Monday, March 5, 2012

எகிப்தைச் சுட்டும் திருமலை கற்கால ஓவியம்

நா. கண்ணன்

கற்காலம் என்பது உண்மையிலேயே கற்காலமா? என்ற கேள்வி அவ்வப்போது அறிஞர்கள் மனதில் எழுந்துகொண்டே இருக்கிறது. சந்திரனில் கால்வைக்கும் தொழில்நுட்பம் நிறைந்த 21ஆம்நூற்றாண்டில் வாழ்ந்து கொண்டு, இன்று நாம் கற்கால மனிதன் சாதித்தவை என்று காணும் எச்சங்கள் அவ்வளவு சாதாரணமாகத் தோன்றவில்லை. உதாரணமாக கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இரண்டு குன்றுகளின் மேல் நிரம்பப் பெருங்கற்காலக் கல்லறைகள் உள்ளன. ஒன்று இரண்டல்ல நூற்றுக்கணக்கில். அவை செங்கல் கட்டடங்களாக இருந்திருந்தால் ஆச்சரியப்பட வேண்டியதில்லை. ஆனால் இரண்டு மீட்டரிலிருந்து 5 மீட்டர் உயர, அகலமுள்ள கற்கூரைகளை எப்படி இவ்வளவு அழகாக உருவாக்கினார்கள்? எப்படி அவைகளை அடுக்கினார்கள்? எங்கு இதற்கானகற்களை வெட்டி எடுத்தார்கள்? போன்ற கேள்விகள் நம்மை ஆச்சரியப் படுத்தும். ஊரில் ஒருவர் இறந்துவிட்டால், உடனே இம்மாதிரிக் கல்லறைகளை உருவாக்கிவிட முடியாது. சிலவாரங்களாவது ஆகும் ஒன்றை உருவாக்க. எனவே அக்காலத்தில் இதற்கான தொழிற்சாலைகள் இருந்திருக்க வேண்டும். ஊரில் ஏதாவது ஒன்று என்றால் தயாராக ஒரு கல்லறை இருந்திருக்க வேண்டும். சென்னையில் இப்போது குப்பைக்கூளங்களை அள்ளக் கூட கனரக இயந்திரங்களைப் பயன்படுத்துகிறார்கள். அப்படி இருக்க இத்தகைய கனமான பாறைக்கூரைகளை எப்படிக் குன்றின் மேல் ஏற்றி இருப்பர்? ஏற்கனவே இருக்கும் கல்லறைகளைச் சிதைக்காமல் எப்படிப் புதியற்றை நிர்மாணித்து இருப்பர்? தொழில் நுட்ப அறிவும், முன் திட்டமிடலும் இல்லாமல் இதைச்சாதித்து இருக்க முடியாது. எனவேதான் ஏதோ நாம் முன்னேறிவிட்டோம், அவர்கள் ‘கற்காலமனிதர்கள்’ என்று வாய் கூசாமல் சொல்ல முடியவில்லை!

 இதில் இன்னும் பெரிய அதிசயம் என்னவெனில் கற்காலக் கலாச்சாரம் என்பது இங்கிலாந்து, கிரேக்கம், துருக்கி, இந்தியா, இந்தோனீசியா என்று தூரக்கிழக்கில் கொரியாவரை இருப்பது. இது எப்படிச் சாத்தியப்பட்டது? உதாரணமாக தமிழ் மரபு அறக்கட்டளை (www.tamilheritage.org) சமீபத்தில் மேற்கொண்ட களப்பணியில் சிவகங்கை வட்டத்தைச் சார்ந்த திருமலை எனும் திருத்தலத்தில் (திருப்பத்தூர் போகும்வழி) உள்ள கற்பாறை ஓவியங்களை அவை அழிவதற்கு முன் நிரந்தரப்படுத்தும் முயற்சியில் இறங்கியது. அப்போது அங்கு செவ்வண்ணத்தில் வரையப்பட்ட இரண்டு ஓவியங்கள் மிகமுக்கியமானவையாகப்பட்டன. ஏனெனில், எகிப்திய தெய்வங்களுள் விண்ணரசன் என்று கருதப்படும் ‘ஹோரஸ்’ எனும் கழுகுக்கழுத்துள்ள தெய்வஉருவம் இங்கு, தமிழகக் குன்று ஒன்றில் வரையப்பட்டிருப்பது அதிசயமல்லவா?


