Monday, March 5, 2012

கடைசிப்பக்கம் - இறைவன் விரும்பும் மொழி தமிழ்இந்திரா பார்த்தசாரதி

தமிழ் இலக்கிய வரலாற்று நூல்களில், ஆழ்வார்களின் நாலாயிர திவ்யப் பிரபந்தச் செய்யுட்களுக்கு எழுதப்பட்ட உரைகளைப் பற்றிய குறிப்புகள் அதிகமாக இல்லை. காரணம், இவ்வுரைகள் 'வியாக்கியானங்கள்' என்று அழைக்கப் பட்டதாலோ என்னவோ, சமயத்தோடு மட்டும் வைத்து எண்ணப்பட்டன.

இவ்வுரையாசியர்களுடைய ஆழ்ந்த தமிழ்ப் பற்றைப் பற்றியோ, இவ்வுரைகளின் அற்புதமான உரை நயங்களைப் பற்றியோ பரவலாக யாருக்கும் தெரியாமலே  போய்விட்டது. நஷ்டம், தமிழ் ஆர்வலர்களுக்குத் தான்.

சம்ஸ்கிருதத்துக்கு இணையான இலக்கிய, சமய ஏற்றம் தமிழுக்குத் தந்தவர்கள் வைணவர்கள்தாம். தமிழ்ப் பிரபந்தத்திலும், சம்ஸ்கிருதவேத நூல்களிலும் ஒத்த தேர்ச்சி உடையவர்கள் 'உபய வேதாந்திகள்' என்று அழைக்கப்பட்டனர்.

ஆழ்வார் பாசுரங்கள், சம்ஸ்கிருத வேதங்களுக்குச் சமமாகவோ அல்லது உயர்ந்தவையாகவோ கருதப்பட்டன. பெரியவாச்சான் பிள்ளை வியாக்கியானத்தில் வரும் ஒரு செய்தியை இதற்குச் சான்றாகக் கூறலாம்.

வங்கிபுரத்து நம்பி என்கிற ஆந்திரப் பூரணர், ஒரு சமயம், ஏழை, எளிய இடைக் குலப் பெண்களுடன் உரையாடிக் கொண்டிருந்தாராம். அதைப் பார்த்த, ராமானுஜருடைய உறவினரும், சிஷ்யருமாகிய முதலியாண்டான், ‘அவர்களுடன் என்ன பேசிக்கொண்டிருக்கிறீர்கள்?’ என்று கேட்டாராம். ‘அவர்களை வேத ஸ்லோகங்களைச் சொல்லி ஆசிர்வதித்தேன்’ என்றாராம் வங்கிபுரத்து நம்பி.

‘அவர்கள் ஈரத்தமிழ் பேச, நீங்கள் அவர்களை முரட்டு சம்ஸ்கிருதத்தில் ஆசிர்வதித்தீரோ?’ என்று சிரித்துக் கொண்டே கேட்டாராம் முதலியாண்டான்!

ராமாநுஜர் பணித்ததற்கேற்ப திருவாய்மொழிக்கு உரை எழுதினார், அவருடைய தலை மாணாக்கராகிய திருக்குருகைப்பிள்ளான். நாலாயிர திவ்ய பிரபந்தத்தை வேதங்களுக்கு நிகராக ராமானுஜரும், வியாக்கியானக்காரர்களும் நிறுவியதற்கு ஆசார வைணவர்களிடமிருந்து எதிர்ப்பு இல்லாமிலில்லை. இதைப் பற்றி  நஞ்சீயர் குறிப்பிடுகிறார். நஞ்சீயருக்கும் ஆசார வைணவர்களுக்குமிடையே நிகழ்ந்த விவாதம் சுவாரஸ்யமானது.
எதிர்ப்பு அணி வைத்த முதல் வாதம்: ‘சம்ஸ்கிருதம் தேவ பாஷை. தமிழ் மானிட பாஷை. தமிழில் எழுதப்பட்டவற்றை சம்ஸ்கிருதத்தோடு இணைத்துப் பேசுவது தெய்வ நிந்தனை’. நஞ்சீயர் கூறினார்: ‘இறைவனை வழிபடும் மொழி எதுவாயினும் அது தேவ பாஷைதான்.’ எதிர்ப்பு அணியினர் கூறியது: ‘தமிழ் நான்கு சாதியினராலும் பேசப் படுவதால் அது தீட்டுப் பட்ட மொழி’. நஞ்சீயர் கோபத்துடன் சொன்னார்:’ இதைப் போன்ற அபத்தம் எதுவுமிருக்கமுடியாது. மக்கள் பேசும் மொழியே இறைவன் விரும்பிக் கேட்கும் மொழி. இது தமிழாகத்தானிருக்க முடியும்’.
எதிர்ப்பு அணியினர்,-சம்ஸ்கிருதத்தை தெய்வ மொழியாகப் போற்றியவர்கள்- சொன்னார்கள்:
‘நம்மாழ்வார் நாலாவது வருணத்தைச் சார்ந்தவர்.  அவர் பாசுரங்களை வேதங்களுக்குச் சமமாக வைத்துப் பேசுவது தெய்வ அபசாரம், இறைவனுக்கு அடுக்காது’.

