றே எனில்
ஏற்றத்தாழ்வுக்கு இடமேது
மென்மைத்தன்மை பெண்மைக்குப் பெருமையெனில்
எனக்குமட்டும் ஏனிந்த கொடுமை

பூங்கொடி நான் --
அசைந்தாடுவேன்
தென்றல் வீசினால்
ஆர்த்தெழுவேன்
ஆணாதிக்கம் பேசினால்
பிறந்துவிட்டது புதுயுகம--பெண்களுக்குப்
புரிந்து விட்டது சுதந்திரத்தின் சுகம்

இனி,
அகத்திலும், எங்கள் முகத்திலும்
இருள் என்பதே இல்லை
ஆகாயமே எங்கள் எழுச்சியின் எல்லை
சடங்குகள், சம்பிரதாயங்கள் -- இவை
தடைக்கற்களானால் தகர்த்தெறிவோம்
புதுயுகம், புத்தொளிபரப்பும் புதுப்பிக்கப்பட்ட வானம்
நவீன சமுதாயம் நோக்கி பெண்களின் வெற்றிப்பயணம்

இத்தனை மாற்றங்களுக்கிடையேயும்
என் தாயுள்ளத்தின் கனிவு மாறவில்லையே
கவனித்தாயா மகனே --
கர்ப்பத்தில் உன்னை உருவாக்கி
பத்துமாதம் சுமப்பதில் சுகம் கண்டு
மானுடப்பிறவியை உனக்கு அளிக்கிறேன்
ஆனால்,
உன்னையே படைக்கும் என்னை
ஆட்டிப்படைக்கும் ஆண்டவன் ஆகிறாய் நீ
ஆண்மைய கருத்தாடலைத் தவிக்கவும்
பெண்மைய கருத்தாடலைத் தொடங்கவும்
இதுவே சரியான தருணம்

எகிப்தைச் சுட்டும் திருமலை கற்கால ஓவியம்

நா. கண்ணன்

கற்காலம் என்பது உண்மையிலேயே கற்காலமா? என்ற கேள்வி அவ்வப்போது அறிஞர்கள் மனதில் எழுந்துகொண்டே இருக்கிறது. சந்திரனில் கால்வைக்கும் தொழில்நுட்பம் நிறைந்த 21ஆம்நூற்றாண்டில் வாழ்ந்து கொண்டு, இன்று நாம் கற்கால மனிதன் சாதித்தவை என்று காணும் எச்சங்கள் அவ்வளவு சாதாரணமாகத் தோன்றவில்லை. உதாரணமாக கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இரண்டு குன்றுகளின் மேல் நிரம்பப் பெருங்கற்காலக் கல்லறைகள் உள்ளன. ஒன்று இரண்டல்ல நூற்றுக்கணக்கில். அவை செங்கல் கட்டடங்களாக இருந்திருந்தால் ஆச்சரியப்பட வேண்டியதில்லை. ஆனால் இரண்டு மீட்டரிலிருந்து 5 மீட்டர் உயர, அகலமுள்ள கற்கூரைகளை எப்படி இவ்வளவு அழகாக உருவாக்கினார்கள்? எப்படி அவைகளை அடுக்கினார்கள்? எங்கு இதற்கானகற்களை வெட்டி எடுத்தார்கள்? போன்ற கேள்விகள் நம்மை ஆச்சரியப் படுத்தும். ஊரில் ஒருவர் இறந்துவிட்டால், உடனே இம்மாதிரிக் கல்லறைகளை உருவாக்கிவிட முடியாது. சிலவாரங்களாவது ஆகும் ஒன்றை உருவாக்க. எனவே அக்காலத்தில் இதற்கான தொழிற்சாலைகள் இருந்திருக்க வேண்டும். ஊரில் ஏதாவது ஒன்று என்றால் தயாராக ஒரு கல்லறை இருந்திருக்க வேண்டும். சென்னையில் இப்போது குப்பைக்கூளங்களை அள்ளக் கூட கனரக இயந்திரங்களைப் பயன்படுத்துகிறார்கள். அப்படி இருக்க இத்தகைய கனமான பாறைக்கூரைகளை எப்படிக் குன்றின் மேல் ஏற்றி இருப்பர்? ஏற்கனவே இருக்கும் கல்லறைகளைச் சிதைக்காமல் எப்படிப் புதியற்றை நிர்மாணித்து இருப்பர்? தொழில் நுட்ப அறிவும், முன் திட்டமிடலும் இல்லாமல் இதைச்சாதித்து இருக்க முடியாது. எனவேதான் ஏதோ நாம் முன்னேறிவிட்டோம், அவர்கள் ‘கற்காலமனிதர்கள்’ என்று வாய் கூசாமல் சொல்ல முடியவில்லை!

 இதில் இன்னும் பெரிய அதிசயம் என்னவெனில் கற்காலக் கலாச்சாரம் என்பது இங்கிலாந்து, கிரேக்கம், துருக்கி, இந்தியா, இந்தோனீசியா என்று தூரக்கிழக்கில் கொரியாவரை இருப்பது. இது எப்படிச் சாத்தியப்பட்டது? உதாரணமாக தமிழ் மரபு அறக்கட்டளை (www.tamilheritage.org) சமீபத்தில் மேற்கொண்ட களப்பணியில் சிவகங்கை வட்டத்தைச் சார்ந்த திருமலை எனும் திருத்தலத்தில் (திருப்பத்தூர் போகும்வழி) உள்ள கற்பாறை ஓவியங்களை அவை அழிவதற்கு முன் நிரந்தரப்படுத்தும் முயற்சியில் இறங்கியது. அப்போது அங்கு செவ்வண்ணத்தில் வரையப்பட்ட இரண்டு ஓவியங்கள் மிகமுக்கியமானவையாகப்பட்டன. ஏனெனில், எகிப்திய தெய்வங்களுள் விண்ணரசன் என்று கருதப்படும் ‘ஹோரஸ்’ எனும் கழுகுக்கழுத்துள்ள தெய்வஉருவம் இங்கு, தமிழகக் குன்று ஒன்றில் வரையப்பட்டிருப்பது அதிசயமல்லவா?


இந்தக்கற்காலமக்கள் பலர் நினைப்பது போல் நாகரிகத்தில் பின்தங்கியவர்கள் இல்லை என்று தோன்றுகிறது. ஏனெனில் செம்மொழி (2009 சூலை -திசம்பர்) இதழில் புதுஎழுத்து மனோன்மணி அவர்கள் பதிப்பித்துள்ள சில ஓவியங்கள் இம்மக்கள் விவசாயிகள் என்பதை நிரூபிக்கின்றன (அவரது அனுமதியுடன் படம் இங்கு மீண்டும் வெளியிடப்படுகிறது).

 சரி, இம்மக்கள் எப்படிப் பயணப்-பட்டிருப்பர்? இங்கிலாந்து முதல் கொரியா வரை பரவியுள்ள ஒரு நாகரீகம் வெறும் கால்நடையில் மட்டும் பரவியிருக்குமா? இல்லை இவர்களுக்குக் கப்பல்பயணம் பற்றிய அறிவு இருந்ததா? இக்கேள்விக்கு விடையாகத் திருமலை ஓவியங்கள் சில யூகங்களை முன்வைக்கின்றன. உதாரணமாக, தென்னகக் கடற்பயணம் என்பது துருவநட்சத்திரத்தைவிட தென்னக வானில் மிகத் தெளிவாகத் தெரியும் மிருகசீரிஷம் எனும் நட்சத்திரக் கூட்டத்தையே வழிகாட்டியாக எடுத்துக் கொண்டது. பால்வீதியின் மையப்பகுதியில் அமையும் ஓரியன் எனும் இம்மண்டலம் உலகின் எப்பகுதியில் பயணப்பட்டாலும் தெரியும். தமிழர்கள், தென்னாசியா, தூரக்கிழக்கு நாடுகளுக்குப் பயணப்படவெண்டுமெனில் மிருகசீரிஷமே பிரதானம். அவைவானின் கிழக்கே ஜூலை முதல் ஆகஸ்டு வரை மாலை வேளையிலும், டிசம்பர் -ஜனவரி மாதங்களில் அதிகாலையிலும் தெரியும். ’கடலோடி’ நரசய்யா தரும் குறிப்புகளிலிருந்து தைமாதம்பிறந்து ஆருத்ரா தரிசனம் ஆகிவிடில் கிழக்கே பயணப்பட ஏதுவான பருவக்காற்று உருவாகிவிடுவதால், தொலைதூரப் பயணம் கொள்ளும் வியாபாரிகளிடம் “தை பிறந்தால் வழி பிறக்கும்” எனும் பழமொழி உருவாகி இருப்பதாகத் தெரிகிறது. இந்தச் சூழல் ஞானம் என்பது தொன்று தொட்டுக் கற்காலக் கலாசாரத்திலேயே இருந்திருக்க வாய்ப்புள்ளது. ஏனெனில் திருமலை கற்பாறை ஓவியங்கள் மிகத்தெளிவாக ஓரியன் வான்மண்டலம் நமக்குக் காட்டும் ’மிருகசிரம்’ (மிருகசீரிஷம்) எனும் படத்தை நம் கண் முன்னே வைக்கிறது.

கிரேக்கத் தொன்மத்தில் கூட வாள் தூக்கிய வீரன் ஒருவரின் தோற்றத்தையே இம்மண்டலம் நினைவுறுத்துவதாகக் கொள்வர். அவ்வகையில் பார்க்கும் போது ஒருகையை மேலேதூக்கி, இன்னொருகையை மல்லுக்குக் காட்டுவது போல் அமையும் இவ்வோவியம் ஓரியன் நட்சத்திரக்குழுவை காட்டுவது போல் இருக்க வாய்ப்புண்டு. ஏதாவது முக்கியத்துவம் இல்லையெனில் ‘வேலை மெனக்கெட்டு’ மலைமேல் ஏறி, மிகவும் கடினமான சரிவில், சாரம்கட்டி காலத்தை வென்று நிற்கக்கூடிய வண்ணச்சாறில் இவ்வோவியங்களை வரைந்திருக்க மாட்டார்கள்.


ஆக எகிப்திய நாகரிகத்தின் ஒரு தெய்வம் தமிழ் மண்ணில் வரையப்பட்டிருப்பதும், அதுவே வணிக வழிகாட்டும் குறியீடாக அமைவதும் தற்செயல் அல்ல என்று தோன்றுகிறது.

ஏனெனில் பொருந்தல் அகழ்வாராய்ச்சியில் கிடைத்த அதே முதுமக்கள் தாழிகள், கண்ணாடி மணிமாலை, பவளமணிமாலை, பானை எழுத்துக்கள், இரும்பு ஆயுதங்கள், குதிரையைப் பாவித்திருப்பதற்கான அடையாளங்கள், கற்கால கல்லறைகள் இவை அப்படியே ’காயா’ எனும் தொன்மையான கொரியப் பகுதியில் கிடைப்பானேன்? இத்தனை ஆயிரம் மைல்களை இம்மக்கள் எப்படிக்கடந்து இருப்பர்? அதுவும் இரண்டாயிரம், மூவாயிரம் வருடங்களுக்கு முன்? இம்மாதிரிப் பழம் சான்றுகள் எத்தனையோ சேதிகளைச் சொல்லலாம்! அவை, அதற்குரிய மரியாதையுடன் பாதுகாக்கப் பட்டால்! திருமலை முழுவதும் திருட்டுக் காதலர்களின் பெயர்களே இன்று இவ்வோவியங்களின் மேலே பொறிக்கப்-பட்டுள்ளன! அரசு நடவடிக்கை எடுக்கப் போவதாக செய்தித்தாள் சொல்கிறது.