இந்தக்கற்காலமக்கள் பலர் நினைப்பது போல் நாகரிகத்தில் பின்தங்கியவர்கள் இல்லை என்று தோன்றுகிறது. ஏனெனில் செம்மொழி (2009 சூலை -திசம்பர்) இதழில் புதுஎழுத்து மனோன்மணி அவர்கள் பதிப்பித்துள்ள சில ஓவியங்கள் இம்மக்கள் விவசாயிகள் என்பதை நிரூபிக்கின்றன (அவரது அனுமதியுடன் படம் இங்கு மீண்டும் வெளியிடப்படுகிறது).

 சரி, இம்மக்கள் எப்படிப் பயணப்-பட்டிருப்பர்? இங்கிலாந்து முதல் கொரியா வரை பரவியுள்ள ஒரு நாகரீகம் வெறும் கால்நடையில் மட்டும் பரவியிருக்குமா? இல்லை இவர்களுக்குக் கப்பல்பயணம் பற்றிய அறிவு இருந்ததா? இக்கேள்விக்கு விடையாகத் திருமலை ஓவியங்கள் சில யூகங்களை முன்வைக்கின்றன. உதாரணமாக, தென்னகக் கடற்பயணம் என்பது துருவநட்சத்திரத்தைவிட தென்னக வானில் மிகத் தெளிவாகத் தெரியும் மிருகசீரிஷம் எனும் நட்சத்திரக் கூட்டத்தையே வழிகாட்டியாக எடுத்துக் கொண்டது. பால்வீதியின் மையப்பகுதியில் அமையும் ஓரியன் எனும் இம்மண்டலம் உலகின் எப்பகுதியில் பயணப்பட்டாலும் தெரியும். தமிழர்கள், தென்னாசியா, தூரக்கிழக்கு நாடுகளுக்குப் பயணப்படவெண்டுமெனில் மிருகசீரிஷமே பிரதானம். அவைவானின் கிழக்கே ஜூலை முதல் ஆகஸ்டு வரை மாலை வேளையிலும், டிசம்பர் -ஜனவரி மாதங்களில் அதிகாலையிலும் தெரியும். ’கடலோடி’ நரசய்யா தரும் குறிப்புகளிலிருந்து தைமாதம்பிறந்து ஆருத்ரா தரிசனம் ஆகிவிடில் கிழக்கே பயணப்பட ஏதுவான பருவக்காற்று உருவாகிவிடுவதால், தொலைதூரப் பயணம் கொள்ளும் வியாபாரிகளிடம் “தை பிறந்தால் வழி பிறக்கும்” எனும் பழமொழி உருவாகி இருப்பதாகத் தெரிகிறது. இந்தச் சூழல் ஞானம் என்பது தொன்று தொட்டுக் கற்காலக் கலாசாரத்திலேயே இருந்திருக்க வாய்ப்புள்ளது. ஏனெனில் திருமலை கற்பாறை ஓவியங்கள் மிகத்தெளிவாக ஓரியன் வான்மண்டலம் நமக்குக் காட்டும் ’மிருகசிரம்’ (மிருகசீரிஷம்) எனும் படத்தை நம் கண் முன்னே வைக்கிறது.

கிரேக்கத் தொன்மத்தில் கூட வாள் தூக்கிய வீரன் ஒருவரின் தோற்றத்தையே இம்மண்டலம் நினைவுறுத்துவதாகக் கொள்வர். அவ்வகையில் பார்க்கும் போது ஒருகையை மேலேதூக்கி, இன்னொருகையை மல்லுக்குக் காட்டுவது போல் அமையும் இவ்வோவியம் ஓரியன் நட்சத்திரக்குழுவை காட்டுவது போல் இருக்க வாய்ப்புண்டு. ஏதாவது முக்கியத்துவம் இல்லையெனில் ‘வேலை மெனக்கெட்டு’ மலைமேல் ஏறி, மிகவும் கடினமான சரிவில், சாரம்கட்டி காலத்தை வென்று நிற்கக்கூடிய வண்ணச்சாறில் இவ்வோவியங்களை வரைந்திருக்க மாட்டார்கள்.


ஆக எகிப்திய நாகரிகத்தின் ஒரு தெய்வம் தமிழ் மண்ணில் வரையப்பட்டிருப்பதும், அதுவே வணிக வழிகாட்டும் குறியீடாக அமைவதும் தற்செயல் அல்ல என்று தோன்றுகிறது.