நஞ்சீயர் இதைக் கடுமையாகக் கண்டித்துக் கூறினார்:’ ஒருவர் ஒரு குறிப்பிட்ட ஜாதியில் பிறப்பதற்கு அவர் பொறுப்பில்லை  மேலும், மேன்மை என்பது ஜாதியினால் வருவதன்று. அறிவினாலும் ஒழுக்கத்தினாலும் வருவது. வேதங்களைக் காட்டிலும்  நம்மாழ்வார் பாடல்களைத்தான் இறைவன் விரும்பிக் கேட்கிறான். உற்சவர் உலாவிலே  வேதம் சொல்லுகின்றவர்கள் ஒருவர் கையை இன்னொருவர் பற்றிச் செல்லும்போது, திவ்யப் பிரபந்தம் சொல்கின்றவர்கள் ஒவ்வொருவரும் அவ்வாறு ஒருவர் கையை மற்றவர்  பற்றாமல் சுதந்திரமாகத் தம் கைகளை வீசிக் கொண்டு  செல்வார்கள். தமிழ்ப் பாசுரங்களை’ மெய்ந் நின்று கேட்டருளும்’ இறைவன் தங்களைத் தாண்டிப் போக மாட்டான் என்கிற அவர்களுடைய மன உறுதியினால்தான் அவர்கள் தனித்தனியே நடந்து செல்கிறார்கள்’

இரண்டாண்டுகளுக்கு முன்பு, சிதம்பரத்தில் தீட்சிதர்கள், இறைவன் சந்நிதியில் ஓதுவார்கள் தமிழ்த் திருமுறை இசைப்பது வேத மரபுக்கு விரோதம் என்று கூறியது நினவுக்கு வருகிறதா?

ஆனால் வைணவர்களால், பன்னிரெண்டாம் நூற்றாண்டிலேயே இப்பிரச்சினையை எதிர் கொண்டு, ராமானுஜர் போன்ற மாபெரும் சமயத் தலைவர் மூலம் இதற்கு முடிவு காண முடிந்தது.

தொடர்: காலம் கொன்ற விருந்து - 6நரசய்யா

இரண்டாவது விரோதியும் நிரந்தர நண்பனும்


‘மணிக்கொடி’ க்கு எழுதும் துணிச்சலைச் சிட்டிக்குக் கொடுத்தவர்   1932-இல் இந்தியா நாளேட்டின் துணை ஆசிரியராக இருந்து பின்னர் சுதேசமித்திரனில் தலையங்கம் எழுதும் துணையாசிரியராகச் சேர்ந்த எஸ். எஸ். கிருஷ்ணமூர்த்தி என்பவர் என்று சிட்டி கூறுவார். அவரிடம் தான் சிட்டி பத்திரிகைத் துறை பயிற்சி பெற்றார். அப்போது சிட்டிக்குத் தனது தமிழ் சொல்லாட்சியின் மீது நம்பிக்கை இருக்கவில்லை. மாறாக ஆங்கிலத்தில் சிறப்பாகவே எழுதிக் கொண்டிருந்தார். ஒருநாள் கிருஷ்ணமூர்த்தி  மணிக்கொடி இதழொன்றைக் காட்டி, சிட்டியை அப்பத்திரிகையில் ஏன் எழுதலாகாது எனக் கேட்டாராம். “தமிழ் இலக்கிய உலகத்திற்கு இப்பத்திரிகை ஒரு பெரும் அதிர்ச்சியைக் கொடுத்துள்ளது”  என்று அவர் சொன்னது, தனக்கு அதிர்ச்சியைக் கொடுத்தது என்கிறார் சிட்டி. சிட்டி நகைச் சுவையுடன் சொன்னது - “தமிழ் இலக்கிய உலகம் என்று அவர் சொன்னது தான் எனக்கு அதிர்ச்சியைக் கொடுத்தது”

அப்பத்திரிகையைச் சிட்டி வாங்கி அதில் எழுதியிருந்த வ. ரா. வின் கட்டுரைகளைப் படித்தபோதுதான் அவருக்கு இப்படியும் எழுதுபவர்கள் தமிழில் உள்ளார்களா என்றும் அச்சில் உள்ள எழுத்துக்கு இவ்வளவு சக்தி உண்டா என்றும் தோன்றியதாம்!  சிட்டி, நான் சாதாரண மனிதன் எழுதும் போது சொன்னார்: “இவ்வளவு உயர்ந்த இலக்கியத்தரமிகுந்த பத்திரிகையில் நான் எழுதினால் பிரசுரிப்பார்களா என்ற சந்தேகம் இருந்தபோதிலும், நண்பர் கொடுத்த யோசனையை ஏற்று, ஒருவித அசட்டுத் தைரியத்துடன், அப்போது சென்னைக்கு காந்தி விஜயம் செய்ததை நினைவு கூர்ந்து, ஒரு நகைச் சுவை கட்டுரை எழுதி அனுப்பி வைத்தேன். சிலநாட்களில் மணிக்கொடியிலிருந்து ஒரு கடிதம் வந்தது. இனிமேல் எழுதாதே என்று புத்திசொல்லி எழுதியிருப்பார்கள் என்று நினைத்துக் கடிதத்தைப் பிரித்துப் பார்த்தேன். அது கு. ஸ்ரீனிவாசனால் எழுதப்பட்டிருந்தது. மணிக்கொடி காரியாலயத்துக்கு வரச்சொல்லி எழுதியிருந்தார்.”