கிருஷ்ணகிரியின் கற்பாறைக் கல்லறைகள் பாதிக்குமேல் வீட்டு நிலைப்படி மிதிகற்களாக மாறிவிட்டன என சுகவனமுருகன் (புதுஎழுத்து மனோன்மணி) சொல்கிறார். அவர் சில வருடங்களுக்கு முன் கணக்கிட்ட முன்னூறு கல்லறைகளில் பத்தோ பதின்னொன்றோதான் இன்று பார்க்கும்படி உள்ளதாகச் சொல்கிறார். மூவாயிரம் வருடங்கள் தாக்குப்பிடித்த சரித்திரச் சான்றுகள் 21ஆம்நூற்றாண்டுத் தமிழனால் சூறையாடப்படுகின்றன எனும் செய்தியைக் கேட்கும் போது, கற்கால மனிதன் நாகரிகம் கொண்டவனா? இல்லை, சந்திராயணா செலுத்தும் 21ஆம்நூற்றாண்டுத் தமிழன் நாகரிகமானவனா? என்ற துக்கமான கேள்வி எழாமல் இல்லை!

மார்ச் 2012 இதழ் உள்ளடக்கம்


நூல் அறிமுகம்

  • சீ.அறிவுறுவோன்
  • வெங்கட்சாமிநாதன்

கவிதை

  • பா.இரா.தமிழ்நன்
  • மைதிலி மொழிக் கவிதை (டாக்டர் ஷெபாலிகா வர்மா, ஆங்கிலம் வழி தமிழில்: கி. சீனிவாச ராகவன்)
  • மராத்திக் கவிதை (டாக்டர் அனுபமா உஜ்கரே ஆங்கில வழி தமிழில் கண்ணையன் தட்சிணமூர்த்தி)
  • ஹிந்திமொழிக் கவிதை (வி.பி. திவாரி ஆங்கிலம் வழி தமிழில்: குவளைக் கண்ணன்)
  • சிந்தி மூலம் (அர்ஜுன் சாவ்லா ஆங்கிலம் வழி தமிழில்: க.பஞ்சாங்கம்)
  • ஹிந்தி மூலம் (சிவக்குமார் சர்மா ஹிந்தி வழி தமிழில்:  ஜி. திலகவதி
  • முனைவர் பா.ரவிக்குமார்
  • இரா.ச. கணேசன்
  • தீபச்செல்வன் கவிதைகள்

கட்டுரை
  • நா.கண்ணன்
  • பழ.அதியமான்
  • அன்பாதவன்
  • மு.ராமசாமி

தொடர்
  • நரசய்யா
கதை
  • இமையம்
  • மணி ராமலிங்கம்
  • ரமேஷ் கல்யாண்
  • ஜெயந்தி சங்கர்   
கடைசிப்பக்கம்
  • இந்திரா பார்த்தசாரதி




மார்ச் 2012 மாத இதழ்





ஆண்டு சந்தா: (உள்நாடு)ரூ220/- (வெளிநாடு)US$30
இரண்டு ஆண்டு சந்தா: (
உள்நாடு )ரூ440/- (வெளிநாடு)US$50
ஆயுள் சந்தா: (
உள்நாடு )ரூ5000/- (வெளிநாடு)US$300

அனைத்துத் தொடர்புகளுக்கும்.


பதிப்பாளர்: சேது.சொக்கலிங்கம்
கவிதா பப்ளீகேஷன்: 8, மாசிலாமணி தெரு, தியாகராயநகர், சென்னை-600 017
தொலைபேசி: 24364243, 24322177

Monday, February 20, 2012

கடைசிப்பக்கம் - சரித்திரமும் சக்கரமும்

இந்திரா பார்த்தசாரதி


‘பிலாட்டோவின் சக்கரம்’ என்றால் என்னவென்று உங்களுக்குத் தெரியுமா? முதலில் ‘ஜனநாயக’த்தைப் பற்றித் தெரிந்துகொள்ள வேண்டும். ‘டெமோஸ்’ (மக்கள்) என்ற கிரேக்க சொல்லிலிருந்து வந்தது ‘டெமொக்ரஸி’ (ஜனநாயகம்). பெரிக்லெஸின் (கி.மு. 460 -430) மறைவுக்குப்பிறகு, கிரீஸில் ஜனநாயகம் தழைக்கத்தொடங்கியது. ஆனால், பிலாட்டோவுக்கு, அது அவ்வளவு உற்சாகத்தைத்தரும் செய்தியாக இல்லை. அவர் கூறினார்:’ இப்பொழுது என்ன நடந்து கொண்டிருக்கிறது? அராஜகத்தைச் சுதந்திரம் என்கிறார்கள். ஊதாரித்தனத்தைப் பொருளாதார மேம்பாடு என்கிறார்கள். வன்முறையை வீரம் என்கிறார்கள். வயதானவர்கள் கூட இளைஞரைப் பின்பற்றிக் காலத்துக்கேற்ற கோஷம் எழுப்புகிறார்கள். சட்டத்தை அநுசரிப்பது என்பது பிற்போக்கானக் கருத்தாக மாறிவிட்டது. எதுவும் அளவுக்கு மீறினால், எதிர்விளைவு ஏற்படும் என்பதில் சந்தேகம் இல்லை. ஜனநாயகத்தின் எதிர்விளைவு சர்வாதிகாரம். இதை மக்கள் உணரவேண்டும்’.

தற்காலத்திய நம் இந்தியாவைப்பற்றிப் பிலாட்டோவுக்கு எப்படித் தெரிந்திருக்கக்கூடும் என்பது நியாயமான கேள்வி! ஏதென்ஸைப் பொறுத்தவரையில், பிலாட்டோ கூறியது நடந்துவிட்டது. ஏதென்ஸில், பணக்காரர்கள் இன்னும் பெரியபணக்காரர் ஆனார்கள். ஏழைகள் இன்னும் பெரிய ஏழைகள் ஆனார்கள். ஏதென்ஸில் ஜனநாயகம் என்பது கேலிக்கூத்தாயிற்று. ஏழைகளுடைய வாக்குகள் விலைக்கு வாங்கப்பட்டன.
வில்டூரன்ட் (Will Durant) கூறுகிறார்:’ கோடீஸ்வரர்கள், செனட்பிரதிநிதிகளையும், மக்கள் வாக்குகளையும் விலைக்கு வாங்கினார்கள். விலைக்கு வாங்க முடியாவிட்டால் கொலைகள் நடந்தன. நாட்டாண்மைக்காரர்களுக்கு வாக்கு அளிக்காதவர்களுடைய வீடுகள் எரிக்கப்பட்டன’.



நம் அரசியல்வாதிகள் பிலாட்டோ-வையோ, வில்டூரன்டையோ படித்திருக்கக்-கூடிய வாய்ப்பில்லை. கிரேக்க, ரோமானிய வரலாறுகளை அவர்கள் அறிந்து வைத்திருப்பர்கள் என்றும் அவர்கள் மீதுகுற்றம் சாட்ட முடியாது.

ஆனால் சரித்திரம் அலுப்பு, சலிப்பு இல்லாமல் எப்படித்திரும்ப நடக்கிறது?

ரோமவரலாற்றில், தொல்குடிச்செல்வந்தர்கள் (Aristocrats), பாம்பி (Pompey) யை அழைத்துச்சட்டத்தை நிலைநாட்டச்-சொன்னார்கள். சாதாரண மக்கள் இதற்கு ஜூலியஸ்ஸீஸரை நாடினார்கள். ஸீஸரால் தான் ஜனநாயகம் பிழைக்கும் என்று ஒரு சாதாரணக் குடிமகன் நம்பினான்.
ஜனநாயகத்தின் பேரில் பதவிக்கு வந்த ஸீஸர் விரைவில் சர்வாதிகாரியானான்! அவன் முடியை நாடுகிறானென்று குற்றம் சாட்டப்பட்டுக் கொலை செய்யப்பட்டான். பிறகு என்ன நடந்தது? அவன் சகோதரியின் மகன்அகஸ்டஸ், மக்களின் ஒப்புதலுடன் மாமன்னனாக முடிசூட்டிக் கொண்டான்! பிலாட்டோவின் சக்கரம், வட்டமாகச் சுற்றிபழைய நிலையிலேயே வந்துநின்றது!

இந்தியா ஒரு முடியரசாகவும், தில்லியை ஆளுகின்றவர் சக்கரவர்த்தியாகவும், மாநில முதல்வர்கள் குறுநில மன்னர்களாகவும் அறிவிக்கப்-படக்கூடிய சாத்தியக்கூறுகள் இல்லாமலில்லை. மன்னர்கள் காலத்துப் போர்க்காலச் சூழ்நிலைபோல், இப்பொழுது தமிழ்நாட்டில் ஒருரூபாய்க்கு அரைடஜன் ‘தளபதிகளும்’ ‘இளையதளபதிகளும்’ எல்லாத்துறைகளிலும் விரவிக்கிடக்கிறார்கள் என்பதுதானே உண்மை?
பிஜுபட்நாய்க்கை ஞாபகம் இருக்கிறதா? அவர் ஒருசமயம் கூறினார்: ‘ஜெயின் டயரியில் (ஹாவாலாபுகழ் ஜெயின்) மன்மோகன்சிங் பெயர் இடம் பெறவில்லை.

ஆகவே அவர்தான் இந்தியாவி ன் பிரதமாராக இருக்கத்தகுதியானவர்’ என்று. அது அப்படியே நடந்தும் விட்டது, வேறு பல அரசியல் நிர்ப்பந்தங்களினால். பட்நாய்க் சொன்ன காரணம், இந்திய அரசியல்-வாதிகளில், லஞ்சம் வாங்காதவர்கள் யாருமே இருக்கமுடியாதென்று. லஞ்சம் வாங்கா-விட்டாலும், மற்றவர்கள் லஞ்சம் வாங்குவதைப் பற்றிக் கவலைப்படாமல் ஒரு பிரதமர் இருக்கலாமா என்பது வேறு கேள்வி. நேருவுக்கே இந்தப் பிரச்சினை இருந்0-திருக்கிறது.

ஜெயின்டயரியில் பெயர் இடம் பெறவில்லை என்பதுதான் தகுதி என்றால், இந்தியாவின் அரசியல்வாதிகளைத் தவிர இந்தியக்குடிமக்கள் அனைவருமே பிரதமராவதற்குத் தகுதி பெற்றவர்கள் என்று இதற்கு விளக்கம் கூறப்பட்டது! ஜெயினுக்குப் பதிலாக பிறகு டெல்கி!
டெல்கியினால் ஆதாயம் பெறாத அரசியல், அதிகாரவர்க்கத்தினர் என்று பட்டியலிட்டால், அந்த லிஸ்ட் மிகக் குறுகியதாகத்தான் இருக்கும் என்றார்கள் ரோமுக்கும் இந்தியாவுக்கும் வரலாற்றில் மட்டுமல்ல, இப்பொழுதும் உறவுவகையிலும் ஒரு நெருங்கிய பிணைப்பு இருக்கின்றது என்பது நம் அனைவருக்கும் தெரிந்த விஷயந்தான்!

நூல் அறிமுகம் - இமையம்

மனித மனத்தின் விசித்திரங்களை. . .


