Monday, January 23, 2012

கடைசிப்பக்கம் - பக்தி உழவா்கள்



இந்திரா பார்த்தசாரதி

தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில், மார்கழி மாதம் குளிர்பருவம். காலையில், மஃப்ளரைக் காதுவரை இறுகிமூடியவாறு, மார்கழி பஜனையில் வீதிகளிடையே திருப்பாவை பாடிக்கொண்டு(?) செல்பவர்களைப் பார்க்கலாம்.

திருப்பாவை, ஆண்டாள் கண்ணனைக் கணவனாகப் பெறுவதற்காக நோற்ற நோன்பா அல்லது இந்தநிகழ்வுக்கு வேறு ஏதாவது முக்கியத்வம் இருக்கிறதா? திருப்பாவையை ஊன்றிப் படித்தால்தான் இதுபுரியும். மேலெழுந்தவாரியாகப் படிக்கும்போது, திருமணமாகாதக் கன்னிப்பெண்கள், நல்ல கணவர்கள் வாய்க்கவேண்டுமென்று, சிற்றங் சிறுகாலையில், நீராடிவிட்டு, நெய்யுண்ணாமலும், பாலுண்ணாமலும், கண்ணுக்கு மை எழுதாமலும், மலரிட்டு முடியாமலும், இத்தகைய சிறு தியாகங்களை மேற்கொண்டு, இறைவன் கோயிலுக்குச் சென்று, வழிபாடு செய்வதுதான் இந்த நோன்பு என்ற பரவலான அபிப்பிராயம் நிலவிவருகிறது.

அப்படியானால், திருப்பாவை நோன்பு சமயச்சடங்கு மட்டுந்தானா என்ற கேள்வி எழுகிறது.
உலகச் சமயச்சடங்குகள் அனைத்துக்குமே விவசாய உட்பொருள் உண்டு என்று சமூக மானுடவியல் வல்லுநர்கள் கூறுகிறார்கள். மனித நாகரிகத் தொடக்கக்காலத்தில் சமயமல்லாத வேறு காரணங்களுக்காகத் தொடங்கிய நிகழ்வுகள், பிற்காலங்களில் சமயச் சடங்குகளாக மாறிவிட்டன என்பது மார்க்ஸிஸ்ட் இலக்கிய விமர்சகர் கிறிஸ்டஃபர் கால்ட்வெல்லின் கருத்து.

மார்கழி மாதத்தில், தை மாதத்தில் அறுவடை செய்வதற்காக, உழவர்கள் காத்திருப்பார்கள்.. எப்படி விளையப் போகிறதோ, நல்ல விளைச்சலாக இருக்க வேண்டுமே என்ற ஆர்வமும் நம்பிக்கையும் இருந்து கொண்டே இருக்கும். இதற்குத் தெய்வத்தை வேண்டுவது தான் மனித இயல்பு.

மார்கழி மாதத்தில் ’நிலமகள்மடியில்’ (நப்பின்னை முலைத் தடத்தில்) அறுவடை (கண்ணன்) உறங்குகிறது.. அதனை உயிர்ப்பிக்கப் பாடும் பாட்டே திருப்பாவை. இப்பாடல்கள் கண்னனைத் துயிலெழுப்புவது போல் குறியீட்டுக்கோலம் கொள்கின்றன.
திருப்பாவையில் வரும் வரிகளைப் பார்க்கும்போது இது புலனாகிறது.
‘தீங்கின்றி நாடெல்லாம் திங்கள் மும்மாரிப் பெய்து,
ஓங்கு பெருஞ் செந்நெலூடுகயலுகள
பூங்குவளைப் போதில் பொறிவண்டு கண்படுப்ப
தேங்காதே புக்கிருந்து சீர்த்த முலைப்பற்றி
வாங்கக்குடம் நிறைக்கும் வள்ளல் பெரும்பசுக்கள்
நீங்காத செல்வம்...’

‘ஆழிமழைக்கண்ணா! ஒன்று நீகைகரவேல்
ஆழியுள் புக்குமுகந்து கொடார்த்தேறி
ஊழிமுதல்வனுருவம்போல் மெய்கறுத்து
பாழியந்தோளுடைப்பற்பநாபன்கையில்,
ஆழிபோல்மின்னிவலம்புரிபோல்நின்றதிர்ந்து
தாழாதேசார்ங்கமுதைத்தசரமழைபோல்,
வாழவுலகினில்பெய்திடாய்..

கூடாரை வெல்லும் சீர்க்கோவிந்தா உன்றன்னைப்
பாடிப்பறை கொண்டுயாம் பெறும்சம்மானம்
நாடுபுகழும் பரிசினால் நன்றாக
சூடகமேதோள்வளையேதோடேசெவிப்பூவே
பாடகமே யென்றனைய பல்கலனும் யாமணிவோம்
ஆடையுடுப்போ மதன்பின்னே பாற்சோறு
மூடநெய்பெய்துமுழங்கைநெய்வார
கூடியிருந்து...