அதைச் சொல்கையில் இவ்வளவு வருடங்களுக்குப் பின்னர் கூட சிட்டி உணர்ச்சிவசப்பட்டார்! அப்போதுதான் முதன் முறையாகச் சிட்டி வ. ரா. வைச் சந்தித்திருக்கிறார். அவருடன் பேசிக்-கொண்டிருந்த ஒருமணிநேரத்தில், அவர் கருத்துகளுக்கு அடிமையாகிவிட்டார் சிட்டி! அன்றிலிருந்து வ. ரா இறுதிவரை அவருடைய நிரந்தர நண்பனாகவும் ஆகிவிட்டார்.

வ. ராமஸ்வாமி பிறந்தது செப்டம்பர் மாதம் 17, 1889 ஆம் வருடத்தில்.  அவருடைய 60 ஆவது வயது நிறைவின் போது, அதாவது 1949 இல் அவரை ஆல் இந்தியா ரேடியோ, ஒலிபரப்பவேண்டி, ரேடியோவுக்கு ஒரு சொற்பொழிவு செய்யுமாறு கேட்டிருந்தது. ஒப்புக் கொண்டு தலைப்பை மட்டும் வ. ரா. தந்திருந்தார். அவர் கொடுத்திருந்த தலைப்பு, “எனது இரண்டாவது விரோதி” என்பதாகும். அன்றைய நிர்வாகியான், ஜி. டி சாஸ்திரிக்கும் சிட்டிக்கு மட்டும் தான் அத்தலைப்பின் பொருள் தெரியும். மற்ற நிர்வாகிகள் குழம்பிப் போயிருந்தனர். வ. ரா. பேச ஆரம்பித்த போதுதான் தலைப்பின் பொருளை விளக்கினார். “நான் பிறந்த வருடம் தமிழில் விரோதி எனப் பெயர் கொண்டது. இன்று எனது அறுபதாவது வயதில் இரண்டாவது விரோதி வந்துள்ளது” என்றார்!

இக்கட்டுரைத் தொடரின் ஆரம்பத்தில் நான் குறிப்பிட்ட காலம் கொன்ற விருந்தாக நான் கண்ட கருவூலத்தில், (சிட்டியின் பாதுகாப்பிலிருந்த பழைய அட்டைப் பெட்டியில்) வ. ரா பற்றிய பல பழைய குறிப்புகள் கிடைத்தன. அவற்றை இங்கே பகிர்ந்து கொள்கிறேன்.
வ. ரா. எழுதிய மகாகவி பாரதியார் என்ற நூலின் பழைய பிரதியும் கிடைத்து. வ. ரா. பாரதியைச் சந்தித்த விவரம் அந்நூலின் 4, 5 பக்கங்களில் காணப்படுகிறது.இந்த நூலை 1944 ல் வெளியிட்டவர் வை. கோவிந்தன் என்பவர். அவர் 23- 8- 55 அன்று மூன்றாவது பதிப்பாக சுந்தரி என்ற வ ராவின் நாவலை வெளியிடுகையில், வ. ரா வின் மகாகவி பாரதியார் நூலை இரண்டாவது பதிப்பாக 1946இ-ல் வெளியிட நேர்ந்த விவரத்தைப் பற்றி எழுதுகிறார்:
“1940 என்று நினைக்கிறேன். 46, முத்துமாரி செட்டி தெருவில் என்னுடைய காரியாலயம் இருந்தது. அங்கே மாடியில் என்னுடைய அறை. ஸ்ரீ தி ஜ. ரங்கநாதன் என் அறைக்கு வந்தார். அப்போது தி. ஜ. ர. நான் நடத்திய சக்தி மாதவெளியீட்டில் ஆசிரியராக இருந்தார். வந்ததும், ‘வ. ரா. வந்திருக்கிறார். உங்களைப் பார்க்கவேண்டுமாம்’ என்றார். ’சரி. வரச் சொல்லுங்கள்’ என்றேன். வ. ரா வும் தி. ஜ. ரவும் வந்தார்கள்.

‘வாருங்கள்’ என்றேன். ‘சரிதானையா. நீர் எனக்குத் தமிழ் எழுதத் தெரியாது என்று சொன்னீராமே’ என்றார். ‘ஆமாம் கொச்சையாக நீங்கள் எழுதுகிறீர்கள். நிறைய நிறையப் பிறமொழிச் சொற்களை உபயோகிக்கிறீர்கள். அதுவும் அல்லாமல் தமிழ்ப் பண்டிதர்களை - அவர்கள் பிழையில்லாமல் எழுதுவதை - வேறு கண்டிக்கிறீர்கள். ஆதலால் உங்களுக்கும் தமிழுக்கும் சம்பந்தமில்லை’ என்று சொன்னேன். ‘உமக்குப் பிடிக்காதையா, இன்னும் கொஞ்ச காலத்தில் நீர், நான் எழுதுவது தான் தமிழ் என்று சொல்லப்போகிறீர்’ என்றார்.