தூக்கத்தைத் தொலைத்தவர்களுடைய கதைகளைச் சொல்கிறது துயில் நாவல். ஒரு மனிதனின் கதையோ, ஒரு குடும்பத்தின் கதையோ- வாழ்க்கையோ விவரிக்கப்-படவில்லை. நூற்றுக்கணக்கான மனிதர்களின் கதை-வாழ்க்கை நாவலினூடாக விரிகிறது. அவரவர் கதையை-வாழ்க்கையை வாக்கு மூலங்களாக அவரவர்களே சொல்கிறார்கள். நோய், துயரம், கசப்பு-மனிதர்களை வாய்விட்டுக் கதற வைக்கிறது. நாவல் ஒரே நேரத்தில் மூன்று விதமாக வளர்கிறது. இது தமிழிற்குப் புதிது. தெக்கோடு என்ற சிறுகிராமத்தில் நடக்க இருக்கிற துயில்தரு மாதாகோயிலின் பத்து நாள் திருவிழாவில் கடற்கன்னி ஷோ நடத்தபோகும் அழகர், சின்னராணி, திருச்செல்வி ஆகியோர் அடங்கிய சிறு குடும்பத்தின் வழியே நாவல் சொல்லப்படுகிறது. இரண்டாவது தெக்கோடு செல்லும் பயணிகள் தங்கிச் செல்லும் இடமாக இருக்கிற எட்டூர் மண்டபம். மூன்றாவது தெக்கோடு கிராமத்திற்கு 1873 -1874 இல் மருத்துவம் செய்ய வந்த ஏலன்-லாகோம்பே இருவரின் கடித உரையாடல்களின் வழியே சொல்லப்படுகிறது. அழகரின் குடும்பம் தெக்கோடு செல்வதற்காக ரயிலுக்குக் காத்திருப்பதில் தொடங்கி, திருவிழா முடிந்த மூன்றாம் நாள் தெக்கோட்டைவிட்டுக் கிளம்பி ரயிலுக்காக காத்திருப்பதில் நாவல் முடிகிறது. நாவலின் நிகழ்காலம் பதினைந்து நாட்கள் மட்டுமே 1982 மே மாதத்தில்.

தெக்கோடு சிறு கிராமம். பெரிய ஊரல்ல. புனித தலமுமல்ல. தென் தமிழகத்தில் இருக்கிறது. அங்கு நூறு ஆண்டுக்கு முன்பு கட்டப்பட்ட பிரமாண்டமான துயில் தருமாதா கோயில் இருக்கிறது. கோயில்தான் விசேஷம். அதைவிட விசேஷம் வெயில். ஒவ்வொரு ஆண்டும் கோவிலில் பத்து நாள் திருவிழா நடக்கும். திருவிழாவில் கலந்துகொள்ள நாட்டின் பல பகுதிகளிலிருந்தும் மக்கள் திரள் திரளாகப் பயணிக்கிறார்கள். பயணத்தில் தங்களுடைய கதைகளை அல்ல-வாழ்ககையைச் சொல்கிறார்கள். வேறுவேறுபட்ட மனிதர்கள். வேறுவேறுபட்ட வாழ்க்கை முறைகள். குறைந்தது நாவலுக்குள் நூற்றுக்கும் மேற்பட்ட மனிதர்களுடைய, குடும்பங்களுடைய கதைகள் இருக்கிறது. எல்லாருடைய கதையும் தெக்கோட்டை மையமாக வைத்து சொல்லப்-படுகிறது. தெக்கோடு மனச்சுமையை இறக்கி வைக்கிற இடமாக, மனம்விட்டு பேசுவதற்-கான, கூச்சமில்லாமல் அழுவதற்கான இடமாக, நோய்களை ஏற்றுக்கொண்டு தூக்கத்தை, சிரிப்பை யாசிக்கிற இடமாக இருக்கிறது. தெக்கோடு ஊராகத் தெரியாமல்-தண்ணீர் நிறைந்த பிரதேசம்மாதிரி-அதில் குளித்து-கழுவி-உடற்நோய்களை, மனநோய்களைப் போக்கிக்கொள்ள விரும்புகின்றனர். மொத்த பயணிகளின் நோக்கத்திலிருந்து முற்றிலும் வேறுபட்டது அழகர் குடும்பத்தின் நோக்கம். அவர்கள் ஏமாற்றுவதற்காகப் போகிறார்கள். சாதாரண பெண் கடற்கன்னியாக வேஷமிட்டு ஏமாற்றி பிழைப்பதுதான்-அவர்களுடைய தொழில்-வாழ்க்கை நெறி. அழகர் குடும்பம்-மாதிரி வித்தைக்காட்டி ஏமாற்றுவதற்-காகவே பலர் தெக்கோட்டிற்கு வருகிறார்கள்.

நாவலில் வருகிற நூற்றுக்கணக்கான மனிதர்கள் தங்களுடைய வாழ்க்கையை ஒளிவுமறைவின்றி சொல்கிறார்கள். எத்தனை விதமான வாழ்க்கை முறைகள்? நாம் இதுவரை அறிந்திராத வாழ்க்கை முறைகள். பரந்துப்-பட்ட வாழ்க்கை அனுபவத்தைத் துயில் தருகிறது. இதுதான் நாவலின்-நாவலாசிரியர் எஸ்.ராமகிருஷ்ணனின் வெற்றி. அழகர், சின்னராணிகூட தங்களுடைய கதையை-வாழ்க்கையை அவர்கள்தான் சொல்கிறார்கள். நினைவோட்டமாக. தாயை இழந்த அழகர் இட்லி கடைக்கார கிருஷ்ணனின் மனைவி-யோடு தன் தந்தை உறவுக்-கொள்வதைப் பார்க்கிறான். அதனால் சொந்த தகப்பனாலேயே விரட்டியடிக்கப்பட்டு லாரி டிரைவரின் உதவியால் பழனி வருகிறான். பேரின்பவிலாஸ் ஹோட்டலில் வேலை செய்கிறான். அங்கிருந்து ஜிக்கியுடன் சேலம் செல்கிறான். கொஞ்ச காலம் விபச்சாரிகளோடு வாழ்கிறான். ராமி என்ற விபச்சாரியுடன் ஓடுகிறான். அவள் வேறு ஒருவனோடு ஓடிவிட சின்னராணியைக் கட்டிக்கொண்டு அவன் வாழ்வதற்காக கடைசியாக தேர்ந்தெடுக்கிற கடற்கன்னி ஷோகூட ஊர் ஊராக அலைகிற வாழ்க்கைதான். ஓரிடத்தில் நில்லாத வாழ்க்கை.

நாவலில் நிறைய பெண்கள் வருகிறார்கள். எல்லாப் பெண்களுமே திருவிழாவில் காணாமல்போன குழந்தைகள்மாதிரி பரிதவித்து நிற்கிறார்கள். வெளிநாட்டிலிருந்து சேவை செய்ய வந்த ஏலன் குதிரை ஓட்டியால் கொல்லப்படுகிறாள். இரண்டு மகள்களை உயிரோடு வைத்து வாழ வழிதெரியாமல் சூசனா தற்கொலை செய்து கொள்கிறாள். ரோமி அடுத்தடுத்து ஆட்களை மாற்றிக்-கொண்டே போகிறாள். டோலி காதல் என்ற பெயரில் ஏமாந்து ஐந்து ரூபாய் கிராக்கியாகி நடுத்தெருவில் செத்து அனாதை பிணமாகக் கிடக்கிறாள். சின்னராணி அழகரிடமிருந்து தப்பிக்க வழியின்றி கடற்கன்னியாகி கூண்டுக்குள் அடைப்பட்டு காட்சிப்பொருளாகி கிடக்கிறாள். அமுதினி மட்டும்தான் தன் ஆசையை, விருப்பத்தை நிறைவேற்றிக்-கொள்கிறவளாக இருக்கிறாள். ஆனால் அவளும் அமைதியாக இல்லை. கிடைத்த வாய்ப்பு பறிப்போய்விடுமோ என்ற கவலையில் மனநோயாளியாகி எல்லாரையும் இம்சிக்கிறாள். கொண்டலு அக்கா-பிறர் சொல்வதையெல்லாம் அலுக்காமல், முகம் சுளிக்காமல் கேட்டுக்கொண்டு ஜடம்மாதிரி இருக்கிறாள். ஜிக்கி-பாவம் கிழவியாகி-விட்டாள். ஒரு கிளாஸ் சாராயத்திற்கு கையேந்தி நிற்கிறாள். திருச்செல்வி ஊனமான குழந்தை. குழந்தை பிறக்கவில்லை என்பதால் தனிமைப்-படுத்தப்படுகிறாள் கோமகள். கல்யாணமாகாததாலேயே நங்கா தற்கொலை செய்துகொள்கிறாள். சென்னகேசவபெருமாளின் தங்கையும், அவளுடைய மருமகளும் வாசகர் மனதில் என்றும் இருப்பார்கள். பசியை தாங்க முடியாமல் தாழ்த்தப்பட்ட சாதியினரிடம் கூழ்வாங்கிக் குடித்ததற்காக கர்ப்பிணியைக் கொன்று தானும் தற்கொலை செய்து-கொள்கிறாள் கிழவி. சாவதிலும் சாதி பெருமை. நாவலில் வருகிற பெண்கள் சராசரியான எளிய வாழ்வைக்கூட வாழ முடியமல் தத்தளிக்கிறார்கள். அமைதியாக ஒருசில பொழுதுகளைக்கூட அவர்களால் நகர்த்த முடியவில்லை. ஆண்களாவது நல்லவிதமாக இருக்கிறார்களா, தூங்குகிறார்களா என்றால் அதுவுமில்லை. பெண்களைவிட அவர்கள்தான் கொண்டலு அக்காவிடம் வாய்விட்டு கதறி அழுகிறார்கள். பெண்கள் தங்களுக்குள்ளாகவே அழுகிறார்கள். ஏன் யாருமே அமைதியாக இல்லை. இதுதான் நாவல் வாசகர்முன் வைக்கும் முக்கியமான கேள்வி. இதைத்தான் நாவலாசிரியர் நாவல் முழுக்க திரும்பத்திரும்ப ரகசியமாக கேட்டுக்கொண்டேயிருக்கிறார். ஒரு விதத்தில் நம்முடைய கடவுள்கள் கல்லாகவும், மண்ணாகவும், மரமாகவும் இருப்பது நல்லதுதான். கூடைகூடையாக கொட்டப்படும் மனச்சுமைகளை, நோய்க்கிருமிகளை அவர்கள் மட்டும் எப்படி தாங்க முடியும் என்ற கேள்விக்குக் கடைசியாக எஸ்.ராமகிருஷ்ணன் வந்து விடுகிறார்.