‘கூடாரைவெல்லும் சீர்க்கோவிந்தா” என்று 27ஆம்பாட்டில்வரும்வரி, ‘கூடாரவல்லி’ யாகி இன்றும் வைணவர்கள் வீடுகளில், மார்கழி 27ஆம்நாள் ஒரு சமயப் பண்டிகையாகிக் கொண்டாடப்பட்டு வருகிறது.

நல்ல அறுவடை வேண்டிப் பாடப்பட்ட செய்யுட்கள், சமய வழிபாட்டுத் தோத்திரப் பாடல்களாக மாறிவிட்டன என்பதுதான் காலத்தின் நியதி!

காலம் கொன்ற விருந்து - 5

ரிஷிக்கூட்டங்களும் ஆசிரமங்களும்
நரசய்யா


வ. ரா. தமிழ்நாட்டிற்குத் திரும்பிய போது மஹாகவி சர்ச்சை முடிவு பெற்றிருந்தது. பாரதியார் குறித்து அவர் பேசாதிருந்ததற்குக் காரணம் பற்றி வீரகேசரி 15 .09. 1936 இதழில் இந்தியச் செய்திகள் என்ற தலைப்பில் பின்வரும் குறிப்பு வெளியிடப்பட்டிருந்தது:

தமிழ்நாட்டில் பாரதியார் தினம்
கடந்த வெள்ளிக்கிழமை சென்னையில் காங்கிரஸ் மாளிகையில் பாரதியார் தினம் கொண்டாடப்பட்டது.

மாலையில் கே. பாஷ்யம் அய்யங்கார், வித்வான் டி. பி. மீனாட்சிசுந்தரம்பிள்ளை, ரா. கிருஷ்ணமூர்த்தி, சங்கு சுப்பிரமணியம் முதலியவர்களூம் மற்றும் பல தலைவர்களும் பேசினார்கள்.

வ. ரா. பிரதிஞ்கை: சபையினர் வ. ரா. பேசவேண்டுமென்று கேட்டார்கள். அப்பொழுது வீரகேசரியின் மாஜி ஆசிரியர் திரு, வ. ராமஸ்வாமிஅய்யங்கார் (வ. ரா.) எழுந்து, தமிழ்நாட்டில் அடுத்த வருஷத்திற்குள் 300 பாரதி சங்கங்கள் ஏற்பட வேண்டுமென்றும் அதன்பின்னர்தான் தாம் பொதுக் கூட்டங்களில் பேசப்போவதாகவும், அதற்குமுன் பேசு வதில்லை என்ற பிரதிஞ்கை மேற்கொண்டிருப் பதாகவும் கூறினார்.

இதிலிருந்தே வ.ரா வின் பாரதி பக்தியைத் தெரிந்துகொள்ளலாம். தவிரவும். ரா.கி, வ, ரா.வின் பாரதி சர்ச்சை அவர்களது நட்பை ஒருபோதும் குறைத்து விடவில்லை! மாறாக, வ. ரா. எல்லாரையும் சந்தித்துப் பேசி சுமுகமாகவே இருந்தார் என்பது சிவபாத சுநதரம் இலக்கிய யாத்திரை என்றகட்டுரையில் எழுதியிருப்பதிலிருந்து தெரிந்து கொள்ளலாம்.

சிவபாதசுந்தரம் சொல்கிறார்:
“1937 இல் முதன் முறையாக சென்னைக்கு வந்த என்னை அன்றைய எத்தனையோ எழுத்தாளர் பலரைக் கேள்விப்பட்டிருந்தும், கல்கி அமர்ந்திருந்த ’ஆனந்தவிகடன்’ காரியாலயத்தை நாடச் செய்தது. ஆசிரியர் கல்கியைப் பார்க்கவேண்டும் என்று அங்கிருந்த ஒருவரிடம் சொல்லி என்னை அறிமுகப் படுத்தியவுடன், இலங்கையிலிருந்து ஒரு வாசகர் வந்திருக்கிறார் என்று காரியாலத்தினர் பெருமிதப்பட்டார்கள். உடனே ஆசிரியருக்குத் தகவல் அனுப்பிவிட்டு என்னை அங்கே அழைத்துச் சென்றவுடன் கல்கி எழுந்து அபிமானத்துடன் வரவேற்ற சமயத்தில் ‘வாங்கோ சிவபாதசுந்தரம்’ என்று அழைத்தது ஒரு குரல். ஏற்கனவே வீரகேசரி ஆசிரியராக இருந்த நண்பர் வ. ரா.தான் அப்படி அழைத்தார்.

