Saturday, December 3, 2011

கவிதை - பிழைகளின் முகம்

ராம்பிரசாத்

தூரத்துக் காட்டுக்குயிலின்
மெல்லிசையில்
மயங்கிக்கிடந்தது அந்த
அடர்ந்த கானகமும்,
கவிந்த இருளும்...


இயற்கையின் மெல்லிசையில்
பிழை சேர்க்கும்
முயற்சிகளின்றிப் போதலில்
எத்தனை யதார்த்தம்...

கரிய பிசாசென ஆங்கொருவன்
உள் நுழைந்து தன் போக்கில்
மூங்கில் துளையிட்டூதி
முறையாகச் சேர்ந்த பிழைகளை
இசையென கூவிச்சென்றான்...

கானகம் முழுமைக்கும்
அதிர்ந்து ஒடுங்கியது
இயற்கை...

இந்த இயற்கை எத்தனை
மென்மையானது..

கடைசிபக்கம் - ஒற்றைப் பரிமாணசமய, மொழி வெறி வக்கிரங்கள்

இந்திரா பார்த்தசாரதி

ஏ.கே.ராமாநுஜன் ’இராமாயணம்’ பற்றிய கட்டுரை தில்லிப்பல்கலைகழகப் பாடத்திட்டத்தினின்றும் நீக்கப்பட்டிருகின்றது என்பது, அப்பல்கலைக் கழகத்தில் 26 ஆண்டுகள் பணிபுரிந்த எனக்கு அதிர்ச்சியாக இருக்கின்றது.

இது இப்பொழுது ஒற்றைப் பரிமாணச் சிந்தனைவாதிகளின் செல்வாக்கு உயர்ந்திருப்பதைத்தான் குறிக்கின்றது.

இராமாயணம், மஹாபாரதம் ஆகிய இரண்டும், இந்தியப் பண்பாட்டு ஆழ்மனத்தின் இன்றியமையாத நுட்பக் கூறுகளாக அமைந்து விட்டன. இந்தியாவின் ஒவ்வொரு பிராந்தியத்திலும் இக்கதைகளை அவர்கள் அவர்களுடைய பண்பாட்டுக்கேற்ப எப்படி உள்வாங்கிக் கொண்டிருக்கின்றார்களோ அதன் வெளிப்பாடாகத்தான் அவ்விடத்தில் இவ்விரு இதிகாசங்களும் உருப்பெற்றிருக்கின்றன. இக்கதைகளின் காப்புரிமை எந்தச்சமய, மொழி ஆதிக்கச்சக்திகளுடனும் இருக்க இயலாது. சில பூர்வகுடிமக்கள் இராமாயணக்கதையில் இராவணந்தான் கதாநாயகன். இது அவர்கள் கலாசார வெளிப்பாடாக இயல்பாகவே உருவானதே தவிர, புலவர் குழந்தை வெளிப்படுத்தியது போல் எதிர்ப்புணர்வின் வடிவம் அன்று. இந்தியாவிலும், கிழக்காசிய நாடுகளிலும் நூற்றுக்கணக்கான ராமாயணங்களும் கிளைக்கதைகளும் இருக்கின்றன. சங்கச் செய்யுட்களிலேயே ராமாயணக் கதையில் புதுச்செய்திகள் பல தென்படுகின்றன.