அப்படித்தான் அவர் எழுதிய மகாகவி பாரதியார் என்ற புத்தகத்தை 1944-ஆம் வருஷத்தில் வெளியிட்டேன். தொடர்ந்தாற்-போல, சுந்தரி, வாழ்க்கைச் சித்திரம் என்ற நூல்களையும் வெளியிட்டேன். காரணம் என்ன? ஸ்ரீ வ. ரா. தமிழ்ப் பண்டிதர் அல்ல., தமிழ் மொழியை வளப்படுத்த வந்த புரட்சிக் காரர் என்பதை அறிந்தேன். மக்கள் எல்லோரும் படித்துப் பயன் பெற வேண்டுமானால், வ. ரா. அவர்களின் ஆணித்தரமான தமிழ் நடைதான் வேண்டும் என்ற முடிவுக்கு வந்தேன். பிறகுதான் அவருடைய நூல்களை வெளியிட்டேன்.

ஸ்ரீ வ. ரா. அவர்களைப் புரட்சிக்காரர் என்று சொல்லலாம், தீர்க்கதரிசி என்று சொல்லலாம். மக்களின் எழுத்தாளர் என்றும் சொல்லலாம். அதற்குச் சான்று இந்தச் சுந்தரி என்ற நாவலே போதும்.

படித்துப் பாருங்கள், முப்பத்தெட்டு வருஷங்களுக்கு முன் வெளி வந்த இந்த நாவல் ஏன் இன்றும் வெளிவருகிறதென்று.
இந்த மூன்றாம் பதிப்பு வெளிவருவதைப் பார்க்க வ. ரா. உயிருடன் இல்லை. தமிழ் மக்கள் பயனடையத்தானே இந்தப் புத்தகத்தை எழுதினார். வ. ரா வின் எண்ணம் ஈடேறுகிறதல்லவா?”

இது எழுதப்பட்ட நாள் 25 - 5 - 1955. இந்த நூலின் முதற்பதிப்பு, 1917 இலும், இரண்டாம் பதிப்பு 1946 இலும், மூன்றாம் பதிப்பு மேலே குறிப்பிட்ட நாளிலும் வெளிவந்துள்ளன.

இந்த நாவலின் இரண்டாவது பதிப்புக்கு, வ. ரா. எழுதிய முன்னுரை, சுந்தரியின் புனர் ஜன்மம் என்று தலைப்பு இடப்படிருந்தது.  அதில் “. . .அந்த சமயத்தில் என் கற்பனையில் கருத்தரித்தவள் சுந்தரி. 1915 ஆகஸ்டில் ஆரம்பித்து 1916 மார்ச்சில் சுந்தரியை முடித்தேன். சுந்தரியை வெளியிடுவதற்கு நான் பட்ட கஷ்டத்தைச் சொல்லி முடியாது. சுமார் எண்ணூறு ரூபாய் வரையில் செலவாகும் என்று சொன்னார்கள் அச்சுத்தொழில் நிபுணர்கள். அவ்வளவு பணத்துக்கு நான் எங்கே போக? இதிலும் ஓரளவு டாக்டர் ராஜன் எனக்கு உதவி செய்தார்.  சுந்தரி 1917-ஆம் வருஷம் முற்பகுதியிலேயே வெளி வந்தாள். நான் போட்டது ஆயிரம் பிரதிகள். மூன்று மாதத்துக்குள் அத்தனையும் விற்றுப் போயிற்று. திருச்சியில் கையெழுத்துப் பிரதியிலேயே சுந்தரியயை படித்த நண்பர், சுந்தரி ரொம்ப கடுமையான பாஷையில் இருக்கிறது. உண்மையை, கலையழகோடு சேர்த்துச் சொல்லவேண்டும். இப்பொழுது நீங்கள் எழுதியிருக்கும் முறையினால் மேல் ஜாதிக்காரர்களுக்கும், மடாதிபதிகளுக்கும், சன்னியாசிகளுக்கும் உங்கள் பேரில் ஆத்திரம் உண்டாகும்’ என்றார். 'உண்டாகுமா' என்று கேட்டேன். ஆம் என்று அவர் அழுத்திச் சொன்னார். அப்படியானால் நான் எழுதின முறைதான் சரி என்று சொல்லிவிட்டு அவரிடம் விடை பெற்றுக்கொண்டேன்” என்கிறார்! இதை அவர் எழுதிய நாள் 20.03.1946. முதற் பதிப்பு வந்து கிட்டத்தட்ட முப்பது வருடங்களுக்குப் பின்னர் வந்த இரண்டாம் பதிப்பில்.சமர்ப்பணத்தில், ‘எனது பரமகுரு ஸ்ரீமான் அரவிந்தருக்கு’ என்று எழுதியுள்ளார். அரவிந்தரைப்பார்க்க வ. ரா. புதுச்சேரி சென்றார். பாரதியைக் கண்டார். பாரதியுடன் அரவிந்தரைக் காணச் சென்றார். அரவிந்தரை பாரதி முரடன் என்றுதான் அப்போது குறிப்பிட்டாராம்!
இப்பதிப்புக்கு தி. ஜ ரங்கநாதன் முன்னுரை எழுதியிருந்தார். அதுவே அன்றைய் எழுத்துலககை வெளிச்சமிட்டுக் காட்டுகிறது. முக்கியமாக தமிழ் நாவ்ல்கள் நிலையைப் பார்க்கலாம்: தி. ஜ. ர. எழுதுகிறார்: “நான் ஏராளமாகத் தமிழ் நாவல்கள் படித்த காலம். இந்தக்காலம், அநேகமாகப் பதினைந்து வயதிலிருந்து இருபத்தைந்து வயதுக்குள் பெரும்பாலான வாலிபர்களுக்கு ஏற்பட்டிருக்கும். அந்தக் காலத்தில், நல்லது, கெட்டது, சுவையற்றாது, சுவையுள்ளது குப்பை, கூளம் முத்து மரகதம் அத்தகைய எல்லா நாவல்களும் ஒன்று தான். கதை என்றிருந்தால் போதும்; படித்து விடுவோம். பகுத்தறிய மாட்டோம். எல்லாம் பிடித்தாற்போலத்தான் இருக்கும். ஆனாலும் இதுதான் இலக்கியப்பிரஞ்ஞை உருவாகும் காலம். சுவை திரளும் காலம். கால ஓட்டமும் வாழ்க்கை அனுபவ்மும் சிந்தனைமுதிர்ச்சியும், படித்தவைகளை எல்லாம் சலித்துவிடும். காலவெள்ளம் அடித்துச் செல்லும் அவைகளில் ஒன்றிரண்டுதான் கரையேறும் என்மனதில் அப்படிக் கரையேறின ஒன்று ‘சுந்தரி’ “
வ. ரா வுக்கு உதவிய கணபதிராயன் பற்றிய விவரங்களை அவரே தருகிறார்.