அந்தச் சமயத்தில் கல்கியின் பக்கத்தில் வ. ரா.வை நான் எதிர்பார்க்கவில்லை. அதற்கு ஒரு ஆண்டுக்கு முன்னர்தான் பாரதி மகாகவி போரில் முகம் கொடுத்துப் பேசாத அளவில் எழுத்துச் சண்டை போட்டவர்கள். ஆனால் அதில் ஆச்சரியப்படவேண்டியதில்லை என்று சொல்லவேண்டும். வ.ரா.வை அறிந்தவர்களுக்குத் தெரியும் அவரோடு முரண்படுவதும் வெகு சுலபம். அவரோடு கட்டித்தழுவுவதும் சுலபம்”
கருத்தில் வேறுபட்டாலும் அந்த ஜாம்பவான்கள் ஒருவரையொருவர் வெறுக்கவில்லை! ஆனாலும் சமயம் கிடைத்த போதெல்லாம் கல்கி வ. ரா. வையும் அவரது நண்பர்களையும் கிண்டல் செய்வதில் தவறியதேயில்லை.

1938 ஆம் ஆண்டில் சென்னை வானொலி நிலையம் துவக்கப்பட்டது. அப்போது நிலைய இயக்குனர் விக்டர் பரஞ்சோதி என்பவர். இவர் இலண்டன் பி பி சி யில் பயிற்சிக்கு அனுப்பப்பட்டவர். துணை இயக்குனர் ஜி. டி. சாஸ்திரி. இருவரும் வ. ரா. வை விரும்பியவர்கள். மணிக்கொடியை ரசித்தவர்கள். அவர்கள் முயற்சியால், நிலையம் தொடங்கிய மறுநாளே வ. ரா. வின் பேச்சு ஒலிபரப்பாயிற்று. அப்பேச்சின் தலைப்பு ‘மூடநம்பிக் கைகள்.’ அவரது பேச்சு மக்களால் விரும்பப்பட்டதால், அப்போதிருந்தே அடிக்கடி வ. ராவைப் பேச நிலையத்தார் அழைத்துக் கொண்டிருந்தனர். அச்சமயங்களில் சிட்டியும் வ. ரா. வுடன் நிலையம் செல்வது வழக்கமாக இருந்தது. ஆகையால் சிட்டிக்கும் ரேடியோவில் பேசும் வாய்ப்புகள் சில கிட்டின. சில நாடகங்களும் வானொலிக்கு சிட்டி எழுதித்தர, அவை ஒலிபரப்பாயின. 1939 ஆம் ஆண்டில் திருச்சியில் ஒரு நிலையத்தை வானொலி துவக்கியது. அங்கு பேச்சாளர்களும் எழுத்தாளர் களும் தேவைப்பட்டனர். ரேடியோவில் ஏற்கனவே பணி புரிந்துகொண்டிருந்த ரா. பார்த்த சாரதி என்ற ஒரு சிறந்த நகைச்சுவை எழுத்தாளர் சிட்டியைத் திருச்சிக்கு வர அழைத்தார். முதலில் தயங்கிய சிட்டி பின்னர் அந்த நாட்களில் திருச்சியில் மருத்துவராக இருந்த டாக்டர் வா. சுவாமிநாத சாஸ்திரி என்பவரின் உந்துதலால் திருச்சி சென்றார். ஆகையால் சிட்டியின் மரியாதைக்குரியவராக டாக்டர் சுவாமிநாத சாஸ்திரி இருந்தார். தவிரவும் டாக்டர் சாஸ்திரி, டாக்டர் டி. எஸ். எஸ். ராஜனுடன் சேர்ந்து உப்பு சத்தியாகிரஹத்தில் ஈடுபட்டு, சிறை சென்றவர்.

இரண்டெழுத்தும் ஐந்தெழுத்தும்

டாக்டர் சுவாமிநாத சாஸ்திரி ஒரு சுதந்திரப் போராட்டவீரர். அவர் நோயாளிகளைப் பார்க்கும் போது கூட ராட்டையில் நூல் நூற்றுக் கொண்டுதான் இருப்பார். ஆங்கிலத்தில் அப்போது பிரசித்தி பெற்ற நகைச்சுவை பத்திரிகையான PUNCH போல தமிழில் ஒரு நகைச்சுவை பத்திரிகை நடத்த விரும்பினார். டாக்டர் சாஸ்திரி மணிக்கொடியின் தீவிர ரசிகர் அவர் அவ்வாறு மணிக்கொடி தோன்றிய அடுத்த ஆண்டே தொடங்கிய பத்திரிகையின் பெயர் களிராட்டை என்பதாகும். ராட்டையால் நூற்பது தான் மகிழ்ச்சி என்ற பொருளில் அத்தலைப்பு அமைந்தது. 1934