கோடிக்கரையில் இராம, இலக்குவர்வானரத் தலைவர்களுடன் ஆலோசனை நடத்தியபோது புள்ளினங்களும் அமைதி காத்தன என்று ‘அகநானூற்றில்’ வருகிறது. பக்தி இயக்கதின் போது, இராமகாதை ஆழ்வார்ப் பாடல்களில் பல புதுப்பரிமாணங்களைப் பெறுகிறது. திருமங்கை மன்னன் இராமன் குகனைத் தோழனாகவும் சகோதரனாகவும் ஏற்றுக்கொள்ளும் கதையைக் குறிப்பிடுகிறார். குகனை ஓர் அற்புதமான கதாபாத்திரமாகக் கம்பன் படைத்ததற்கு இது ஆதாரமாக இருந்திருக்கவேண்டும். ‘ஆயிரம் இராமர் உன் கேள் ஆவரோ’ என்று பரம இராமபக்தனாகிய பரதனையே சொல்ல வைக்கின்றது. தமிழ்நாட்டில் நாட்டார்கதைகளில் குகனைப் பற்றிய இவ்வகையான வடிவம் நடைமுறையில் இருந்திருக்க வேண்டும்.
பொய்கையாழ்வார் ஒரு புதுபுராணச் செய்தியையே, அவதாரத்தையே உருவாக்கிவிடுகிறார். இராவணன் பிரும்மாவிடம் வரன் பெறச்சென்ற போது, திருமால் ஒரு குழந்தையாகப் பிரும்மாவின் மடியிலிருந்து இராவணனின் அவன் மறைத்துவைத்திருந்த ஒன்பதுதலைகளையும் எண்ணி அவன் யார் என்று பிரும்மாவுக்குப் புலப்படுத்துகிறாராம். இதுவும் அவர்காலத்திய மக்களிடையே வழங்கிய கதைகளில் ஒன்றாக இருக்க வேண்டும். பூதத்தாழ்வாரும் இக்கதையைக் குறிப்பிடுகிறார். வால்மீகியைக்காட்டிலும், கம்பன் அகலிகைக்கதையை எவ்வளவு நாகரிகமாக, நளினமாக, இலக்கியநயத்துடன் சொல்கிறான் என்று ராமாநுஜன் எடுத்துக் காட்டியிருப்பதுதான் ஹிந்தி வெறியர்களுக்குக் கோபத்தை உண்டாக்கியிருக்க வேண்டுமென்று தோன்றுகிறது. கம்பன் அடிப்படையில் ஒரு நாடக ஆசிரியன். இக்கதையின் நாடகச் சாத்தியப்பாடுகளை உணர்ந்து அகலிகையை மனச்சிக்கல்கள் நிறைந்த ஒரு complex கதாபத்திரமாக அவன் சித்திரித்திருக்கிறான் வால்மீகி. அகலிகை ஒற்றைப் பரிமாணக் கதாபாத்திரம்.. ஆனால், கம்பன் அகலிகை மனப் போராட்டத்துக்கு உள்ளாகிற மானுடப் பெண். இந்திரன், கௌதமனாக வந்து அகலிகையுடன் உறவு கொள்வதைப் பின்புலக் காட்சிகளுடன் ஒரு நாடகச் சித்திராமாக்குகிறான் மகாகவி கம்பன். வால்மீகியின் அகலிகைக்கு அவன் கௌதமனில்லை, இந்திரந்தான் என்று உடலுறவு கொள்வதற்கு முன்பே தெரியும். கம்பனின் அகலிகைக்கு உடலுறவு கொள்ள ஆரம்பித்த பிறகுதான் தெரிகிறது. அவள் ஆழ்மனம் இந்திரனை நாடியிருக்க வேண்டுமென்பதை அவள் அப் பொழுதுதான் உணர்கிறாள். ஆழ்மன உனர்வுக்கு அவள் தடை போடவிரும்பவில்லை. சிறுசிறு நிகழ்வுகளையும் அற்புதமான சொல்லோவியங்களாக, நாடகக்காட்சிகளாகக் காட்டுவதுதான் கம்பனின் கைவண்ணம்.