ஏனெனில் பொருந்தல் அகழ்வாராய்ச்சியில் கிடைத்த அதே முதுமக்கள் தாழிகள், கண்ணாடி மணிமாலை, பவளமணிமாலை, பானை எழுத்துக்கள், இரும்பு ஆயுதங்கள், குதிரையைப் பாவித்திருப்பதற்கான அடையாளங்கள், கற்கால கல்லறைகள் இவை அப்படியே ’காயா’ எனும் தொன்மையான கொரியப் பகுதியில் கிடைப்பானேன்? இத்தனை ஆயிரம் மைல்களை இம்மக்கள் எப்படிக்கடந்து இருப்பர்? அதுவும் இரண்டாயிரம், மூவாயிரம் வருடங்களுக்கு முன்? இம்மாதிரிப் பழம் சான்றுகள் எத்தனையோ சேதிகளைச் சொல்லலாம்! அவை, அதற்குரிய மரியாதையுடன் பாதுகாக்கப் பட்டால்! திருமலை முழுவதும் திருட்டுக் காதலர்களின் பெயர்களே இன்று இவ்வோவியங்களின் மேலே பொறிக்கப்-பட்டுள்ளன! அரசு நடவடிக்கை எடுக்கப் போவதாக செய்தித்தாள் சொல்கிறது.

கிருஷ்ணகிரியின் கற்பாறைக் கல்லறைகள் பாதிக்குமேல் வீட்டு நிலைப்படி மிதிகற்களாக மாறிவிட்டன என சுகவனமுருகன் (புதுஎழுத்து மனோன்மணி) சொல்கிறார். அவர் சில வருடங்களுக்கு முன் கணக்கிட்ட முன்னூறு கல்லறைகளில் பத்தோ பதின்னொன்றோதான் இன்று பார்க்கும்படி உள்ளதாகச் சொல்கிறார். மூவாயிரம் வருடங்கள் தாக்குப்பிடித்த சரித்திரச் சான்றுகள் 21ஆம்நூற்றாண்டுத் தமிழனால் சூறையாடப்படுகின்றன எனும் செய்தியைக் கேட்கும் போது, கற்கால மனிதன் நாகரிகம் கொண்டவனா? இல்லை, சந்திராயணா செலுத்தும் 21ஆம்நூற்றாண்டுத் தமிழன் நாகரிகமானவனா? என்ற துக்கமான கேள்வி எழாமல் இல்லை!

2 comments:

 1. அருமை ஐயா,
  எகிப்திலும், தமிழகத்தில் உள்ள திருமலையிலும் ஒரேமாதிரியான தெய்வ வடிவங்கள் அல்லது வேற்றுக்கிரகவாசிகளின் உருவங்கள் உள்ளன.
  இது மிகப் பெரிய வரலாற்றுச் சான்று. எனவே இக் கட்டுரையைத் தாங்கள் ஆங்கிலத்திலும் எழுதி வெளியிட வேண்டும் என்பது எனது வேண்டுதல்.

  அன்பன்
  கி.காளைராசன்

  ReplyDelete
 2. எகிப்தில் கிமு 200-களைச் சேர்ந்த தமிழ் எழுத்து பொறிக்கப்பட்ட மண்பாண்டம் ஒன்றும் கிடைத்திருக்கின்றது. தமிழர்கள் பழங்காலம் முதலே கடல் வழியாக எகிப்து, சுமேரியா, இஸ்ரேல், ரோம், ஜாவா, சீனா ஆகிய நாடுகளில் வணிகம் செய்துள்ளனர். அத்தோடு அந்த நாட்டவர்கள் பலரும் தமிழகத்திற்கு வந்தும், வணிகம் செய்தும் வாழ்ந்துள்ளனர். ஆக ! அதன் தொடர்புகளால் ஒத்த ஓவியங்கள் காணப்பட்டு இருக்கலாம், இதனை ஆவணம் செய்வதோடு மேன்மேலும் ஆராயவும் நம் தமிழக தொல்லியல் துறை முயல வேண்டும், தொல்லியல் துறையை நடுவண் அரசிடம் இருந்து பெற்று முழுமையாக தமிழக அரசிடம் சமர்பிப்பதோடு, அந்த துறைக்கு நடுவண் அரசு அதிகளவு நிதி ஒதுக்கீடு செய்தால் மட்டுமே தமிழர்களின் வரலாற்று கருவூலங்கள் காக்கப்படும்.

  ReplyDelete