Monday, August 15, 2011

கடைசிப்பக்கம் - இந்திரா பார்த்தசாரதிஇப்பொழுது, ‘சமச்சீர் கல்வித் திட்டம்’ அரசியல்வாதிகளிடம் அல்லலுறுவதைப் பார்க்கும்போது, ஆள்பவர்களுக்கு எது சரி, எது தப்பு என்று சொல்லும் எதற்கும் அஞ்சாத ஆன்றோர்கள் இல்லையே என்ற ஏக்கந்தான் மேலிடுகிறது. அக்காலத்தில் அரசனுக்கு இதை அறிவுறுத்துவதற்குத்தான் அமைச்சர்கள் என்ற ஆன்றோர்கள் இருந்தார்கள்.
இக்காலத்தில், ‘அறிவு ஜீவி’ என்றால் ஆங்கிலம் தெரிந்தவர்களை மட்டுந்தான் குறிக்கும் என்ற ஒரு பொதுவான கருத்து நிலவுகின்றது. காரணம், நாம் ஆங்கிலச் சொல்லாகிய ‘Intellectual' என்பதைக் குறிக்க, ‘அறிவு ஜீவி’ என்ற சொல்லை உருவாக்கிக் கொண்டோம். சமஸ்கிருத எழுத்துக்குப் பதிலாக, தமிழில் சொல்ல வேண்டுமென்றால், ‘அறிவு சீவி’. என்று சொல்லலாம். அது ஒரு வகையில் பொருந்துவதாகவும் இருக்கக் கூடும்!

அறிஞர் என்ற அழகிய தமிழ்ச் சொல் இதே கருத்தைத்தான் குறிக்கின்றது. திருவள்ளுவர் ‘அறிஞரா’ அல்லது ‘அறிவு ஜீவியா’? ‘அறிஞர்’ தான். ‘அறிவுஜீவி’ இல்லை, காரணம் அவருக்கு ஆங்கிலம் தெரிந்திருக்கக் கூடிய வாய்ப்பில்லை! தமிழகத்தில், சங்க காலத்தில் புலவர்கள் யாவருமே ‘அறிஞர்களாக’ அறியப்பட்டனர். அவர் அரசனாக இருக்கலாம், அமைச்சராக இருக்கலாம், பாணராக இருக்கலாம், சங்கு அறுப்பவராக இருக்கலாம், மருத்துவராக இருக்கலாம், கணியராக(விண்மீன் ஆய்வாளர்) இருக்கலாம், அவர்கள் எத்தொழில் செய்பவராக இருந்தாலும், புலமை மிக்கவராக இருந்தால் அவர்கள் ‘அறிஞர்கள்’ என்று அடையாளம் பெற்றனர்.

இவ் அறிஞர்களின் கடமை என்ன? யார் தவறு செய்தாலும், அவன் அரசனாக இருந்தாலும், சமூகத்துக்கு ஒவ்வாத காரியம் செய்தால், அதைச் சுட்டிக்காட்டித் திருத்த வேண்டியது அவர்கள் பொறுப்பு.

ஓர் அரசன், நாடு வறட்சியுற்ற காலத்தில் பொது மக்களிடமிருந்து வரி வசூலிக்கக் கூடாது. அதுதான் அக்காலத்திய அரசியல் தர்மம். அவ்வாறு செய்யாமல் அரசன் வசூலித்தானானால், அதைக் கண்டித்து, அவன் செவி கைப்ப, அவன் செய்ய வேண்டிய தர்மத்தை அவனுக்கு உணர்த்தவேண்டிய பொறுப்பு, கவிஞர்களுக்குண்டு. இவ்வாறு பாடப்படும் பாடல்களின் துறைக்கு ‘ செவியறிவுறூஉ’ என்ற பெயர்.