நாவலில் மனிதர்கள் ஓயாமல் ஓடிக்கொண்டேயிருக்கிறார்கள். வாழ்க்கையின் நெருக்கடிகள் துரத்திக்கொண்டேயிருக்கிறது. நோய், பிடுங்கல்கள், மனச்சிக்கல்கள் எல்லாவற்றையும் தொலைத்துவிட்டு ஓட நினைக்கிறார்கள். அதற்கான நம்பிக்கையைத் தருகிற இடமாக இருப்பது தெக்கோடு. விடுதலையை அல்ல -தற்காலிக நம்பிக்கையைத் தருகிறது. அதற்காக மனிதர்கள் பயணிக்கிறார்கள். மனச்சுமையிலிருந்து, உடல், மன நோயிலிருந்து விடுபடுவதற்கான பயணத்தில்-முடிவு என்ன என்பதை நாவல் சொல்லவில்லை. அவ்வாறு சொல்வது நாவலின் வேலையும் அல்ல. பயணமும், பயணத்திற்கான நோக்கம்தான் முக்கியம். துயில் தரு மாதா -மரண தேவதையாகக்கூட இருக்கலாம். மனித பயணத்தின் முற்றுப்புள்ளி-தெக்கோடாக இருக்கலாம். இந்து முறைப்படி வடக்கு நோக்கிய பயணம்-மரணம். வனப்பிரஸ்தம்.
“இரவில் உறக்கமற்றுபோனவர்கள் பெருகினார்கள்” (139) இதுதான் நாவலின் மையம். நாவலில் வரக்கூடிய நூற்றுக்-கணக்கான மனிதர்களுக்கு சுமக்க முடியாத பாரமாக இருப்பது-நேற்றுவரையிலான வாழ்க்கைப்பற்றிய நினைவுகள்தான். அந்த பாழும் நினைவுகளிலிருந்து விடுபடவும், துண்டித்துக்கொள்ளவும் முயல்கிறார்கள். ஆனால் இன்றைய வாழ்விற்கான ஆற்றலை நேற்றைய வாழ்வுதான் அளிக்கிறது என்று எஸ்.ராமகிருஷ்ணன் பூடகமாக உணர்த்துகிறார். ஒவ்வொரு மனிதனும் மன அமைதியைத் தேடி அல்லது தூக்கத்தைத் தேடி அலைகிறார்கள். கொண்டலு அக்காவிடம் தங்களுடைய கதைகளைச் சொல்கிற சீயென்னா, சிவபாலன், கூட்டுறவு துறையின் உயர் அதிகாரி, கோமகள் போன்ற பலரும், அவர்களுடைய அமைதியை, தூக்கத்தைத் தொலைத்தவர்கள் அவர்கள்தான். அதைத் தேடுபவர்களும் அவர்கள்தான். பொதுவாக மனித வாழ்க்கையில் நாளை என்பதுதான் பிரதானம். ஆனால் துயில் நாவல் முன்வைப்பது நேற்று என்பதை. நேற்றைய வாழ்க்கையைச் சொல்வதற்காகத்தான் இன்று இருக்கிறது.

நாவலில் இவர்தான் முக்கியமான பாத்திரம் என்றில்லை. இதுதான் துயில் நாவலின் சிறப்பு. ஒரு ஊர் நாவலின் மையமாகி இருக்கிறது. அதாவது மண். மனித வாழ்க்கை மண்ணை அடிப்படையாகக் கொண்டதுதானே. பிரமாண்டமான வீட்டில் எது முக்கியம், எது முக்கியமல்ல என்பதைக் கூற முடியாது. எல்லாமும் முக்கியம் வீட்டிற்கு. அது போன்றதுதான் துயில் நாவலில் வரும் பாத்திரங்கள்.

மனித மனத்தின் விசித்திரங்களைப் படம் பிடிக்க முயன்றுள்ளார் எஸ்.ராமகிருஷ்ணன். ஒன்றின் மீது பற்றுக்கொள்வதும் சட்டென்று அதிலிருந்து விலகிவிடுவதும் மனித மனத்தின் இயல்பாக இருக்கின்றன. மனைவி பக்கத்தில் இருக்கும்போதே ரயில் பயணி பொன்னியுடன் காதல் கொள்கிறான் அழகர். முன்பின் தெரியாத மனிதனுடன் படுப்பதற்கு உடனே அவளும் சம்மதிக்கிறாள். மனிதர்களுக்குத் தங்கள் மீதோ, தங்களுடைய செயல்களின் மீதோ மதிப்போ கௌரவமோ கிடையாது. எல்லாருமே கோழைகள். வாய்விட்டுக் கதறி அழுகிறார்கள். ஆனால் வாழ்வதற்கான ஆசையை மட்டும் வளர்த்துகொண்டே இருக்கிறார்கள். இது எப்படி மனித மனதிற்குள் நிகழ்கிறது என்பதை சொல்கிறது-துயில். சூசனாவும், நங்காவும்தான் தற்கொலை செய்து கொள்கிறார்கள். அவர்களிடமிருந்த துணிச்சல் வேறு யாருக்குமில்லை.
நாவலில் ஏலன்-லாகோம்பே-கடித உரையாடல் மதிப்பு வாய்ந்தது. ஒரு நூற்றாண்டுக்கு முந்தைய தமிழகம்-மக்கள்-குணாதிசயங்கள் அனைத்தும் மிகையில்லாமல் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன. வரலாற்றைச் சொல்ல தேர்ந்தெடுத்த வடிவமும்-உரையாடலும் எஸ்.ராமகிருஷ்ணனின் திறமையை காட்டுகிறது. நாவல் எழுதப்பட்ட விதம், நாவலின் மையம், மொழி, கால குழப்பமின்மை எல்லாமும சேர்ந்து நாவலைத் தொடர்ந்து படிக்க தூண்டுகின்றன.

அறிந்ததிலிருந்து அறியாதவற்றுக்கு, தெரிந்ததிலிருந்து தெரியாதவற்றுக்கு இட்டு செல்வதே இலக்கியப் படைப்பின் அடிப்படை அலகு. நாவல் என்பது கதை சொல்வதுதான். அதே நேரத்தில் கதை சொல்வது மட்டுமே அல்ல. தகவல்கள் கட்டாயம் இருக்க வேண்டும். ஆனால் தகவல் களஞ்சியமாக இருக்கக்கூடாது. வாழ்க்கை அனுபவங்களைத் தகவல்களாக இல்லாமல் வாழ்க்கை அனுபவங்களாக மாற்றுகிற நுட்பம்தான் ஒரு படைப்பின் வெற்றியாக இருக்கும். ஒரு சிறந்த படைப்பு வாசகனின் சிந்தனைக்கும், அவன் இட்டு நிரப்புவதற்கும் இடம் தரும். அப்படியான சந்தர்ப்பத்தைத் துயில் தரவில்லை. நாவலாசிரியர் பேசிக்கொண்டே இருக்கிறார். ஓயாத பேச்சு. நாவலில் வருகிற அனைவருமே நவீன கவிதை மொழியில் தத்துவமாகப் பேசுகிறார்கள். தன் இயல்பில் பேசிய ஒரே பாத்திரம்-பொன்னி மட்டும்தான். குழந்தையான திருச்செல்விக்கூட அல்ல. கொண்டலு அக்காவிடம் பேசுகிறவர்களில் ஒரு ஆள்கூட சாதாரணமாகப் பேசவில்லை. வாழ்க்கை வேறுவேறாக இருக்கிறது. எஸ்.ராமகிருஷ்ணன் மிகைநாடிய கலைஞனாக இருக்கிறார். கால் ஊனமாக திருச்செல்வி நாவல் முழுக்க ஓடிக்கொண்டேயிருக்கிறாள். விபச்சாரியான ரோமி சிறுவனான அழகருடன் படுக்க ஆசைப்படுவது விநோதம். நூற்றுக்கணக்கான ஊர்களின் பெயர்கள் வருகின்றன. வெறும் பெயர்களாக. எந்த அடையாளமும், தனித்துவமும் இல்லை. ஊர்கள்தான் ஒவ்வொரு மனிதனுக்கும் தனித்த அடையாளத்தை வழங்குகின்றன.
ஒரு இளம் எழுத்தாளனுக்கு மொழி மீதான கவர்ச்சி இருக்கலாம். எஸ்.ராமகிருஷ்ணனுக்கு அவ்வாறு இருப்பது நியாமில்லை. அலங்காரமான சொற்களின் மீதான கவர்ச்சி படைப்பாளியை வீழ்த்திவிடும். மொழியைக் கையாள்வதில் சிக்கனமும், கூடுதல் கவனமும் அவசியம். அவ்வாறு இல்லாதப்பட்சத்தில் அதுவே பலகீனமாகிவிடும். அதுதான் துயில் நாவலில் நிகழ்ந்திருக்கிறது. “துண்டிக்கப்பட்ட பல்லியின் வால் தனியே துடித்துக்-கொண்டிருப்பதுபோல தங்களின் கண்முன்னே பகல் துடித்து கொண்டிருப்பதை அவர்கள் பார்த்தபடியே இருந்தார்கள் (27)”, “மேய்ச்சலுக்குப்போன ஆடுகளை ஒட்டிக்-கொண்டு போவதுபோல யாரோ தெற்காக மேகங்களைக் கொண்டு-போய்க்-கொண்டிருந்தார்கள். (139)”, “அப்பாவின் நினைவு தண்ணீரில் நகர்ந்து செல்லும் மேகம்போல சத்தமில்லாமல் ஜிக்கிக்குள் ஊர்ந்து செல்லத்துவங்கியது.” (296)”, “அப்பாவின் சம்பாத்தியத்தில்தான் அம்மாவின் தங்கைகள் யாவரும் திருமணம் செய்துபோனார்கள்.” (301), “அந்த மழை திருடனைத் துரத்தி ஓடும் ஊர் மக்களின் ஆவேசத்தைப் போலிருந்தது.” (439), “தண்டவாளங்கள் மீது கம்பளி பூச்சி ஊர்ந்து செல்வதுபோல மெதுவாக முக்கி முக்கி சென்று கொண்டிருந்தது-ரயில் ” (23), “சூடு தாங்கா ரயில்வே கிராதிகள் முறுக்கேறி திமிறிக்கொண்டிருந்தன.”(23), “புழுதி படிந்து கசங்கிகிடந்த காகிதம் ஒன்று வெயில் தாளாமல் நடுங்கியபடி இருந்தது” (23), “ரயில் சீற்றத்துடன் பெருமூச்சிட்டபடி நின்று-கொண்டிருந்தது” (58), “நாங்கள் மழையின் முதுகைக்கூட பார்க்கவில்லை” (455), இதுபோன்ற கவித்துவமான ஆனால் பொருள் தராத அல்லாத முரண்பட்ட பொருள் தருகிற வாக்கியங்கள் நாவல் முழுவதும் நிறைந்து இருக்கின்றன. இப்படியான வாக்கிய அமைப்புகள் நாவலுக்கு வலு சேர்ப்பதற்குப் பதிலாக பலகீனத்தை உண்டாக்கும்.

---------------துயில்,
-எஸ்.ராமகிருஷ்ணன்

உயிர்மை பதிப்பகம், 11/29, சுப்ரமணியம் தெரு, அபிராமபுரம், சென்னை - 18, விலை 350/-

பெப்ரவரி 2012 - ஆசிரியர் பக்கம்

எழுத்தும் தண்டனையும்


எழுத்து தண்டனையெனில்
எழுதுகிறவர்களுக்கா? படிப்பவர்களுக்கா?
படிப்பவர்களுக்கு என்றால்
படிக்காமல் போகலாம்
எழுதுகிறவர்களுக்கு என்றால்
எழுதுவானேன்?
விவரம் அறியும் பருவத்திலேயே
சுவரில் கிறுக்கும் குழந்தைக்கு
எழுத்து, தண்டனையா?
படிக்காமல் இருப்பதும் எழுதாமல் இருப்பதும்
சுயதண்டனைகள் அல்லவா?
படிப்பதும் எழுதுவதும்
மனசாட்சியின் தண்டனையிலிருந்து
தப்பிக்கத்தானோ!
படிக்கவிடாமலும் எழுதவிடாமலும்
தடுப்பவர்களே தண்டனைக்குரியவர்கள்.