தொடர்- காலம் கொன்ற விருந்து - 4


சர்ச்சையின் விளைவு திரண்டது திறனாய்வு
நரசய்யா
கட்டுரைகள் மூலமாகத் தாக்கிக்கொண்ட இந்த ஜாம்பவான்கள், தனிப்பட்ட முறையில் ஒருவிதக் காழ்ப்புணர்ச்சியும் இல்லாமல்தான் இருந்திருக்கிறார்கள். அந்த விவரங்களை, அதாவது, சுமார் எழுபது ஆண்டுகளுக்கு முன் நிகழ்ந்தவற்றை இப்போது பார்க்கையில் அம்மேலோர் எவ்வளவு திடமாகத் தாங்கள் நம்பியதை எழுதினார்கள் என்பது தெரிகிறது.
இலங்கையிலிருந்து வ. ரா. சுதேசமித்திரனுக்கு எழுதிய கட்டுரை டிசம்பர் 14, 1935 அன்று பிரசுரமானது. அது ஒரு நீண்ட கடிதம். அதில் அவர் தான் கூறிய ’ஒரு வரிக்கு ஈடாகாது’ என்ற சொற்கோவையை மட்டும் எடுத்துக்கொண்டு, கல்கி எழுதியதற்குப் பதிலாக இவ்வாறு கூறுகிறார்: “ஒரு வரி, ஒரு வரியென்று அதைப் பிடித்துக் கொண்டு தொங்க வேண்டாம். ஒரு குதிரை, ஒரு குதிரை ஒரு ராஜ்ஜியத்துக்கு ஒரு அதிரை என்று அவதிப்பட்ட 3ஆவது ரிச்சர்ட் தனது பட்டத்தை இழந்தான். (The reference is from Richard III the play by Shakespeare; Richard is unhorsed on the field at the climax of the battle, and cries out, "A horse, a horse, my kingdom for a horse!" Richmond kills Richard in the final duel). ஒரு வரி, ஒரு வரி என்று வேறு எதுவும் அகப்படாமல் அதைப் பிடித்துக் கொண்டு தொங்கினால் அது அறுந்து விழுந்து காயம் ஏற்பட்டாலும் ஏற்படும். அந்தக் கம்பங்கூத்தாடி வித்தை வேண்டாம்.என்று அதை ரா. கி. விட்டு விடுவாராக.”

வேடிக்கை என்னவெனில் அக்காலத்துத் தமிழ் எழுத்தாளர்கள் எல்லாரும் சில பேர்களைத் தவிர ஆங்கில இலக்கியத்திலும் புலமை பெற்றவர்கள். ஆகையால் சாதாரணமாகவே இலக்கியத் தொடர்பு கொண்ட ஆங்கிலச் சொற்றொடர்களைப் பயன் படுத்தினார்கள். அந்த வகையில் வ. ரா. கடிதத்தில் “ப்ரோமெதியஸ் அன்பவுண்ட்” என்ற சொற்றொடரைப் பயன் படுத்துகிறார்!

கிரேக்க புராணத்தின் படி, ப்ரோமெதியஸ் என்ற வீரன், டைடனின் குமாரன். மனித குலத்திற்காகப் போராடியவன். தேவலோகத்திலிருந்து ஜீயஸின் தெய்வீக அக்னியைத் திருடிக் கொண்டுவந்தவன். ஆகையால் தண்டிக்கப்பட்டவன். அவனை ஒரு பெரிய பாறையில் கட்டிவைத்துத் தினமும் கழுகுகள் அவனது ஈரலைத் தின்னும்படி செய்யப்பட்டான். ஆனால், கழுகு தின்றவுடன் அவனது ஈரல் மறுபடியும் வளர்ந்து விடும். பிறகு அவன் விடுவிக்கப்பட்டான். அது ப்ரோமெதியஸ் அன்பவுண்ட் என்ற கதையில் வருகிறது. இதைத்தான் வ. ரா. இங்கு குறிப்பிடுகிறார். அதன் காரணம் கல்கி, ”பாரதியின் எல்லா நூல்களையும் டால்ஸ்டாய் நெருப்பில் போட்டுக் கொளுத்தியிருப்பார்” என்று சொன்னதுதான்! அம்மாதிரியான ஒரு தெய்வீக அக்னியைக் கொண்டுவந்து பாரதியின் படைப்புகளை டால்ஸ்டாய் தீக்கிரையாக்கினால் பரவாயில்லை என்று சொல்கிறார்! “தெய்வீகக் கனலை வைத்துக் கொளுத்துவதாக இருந்தால் பாதகமில்லை” என்கிறார்! (டால்ஸ்டாயைப் பற்றி கல்கி சொன்னது சுதேசமித்திரன் 1935 டிசம்பர் 7 அன்று “டால்ஸ்டாய் ஒரு மஹான். ஆனால் அவர் ரஸிகருமல்ல; கவியுமல்ல. முதன்மையாக அவர் ஒரு சன்மார்க்கப் போதகர்; சீர்திருத்தக்காரர் என்று தங்களுக்குத் தெரிந்திருக்க வேண்டும். பாரதியாரின், ‘எந்த நேரமும் நின்மையல் மீறுதடி குறவள்ளி சிறுகள்ளி’ என்ற பாட்டை டால்ஸ்டாயிடம் கொடுத்திருந்தால் அவர் ‘பாரதியாரின் புஸ்தகங்கள் எல்லாவற்றையும் நெருப்பு வைத்துக் கொளுத்த வேண்டும்’ என்ற அபிப்ராயம் கொண்டிருப்பார்.”)