1938 துவக்கத்தில் விரைவாக மக்களிடையே பரவி வந்த ஊடகமான திரைப்படத்தின் ஆற்றலை உணர்ந்து, வ. ரா. ராமானுஜர் வாழ்க்கை வரலாற்றைப் படமாக்க முயன்றார். அவர் வசனமெழு, அன்றைய பிரபல் எழுத்தாளர்கள் நடிக்க முன் வந்தனர். இளைய ராமானுஜராக ந. ராமரத்தினம், முதியவராக சங்கு சுப்பிரமணீயன், திருக்கச்சியூர் நம்பியாக பிச்சமூர்த்தி நடிக்க ஏ. நாராயணன் இயக்கத்தில் படம் எடுக்கப்பட்டது. தானே நடித்திருந்த-போதும், அன்றைய சிறந்த விமர்சகரான ராமரத்தினம், “ராமானுஜர் ஒரு கண்வலி” என்ற தலைப்பில் அப்படத்தை விமர்சித் திருந்தார்! வ. ரா வும் மற்றோர்களும் தெரிந்துகொண்ட-பாடம், சிட்டி சொற்களில், “திரைப்பட நடிப்புக்கும், இலக்கிய பணிக்கும் உள்ள அல்லது இல்லாத தொடர்பு கடும் சோதனைக் குள்ளாகியது.”

பின்னர் இந்நாடகம், வானொலி-யில் 1985  ல் ஒலிபரப்பப்பட்டது.

வ. ரா வின் மற்ற பழைய விவரங்களைத் தொடர்ந்து பார்ப்-போம்.
(அவர் எழுதிய சில நூல்களின் சிதைந்திருந்த சில முகப்புப் பக்கங்களையும் மற்ற சில பக்கங்களையும் காணலாம்)

மைதிலி மொழிக் கவிதைடாக்டர் ஷெபாலிகா வர்மா
ஆங்கிலம் வழி தமிழில்: கி. சீனிவாச ராகவன்

பெண்


நான் ஒரு பெண்ணாய்ப் பிறந்து விட்டேன்
அது என் பிழையல்ல
ஆம், பெண்ணாய்ப் பிறந்தது என் பிழையல்ல
உன் கற்பனையின் ஒப்பனையில்
நான் ஒரு சாதாரண மானுட ஜன்மமல்ல --
மாதவம் செய்து பிறந்த மங்கை
தேவியென பூஜிக்கப்படும் தெய்விக நங்கை

ஆனால்,
எதார்த்தத்தில் என் நிலை என்ன தெரியுமா --
பாவம்செய்தோரை பாதாளப் படுகுழியில் தண்டிக்கும்
நரகதேவதையும் கதறியழுவாள் என் அவலக்குரல் கேட்டு
ஆற்றாது நான் வடிக்கும் கண்ணீர்
வற்றாத கோசி நதியாய் பிரவாகமெடுக்கும் --
இருள் சூழ்ந்த இரவுகள்,
வசந்தத்தைக்காணாத வாழ்க்கை
அசோகவனத்து சீதையின் ஆழ்ந்த சோகம்
என் விழிகளில் --

என் ஜாதகத்தில் மட்டுமல்ல
என் சேலைத்தலைப்பின் வேலைப்பாட்டில்கூட
நன்மைக்கு அதிபதியாகும் நட்சத்திரங்களில்லை
சாதகத்தைத்தரும் சந்திரனும் சஞ்சரிக்கவில்லை
பாதகத்தையே தரும் ராகுவும் கேதுவும்தான் அங்கு
அலங்கரிக்கும் சித்திரங்கள்