தாமத வருகைக்கு
சிறுசிறு தவறுகளுக்குப்
பள்ளிக்கூடத்தில்தான்
எழுத்து, தண்டனையாகிறது.
எண்ணும் எழுத்தும் கண்கள் என்று
சொல்லிக்கொண்டே
இம்போசிஷன் என்று
எழுத்தைத் தண்டனையாக
இளம்வயதில் பதிக்கிறோம்.
தண்டனை என்றால்
பயமும் வெறுப்பும் வரும்.
எழுத்தில் வெறுப்பு வந்தால்
படிப்பதில் வெறுப்பு வராதா?
படிப்பதற்காக அனுப்பப்படும்
பள்ளிக்கூடங்களில்
எழுத்தில் வெறுப்புத்தீ!

ஜெய்ப்பூரில் இலக்கியத்திருவிழா.
எழுத்தாளர்களும் வாசகர்களும்
இருக்கவிரும்பும் உலகம்
2006 முதல் நடந்துவருகிறது
இந்த ஆண்டு ஜனவரி 20- 24
சல்மான்ருஷ்டி தடுக்கப்பட்டார்
The satanic verses
சிந்திப்பதற்கு
யாருக்கும் எப்போதும் தடையில்லை
வெளிப்படுத்தும் போதுதான் தகராறு.
வரலாற்றில் பிப்ரவரி
சிந்தனை வெளிப்பாட்டிற்குத்
தண்டனை வழங்கும் புனிதமாதம்
புருனோ (G iordam o Bruno) வைக்
கைது செய்தனர்;
மணிக்கணக்கில் தலைகீழாகத்
தொங்கவிட்டனர்;
கண்களைக் குத்தினர்.
கட்டுப்பட மறுத்த புருனோவை
உயிருடன் எரித்தநாள்
பிப்ரவரி 17, 1600.
சல்மான்ருஷ்டிக்கு
மரணதண்டனை (Fatwa) விதிக்கப்பட்ட நாள்
பிப்ரவரி 14, 1989
அவருக்கு ஒன்றும் ஆகவில்லை
ஆனால் அவரது புத்தகத்தை
ஜப்பானில் மொழிபெயர்த்தவர்
1991 இல் கொல்லப்பட்டார்.
சல்மான்ருஷ்டியின் எழுத்து,
தரமற்றதாக இருக்கலாம்
அவரைப்படிப்பது
வெளிநாட்டில் வாழ்வதால் போற்றுகிற
இந்தியத் தாழ்வுமனப்பான்மையாக இருக்கலாம்.
ஆனால் சல்மான்ருஷ்டியின்
இலக்கியச் சேவைக்காக
அட்லாண்டா, எமரிக்
பல்கலைக்கழகத்தில் பதவி,
புக்கர் பரிசு
1945க்குப் பிறகு மிகச் சிறந்த
50 எழுத்தாளர்கள் வரிசையில்
டைம்ஸ் இதழ் தந்த 13ஆவது இடம்
ஐரோப்பிய, அமெரிக்கப் பல்கலைக்கழகங்களில்
மதிப்புறு முனைவர் பட்டங்கள் -
தாழ்வு மனப்பான்மை
இந்தியர்களுக்கு மட்டுமல்ல போலும்!

ஆண்டவனை மறுத்ததால்
நக்கீரன் எரிக்கப்பட்டான்.
திருமாலுக்கு எதிராகப் பேசியதால்
இரணியன் கிழிக்கப்பட்டான்.
அப்பரைக் கட்டிக் கடலில் போட்டார்கள்.
இராமனைப் போற்றியவர் கண்களைப் பறித்தார்கள்
நந்தனை நெருப்பில்... வள்ளலாரை அறைக்குள்...
உலகத்தமிழ்மாநாட்டிலிருந்து
கார்த்திகேசு சிவத்தம்பி வெளியேற்றம்.
நமது நாடு
மிகப்பெரிய ஜனநாயக நாடு
எழுத்துரிமையும் பேச்சுரிமையும்
சுதந்திரத்தின் மூச்சுக் காற்றுகள்
எழுத்தை எழுத்தால் பேச்சைப் பேச்சால்
மறுக்கலாம்; மாற்றலாம்.
எழுதுகோல் அல்ல எழுத்தே ஆயுதம்
எழுத்து இல்லாமல் அதிகாரம் இல்லை.
எழுத்தை அதிகாரம் எதிர்க்கலாமோ?
எழுத்தாளர்கள்
சாதி மதம் நாடு கடந்த
உலகக் குடிமக்கள்.
அவர்கள் வாழ்நிலை வேறு
வாழ விரும்பும் உலகம் வேறு
அடிமைப்பட்ட இந்தியாவில்
ஆனந்தப் பள்ளு ஆடியவன் பாரதி.
வரவிரும்பிய உலகை வரவேற்க
வாழும் உலகின் கதவுகளை உடைக்கிறார்கள்
வாழும் உலகைப் போற்றிப் பெறும்
விருதுகளைவிட
வரவேண்டிய உலகிற்கு வழிதிறப்பதில்
விழுப்புண் ஏந்துகிறார்கள்.
எழுத்தாளரின் சுதந்திரத்திற்கு
எழுத்தின் தரமதிப்பீடு தீர்வாகாது
அண்மையில் நடந்த புத்தகக் காட்சியில்
நீதிநாயகம் சந்துரு சொல்லியிருக்கிறார்
“ஓர் எழுத்தாளரின் நூல்கள் தாக்கப்பட்டால்
ஒரு சமுதாயத்தின் பண்பாடு அழிக்கப்படுகிறது.
ஓர் எழுத்தாளர் தாக்கப்பட்டால்
ஒரு வரலாறு அழிக்கப்படுகிறது”
ஆம்! ஒரு சமுதாயத்தின்
பண்பாடு என்பதும் வரலாறு என்பதும்
ஒட்டுமொத்த மனிதகுல வரலாற்றில்
உள்ளடங்கும் தானே!
வாழும் உலகை எப்படிப் பார்ப்பது?
வரவேண்டிய உலகை வரவேற்பது எப்படி என்று
யாரும் யாரையும்
கட்டாயப்படுத்துவதில்
நாகரிகம் தண்டனைக்காளாகிறது.
தடையும் தண்டனையும்
எழுத்திற்கென்றாலும்
எழுத்தாளருக்கென்றாலும்
தலைகுனிவது மானுட நேயமே!
-ம.ரா

பெப்ரவரி 2012 இதழ் உள்ளடக்கம்




கவிதை
  • Grace Butcher
  • நா.விச்வநாதன்
  • பி.முகுந்தராஜன்
  • கே.ஸ்டாலின்
  • அ.ஸ்ரீதர்பாரதி
  • நாகேந்திரபாரதி

கட்டுரை
  • ரதன்
  • கி.நாச்சிமுத்து
  • க.அம்சப்ரியா

நூல் அறிமுகம்
  • இமையம்
  • வெங்கட்சாமிநாதன்
  • மலர்மன்னன்

கதை
  • ஹாரிகெமெல்மேன்
  • வாஸந்தி
  • கமலாதேவி அரவிந்தன்
  • நீ.பி.அருளானந்தம்


கடைசிப்பக்கம்
  • இந்திரா பார்த்தசாரதி

பெப்ரவரி 2012 மாத இதழ்





ஆண்டு சந்தா: (
உள்நாடு)ரூ220/- (வெளிநாடு)US$30
இரண்டு ஆண்டு சந்தா: (
உள்நாடு )ரூ440/- (வெளிநாடு)US$50
ஆயுள் சந்தா: (
உள்நாடு )ரூ5000/- (வெளிநாடு)US$300

அனைத்துத் தொடர்புகளுக்கும்.

பதிப்பாளர்: சேது.சொக்கலிங்கம்
கவிதா பப்ளீகேஷன்: 8, மாசிலாமணி தெரு, தியாகராயநகர், சென்னை-600 017
தொலைபேசி: 24364243, 24322177

Monday, January 23, 2012

கடைசிப்பக்கம் - பக்தி உழவா்கள்



இந்திரா பார்த்தசாரதி

தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில், மார்கழி மாதம் குளிர்பருவம். காலையில், மஃப்ளரைக் காதுவரை இறுகிமூடியவாறு, மார்கழி பஜனையில் வீதிகளிடையே திருப்பாவை பாடிக்கொண்டு(?) செல்பவர்களைப் பார்க்கலாம்.

திருப்பாவை, ஆண்டாள் கண்ணனைக் கணவனாகப் பெறுவதற்காக நோற்ற நோன்பா அல்லது இந்தநிகழ்வுக்கு வேறு ஏதாவது முக்கியத்வம் இருக்கிறதா? திருப்பாவையை ஊன்றிப் படித்தால்தான் இதுபுரியும். மேலெழுந்தவாரியாகப் படிக்கும்போது, திருமணமாகாதக் கன்னிப்பெண்கள், நல்ல கணவர்கள் வாய்க்கவேண்டுமென்று, சிற்றங் சிறுகாலையில், நீராடிவிட்டு, நெய்யுண்ணாமலும், பாலுண்ணாமலும், கண்ணுக்கு மை எழுதாமலும், மலரிட்டு முடியாமலும், இத்தகைய சிறு தியாகங்களை மேற்கொண்டு, இறைவன் கோயிலுக்குச் சென்று, வழிபாடு செய்வதுதான் இந்த நோன்பு என்ற பரவலான அபிப்பிராயம் நிலவிவருகிறது.

அப்படியானால், திருப்பாவை நோன்பு சமயச்சடங்கு மட்டுந்தானா என்ற கேள்வி எழுகிறது.
உலகச் சமயச்சடங்குகள் அனைத்துக்குமே விவசாய உட்பொருள் உண்டு என்று சமூக மானுடவியல் வல்லுநர்கள் கூறுகிறார்கள். மனித நாகரிகத் தொடக்கக்காலத்தில் சமயமல்லாத வேறு காரணங்களுக்காகத் தொடங்கிய நிகழ்வுகள், பிற்காலங்களில் சமயச் சடங்குகளாக மாறிவிட்டன என்பது மார்க்ஸிஸ்ட் இலக்கிய விமர்சகர் கிறிஸ்டஃபர் கால்ட்வெல்லின் கருத்து.

மார்கழி மாதத்தில், தை மாதத்தில் அறுவடை செய்வதற்காக, உழவர்கள் காத்திருப்பார்கள்.. எப்படி விளையப் போகிறதோ, நல்ல விளைச்சலாக இருக்க வேண்டுமே என்ற ஆர்வமும் நம்பிக்கையும் இருந்து கொண்டே இருக்கும். இதற்குத் தெய்வத்தை வேண்டுவது தான் மனித இயல்பு.

மார்கழி மாதத்தில் ’நிலமகள்மடியில்’ (நப்பின்னை முலைத் தடத்தில்) அறுவடை (கண்ணன்) உறங்குகிறது.. அதனை உயிர்ப்பிக்கப் பாடும் பாட்டே திருப்பாவை. இப்பாடல்கள் கண்னனைத் துயிலெழுப்புவது போல் குறியீட்டுக்கோலம் கொள்கின்றன.
திருப்பாவையில் வரும் வரிகளைப் பார்க்கும்போது இது புலனாகிறது.
‘தீங்கின்றி நாடெல்லாம் திங்கள் மும்மாரிப் பெய்து,
ஓங்கு பெருஞ் செந்நெலூடுகயலுகள
பூங்குவளைப் போதில் பொறிவண்டு கண்படுப்ப
தேங்காதே புக்கிருந்து சீர்த்த முலைப்பற்றி
வாங்கக்குடம் நிறைக்கும் வள்ளல் பெரும்பசுக்கள்
நீங்காத செல்வம்...’