மார்ச்சு மாதம் வெளியான முதல் இதழில், அப்பெயர் கொடுக்கப் பட்டதன் பொருளை விளக்கியிருந்தார். “களி, கவலையைப் போக்கும் ராட்டை வறுமையை நீக்கும். நம் நாட்டினர் களிப்புடன் இருந்தாலே வலிமையுடன் வாழ்வார்கள். ராட்டை போன்ற கைத்தொழிற் கருவிகளைக் கையாடி வருவதால், தான் நமது வறுமை நீங்கும். உள்ளம் களிக்கும் வண்ணம் நகைச் சுவைததும்பும் கட்டுரைகளும் கதைகளும், நம் நாட்டினர் முன்னேற்றத்திற்கு ஏற்ற விஷயங்களும் வெளிவரும்”
சிட்டி அதிசயப்பிறவி வ. ரா. என்ற நூலில் இதைக் குறித்து எழுதியுள்ளார். வ. உ. சி., எஸ். ஜி. ராமானுஜுலு நாயுடு, வ. ரா., சங்கு சுப்பிரமணியம் போன்றவர் களும் களிராட்டையில் எழுதினார்கள். இதைத் தெரிந்துகொண்ட கல்கி. போடு பத்திரிகை என்ற வொரு கட்டுரையை விகடனில் புதுப் பத்திரிகை களை விமர்சித்து நகைச்சுவை யுடன் எழுதினார். நகைச்சுவையையே அடிப்படையாகக் கொண்ட களிராட்டை தோன்றியபோதே அந்தச் சுவையின் முன்னுரிமை கொண்டாடிய ஆனந்த விகடன் ஆசிரியர் அதைக் கிண்டல் செய்யும் பாணியிலும், புதிய பத்திரிகை ஆரம்பிக்கும் ஒரு தம்பிக்கு புத்திமதி சொல்வது போலவும் அமைந்திருந்தது அக்கட்டுரை. ஆனந்தவிகடன் 50,000 பிரதிகளுக்கும் அதிகமாக விற்றுக்கொண்டிருந்தபோது, சில நூறு பிரதிகள் விற்பனையான மணிக்கொடியும் களிராட்டையும் தரமான இலக்கியம் தேடும் வாசகர்களின் கவனத்தை ஈர்த்தகாலம். முதலில் சங்கு சுப்பிரமணியும் பின்னர் சொக்கலிங்கமும் தினமணியின் பொறுப்பேற்கச் சென்று விட்ட படியால், காந்தியும் சுதந்திரச் சங்கும் மறைந்து விட்ட காலம்; எஞ்சிய இரு பத்திரிகைகளின் வளர்ச்சியைக் கல்கி கூர்ந்து கவனித்துக் கொண்டிருந்தார் என்பது அக்கட்டுரை மூலம் மணிக்கொடி குழுவுக்குத் தெரிந்து விட்டது. உடனே எதிர்ப்பு ஒன்றும் எவராலும் தெரிவிக்கப்படவில்லையாயினும் மணிக்கொடி எழுத்தாளர்களை இது மனம் நோகத்தான் செய்தது.. தொடர்ந்து இப்பத்திரிகையில் டாக்டர் சாஸ்திரியின் விருப்பப்படி, சிட்டியின் இரண்டு எழுத்துகள் என்றவொரு கட்டுரை வெளியாயிற்று. “ஒன்று குறில் மற்றொன்று நெடில்” என்று தொடங்கிய அக்கட்டுரை வ. ரா. வைப் பற்றியது. (வ, குறில் ரா, நெடில்) அதில் சிட்டி வ. ரா. வின் தமிழ்ச் சேவையைப் புகழ்ந்து எழுதியிருந்தார். இது கல்கிக்குப் பொறுக்கவில்லை போலும்! உடனே இக்கட்டுரையைப் பரிகாசம் செய்யும் பாணியில் கல்கி ஆனந்த விகடனில் ஐந்து எழுத்துக்கள் என்றவொரு கட்டுரை எழுதினார்.

தனக்கே உரிய நகைச்சுவையுடன் கல்கியால் அக்கட்டுரை எழுதப்பட்டிருந்தது.

ஐந்தெழுத்துக்களில் உணர்ச்சியைக் கிளப்பிக் கண்ணீர் வடிக்கச்செய்யும் என்ற வகையில் எழுதி முடிக்கையில் அதுதான் வெங்காயம் என்று குறிப்பிட்டார்! நான் இது குறித்து சிட்டியைக் கேட்டபோது, அவரைப் பொறுத்த வரையில் “இத்தகைய நிலை உருவானது பற்றி மணிக்கொடியைச் சேர்ந்த எங்களில் சிலர் மார்தட்டிக்கொள்ளவும் தயங்கவில்லை. இது முதல் அன்று நடந்தேறிய இலக்கிய வேள்வியில் பலதரப்பட்ட ஆசிரமங்கள் ஈடுபட்டதன் விளைவாக ‘ரிஷிகூட்டங்களி’டையில் சிறிது பொறாமையும் பகையுணர்வும் வளர்வதற்கு வாய்ப்பு கிடைத்தது” என்றார்.