இந்த இழிநிலை இன்றோடு அகலட்டும்
இனி,
வீசும் காற்றும் என்னை மாசுபடுத்தாது விலகட்டும்
நரம்பும் சதையும், உடம்பில் ஓடும் குருதியும்
இருபாலர்க்கும் ஒன்றே எனில்
ஏற்றத்தாழ்வுக்கு இடமேது
மென்மைத்தன்மை பெண்மைக்குப் பெருமையெனில்
எனக்குமட்டும் ஏனிந்த கொடுமை

பூங்கொடி நான் --
அசைந்தாடுவேன்
தென்றல் வீசினால்
ஆர்த்தெழுவேன்
ஆணாதிக்கம் பேசினால்
பிறந்துவிட்டது புதுயுகம--பெண்களுக்குப்
புரிந்து விட்டது சுதந்திரத்தின் சுகம்

இனி,
அகத்திலும், எங்கள் முகத்திலும்
இருள் என்பதே இல்லை
ஆகாயமே எங்கள் எழுச்சியின் எல்லை
சடங்குகள், சம்பிரதாயங்கள் -- இவை
தடைக்கற்களானால் தகர்த்தெறிவோம்
புதுயுகம், புத்தொளிபரப்பும் புதுப்பிக்கப்பட்ட வானம்
நவீன சமுதாயம் நோக்கி பெண்களின் வெற்றிப்பயணம்

இத்தனை மாற்றங்களுக்கிடையேயும்
என் தாயுள்ளத்தின் கனிவு மாறவில்லையே
கவனித்தாயா மகனே --
கர்ப்பத்தில் உன்னை உருவாக்கி
பத்துமாதம் சுமப்பதில் சுகம் கண்டு
மானுடப்பிறவியை உனக்கு அளிக்கிறேன்
ஆனால்,
உன்னையே படைக்கும் என்னை
ஆட்டிப்படைக்கும் ஆண்டவன் ஆகிறாய் நீ
ஆண்மைய கருத்தாடலைத் தவிக்கவும்
பெண்மைய கருத்தாடலைத் தொடங்கவும்
இதுவே சரியான தருணம்

எகிப்தைச் சுட்டும் திருமலை கற்கால ஓவியம்

நா. கண்ணன்

கற்காலம் என்பது உண்மையிலேயே கற்காலமா? என்ற கேள்வி அவ்வப்போது அறிஞர்கள் மனதில் எழுந்துகொண்டே இருக்கிறது. சந்திரனில் கால்வைக்கும் தொழில்நுட்பம் நிறைந்த 21ஆம்நூற்றாண்டில் வாழ்ந்து கொண்டு, இன்று நாம் கற்கால மனிதன் சாதித்தவை என்று காணும் எச்சங்கள் அவ்வளவு சாதாரணமாகத் தோன்றவில்லை. உதாரணமாக கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இரண்டு குன்றுகளின் மேல் நிரம்பப் பெருங்கற்காலக் கல்லறைகள் உள்ளன. ஒன்று இரண்டல்ல நூற்றுக்கணக்கில். அவை செங்கல் கட்டடங்களாக இருந்திருந்தால் ஆச்சரியப்பட வேண்டியதில்லை. ஆனால் இரண்டு மீட்டரிலிருந்து 5 மீட்டர் உயர, அகலமுள்ள கற்கூரைகளை எப்படி இவ்வளவு அழகாக உருவாக்கினார்கள்? எப்படி அவைகளை அடுக்கினார்கள்? எங்கு இதற்கானகற்களை வெட்டி எடுத்தார்கள்? போன்ற கேள்விகள் நம்மை ஆச்சரியப் படுத்தும். ஊரில் ஒருவர் இறந்துவிட்டால், உடனே இம்மாதிரிக் கல்லறைகளை உருவாக்கிவிட முடியாது. சிலவாரங்களாவது ஆகும் ஒன்றை உருவாக்க. எனவே அக்காலத்தில் இதற்கான தொழிற்சாலைகள் இருந்திருக்க வேண்டும். ஊரில் ஏதாவது ஒன்று என்றால் தயாராக ஒரு கல்லறை இருந்திருக்க வேண்டும். சென்னையில் இப்போது குப்பைக்கூளங்களை அள்ளக் கூட கனரக இயந்திரங்களைப் பயன்படுத்துகிறார்கள். அப்படி இருக்க இத்தகைய கனமான பாறைக்கூரைகளை எப்படிக் குன்றின் மேல் ஏற்றி இருப்பர்? ஏற்கனவே இருக்கும் கல்லறைகளைச் சிதைக்காமல் எப்படிப் புதியற்றை நிர்மாணித்து இருப்பர்? தொழில் நுட்ப அறிவும், முன் திட்டமிடலும் இல்லாமல் இதைச்சாதித்து இருக்க முடியாது. எனவேதான் ஏதோ நாம் முன்னேறிவிட்டோம், அவர்கள் ‘கற்காலமனிதர்கள்’ என்று வாய் கூசாமல் சொல்ல முடியவில்லை!