‘ஆழிமழைக்கண்ணா! ஒன்று நீகைகரவேல்
ஆழியுள் புக்குமுகந்து கொடார்த்தேறி
ஊழிமுதல்வனுருவம்போல் மெய்கறுத்து
பாழியந்தோளுடைப்பற்பநாபன்கையில்,
ஆழிபோல்மின்னிவலம்புரிபோல்நின்றதிர்ந்து
தாழாதேசார்ங்கமுதைத்தசரமழைபோல்,
வாழவுலகினில்பெய்திடாய்..

கூடாரை வெல்லும் சீர்க்கோவிந்தா உன்றன்னைப்
பாடிப்பறை கொண்டுயாம் பெறும்சம்மானம்
நாடுபுகழும் பரிசினால் நன்றாக
சூடகமேதோள்வளையேதோடேசெவிப்பூவே
பாடகமே யென்றனைய பல்கலனும் யாமணிவோம்
ஆடையுடுப்போ மதன்பின்னே பாற்சோறு
மூடநெய்பெய்துமுழங்கைநெய்வார
கூடியிருந்து...

‘கூடாரைவெல்லும் சீர்க்கோவிந்தா” என்று 27ஆம்பாட்டில்வரும்வரி, ‘கூடாரவல்லி’ யாகி இன்றும் வைணவர்கள் வீடுகளில், மார்கழி 27ஆம்நாள் ஒரு சமயப் பண்டிகையாகிக் கொண்டாடப்பட்டு வருகிறது.

நல்ல அறுவடை வேண்டிப் பாடப்பட்ட செய்யுட்கள், சமய வழிபாட்டுத் தோத்திரப் பாடல்களாக மாறிவிட்டன என்பதுதான் காலத்தின் நியதி!

காலம் கொன்ற விருந்து - 5

ரிஷிக்கூட்டங்களும் ஆசிரமங்களும்
நரசய்யா


வ. ரா. தமிழ்நாட்டிற்குத் திரும்பிய போது மஹாகவி சர்ச்சை முடிவு பெற்றிருந்தது. பாரதியார் குறித்து அவர் பேசாதிருந்ததற்குக் காரணம் பற்றி வீரகேசரி 15 .09. 1936 இதழில் இந்தியச் செய்திகள் என்ற தலைப்பில் பின்வரும் குறிப்பு வெளியிடப்பட்டிருந்தது:

தமிழ்நாட்டில் பாரதியார் தினம்
கடந்த வெள்ளிக்கிழமை சென்னையில் காங்கிரஸ் மாளிகையில் பாரதியார் தினம் கொண்டாடப்பட்டது.

மாலையில் கே. பாஷ்யம் அய்யங்கார், வித்வான் டி. பி. மீனாட்சிசுந்தரம்பிள்ளை, ரா. கிருஷ்ணமூர்த்தி, சங்கு சுப்பிரமணியம் முதலியவர்களூம் மற்றும் பல தலைவர்களும் பேசினார்கள்.

வ. ரா. பிரதிஞ்கை: சபையினர் வ. ரா. பேசவேண்டுமென்று கேட்டார்கள். அப்பொழுது வீரகேசரியின் மாஜி ஆசிரியர் திரு, வ. ராமஸ்வாமிஅய்யங்கார் (வ. ரா.) எழுந்து, தமிழ்நாட்டில் அடுத்த வருஷத்திற்குள் 300 பாரதி சங்கங்கள் ஏற்பட வேண்டுமென்றும் அதன்பின்னர்தான் தாம் பொதுக் கூட்டங்களில் பேசப்போவதாகவும், அதற்குமுன் பேசு வதில்லை என்ற பிரதிஞ்கை மேற்கொண்டிருப் பதாகவும் கூறினார்.

இதிலிருந்தே வ.ரா வின் பாரதி பக்தியைத் தெரிந்துகொள்ளலாம். தவிரவும். ரா.கி, வ, ரா.வின் பாரதி சர்ச்சை அவர்களது நட்பை ஒருபோதும் குறைத்து விடவில்லை! மாறாக, வ. ரா. எல்லாரையும் சந்தித்துப் பேசி சுமுகமாகவே இருந்தார் என்பது சிவபாத சுநதரம் இலக்கிய யாத்திரை என்றகட்டுரையில் எழுதியிருப்பதிலிருந்து தெரிந்து கொள்ளலாம்.

சிவபாதசுந்தரம் சொல்கிறார்:
“1937 இல் முதன் முறையாக சென்னைக்கு வந்த என்னை அன்றைய எத்தனையோ எழுத்தாளர் பலரைக் கேள்விப்பட்டிருந்தும், கல்கி அமர்ந்திருந்த ’ஆனந்தவிகடன்’ காரியாலயத்தை நாடச் செய்தது. ஆசிரியர் கல்கியைப் பார்க்கவேண்டும் என்று அங்கிருந்த ஒருவரிடம் சொல்லி என்னை அறிமுகப் படுத்தியவுடன், இலங்கையிலிருந்து ஒரு வாசகர் வந்திருக்கிறார் என்று காரியாலத்தினர் பெருமிதப்பட்டார்கள். உடனே ஆசிரியருக்குத் தகவல் அனுப்பிவிட்டு என்னை அங்கே அழைத்துச் சென்றவுடன் கல்கி எழுந்து அபிமானத்துடன் வரவேற்ற சமயத்தில் ‘வாங்கோ சிவபாதசுந்தரம்’ என்று அழைத்தது ஒரு குரல். ஏற்கனவே வீரகேசரி ஆசிரியராக இருந்த நண்பர் வ. ரா.தான் அப்படி அழைத்தார்.

அந்தச் சமயத்தில் கல்கியின் பக்கத்தில் வ. ரா.வை நான் எதிர்பார்க்கவில்லை. அதற்கு ஒரு ஆண்டுக்கு முன்னர்தான் பாரதி மகாகவி போரில் முகம் கொடுத்துப் பேசாத அளவில் எழுத்துச் சண்டை போட்டவர்கள். ஆனால் அதில் ஆச்சரியப்படவேண்டியதில்லை என்று சொல்லவேண்டும். வ.ரா.வை அறிந்தவர்களுக்குத் தெரியும் அவரோடு முரண்படுவதும் வெகு சுலபம். அவரோடு கட்டித்தழுவுவதும் சுலபம்”
கருத்தில் வேறுபட்டாலும் அந்த ஜாம்பவான்கள் ஒருவரையொருவர் வெறுக்கவில்லை! ஆனாலும் சமயம் கிடைத்த போதெல்லாம் கல்கி வ. ரா. வையும் அவரது நண்பர்களையும் கிண்டல் செய்வதில் தவறியதேயில்லை.

1938 ஆம் ஆண்டில் சென்னை வானொலி நிலையம் துவக்கப்பட்டது. அப்போது நிலைய இயக்குனர் விக்டர் பரஞ்சோதி என்பவர். இவர் இலண்டன் பி பி சி யில் பயிற்சிக்கு அனுப்பப்பட்டவர். துணை இயக்குனர் ஜி. டி. சாஸ்திரி. இருவரும் வ. ரா. வை விரும்பியவர்கள். மணிக்கொடியை ரசித்தவர்கள். அவர்கள் முயற்சியால், நிலையம் தொடங்கிய மறுநாளே வ. ரா. வின் பேச்சு ஒலிபரப்பாயிற்று. அப்பேச்சின் தலைப்பு ‘மூடநம்பிக் கைகள்.’ அவரது பேச்சு மக்களால் விரும்பப்பட்டதால், அப்போதிருந்தே அடிக்கடி வ. ராவைப் பேச நிலையத்தார் அழைத்துக் கொண்டிருந்தனர். அச்சமயங்களில் சிட்டியும் வ. ரா. வுடன் நிலையம் செல்வது வழக்கமாக இருந்தது. ஆகையால் சிட்டிக்கும் ரேடியோவில் பேசும் வாய்ப்புகள் சில கிட்டின. சில நாடகங்களும் வானொலிக்கு சிட்டி எழுதித்தர, அவை ஒலிபரப்பாயின. 1939 ஆம் ஆண்டில் திருச்சியில் ஒரு நிலையத்தை வானொலி துவக்கியது. அங்கு பேச்சாளர்களும் எழுத்தாளர் களும் தேவைப்பட்டனர். ரேடியோவில் ஏற்கனவே பணி புரிந்துகொண்டிருந்த ரா. பார்த்த சாரதி என்ற ஒரு சிறந்த நகைச்சுவை எழுத்தாளர் சிட்டியைத் திருச்சிக்கு வர அழைத்தார். முதலில் தயங்கிய சிட்டி பின்னர் அந்த நாட்களில் திருச்சியில் மருத்துவராக இருந்த டாக்டர் வா. சுவாமிநாத சாஸ்திரி என்பவரின் உந்துதலால் திருச்சி சென்றார். ஆகையால் சிட்டியின் மரியாதைக்குரியவராக டாக்டர் சுவாமிநாத சாஸ்திரி இருந்தார். தவிரவும் டாக்டர் சாஸ்திரி, டாக்டர் டி. எஸ். எஸ். ராஜனுடன் சேர்ந்து உப்பு சத்தியாகிரஹத்தில் ஈடுபட்டு, சிறை சென்றவர்.

இரண்டெழுத்தும் ஐந்தெழுத்தும்

டாக்டர் சுவாமிநாத சாஸ்திரி ஒரு சுதந்திரப் போராட்டவீரர். அவர் நோயாளிகளைப் பார்க்கும் போது கூட ராட்டையில் நூல் நூற்றுக் கொண்டுதான் இருப்பார். ஆங்கிலத்தில் அப்போது பிரசித்தி பெற்ற நகைச்சுவை பத்திரிகையான PUNCH போல தமிழில் ஒரு நகைச்சுவை பத்திரிகை நடத்த விரும்பினார். டாக்டர் சாஸ்திரி மணிக்கொடியின் தீவிர ரசிகர் அவர் அவ்வாறு மணிக்கொடி தோன்றிய அடுத்த ஆண்டே தொடங்கிய பத்திரிகையின் பெயர் களிராட்டை என்பதாகும். ராட்டையால் நூற்பது தான் மகிழ்ச்சி என்ற பொருளில் அத்தலைப்பு அமைந்தது. 1934