‘இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன்
கெடுப்பா ரிலானுங் கெடும்’
‘உண்மைச் சுடும் என்று பாராமல், அரசன் கேட்க விரும்பவற்றையே சொல்லாமல், அவனுக்கும் மக்களுக்கும் நல்லவனவற்றைக் கூறும் அறிஞர்களுடைய பாதுகாவலில்லாத அரசன், பகைவர் யாருமில்லாமலேயே கெடுவான்’ என்பது இக் குறளின் பொருள்.
‘அமைச்சர்கள்’ என்றால் என்ன பொருள்? ‘அமாத்தியா’ என்ற சம்ஸ்கிருத சொல்லினின்றும் இது வந்தது. ‘நெருங்கியிருப்பவர்கள்’ என்றுதான் அர்த்தம்.எதற்காக நெருங்கியிருக்க வேண்டும்? ஜால்ரா கொட்ட அல்ல. அரசனுக்குச் சமூக நீதி எதுவோ அதை உணர்த்துவதற்குத் தான். சமஸ்கிருதச் சொல்லாகிய ‘அமாத்தியா’ என்பதற்கும் இதுதான் பொருள். வள்ளுவர் இப்பொருளில்தான், அமைச்சனை ‘உழையிருந்தான்’ என்கிறார். ‘அருகிலிருப்பவன்’ என்று பொருள்படும்.

‘அறிகொன் றறியான் எனினும் உறுதி
உழையிருந்தான் கூறல் கடன்’
‘அறிந்து சொல்கின்றவர்களுடைய வார்த்தையையும் மதிக்காமல் ‘நான்’ எனும் செருக்கு என்கிற அறியாமையில் மூழ்கியிருக்கும் அரசனுக்கு, சமூக உண்மை நிலவரங்களை அஞ்சாமல் சொல்ல வேண்டியது அமைச்சர்களுடைய கடமை’ இக்கால ‘அறிஞர்கள்’( அமைச்சர்கள் உள்பட) தங்கள் சமூகப் பொறுப்பை, வள்ளுவர் கூறுவது போல் செயல் படுத்திக் கொண்டு வருகின்றார்களா என்ற கேள்வி எழுகின்றது.

‘சர்வாதிகாரம்’ என்றால் தடியெடுத்தவன் தண்டல்காரன் என்று பொருள். சர்வாதிகாரியை நெருங்கி இருப்பவர்கள் அவனை முதலில் மக்களிடமிருந்து அந்நியப்படுத்தி, அவன் கேட்க விரும்பிவனற்றையே அவன் காது குளிரக் கூறுவார்கள். அவனைப் பற்றியே, அவன் கவனத்தைப் பெறும் பொருட்டு, ஏராளமான புத்தகங்கள் எழுதுவார்கள். பாராட்டுக் கூட்டம் நடத்திக் கொண்டே இருப்பார்கள்.

லூயி பிஷர் என்ற அமெரிக்க ஆசிரியர், ‘ஸ்டாலினின் பிறப்பும், இறப்பும்’ என்று ஸோவியத் யூனியன் அதிபர் ஸ்டாலினைப் பற்றி ஒரு நூல் எழுதியிருக்கிறார். ரஷ்ய கொடுங்கோல் மன்னனை எதிர்த்துப் புரட்சி இயக்கம் நடத்திப் பிறகு தாம் பதவிக்கு வந்ததும் சர்வாதிகாரியாகிவிட்ட ஸ்டாலின் அவர் வாழ்நாள் முழுவதும் விரும்பிப் படித்த நூல்கள், அவருடைய அடிவருடிகளால் எழுதப்பட்ட அவருடைய வாழ்க்கை வரலாற்றுப் புத்தகங்கள்தாம் என்கிறார் லூயி பிஷர்.

ஆள்கின்றவர் அனைவராலும் அணுகத்தக்கவராக இருத்தல் வேண்டும். நேரு ஒரு சமயம் கூறினார்: ‘இந்த அரசியல் சூழ்நிலையில் இந்த ஸ்தாபன விதிகளை எதிர்த்து, இந்நாட்டின் சாமன்யனோடு என்னால் அளவளாவ முடியவில்லையே என்று என் இயலாமையைக் குறித்து நான் வருந்துகிறேன். என் அருகில் இருப்பவர்களின் துதிகளைக் கேட்டு கேட்டு எனக்கு அலுத்துவிட்டது. சுதந்திரத்துக்கு முன்னால் இது எனக்கு சாத்தியமாயிருந்தது. அப்பொழுது நான் சுதந்திரமாக இருந்தேன்.’