பல வருடங்களுக்குப் பின்னரும், அதாவது ஜனவரி 2003இல், சுமார் 68 ஆண்டுகளுக்கு முன்னர் நடந்த இந்த நிகழ்வுகளை நினைவு கூட்டி, பாரதிக்குத் தமிழர்கள் செய்யவேண்டிய தொண்டைக் குறிப்பிட்டு, பேரா. கா. சிவத்தம்பி இலங்கையிலிருந்து சிட்டிக்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிடுகிறார். அதில் சிட்டியும் கு. ப. ரா வும் செய்த தொண்டைக் குறிப்பிடுகிறார்.

இப்போது இந்தத் தர்க்க மேடையில் அதாவது மணிக்கொடி குழுவின் ஒரு புனிதப் போரில் பிரவேசிக்கும் சிட்டி, சற்றும் இலக்கியத்தரம் குறையாமல், “பாரதியும் இல்க்கியவிமர்சனமும்” என்ற கட்டுரையை எழுத அது சுதேசமித்திரன் டிசம்பர் 21, 1935 இதழில் பிரசுரமாயிற்று.

இந்த விவகாரம் பலருக்கும் தெரியும். ஆனாலும் ஒரு பதிவு செய்துதான் ஆகவேண்டும். அதாவது இந்தத் தர்க்க உத்வேகத்திலும், தமது நோக்கினை மறக்காது தர்க்கத்தையே சரியான திசையில் செலுத்திச் சென்றவர் சிட்டி தான். அவரது கட்டுரைகள் அவர் கற்ற ஆங்கிலத் திறனாய்வு, மற்றும் பாரதி பக்தி இரண்டும் கலந்து, விருப்பு வெறுப்பின்றி எழுதப்பட்டுள்ளன. தன்னை அறிமுகப் படுத்திகொள்ளும் போதே சிட்டி சொல்கிறார்: “வ ரா. வுக்கு நமஸ்காரம் செய்து நேர்முகமாகப் பேசும் ரா. கி. யின் பேச்சுக்கிடையில் வருமுன் நான் என்னைப் பற்றியும் கொஞ்சம் சொல்லிக்கொண்டால் தான் நீ யார் என்ற கேள்விக்குப் பதிலளிக்கத்தகுந்தவனாவேன். நான் ஷேஸ்பியரையும் ஷெல்லியையும் கடமையாகப் படித்தேன். தாகூரை என் ரசிகத் திறன் சோதனைக்காகப் படித்தேன். பாரதியை சந்தோஷத்திற்காகவும், ஆத்ம திருப்திக்காகவும் படித்தேன். (குட்டிச் சுவராகப் போனாலும் பரவாயில்லை) இந்த நான்கு கவிகளின் கற்பனையையும் அலசிப் பார்த்துவிடவில்லை. ஆயினும் பரீட்சை தேறுவதற்காக ஷேஸ்பியரைப் பற்றிய ஆராய்ச்சிகளையும், ஷெல்லி பற்றிய விமர்சனங்களையும் படிக்க நேர்ந்தது.
“என்னவிருந்த போதிலும், ஒப்பிட்டுப் பார்த்தால், பாரதி தற்சமயம் வெறும் பெயர்தான் என்பதை மறக்க முடியாது. அவரது மேதையை முற்றிலும் சோதித்து அறிந்து விட்டதாக சொல்வது அகம்பாவம் தான் ஆகும். சூரியன் இவ்வளவு யுகங்களாக இருந்து வருவதோடு, இவ்வளவு ஒளி கொடுப்பதில் சூரியனை விட பெரிய நட்சத்திரம் இருக்கமுடியாதென்று சொல்வது புத்திசாலித்தனமான பேச்சு என்போமா? பாரதி புது நட்சத்திரம். அவருடைய முழு ஒளியை நாம் பெறுவதற்கு ஷெல்லி, ஷேஸ்பியர், தாகூர் மூவருடைய மேதையைப் பரிசீலித்து ஆக வேண்டும்”.