சிட்டி அக்காலத்தைத் தமிழின் பொற்காலம் எனக்கூறுவார். சற்றே பின்னோக்கிச் சென்றால், அப்போதைய, வ. ரா. வின் செதுக்கிய நடையும் கு. ஸ்ரீனிவாசனின் ஆழ்ந்த சிந்தனைகளும் தமிழுக்குப் பொலிவைக் கொடுத்ததாகச் சிட்டி கருதினார். அப்போது வந்து கொண்டிருந்த காந்தி, டி. எஸ். சொக்கலிங்கத்தின் நேரடித் தாக்குதல் கட்டுரைகளைப் பிரசுரித்துக் கொண்டிருந்தது. ஆகையால் விஷயங்களை உடனுக்குடன் விளக்கும் சக்தி வாய்ந்திருந்தது. மணிக்கொடி பத்திரிகையின் நிழலில் வளர்ந்தவர்களில் ஒருவர் ந. ராமரத்தினம். திருச்சி டாக்டர் சாஸ்திரியின் உறவினரான இவர், திருமணம் முடிந்த மறுமாதமே சத்தியாகிரஹத்தில் ஈடுபட்டு, போலீசாரிடம் அடியும் வாங்கி சிறை சென்றவர். அவருடைய இளம் மனைவியும் மற்ற பெண்களுடன் சிறைப்பட்டவர். இசை ஞானம் பொருந்திய ராமரத்தினம் சங்கீத விமர்சனக் கட்டுரை ஒன்றை மணிக்கொடிக்கு அனுப்பியிருந்தார். அதைப் பார்த்து மகிழ்ந்த வ. ரா. அவரைச் சென்னைக்கு வந்து எழுத்துலகில் சேருமாறு அழைப்பு விடுத்தார். அப்படித்தான் ராமரத்தினம் எழுத்தாளரானார்.
(தமிழ் எழுத்து வரலாற்றில் சிட்டி ஒரு மைல் கல் எனக் குறிப்பிடும் காலம் சென்ற இலங்கை கா. சிவத்தம்பி, ஜனவர் 16, 2003 அன்று சிட்டிக்கு எழுதிஅய கடிதம் இணைக்கப்பட்டுள்ளது)



இலக்கியமாகும் வரலாறு - காவல் கோட்டம்

கருத்து சா. கந்தசாமி

இந்தியாவில் இலக்கியத்திற்காக இந்திய அரசு தரும் உயர்ந்த விருது சாகித்ய அகாதமி பரிசு. அது விண்ணப்பம் போட்டு, புத்தகம் அனுப்பிப் பெறுவது கிடையாது. சாகித்ய அகாதமி தானாகவே ஒரு புத்தகத்தைத் தேர்ந்தெடுத்து அதன் ஆசிரியருக்கு விருது வழங்குகிறது. அது பற்றி எத்தனைத்தான் குறைகள் சொன்னாலும், அசலான படைப்பு எழுத்தாளர்கள் சிலர் விருது பெற்றுக் கொண்டே வருகிறார்கள். அதனால் சாகித்ய அகாதமி குறைபாடுகள் கவனிப்பு பெறாமல் போய்விடுகின்றன.

1954 ஆம் ஆண்டில் சாகித்ய அகாதமி தொடங்கபட்டது. அதன் முதல் தலைவராகப் பிரதம மந்திரி ஜவகர்லால் நேரு இருந்தார். பத்தாண்டுகள். தன் மரணம் வரையில் சாகித்ய அகாதமி தலைவராக இருந்த அவர் சாகித்ய அகாதமி விருது பெறாதவர்.

சாகித்ய அகாதமி தொடக்கத்தில் பதினெட்டு மொழிகளுக்கு விருது கொடுத்தது. பின்னர் கொங்கணி மொழி சேர்க்கப்பட்டது. தற்போது மணிப் புரி, போடோ சந்தாலி, டோக்ரி சேர்க்கப்பட்டு விருது கொடுக்கப் படுகிறது அதில் ஆங்கிலமும் உண்டு. ஆங்கிலம் இந்திய மொழிகளில் ஒன்றாகவே கருதப்படுகிறது.

ஆங்கில மொழிக்காக முதன் முதலாக விருது பெற்றவர் ஆர்.கே. நாராயண். தமிழ் மொழிக்க முதன்முதலில் சாகித்ய அகாதமி விருது பெற்றவர் சென்னைப் பல்கலைக் கழகத்தின் தமிழ்ப் பேராசிரியராக இருந்த ரா.பி. சேது பிள்ளை. விருது பெற்றது தமிழின்பம் என்னும் கட்டுரைத்தொகுப்பு.

சாகித்ய அகாதமி படைப்பிலக்கியத்தைப் புறக்கணிக்கிறது மேம்போக்கான, பள்ளிக் கூடப் பாடப் புத்தகத்தரமான புத்தகங்களுக்கு விருது வழங்குகிறது என்று சொல்ல தமிழின்பம் முதல் காரணமாக அமைந்தது. விருது, பரிசு என்பதால் ஒரு படைப்பு சிறப் படைவது இல்லை. அதன் தரத்திற்காகவும்; அசலான தன்மைக்காகவும் கவனிப்பு பெறுகிறது. ஆனால் விருது, பரிசு என்னும் அங்கீகாரம் ஒரு மொழி இலக்கியத்தை முன்னெடுத்துக் செல்கிறது.