 இதில் இன்னும் பெரிய அதிசயம் என்னவெனில் கற்காலக் கலாச்சாரம் என்பது இங்கிலாந்து, கிரேக்கம், துருக்கி, இந்தியா, இந்தோனீசியா என்று தூரக்கிழக்கில் கொரியாவரை இருப்பது. இது எப்படிச் சாத்தியப்பட்டது? உதாரணமாக தமிழ் மரபு அறக்கட்டளை (www.tamilheritage.org) சமீபத்தில் மேற்கொண்ட களப்பணியில் சிவகங்கை வட்டத்தைச் சார்ந்த திருமலை எனும் திருத்தலத்தில் (திருப்பத்தூர் போகும்வழி) உள்ள கற்பாறை ஓவியங்களை அவை அழிவதற்கு முன் நிரந்தரப்படுத்தும் முயற்சியில் இறங்கியது. அப்போது அங்கு செவ்வண்ணத்தில் வரையப்பட்ட இரண்டு ஓவியங்கள் மிகமுக்கியமானவையாகப்பட்டன. ஏனெனில், எகிப்திய தெய்வங்களுள் விண்ணரசன் என்று கருதப்படும் ‘ஹோரஸ்’ எனும் கழுகுக்கழுத்துள்ள தெய்வஉருவம் இங்கு, தமிழகக் குன்று ஒன்றில் வரையப்பட்டிருப்பது அதிசயமல்லவா?


இந்தக்கற்காலமக்கள் பலர் நினைப்பது போல் நாகரிகத்தில் பின்தங்கியவர்கள் இல்லை என்று தோன்றுகிறது. ஏனெனில் செம்மொழி (2009 சூலை -திசம்பர்) இதழில் புதுஎழுத்து மனோன்மணி அவர்கள் பதிப்பித்துள்ள சில ஓவியங்கள் இம்மக்கள் விவசாயிகள் என்பதை நிரூபிக்கின்றன (அவரது அனுமதியுடன் படம் இங்கு மீண்டும் வெளியிடப்படுகிறது).

 சரி, இம்மக்கள் எப்படிப் பயணப்-பட்டிருப்பர்? இங்கிலாந்து முதல் கொரியா வரை பரவியுள்ள ஒரு நாகரீகம் வெறும் கால்நடையில் மட்டும் பரவியிருக்குமா? இல்லை இவர்களுக்குக் கப்பல்பயணம் பற்றிய அறிவு இருந்ததா? இக்கேள்விக்கு விடையாகத் திருமலை ஓவியங்கள் சில யூகங்களை முன்வைக்கின்றன. உதாரணமாக, தென்னகக் கடற்பயணம் என்பது துருவநட்சத்திரத்தைவிட தென்னக வானில் மிகத் தெளிவாகத் தெரியும் மிருகசீரிஷம் எனும் நட்சத்திரக் கூட்டத்தையே வழிகாட்டியாக எடுத்துக் கொண்டது. பால்வீதியின் மையப்பகுதியில் அமையும் ஓரியன் எனும் இம்மண்டலம் உலகின் எப்பகுதியில் பயணப்பட்டாலும் தெரியும். தமிழர்கள், தென்னாசியா, தூரக்கிழக்கு நாடுகளுக்குப் பயணப்படவெண்டுமெனில் மிருகசீரிஷமே பிரதானம். அவைவானின் கிழக்கே ஜூலை முதல் ஆகஸ்டு வரை மாலை வேளையிலும், டிசம்பர் -ஜனவரி மாதங்களில் அதிகாலையிலும் தெரியும். ’கடலோடி’ நரசய்யா தரும் குறிப்புகளிலிருந்து தைமாதம்பிறந்து ஆருத்ரா தரிசனம் ஆகிவிடில் கிழக்கே பயணப்பட ஏதுவான பருவக்காற்று உருவாகிவிடுவதால், தொலைதூரப் பயணம் கொள்ளும் வியாபாரிகளிடம் “தை பிறந்தால் வழி பிறக்கும்” எனும் பழமொழி உருவாகி இருப்பதாகத் தெரிகிறது. இந்தச் சூழல் ஞானம் என்பது தொன்று தொட்டுக் கற்காலக் கலாசாரத்திலேயே இருந்திருக்க வாய்ப்புள்ளது. ஏனெனில் திருமலை கற்பாறை ஓவியங்கள் மிகத்தெளிவாக ஓரியன் வான்மண்டலம் நமக்குக் காட்டும் ’மிருகசிரம்’ (மிருகசீரிஷம்) எனும் படத்தை நம் கண் முன்னே வைக்கிறது.

கிரேக்கத் தொன்மத்தில் கூட வாள் தூக்கிய வீரன் ஒருவரின் தோற்றத்தையே இம்மண்டலம் நினைவுறுத்துவதாகக் கொள்வர். அவ்வகையில் பார்க்கும் போது ஒருகையை மேலேதூக்கி, இன்னொருகையை மல்லுக்குக் காட்டுவது போல் அமையும் இவ்வோவியம் ஓரியன் நட்சத்திரக்குழுவை காட்டுவது போல் இருக்க வாய்ப்புண்டு. ஏதாவது முக்கியத்துவம் இல்லையெனில் ‘வேலை மெனக்கெட்டு’ மலைமேல் ஏறி, மிகவும் கடினமான சரிவில், சாரம்கட்டி காலத்தை வென்று நிற்கக்கூடிய வண்ணச்சாறில் இவ்வோவியங்களை வரைந்திருக்க மாட்டார்கள்.


