Monday, August 15, 2011

வன்முறையாகலாமா நமது வாழ்க்கைமுறை?

ஒரே கிராமத்திற்குள்ளும்
சாதி, இனம், மொழி, மதம் என்று
கூறுபட்டுக்கிடக்கிற மக்களைப் போலவே
ஒவ்வொரு சாதிக்குள்ளும்
வாழ்வாதாரங்களுக்கு ஏற்பப்
பண்பாட்டின் வெவ்வேறு முகங்கள்
வாயாடிக்கொண்டிருக்கும்
மக்களாட்சிக் காலத்தில்
வாக்குதேடும் கட்சிகளின் பக்கபலத்தோடு
பெரும்பான்மை சிறுபான்மையைக் கட்டுப்படுத்த
பன்முகப்பண்பாட்டின் வாழ்நிலமாயிருந்த
கிராமங்களில்கூட
அமைதியின்மையும் வன்முறையும்
இறக்குமதியாகின்றன.

தகவல் தொழில்நுட்ப வசதிகள்
எட்டிப்பார்க்காத காடுமலைகளின்
பழங்குடி மக்கள் வாக்களித்தபோதும்
பொது பண்பாட்டில் அவர்களுக்கு இடமில்லை.

மாவோ இயக்கத்தினர்
எழுத்தில்லாத கோண்டி மொழிக்கு
எழுத்துருவாக்கிப்
பழங்குடிமக்களையும் படிக்கவைக்கின்றனர்
பண்பாட்டில் இடம் கிடைக்காதவர்கள்
மாவோ இயக்கத்தில் இடம்பிடிக்கிறார்கள்
வேர்விட்ட இடத்திலே படரமுடியாமலும்
புலம்பெயர்ந்த இடத்திலே வேர்விட முடியாமலும்
பண்பாடுகள் அல்லாடுகின்றன.
பழைய விழுமியங்களும் நம்பிக்கைகளும்
மதவழிப்பண்பாடாய் மாறிக்கொண்டிருக்கின்றன.
சாதி, இனம், மொழி, நாடுகடந்த
புலப்பெயர்வுகளும் கலப்பும்
மதம் கடந்த பண்பாட்டை உருவாக்கி வருகின்றன.
என்சாதி, என்இனம், என்மொழி, என்நாடு மட்டுமே
மேல்என்ற ஆதிக்கக்குரலைவிட
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்றும்
யாதும் ஊரே யாவரும் கேளிர் என்றும்
சொன்னவர்களைப் பாராட்டவேண்டும் உலகம்.

ஆனால்
எல்லாக் கடவுளும் சமம் என்று
ஏற்றுக் கொள்கிறவர்களும் கூட
எல்லாமதமும் சமம் என்பதை
ஏற்க மறுக்கிறார்கள்.

மதவழிப் பண்பாடுதான்
மக்களைப் பிரிக்கின்றன.
மதங்கள் சமமில்லை என்றால்
மதவழிப் பண்பாடுகளும் சமமில்லைதானே
உலகமயமாதலில் உருவாகும்
மதம் கடந்த பண்பாடு
மதவழிப் பண்பாட்டின்
அடித்தளத்தை அசைக்கத் தொடங்கியுள்ளது.
மதவழிப் பண்பாட்டுக் கட்டமைப்பை
மதவெறி மூட்டிக் காக்கத் துடிக்கிறார்கள்.
அடிக்கடி நடக்கும் மும்பைத் தாக்குதல்கள்
1984இல் நடந்த சீக்கியர் மீது தாக்குதல்
2002இல் குஜராத் கலவரம்
நார்வேயில் (ஜூலை 22) நடந்த
இரட்டைத் தாக்குதல்
இப்போதும் எங்காவது நடந்துகொண்டிருக்கும்
தாக்குதல்கள் எல்லாம் சாட்சியங்களாகும்.

ஐரோப்பியக்
கிறித்துவ சாம்ராச்சியத்தைக் காப்பாற்றும்
சிலுவைப் போர்வீரராகத்
தன்னைத்தானே நியமித்துக்கொண்டு
நார்வே தாக்குதலை நடத்தி முடித்த
Andres Behring Brevik எழுதிவைத்துள்ள
1500பக்க இலட்சிய அறிக்கையில்
“ஐரோப்பிய நாடுகள்
பன்முகப் பண்பாட்டிற்கு
வழிதிறந்துவிட்டன” என்று
பழிதூற்றியிருக்கிறார்.

பன்முகப்பண்பாட்டை எதிர்த்துப்போராட
பிரெஞ்சு நாட்டு சிவப்பு ஒயினும்
ஊக்க மாத்திரைகளும்
நவீனத்தொழில்நுட்ப Face Book இல் கிடைத்த
நண்பர்களின் ஆலோசனைகளும்
இந்தியாவில் தயாரித்த இலட்சிய முத்திரையும்
நார்வே தாக்குதலுக்குத் தேவைப்படுகின்றன.

தனது நாட்டில்
ஒரே முகத்தோடு கூடிய
மதவழிப் பண்பாட்டைக் காப்பாற்ற
பல்லினப் பன்னாட்டுப்
பன்முகப்பண்பாட்டு உழைப்பு தேவைப்படுகிறது.

படிக்கிற இடத்தில்
பணியாற்றும் அலுவலகங்களில்
பக்கத்து வீடுகளில் என்றிருந்த
பன்முகப்பண்பாட்டுக் காற்று
வீடுகளுக்குள்ளும் வீசத்தொடங்கியுள்ளது.
பண்பாட்டுப்பன்முகத்தை ஏற்காத
மொழியும் நாடும்
ஆயுட்காலத்தைக் குறைத்துக்கொள்கின்றன.
மதம் சாராத, பன்முகப்பண்பாட்டை எதிர்த்து
மதவழிப்பட்ட பண்பாட்டைத் திணிக்கிறபோது
அமைதியின்மையும் வன்முறையும்
அன்றாட வாழ்க்கையின்
நடைமுறை ஆகவும்கூடும்
சொல்லுங்கள்!
வன்முறையாகலாமா
நமது
வாழ்க்கைமுறை?

ம.ரா

No comments:

Post a Comment