நேரு ஒரு உண்மையான ஜனநாயக வாதியாக இருந்ததால் அவரால் இவ்வாறு சொல்வதற்கான கண்ணியம் அவரிடமிருந்தது. ஆனால், பதவியில் இருக்கும் பெரும்பான்மையோர், பதவிக்கு முன்னால் எப்படி இருந்திருந்தாலும், நாற்காலியில் உட்கார்ந்ததும் அடியோடு மாறிவிடுகிறார்கள். உழையிருப்பவர்களும், மற்றவர்கள் தொடர்ந்து தங்களைப் புகழ்ந்து கொண்டே யிருக்க வேண்டுமென்றுதான் விரும்புகிறார்கள். இப்பொழுது, குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவனைச் சாடிய ஒரு வெள்ளைக்குடிநாகனார் போன்ற ஓர் அறிஞர் சாத்தியமா? அல்லது ராட்சச விளம்பர ஆவேசங்களைக் கண்டு கூச்சப்பட்ட நேருவின் நாகரிகம், இன்று ஆள்கின்றவர்களிடையே எத்தனைப் பேருக்கு இருக்கிறது? அவர் மகளிடத்திலேயே இல்லாமல் போய்விட்டதே!

வள்ளுவர் இதை ‘நாணுடைமை’ என்கிறார். இதைப் பரிமேலழகர் அருமையாக விளக்குகிறார். ‘சால்பு, பண்பு முதலிய குணங்களால் உயர்ந்தோர் தமக்கு ஒவ்வாத கருமங்களில் நாணுதலுடையாராந் தன்மை’. ‘ஒவ்வாத கருமங்கள்’ என்பன ‘பகட்டு வெளிச்சம், ஆரவாரம். ஆர்ப்பாட்டம், தங்கள் தங்கள் காரியத்தைச் சாதித்துக் கொள்ளக் கூனிக் குறுகும் மனிதரிடம் நட்புப் போன்றன’
‘அணியன்றோ நாணுடைமை சான்றோர்க் கதின்றேல்
பிணியன்றோ பீடு நடை’.
இந்த ‘நாணுடைமை’ உள்ளவர்க்குத் தான் ‘பீடு நடை’ சாத்தியம், ‘வேண்டாமை செருக்கா’வது போல!

அகத்தில் பிணைப்பு இல்லாமல்’ முகம் நக’ப் பாராட்டிப் பேசித் தமக்கு வேண்டியவற்றைச் சாதித்துக் கொள்கின்றவர்கள்தாம் ( நம் நாட்டு அரசியல் ‘தோழமைக் கட்சிகள்’ நினைவுக்கு வருகின்றனவா?) ‘உட்பகை’ என்கிறார் வள்ளுவர்.

‘வாள்போல் பகைவரை அஞ்சற்க அஞ்சுக
கேள்போல் பகைவர் தொடர்பு’
இறுதியாக ஒரு குறள்
‘பழுதெண்ணும் மந்திரியிற் பக்கத்துள் தெவ்வோர்
எழுபது கூறு தலை’.
தன்னலனையே எண்ணி, அரசன் மகிழ, அவன் ‘மகிழும்’ அறிவுரை கூறும் அமைச்சர்களைக் காட்டிலும், பகைவர்கள் எழுபது மடங்கு நல்லவர்கள்.

இத்தகைய ‘அறிவுஜீவிகளை’த் தாம் ‘கூழாட்பட்டார்’ என்கிறார் பெரியாழ்வார். இன்றைய தமிழில் சொல்லப் போனால், ‘கூலிக்கு மாரடிக்கின்ற’ வர்கள்.

No comments:

Post a Comment