ஆக எகிப்திய நாகரிகத்தின் ஒரு தெய்வம் தமிழ் மண்ணில் வரையப்பட்டிருப்பதும், அதுவே வணிக வழிகாட்டும் குறியீடாக அமைவதும் தற்செயல் அல்ல என்று தோன்றுகிறது.

ஏனெனில் பொருந்தல் அகழ்வாராய்ச்சியில் கிடைத்த அதே முதுமக்கள் தாழிகள், கண்ணாடி மணிமாலை, பவளமணிமாலை, பானை எழுத்துக்கள், இரும்பு ஆயுதங்கள், குதிரையைப் பாவித்திருப்பதற்கான அடையாளங்கள், கற்கால கல்லறைகள் இவை அப்படியே ’காயா’ எனும் தொன்மையான கொரியப் பகுதியில் கிடைப்பானேன்? இத்தனை ஆயிரம் மைல்களை இம்மக்கள் எப்படிக்கடந்து இருப்பர்? அதுவும் இரண்டாயிரம், மூவாயிரம் வருடங்களுக்கு முன்? இம்மாதிரிப் பழம் சான்றுகள் எத்தனையோ சேதிகளைச் சொல்லலாம்! அவை, அதற்குரிய மரியாதையுடன் பாதுகாக்கப் பட்டால்! திருமலை முழுவதும் திருட்டுக் காதலர்களின் பெயர்களே இன்று இவ்வோவியங்களின் மேலே பொறிக்கப்-பட்டுள்ளன! அரசு நடவடிக்கை எடுக்கப் போவதாக செய்தித்தாள் சொல்கிறது.

கிருஷ்ணகிரியின் கற்பாறைக் கல்லறைகள் பாதிக்குமேல் வீட்டு நிலைப்படி மிதிகற்களாக மாறிவிட்டன என சுகவனமுருகன் (புதுஎழுத்து மனோன்மணி) சொல்கிறார். அவர் சில வருடங்களுக்கு முன் கணக்கிட்ட முன்னூறு கல்லறைகளில் பத்தோ பதின்னொன்றோதான் இன்று பார்க்கும்படி உள்ளதாகச் சொல்கிறார். மூவாயிரம் வருடங்கள் தாக்குப்பிடித்த சரித்திரச் சான்றுகள் 21ஆம்நூற்றாண்டுத் தமிழனால் சூறையாடப்படுகின்றன எனும் செய்தியைக் கேட்கும் போது, கற்கால மனிதன் நாகரிகம் கொண்டவனா? இல்லை, சந்திராயணா செலுத்தும் 21ஆம்நூற்றாண்டுத் தமிழன் நாகரிகமானவனா? என்ற துக்கமான கேள்வி எழாமல் இல்லை!

மார்ச் 2012 இதழ் உள்ளடக்கம்


நூல் அறிமுகம்

 • சீ.அறிவுறுவோன்
 • வெங்கட்சாமிநாதன்

கவிதை

 • பா.இரா.தமிழ்நன்
 • மைதிலி மொழிக் கவிதை (டாக்டர் ஷெபாலிகா வர்மா, ஆங்கிலம் வழி தமிழில்: கி. சீனிவாச ராகவன்)
 • மராத்திக் கவிதை (டாக்டர் அனுபமா உஜ்கரே ஆங்கில வழி தமிழில் கண்ணையன் தட்சிணமூர்த்தி)
 • ஹிந்திமொழிக் கவிதை (வி.பி. திவாரி ஆங்கிலம் வழி தமிழில்: குவளைக் கண்ணன்)
 • சிந்தி மூலம் (அர்ஜுன் சாவ்லா ஆங்கிலம் வழி தமிழில்: க.பஞ்சாங்கம்)
 • ஹிந்தி மூலம் (சிவக்குமார் சர்மா ஹிந்தி வழி தமிழில்:  ஜி. திலகவதி
 • முனைவர் பா.ரவிக்குமார்
 • இரா.ச. கணேசன்
 • தீபச்செல்வன் கவிதைகள்

கட்டுரை
 • நா.கண்ணன்
 • பழ.அதியமான்
 • அன்பாதவன்
 • மு.ராமசாமி

தொடர்
 • நரசய்யா
கதை
 • இமையம்
 • மணி ராமலிங்கம்
 • ரமேஷ் கல்யாண்
 • ஜெயந்தி சங்கர்   
கடைசிப்பக்கம்
 • இந்திரா பார்த்தசாரதி
மார்ச் 2012 மாத இதழ்

ஆண்டு சந்தா: (உள்நாடு)ரூ220/- (வெளிநாடு)US$30
இரண்டு ஆண்டு சந்தா: (
உள்நாடு )ரூ440/- (வெளிநாடு)US$50
ஆயுள் சந்தா: (
உள்நாடு )ரூ5000/- (வெளிநாடு)US$300

அனைத்துத் தொடர்புகளுக்கும்.


பதிப்பாளர்: சேது.சொக்கலிங்கம்
கவிதா பப்ளீகேஷன்: 8, மாசிலாமணி தெரு, தியாகராயநகர், சென்னை-600 017
தொலைபேசி: 24364243, 24322177