சிட்டி எழுதியது இன்று படிக்கையிலும் இன்பம் தருவது. இளங்கோவனும் பி. எஸ். ராமையாவும் எழுதியவை அவ்வாறிருக்கவில்லை. அவர்கள் கல்கியைத்தாக்கித்தான் எழுதினார்கள்.புதுமைப் பித்தனும் கல்கியைத் தாக்கி எழுதியுள்ளதாகச் சிட்டி சொன்னார். ஆனால் அவ்விவரம் எனக்குச் சரியாகத் தெரியவில்லை.

சிட்டிக்குக் கொழும்புவிலிருந்து வ. ரா எழுதிய மற்றொரு முக்கியக் கடிதமும் இப்போது கிடைத்துள்ளது. அது 23.07.1936 அன்று எழுதப்பட்டது. அப்போது தான் சிட்டிக்கு விவாகம் ஆகி ஒரு வருடமாயிருந்தது. இலங்கையில் வ. ரா. தமது 47 ஆவது வயதில் புவனேஸ்வரி (ராஜஸ்தானைச் சேர்ந்த தேவி சிங் என்பவரின் குமாரி) என்ற ஒரு வட இந்தியப் பெண்ணைத் திருமணம் செய்து கொண்ட வருடம். வாழ்த்துகள் அனுப்பிய சிட்டி தம்பதிகளுக்கு இந்தக் கடிதம் எழுதப்பட்டுள்ளது. இக்கடிதத்தில் சில முக்கிய விஷயங்களும் காணப்படுகின்றன. அவரது சென்னை திரும்பவேண்டுமென்ற ஆவலும் அதில் தெரிகிறது.. சிட்டி தம்பதிகளுக்கு என்று தான் ஆரம்பிக்கிறார். அதில் அவர் குறிப்பிடுவது. “உங்களுடைய இரண்டு நமஸ்காரங்களையும் அப்படியே எனது ’உயர்ந்த பாதி’க்கு கொண்டுபோய்ச் சேர்த்துவிட்டேன். எனக்கு ஒரு நமஸ்காரமும் கிடைக்கவில்லை.... என்னுடைய மூளை உண்மையிலேயே கொதித்துக் கொண்டிருக்கிறது என்று சொல்லலாம். என் கலியாண விஷயத்தை ஒருவருக்குமே நான் தெரிவிக்கவில்லை. ’வீரகேசரியில் தான் பிரசுரம் செய்தேனா? இல்லை. கொழும்புவிலும் ஒருவருக்கும் தெரியாது. இரண்டொருவருக்குத்தான் துவக்கத்தில் தெரியும். பிறகு கொஞ்சம் கொஞ்சமாக அது பரவி விட்டது. விளம்பரம் பிடிக்கவில்லை. வாழ்க்கையை வாழ்ந்து காண்பித்தால் அதுவே தலைமுறை தலைமுறையாக ஜில்லா ஜில்லாவாக பரவி விளம்பரமாகி வரும் என்பது என் சித்தாந்தம்.” கடிதத்தை முடிக்கையில், ‘சென்னைக்கு வந்து எவ்வளவோ செய்ய வேண்டும். . .” என்கிறார். அவர் சென்னைக்கு வரவேண்டுமெனத் துடித்துக் கொண்டிருந்தார். ஆயினும் அப்போதைக்கு ஒன்றும் சரியாக அமையவில்லை. கு.ப.ரா.வுக்கு 1935 டிசம்பர் 3, அன்று எழுதிய கடிதத்தில் இவ்வாறு குறிப்பிடுகிறார். “இன்னும் நாலைந்து மாதம் கொழும்பில் இருப்பேன். ஒரு வருஷ ஒப்பந்தத்தின் பேரில் இங்கு வந்தேன். அது முடியும் முன்னரே, இந்தியாவுக்குத் திரும்பி வந்து விட வேண்டுமென்று துடித்துக் கொண்டிருக்கின்றேன். ஏதோ பக்குவமான வேலை தமிழ் நாட்டில் செய்யலாம் போல அறிகுறிகள் காணப்படுகின்றன. விவரமாக அதைப் பற்றி எழுதமுடியாவிட்டால், நேரில் வந்து சொல்லுகிறேன்.”