தமிழகத்தில் மாநில சாகித்ய அகாதமி இல்லை. எனவே இந்திய சாகித்ய அகாதமி தமிழ்மொழிக்கான விருது முக்கியத்துவம் பெறுகிறது. அதனை அடைய எழுத்தாளர்கள், பேராசிரியர்கள், ஆராய்ச்சியாளர்கள் என்று ஒவ்வொருவரும் விரும்புகிறார்கள்.
இந்த ஆண்டு சாகித்ய அகாதமி விருதைத் தமிழ் மொழிக்கென பெற்று இருப்பவர் சு. வெங்கடேசன். நூல்: காவல் கோட்டம். பெரிய நாவல். ஆயிரம் பக்கங்களுக்கு மேல். 2008 _ ஆம் ஆண்டில் வெளி வந்தது.


சரித்திரந்தான் காவல் கோட்டம். அதாவது மதுரையின் சரித்திரத்தையே ஒரு கதாபாத் திரமாகக் கொண்டு மாலிக்கப்பூர், நாயக்கர்கள், ஆங்கிலேயர்கள் ஆட்சிக் காலத்தின் சரித்திரத்தைத் தன் படிப்பின் வழியாகவும் தன் ஈடுபாடு, அக்கறையின் அடிப்படையில் எழுதியிருக்கிறார்.

காவல், களவாகிப் போனபோது அதில் சம்பந்தப்பட்டவர்கள் வாழ்க்கை சீர்குலைந்து போவது விவரமாகச் சொல்லப்படுகிறது. நாவல் என்பதற்கு இலக்கணம் ஏதும் கிடையாது என்பது மட்டுமல்ல ஒவ்வொரு அசலான நாவலும் ஏற்கனவே எழுதப் பட்டிருக்கும் நாவல்களுக்கு எதிராகவே எழுதப்படுகிறது. சொல்லப்பட்ட வரலாறு சொல்லப்பட்ட வரலாற்றின் வழியாகச் சொல்லப்படாத வரலாறும் படைப்பு என்பதற்கு அர்த்தம் கொடுக்கிறது. வரலாறு என்பதில் படைப்பு எழுத்தாளன் நோக்கம் பார்வை தனித்தன்மை மிளிர இடம் பெறும் போது, சொல்லப்படும் முறையால் அது கலைத்தன்மை பெற்று நாவலாகிறது.

நடந்தது, எழுதி வைக்கப்பட்டிருக்கிறது என்பதால் எதற்கும் சிறப்பு கிடையாது. அது ஒரு கலைஞனால் சொல்லப்படும்போதுதான் மதிப்படைகிறது . ஆனால் சரித்திரத்தை எவ்வாறு கலைஞன் தீர்மானித்தான். அதுவே ஒரு படைப்பைத் தன்னளவில் நிலை நாட்டுகிறது.
காவல் கோட்டம் நாவலில் முக்கியமான அம்சம் களவு. காவல் பார்த்து வந்த மக்கள் களவாடுகிறவர்களாக மாறியது; அரசாங்கம் அவர்கள் மீது எடுத்த நடவடிக்கை, காவல் கூலி, துப்புக் கூலி விவகாரம். ஆங்கிலேயர்கள் மதுரைக்கு மட்டும் குற்றப்பரம்பரைக் கூட்டத்தைக் கொண்டு வரவில்லை. தங்கள் ஆட்சிக்கும் அதிகாரத்திற்கும் அடங் காதவர்களைத் தனித்தனியாகச் குற்றவாளிகள் என்று கண்டுபிடித்துத் தண்டிப்பதை விட சட்டமாகக் தண்டித்துவிடலாம் என்று 1871 ஆம் ஆண்டில் குற்றப்பரம்பரைச் சட்டத்தை இந்தியாவுக்கு கொண்டு வந்தார்கள். அதன் அடிப்படை மனிதன் சுதந்திரமாகப் பிறக்கின்றான் என்பது இல்லை. மனிதன் குற்றவாளியாக பிறக்கின்றான். மூன்று வயதில் குற்றம் செய்யக்கூடிய தன்மை ரத்தத்தில் ஓடுகிறது.