மார்ச்சு மாதம் வெளியான முதல் இதழில், அப்பெயர் கொடுக்கப் பட்டதன் பொருளை விளக்கியிருந்தார். “களி, கவலையைப் போக்கும் ராட்டை வறுமையை நீக்கும். நம் நாட்டினர் களிப்புடன் இருந்தாலே வலிமையுடன் வாழ்வார்கள். ராட்டை போன்ற கைத்தொழிற் கருவிகளைக் கையாடி வருவதால், தான் நமது வறுமை நீங்கும். உள்ளம் களிக்கும் வண்ணம் நகைச் சுவைததும்பும் கட்டுரைகளும் கதைகளும், நம் நாட்டினர் முன்னேற்றத்திற்கு ஏற்ற விஷயங்களும் வெளிவரும்”
சிட்டி அதிசயப்பிறவி வ. ரா. என்ற நூலில் இதைக் குறித்து எழுதியுள்ளார். வ. உ. சி., எஸ். ஜி. ராமானுஜுலு நாயுடு, வ. ரா., சங்கு சுப்பிரமணியம் போன்றவர் களும் களிராட்டையில் எழுதினார்கள். இதைத் தெரிந்துகொண்ட கல்கி. போடு பத்திரிகை என்ற வொரு கட்டுரையை விகடனில் புதுப் பத்திரிகை களை விமர்சித்து நகைச்சுவை யுடன் எழுதினார். நகைச்சுவையையே அடிப்படையாகக் கொண்ட களிராட்டை தோன்றியபோதே அந்தச் சுவையின் முன்னுரிமை கொண்டாடிய ஆனந்த விகடன் ஆசிரியர் அதைக் கிண்டல் செய்யும் பாணியிலும், புதிய பத்திரிகை ஆரம்பிக்கும் ஒரு தம்பிக்கு புத்திமதி சொல்வது போலவும் அமைந்திருந்தது அக்கட்டுரை. ஆனந்தவிகடன் 50,000 பிரதிகளுக்கும் அதிகமாக விற்றுக்கொண்டிருந்தபோது, சில நூறு பிரதிகள் விற்பனையான மணிக்கொடியும் களிராட்டையும் தரமான இலக்கியம் தேடும் வாசகர்களின் கவனத்தை ஈர்த்தகாலம். முதலில் சங்கு சுப்பிரமணியும் பின்னர் சொக்கலிங்கமும் தினமணியின் பொறுப்பேற்கச் சென்று விட்ட படியால், காந்தியும் சுதந்திரச் சங்கும் மறைந்து விட்ட காலம்; எஞ்சிய இரு பத்திரிகைகளின் வளர்ச்சியைக் கல்கி கூர்ந்து கவனித்துக் கொண்டிருந்தார் என்பது அக்கட்டுரை மூலம் மணிக்கொடி குழுவுக்குத் தெரிந்து விட்டது. உடனே எதிர்ப்பு ஒன்றும் எவராலும் தெரிவிக்கப்படவில்லையாயினும் மணிக்கொடி எழுத்தாளர்களை இது மனம் நோகத்தான் செய்தது.. தொடர்ந்து இப்பத்திரிகையில் டாக்டர் சாஸ்திரியின் விருப்பப்படி, சிட்டியின் இரண்டு எழுத்துகள் என்றவொரு கட்டுரை வெளியாயிற்று. “ஒன்று குறில் மற்றொன்று நெடில்” என்று தொடங்கிய அக்கட்டுரை வ. ரா. வைப் பற்றியது. (வ, குறில் ரா, நெடில்) அதில் சிட்டி வ. ரா. வின் தமிழ்ச் சேவையைப் புகழ்ந்து எழுதியிருந்தார். இது கல்கிக்குப் பொறுக்கவில்லை போலும்! உடனே இக்கட்டுரையைப் பரிகாசம் செய்யும் பாணியில் கல்கி ஆனந்த விகடனில் ஐந்து எழுத்துக்கள் என்றவொரு கட்டுரை எழுதினார்.

தனக்கே உரிய நகைச்சுவையுடன் கல்கியால் அக்கட்டுரை எழுதப்பட்டிருந்தது.

ஐந்தெழுத்துக்களில் உணர்ச்சியைக் கிளப்பிக் கண்ணீர் வடிக்கச்செய்யும் என்ற வகையில் எழுதி முடிக்கையில் அதுதான் வெங்காயம் என்று குறிப்பிட்டார்! நான் இது குறித்து சிட்டியைக் கேட்டபோது, அவரைப் பொறுத்த வரையில் “இத்தகைய நிலை உருவானது பற்றி மணிக்கொடியைச் சேர்ந்த எங்களில் சிலர் மார்தட்டிக்கொள்ளவும் தயங்கவில்லை. இது முதல் அன்று நடந்தேறிய இலக்கிய வேள்வியில் பலதரப்பட்ட ஆசிரமங்கள் ஈடுபட்டதன் விளைவாக ‘ரிஷிகூட்டங்களி’டையில் சிறிது பொறாமையும் பகையுணர்வும் வளர்வதற்கு வாய்ப்பு கிடைத்தது” என்றார்.

சிட்டி அக்காலத்தைத் தமிழின் பொற்காலம் எனக்கூறுவார். சற்றே பின்னோக்கிச் சென்றால், அப்போதைய, வ. ரா. வின் செதுக்கிய நடையும் கு. ஸ்ரீனிவாசனின் ஆழ்ந்த சிந்தனைகளும் தமிழுக்குப் பொலிவைக் கொடுத்ததாகச் சிட்டி கருதினார். அப்போது வந்து கொண்டிருந்த காந்தி, டி. எஸ். சொக்கலிங்கத்தின் நேரடித் தாக்குதல் கட்டுரைகளைப் பிரசுரித்துக் கொண்டிருந்தது. ஆகையால் விஷயங்களை உடனுக்குடன் விளக்கும் சக்தி வாய்ந்திருந்தது. மணிக்கொடி பத்திரிகையின் நிழலில் வளர்ந்தவர்களில் ஒருவர் ந. ராமரத்தினம். திருச்சி டாக்டர் சாஸ்திரியின் உறவினரான இவர், திருமணம் முடிந்த மறுமாதமே சத்தியாகிரஹத்தில் ஈடுபட்டு, போலீசாரிடம் அடியும் வாங்கி சிறை சென்றவர். அவருடைய இளம் மனைவியும் மற்ற பெண்களுடன் சிறைப்பட்டவர். இசை ஞானம் பொருந்திய ராமரத்தினம் சங்கீத விமர்சனக் கட்டுரை ஒன்றை மணிக்கொடிக்கு அனுப்பியிருந்தார். அதைப் பார்த்து மகிழ்ந்த வ. ரா. அவரைச் சென்னைக்கு வந்து எழுத்துலகில் சேருமாறு அழைப்பு விடுத்தார். அப்படித்தான் ராமரத்தினம் எழுத்தாளரானார்.
(தமிழ் எழுத்து வரலாற்றில் சிட்டி ஒரு மைல் கல் எனக் குறிப்பிடும் காலம் சென்ற இலங்கை கா. சிவத்தம்பி, ஜனவர் 16, 2003 அன்று சிட்டிக்கு எழுதிஅய கடிதம் இணைக்கப்பட்டுள்ளது)



இலக்கியமாகும் வரலாறு - காவல் கோட்டம்

கருத்து சா. கந்தசாமி

இந்தியாவில் இலக்கியத்திற்காக இந்திய அரசு தரும் உயர்ந்த விருது சாகித்ய அகாதமி பரிசு. அது விண்ணப்பம் போட்டு, புத்தகம் அனுப்பிப் பெறுவது கிடையாது. சாகித்ய அகாதமி தானாகவே ஒரு புத்தகத்தைத் தேர்ந்தெடுத்து அதன் ஆசிரியருக்கு விருது வழங்குகிறது. அது பற்றி எத்தனைத்தான் குறைகள் சொன்னாலும், அசலான படைப்பு எழுத்தாளர்கள் சிலர் விருது பெற்றுக் கொண்டே வருகிறார்கள். அதனால் சாகித்ய அகாதமி குறைபாடுகள் கவனிப்பு பெறாமல் போய்விடுகின்றன.

1954 ஆம் ஆண்டில் சாகித்ய அகாதமி தொடங்கபட்டது. அதன் முதல் தலைவராகப் பிரதம மந்திரி ஜவகர்லால் நேரு இருந்தார். பத்தாண்டுகள். தன் மரணம் வரையில் சாகித்ய அகாதமி தலைவராக இருந்த அவர் சாகித்ய அகாதமி விருது பெறாதவர்.

சாகித்ய அகாதமி தொடக்கத்தில் பதினெட்டு மொழிகளுக்கு விருது கொடுத்தது. பின்னர் கொங்கணி மொழி சேர்க்கப்பட்டது. தற்போது மணிப் புரி, போடோ சந்தாலி, டோக்ரி சேர்க்கப்பட்டு விருது கொடுக்கப் படுகிறது அதில் ஆங்கிலமும் உண்டு. ஆங்கிலம் இந்திய மொழிகளில் ஒன்றாகவே கருதப்படுகிறது.

ஆங்கில மொழிக்காக முதன் முதலாக விருது பெற்றவர் ஆர்.கே. நாராயண். தமிழ் மொழிக்க முதன்முதலில் சாகித்ய அகாதமி விருது பெற்றவர் சென்னைப் பல்கலைக் கழகத்தின் தமிழ்ப் பேராசிரியராக இருந்த ரா.பி. சேது பிள்ளை. விருது பெற்றது தமிழின்பம் என்னும் கட்டுரைத்தொகுப்பு.

சாகித்ய அகாதமி படைப்பிலக்கியத்தைப் புறக்கணிக்கிறது மேம்போக்கான, பள்ளிக் கூடப் பாடப் புத்தகத்தரமான புத்தகங்களுக்கு விருது வழங்குகிறது என்று சொல்ல தமிழின்பம் முதல் காரணமாக அமைந்தது. விருது, பரிசு என்பதால் ஒரு படைப்பு சிறப் படைவது இல்லை. அதன் தரத்திற்காகவும்; அசலான தன்மைக்காகவும் கவனிப்பு பெறுகிறது. ஆனால் விருது, பரிசு என்னும் அங்கீகாரம் ஒரு மொழி இலக்கியத்தை முன்னெடுத்துக் செல்கிறது.


தமிழகத்தில் மாநில சாகித்ய அகாதமி இல்லை. எனவே இந்திய சாகித்ய அகாதமி தமிழ்மொழிக்கான விருது முக்கியத்துவம் பெறுகிறது. அதனை அடைய எழுத்தாளர்கள், பேராசிரியர்கள், ஆராய்ச்சியாளர்கள் என்று ஒவ்வொருவரும் விரும்புகிறார்கள்.
இந்த ஆண்டு சாகித்ய அகாதமி விருதைத் தமிழ் மொழிக்கென பெற்று இருப்பவர் சு. வெங்கடேசன். நூல்: காவல் கோட்டம். பெரிய நாவல். ஆயிரம் பக்கங்களுக்கு மேல். 2008 _ ஆம் ஆண்டில் வெளி வந்தது.


சரித்திரந்தான் காவல் கோட்டம். அதாவது மதுரையின் சரித்திரத்தையே ஒரு கதாபாத் திரமாகக் கொண்டு மாலிக்கப்பூர், நாயக்கர்கள், ஆங்கிலேயர்கள் ஆட்சிக் காலத்தின் சரித்திரத்தைத் தன் படிப்பின் வழியாகவும் தன் ஈடுபாடு, அக்கறையின் அடிப்படையில் எழுதியிருக்கிறார்.

காவல், களவாகிப் போனபோது அதில் சம்பந்தப்பட்டவர்கள் வாழ்க்கை சீர்குலைந்து போவது விவரமாகச் சொல்லப்படுகிறது. நாவல் என்பதற்கு இலக்கணம் ஏதும் கிடையாது என்பது மட்டுமல்ல ஒவ்வொரு அசலான நாவலும் ஏற்கனவே எழுதப் பட்டிருக்கும் நாவல்களுக்கு எதிராகவே எழுதப்படுகிறது. சொல்லப்பட்ட வரலாறு சொல்லப்பட்ட வரலாற்றின் வழியாகச் சொல்லப்படாத வரலாறும் படைப்பு என்பதற்கு அர்த்தம் கொடுக்கிறது. வரலாறு என்பதில் படைப்பு எழுத்தாளன் நோக்கம் பார்வை தனித்தன்மை மிளிர இடம் பெறும் போது, சொல்லப்படும் முறையால் அது கலைத்தன்மை பெற்று நாவலாகிறது.