ஆனால் உடனே அவர் இந்தியா திரும்பிவிடவில்லை. சிட்டிக்கு அவர் எழுதிய கடிதத்தில் கண்டது போல, அடுத்த வருடமே அவருக்குக் கொழும்பு நகரத்திலேயே திருமணமாகிவிட்டது.

கவிதை: பாலநாயகர்கடவுத்துதி
எண்ணிக்கையற்று
பரவிக்கிடக்கிறது ‘..........’
எறிந்த எரிதழலின் பொறிகள்
பரிபூரணங்களாக இல்லாவிட்டாலும்
அதாவதான வேளைகளில்
லௌகீகத்தின் மீட்சிபெற்று
ஆனந்தம் துய்த்திருக்கிறேன்.

கடனென்றில்லாமல்
காணிக்கையின் பால்
நின் பாதம் பற்றுகிறேன்
ஏன் ஏனென்று
எங்கு எப்படியென்று
எதுவுமில்லாத நீ கடவுளெனில்
இங்கு நான் யார்?
சதா காலமும் உன்னை
சபித்தால் நாஸ்திகனா?!
சதாசிவ உதாரணமும்
உன்னைத் துதிக்க அடியவனா?!
துதி கேட்கவா
துவங்கியிருக்கிறாய் உயிர் விளையாட்டை.
கடமையும் கடனும்
எதுவென நிரூ பணிக்க
எல்லாம் மாயையெமெனில்
நீ மட்டுமெப்படி நித்யமாக?!

ஆயினும்,
பரிபூரணங்களாக இல்லாவிட்டாலும்
நின் பாதம் பற்றுகிறேன்.
இங்கு நான் யார்?
எதுவுமில்லாத நீ கடவுளெனில்
கடவுத்துதி கர்மம் எதற்கு?

டிசம்பர் 2011 இதழ் உள்ளடக்கம்

கவிதை
பாலநாயகர்
நீலமணி
ஜனநேசன்
பொ.செந்திலரசு
கே.ஸ்டாலின்
சசி அய்யனார்
செழியரசு
ராம்பிரசாத்
ப.மதியழகன்

நூல் மதிப்புரை
வெங்கட்சாமிநாதன்
சக்தி அருளாந்தம்
வே.சபாநாயகம்

கதை
மலர்மன்னன்
ம.ராஜேந்திரன்
ஸிந்துஜா
லாவண்யா
எஸ்.ஷங்கரநாராயணன்
ஏ.என்.தேவகி

தொடர்
நரசய்யா

கடைசிப்பக்கம்
இந்திரா பார்த்தசாரதி

டிசம்பர் 2011 மாத இதழ்


ஆண்டு சந்தா: (
உள்நாடு)ரூ220/- (வெளிநாடு)US$30
இரண்டு ஆண்டு சந்தா: (
உள்நாடு )ரூ440/- (வெளிநாடு)US$50
ஆயுள் சந்தா: (
உள்நாடு )ரூ5000/- (வெளிநாடு)US$300

அனைத்துத் தொடர்புகளுக்கும்.

பதிப்பாளர்: சேது.சொக்கலிங்கம்
கவிதா பப்ளீகேஷன்: 8, மாசிலாமணி தெரு, தியாகராயநகர், சென்னை-600 017
தொலைபேசி: 24364243, 24322177