அப்படிப்பட்டவர்களைத் தனியாகப் பார்க்கவேண்டும். சுதந்திரமாக நடமாட விடக்கூடாது. இரவில் போலீஸ் ஸ்டேசனில் ஆஜராகிப் படுத்துக் கிடக்க வேண்டும். வெளியூர் சென்றால் ஆதார சீட்டு வாங்கிக் கொண்டு போக வேண்டும் என்றெல்லாம் சட்டம் போட்டார்கள். இந்தியாவின் பல மாகாணங்களில் குற்றப் பரம்பரைச் சட்டம் அமலில் இருந்தது.
சென்னை மாகாணத்தில் மதுரை, ராமநாதபுரம் குற்றப் பரம்பரைச் சட்டம் அமலுக்கு வந்தது என்றாலும் மதுரை அதில் பிரதான இடமாகியது. பிரமலைக் கள்ளர்கள் குற்றப் பரம்பரைச் சட்டத்தில் முதலில் சேர்க்கப்பட்டார்கள். அவர்கள் காவலர்களாக இருந்தவர்கள். எனவே களவும் அவர்களுக்குச் சாத்தியமாகியது. குற்றப்பரம்பரைச் சட்டத்தில் மறவர், அகம்படியர் வலையர், ஒட்டர், கேப்மாரி, குறவர் எனப்பலர் இருந்தார்கள்.
பத்தொன்பது வயதில் களவும், காவலும் கற்று அழகர்மலைக் கருப்புக்குக் கிடாவெட்டி மொட்டையடித்து காவல் கம்பு தாங்கியவர்கள், கம்பு பறிக்கப்பட்டு ஆதாரச் சீட்டு வாங்கிக் கொண்டு அடுத்த ஊர்க்குப் போகும் பரிதாப நிலை பிரமலைக்கள்ளர்களுக்கு ஏற்பட்டது, காவல் கோட்டத்தில் அதிகமாகச் சொல்லப்படுகிறது.

காவல் கோட்டம் கதைச் சொல்லும் நாவல் இல்லை வரலாற்றை வரலாறாகவே சொல்லும் நாவல். அதுவே அதன் பலம் அதற்கு சாகித்ய அகாதமி விருது வழங்கி இருக்கிறது. படைப்பு இலக்கியத்திற்கு வழங்கி இரு என்பது மகிழ்ச்சியானது தான்.

ஜனவரி 2012 - ஆசிரியர் பக்கம்

உங்களுடன்
வழி பிறக்கட்டும்


தை பிறந்தால் வழி பிறக்குமாம்
பிறந்தால் வாழ்த்தவேண்டும்
வழிக்குப் பிறப்புண்டா?
ஆண்டுக்குப் பிறப்பிருந்தால்
வழிக்கும் பிறப்பிருக்கலாம்
ஆண்டு பிறக்கிறதா?
ஆண்டுதோறும் பிறக்கிறது

காலக்கணிப்பே ஆண்டின் பிறப்பு
காலத்தைக் கணிக்க முடிகிறதா?
இறந்தகாலம் இப்போது இல்லை
எதிர்காலமும் இப்போது இல்லை
எப்போதும் இருப்பது
நிகழ்காலம் மட்டுமே
நினைத்துப் பார்க்கிற நேரங்களில்
கடந்த காலமும் எதிர்காலமும்
நிகழ்காலங்கள் ஆகின்றனவா?
கடந்தகால நிகழ்காலம் நினைவுகளிலும்
எதிர்கால நிகழ்காலம் திட்டமிடலிலுமாக
நிகழ்காலம் காலங்களைச் சுமக்கிறது

நாகரிகத்தின் தோற்றப்புள்ளி
காலக்கணிப்பு
மெசபடோமியாவின் பாபிலோனில்
நான்காயிரம் ஆண்டுகளுக்கு முன்பே
வசந்தகாலத்தை வரவேற்றுப்
புத்தாண்டுக் கொண்டாட்டம்
சூரியனின் நகர்வைக் கொண்டு
ரோமானியர்களின் காலக்கணிப்பு.

சூரியமானம் சந்திரமானம்
சூரியசந்திரமானம் என்று
இந்தியாவின் காலக்கணிப்புகள்
தமிழ்நாட்டிலும் ஈழத்திலும்
சூரியக் கணக்குமுறை
விநாடி, நிமிடம், மணி, நாள்,
வாரம், மாதம், பருவம் எல்லாம்
உலகம் முழுதும் சுழற்சி முறைதான்
கடந்த காலத்திலிருந்து எதிர்காலத்திற்கான
நேர்கோட்டு ஆண்டுக் கணக்குமுறை
இந்தியாவில் சுழற்சி முறையில்
அறுபதாண்டுப் பெயர்களுக்கு ஆபாசக்கதைகள்