நடந்தது, எழுதி வைக்கப்பட்டிருக்கிறது என்பதால் எதற்கும் சிறப்பு கிடையாது. அது ஒரு கலைஞனால் சொல்லப்படும்போதுதான் மதிப்படைகிறது . ஆனால் சரித்திரத்தை எவ்வாறு கலைஞன் தீர்மானித்தான். அதுவே ஒரு படைப்பைத் தன்னளவில் நிலை நாட்டுகிறது.
காவல் கோட்டம் நாவலில் முக்கியமான அம்சம் களவு. காவல் பார்த்து வந்த மக்கள் களவாடுகிறவர்களாக மாறியது; அரசாங்கம் அவர்கள் மீது எடுத்த நடவடிக்கை, காவல் கூலி, துப்புக் கூலி விவகாரம். ஆங்கிலேயர்கள் மதுரைக்கு மட்டும் குற்றப்பரம்பரைக் கூட்டத்தைக் கொண்டு வரவில்லை. தங்கள் ஆட்சிக்கும் அதிகாரத்திற்கும் அடங் காதவர்களைத் தனித்தனியாகச் குற்றவாளிகள் என்று கண்டுபிடித்துத் தண்டிப்பதை விட சட்டமாகக் தண்டித்துவிடலாம் என்று 1871 ஆம் ஆண்டில் குற்றப்பரம்பரைச் சட்டத்தை இந்தியாவுக்கு கொண்டு வந்தார்கள். அதன் அடிப்படை மனிதன் சுதந்திரமாகப் பிறக்கின்றான் என்பது இல்லை. மனிதன் குற்றவாளியாக பிறக்கின்றான். மூன்று வயதில் குற்றம் செய்யக்கூடிய தன்மை ரத்தத்தில் ஓடுகிறது.

அப்படிப்பட்டவர்களைத் தனியாகப் பார்க்கவேண்டும். சுதந்திரமாக நடமாட விடக்கூடாது. இரவில் போலீஸ் ஸ்டேசனில் ஆஜராகிப் படுத்துக் கிடக்க வேண்டும். வெளியூர் சென்றால் ஆதார சீட்டு வாங்கிக் கொண்டு போக வேண்டும் என்றெல்லாம் சட்டம் போட்டார்கள். இந்தியாவின் பல மாகாணங்களில் குற்றப் பரம்பரைச் சட்டம் அமலில் இருந்தது.
சென்னை மாகாணத்தில் மதுரை, ராமநாதபுரம் குற்றப் பரம்பரைச் சட்டம் அமலுக்கு வந்தது என்றாலும் மதுரை அதில் பிரதான இடமாகியது. பிரமலைக் கள்ளர்கள் குற்றப் பரம்பரைச் சட்டத்தில் முதலில் சேர்க்கப்பட்டார்கள். அவர்கள் காவலர்களாக இருந்தவர்கள். எனவே களவும் அவர்களுக்குச் சாத்தியமாகியது. குற்றப்பரம்பரைச் சட்டத்தில் மறவர், அகம்படியர் வலையர், ஒட்டர், கேப்மாரி, குறவர் எனப்பலர் இருந்தார்கள்.
பத்தொன்பது வயதில் களவும், காவலும் கற்று அழகர்மலைக் கருப்புக்குக் கிடாவெட்டி மொட்டையடித்து காவல் கம்பு தாங்கியவர்கள், கம்பு பறிக்கப்பட்டு ஆதாரச் சீட்டு வாங்கிக் கொண்டு அடுத்த ஊர்க்குப் போகும் பரிதாப நிலை பிரமலைக்கள்ளர்களுக்கு ஏற்பட்டது, காவல் கோட்டத்தில் அதிகமாகச் சொல்லப்படுகிறது.

காவல் கோட்டம் கதைச் சொல்லும் நாவல் இல்லை வரலாற்றை வரலாறாகவே சொல்லும் நாவல். அதுவே அதன் பலம் அதற்கு சாகித்ய அகாதமி விருது வழங்கி இருக்கிறது. படைப்பு இலக்கியத்திற்கு வழங்கி இரு என்பது மகிழ்ச்சியானது தான்.

ஜனவரி 2012 - ஆசிரியர் பக்கம்

உங்களுடன்
வழி பிறக்கட்டும்


தை பிறந்தால் வழி பிறக்குமாம்
பிறந்தால் வாழ்த்தவேண்டும்
வழிக்குப் பிறப்புண்டா?
ஆண்டுக்குப் பிறப்பிருந்தால்
வழிக்கும் பிறப்பிருக்கலாம்
ஆண்டு பிறக்கிறதா?
ஆண்டுதோறும் பிறக்கிறது

காலக்கணிப்பே ஆண்டின் பிறப்பு
காலத்தைக் கணிக்க முடிகிறதா?
இறந்தகாலம் இப்போது இல்லை
எதிர்காலமும் இப்போது இல்லை
எப்போதும் இருப்பது
நிகழ்காலம் மட்டுமே
நினைத்துப் பார்க்கிற நேரங்களில்
கடந்த காலமும் எதிர்காலமும்
நிகழ்காலங்கள் ஆகின்றனவா?
கடந்தகால நிகழ்காலம் நினைவுகளிலும்
எதிர்கால நிகழ்காலம் திட்டமிடலிலுமாக
நிகழ்காலம் காலங்களைச் சுமக்கிறது

நாகரிகத்தின் தோற்றப்புள்ளி
காலக்கணிப்பு
மெசபடோமியாவின் பாபிலோனில்
நான்காயிரம் ஆண்டுகளுக்கு முன்பே
வசந்தகாலத்தை வரவேற்றுப்
புத்தாண்டுக் கொண்டாட்டம்
சூரியனின் நகர்வைக் கொண்டு
ரோமானியர்களின் காலக்கணிப்பு.

சூரியமானம் சந்திரமானம்
சூரியசந்திரமானம் என்று
இந்தியாவின் காலக்கணிப்புகள்
தமிழ்நாட்டிலும் ஈழத்திலும்
சூரியக் கணக்குமுறை
விநாடி, நிமிடம், மணி, நாள்,
வாரம், மாதம், பருவம் எல்லாம்
உலகம் முழுதும் சுழற்சி முறைதான்
கடந்த காலத்திலிருந்து எதிர்காலத்திற்கான
நேர்கோட்டு ஆண்டுக் கணக்குமுறை
இந்தியாவில் சுழற்சி முறையில்
அறுபதாண்டுப் பெயர்களுக்கு ஆபாசக்கதைகள்

உலகம் முழுதும் காலத்தின் தலைவிதி
சூரியன் கால்களில்

சூரியனின் வடதிசைப் பயணத்தொடக்கம்
பொங்கல்
புதுப்பானை, புதுஅரிசி, புத்தாடையுடன்
காலப்புதுமைக்கு வரவேற்பு
காலம்
கணக்கியலின் மையப்புள்ளி
பிரபஞ்சப் புரிதலின் திறவுகோல்
காலக் கணக்கீட்டில்
நவீனத் தொழில் நுட்பமும்
கட்டுப்பட்டுக் கிடக்கிறது
காலம் ஏற்படுத்தும் மாற்றங்களுக்கு
அறிவியலும் கைகட்டி நிற்கிறது
மாற்றங்களே காலத்தைக் காட்டுகின்றன
நேற்றைய ஒரு விநாடி
இன்றைய ஒரு விநாடிக்குச் சமமில்லை
ஒரு விநாடிப் பொழுதும்
உலகெங்கும் ஒன்றாக இருப்பதில்லை
நியூட்டன் பார்த்த ஆப்பிள்
அதே கிளையிலிருந்து
மறுபடியும் விழுந்தால்
அதே இடத்தில் விழுமா?
இடத்தைக் காற்றும் மாற்றலாம்
கிளையும் பழமும்கூட
காலத்தால் மாறியிருக்கலாம்
ஒருநதியில் ஒருவரே
இருமுறை குளித்தாலும்
தண்ணீரையும் குளிப்பவரையும்
காலம் மாற்றியிருக்கலாம்
ஆனாலும்
நதி அதேதான்
ஆண்டுதோறும் ஆண்டுகள் வரலாம்
கொண்டாடுவோர் மாறியிருக்கலாம்
கொண்டாட்டம் தொடரும்
உறவையும் நட்பையும் புதுப்பித்துக்கொள்ள
அன்பளிப்புகளில் அதிகாரம் வளர்க்க
விடுமுறை, வியாபாரம், விளம்பரம் என்று
கொண்டாட்டம் தொடர ஊக்கப்படுத்தலாம்
ஒரு காலத்தில்
வெள்ளத்திலிருந்து காத்துக்கொள்ள
நதிக்கரை மக்களை யோசிக்கவைத்தது
காலக்கணக்கு
விதைக்க, நட, அறுக்க என்று
மழைபெய் காலத்தை அறிய உதவியது
காலக்கணக்கு
காலம் பொய்க்காமல் தொடர்ந்திட
கடவுள் வழிபாடு கணக்கில் வந்தது
காலக் கணக்கில் மதம் வந்தபின்
அரசியலும் வந்தது
ஆண்டுப்பிறப்பு அரசியல் ஆனது
காலம் இல்லாத இடமும்
இடம் இல்லாத காலமும்
எங்கே இருக்கின்றன?
மதமும் அரசியலும் இல்லாத கொண்டாட்டம்
பொங்கல்
கடந்தகாலம் நிகழ்காலத்தையும்
நிகழ்காலம் வரும்காலத்தையும்
கட்டமைப்பது சாத்தியம் என்றால்
கட்டுடைப்பும் சாத்தியம்தானே
வரலாற்றில் காலம் அடங்கினாலும்
வரலாற்றுக்கு முன்பே காலம் உண்டே!
பகலில்
கம்பத்து நிழலில் காலம் பார்த்தோம்
இரவில்
தண்ணீர் மணல் கடிகாரத்தில் நேரம் அறிந்தோம்
இன்று
கையில் அலைபேசியில் காலத்தைச் சுமக்கிறோம்
இதயக்கடிகார ஓசையில்
மனக்கடிகாரமும் ஓடுகிறது
மனக்கடிகாரமும் மணிக்கடிகாரமும்
ஒத்துப்போகிற வாழ்க்கை வேண்டும்
தை பிறந்தால்
வழிபிறக்குமா?
வழிபிறக்கட்டும்!
வாழ்த்துகள்!!

-ம.ரா

ஜனவரி 2012 இதழ் உள்ளடக்கம்

கவிதை
ஸ்ரீமொழிவெங்கடேஷ்
ஈரோடு தமிழன்பன்
உஷாதேவி
சசி அய்யனார்
கா.அமீர்ஜான்
பூர்ணா
பா.கண்மணி
பொ.செந்திலரசு
ராச.கணேசன்


கட்டுரை
காஞ்சனா தாமோதரன்
சா.கந்தசாமி
இந்திரா பார்த்தசாரதி


நூல் மதிப்புரை
வெங்கட்சாமிநாதன்
க.பஞ்சாங்கம்

கதை
வைதீஸ்வரன்
கண்ணன்
சந்தியூர் கோவிந்தன்
சுந்தர் நாகரெத்தினம்

தொடர்
நரசய்யா

கடைசிப்பக்கம்
இந்திரா பார்த்தசாரதி

ஜனவரி 2012 மாத இதழ்





ஆண்டு சந்தா: (
உள்நாடு)ரூ220/- (வெளிநாடு)US$30
இரண்டு ஆண்டு சந்தா: (
உள்நாடு )ரூ440/- (வெளிநாடு)US$50
ஆயுள் சந்தா: (
உள்நாடு )ரூ5000/- (வெளிநாடு)US$300

அனைத்துத் தொடர்புகளுக்கும்.

பதிப்பாளர்: சேது.சொக்கலிங்கம்
கவிதா பப்ளீகேஷன்: 8, மாசிலாமணி தெரு, தியாகராயநகர், சென்னை-600 017
தொலைபேசி: 24364243, 24322177