உலகம் முழுதும் காலத்தின் தலைவிதி
சூரியன் கால்களில்

சூரியனின் வடதிசைப் பயணத்தொடக்கம்
பொங்கல்
புதுப்பானை, புதுஅரிசி, புத்தாடையுடன்
காலப்புதுமைக்கு வரவேற்பு
காலம்
கணக்கியலின் மையப்புள்ளி
பிரபஞ்சப் புரிதலின் திறவுகோல்
காலக் கணக்கீட்டில்
நவீனத் தொழில் நுட்பமும்
கட்டுப்பட்டுக் கிடக்கிறது
காலம் ஏற்படுத்தும் மாற்றங்களுக்கு
அறிவியலும் கைகட்டி நிற்கிறது
மாற்றங்களே காலத்தைக் காட்டுகின்றன
நேற்றைய ஒரு விநாடி
இன்றைய ஒரு விநாடிக்குச் சமமில்லை
ஒரு விநாடிப் பொழுதும்
உலகெங்கும் ஒன்றாக இருப்பதில்லை
நியூட்டன் பார்த்த ஆப்பிள்
அதே கிளையிலிருந்து
மறுபடியும் விழுந்தால்
அதே இடத்தில் விழுமா?
இடத்தைக் காற்றும் மாற்றலாம்
கிளையும் பழமும்கூட
காலத்தால் மாறியிருக்கலாம்
ஒருநதியில் ஒருவரே
இருமுறை குளித்தாலும்
தண்ணீரையும் குளிப்பவரையும்
காலம் மாற்றியிருக்கலாம்
ஆனாலும்
நதி அதேதான்
ஆண்டுதோறும் ஆண்டுகள் வரலாம்
கொண்டாடுவோர் மாறியிருக்கலாம்
கொண்டாட்டம் தொடரும்
உறவையும் நட்பையும் புதுப்பித்துக்கொள்ள
அன்பளிப்புகளில் அதிகாரம் வளர்க்க
விடுமுறை, வியாபாரம், விளம்பரம் என்று
கொண்டாட்டம் தொடர ஊக்கப்படுத்தலாம்
ஒரு காலத்தில்
வெள்ளத்திலிருந்து காத்துக்கொள்ள
நதிக்கரை மக்களை யோசிக்கவைத்தது
காலக்கணக்கு
விதைக்க, நட, அறுக்க என்று
மழைபெய் காலத்தை அறிய உதவியது
காலக்கணக்கு
காலம் பொய்க்காமல் தொடர்ந்திட
கடவுள் வழிபாடு கணக்கில் வந்தது
காலக் கணக்கில் மதம் வந்தபின்
அரசியலும் வந்தது
ஆண்டுப்பிறப்பு அரசியல் ஆனது
காலம் இல்லாத இடமும்
இடம் இல்லாத காலமும்
எங்கே இருக்கின்றன?
மதமும் அரசியலும் இல்லாத கொண்டாட்டம்
பொங்கல்
கடந்தகாலம் நிகழ்காலத்தையும்
நிகழ்காலம் வரும்காலத்தையும்
கட்டமைப்பது சாத்தியம் என்றால்
கட்டுடைப்பும் சாத்தியம்தானே
வரலாற்றில் காலம் அடங்கினாலும்
வரலாற்றுக்கு முன்பே காலம் உண்டே!
பகலில்
கம்பத்து நிழலில் காலம் பார்த்தோம்
இரவில்
தண்ணீர் மணல் கடிகாரத்தில் நேரம் அறிந்தோம்
இன்று
கையில் அலைபேசியில் காலத்தைச் சுமக்கிறோம்
இதயக்கடிகார ஓசையில்
மனக்கடிகாரமும் ஓடுகிறது
மனக்கடிகாரமும் மணிக்கடிகாரமும்
ஒத்துப்போகிற வாழ்க்கை வேண்டும்
தை பிறந்தால்
வழிபிறக்குமா?
வழிபிறக்கட்டும்!
வாழ்த்துகள்!!

-ம.ரா

ஜனவரி 2012 இதழ் உள்ளடக்கம்

கவிதை
ஸ்ரீமொழிவெங்கடேஷ்
ஈரோடு தமிழன்பன்
உஷாதேவி
சசி அய்யனார்
கா.அமீர்ஜான்
பூர்ணா
பா.கண்மணி
பொ.செந்திலரசு
ராச.கணேசன்


கட்டுரை
காஞ்சனா தாமோதரன்
சா.கந்தசாமி
இந்திரா பார்த்தசாரதி


நூல் மதிப்புரை
வெங்கட்சாமிநாதன்
க.பஞ்சாங்கம்

கதை
வைதீஸ்வரன்
கண்ணன்
சந்தியூர் கோவிந்தன்
சுந்தர் நாகரெத்தினம்

தொடர்
நரசய்யா

கடைசிப்பக்கம்
இந்திரா பார்த்தசாரதி

ஜனவரி 2012 மாத இதழ்





ஆண்டு சந்தா: (
உள்நாடு)ரூ220/- (வெளிநாடு)US$30
இரண்டு ஆண்டு சந்தா: (
உள்நாடு )ரூ440/- (வெளிநாடு)US$50
ஆயுள் சந்தா: (
உள்நாடு )ரூ5000/- (வெளிநாடு)US$300

அனைத்துத் தொடர்புகளுக்கும்.

பதிப்பாளர்: சேது.சொக்கலிங்கம்
கவிதா பப்ளீகேஷன்: 8, மாசிலாமணி தெரு, தியாகராயநகர், சென்னை-600 017
தொலைபேசி: 24364243, 24322177