Monday, February 20, 2012

கடைசிப்பக்கம் - சரித்திரமும் சக்கரமும்

இந்திரா பார்த்தசாரதி


‘பிலாட்டோவின் சக்கரம்’ என்றால் என்னவென்று உங்களுக்குத் தெரியுமா? முதலில் ‘ஜனநாயக’த்தைப் பற்றித் தெரிந்துகொள்ள வேண்டும். ‘டெமோஸ்’ (மக்கள்) என்ற கிரேக்க சொல்லிலிருந்து வந்தது ‘டெமொக்ரஸி’ (ஜனநாயகம்). பெரிக்லெஸின் (கி.மு. 460 -430) மறைவுக்குப்பிறகு, கிரீஸில் ஜனநாயகம் தழைக்கத்தொடங்கியது. ஆனால், பிலாட்டோவுக்கு, அது அவ்வளவு உற்சாகத்தைத்தரும் செய்தியாக இல்லை. அவர் கூறினார்:’ இப்பொழுது என்ன நடந்து கொண்டிருக்கிறது? அராஜகத்தைச் சுதந்திரம் என்கிறார்கள். ஊதாரித்தனத்தைப் பொருளாதார மேம்பாடு என்கிறார்கள். வன்முறையை வீரம் என்கிறார்கள். வயதானவர்கள் கூட இளைஞரைப் பின்பற்றிக் காலத்துக்கேற்ற கோஷம் எழுப்புகிறார்கள். சட்டத்தை அநுசரிப்பது என்பது பிற்போக்கானக் கருத்தாக மாறிவிட்டது. எதுவும் அளவுக்கு மீறினால், எதிர்விளைவு ஏற்படும் என்பதில் சந்தேகம் இல்லை. ஜனநாயகத்தின் எதிர்விளைவு சர்வாதிகாரம். இதை மக்கள் உணரவேண்டும்’.

தற்காலத்திய நம் இந்தியாவைப்பற்றிப் பிலாட்டோவுக்கு எப்படித் தெரிந்திருக்கக்கூடும் என்பது நியாயமான கேள்வி! ஏதென்ஸைப் பொறுத்தவரையில், பிலாட்டோ கூறியது நடந்துவிட்டது. ஏதென்ஸில், பணக்காரர்கள் இன்னும் பெரியபணக்காரர் ஆனார்கள். ஏழைகள் இன்னும் பெரிய ஏழைகள் ஆனார்கள். ஏதென்ஸில் ஜனநாயகம் என்பது கேலிக்கூத்தாயிற்று. ஏழைகளுடைய வாக்குகள் விலைக்கு வாங்கப்பட்டன.
வில்டூரன்ட் (Will Durant) கூறுகிறார்:’ கோடீஸ்வரர்கள், செனட்பிரதிநிதிகளையும், மக்கள் வாக்குகளையும் விலைக்கு வாங்கினார்கள். விலைக்கு வாங்க முடியாவிட்டால் கொலைகள் நடந்தன. நாட்டாண்மைக்காரர்களுக்கு வாக்கு அளிக்காதவர்களுடைய வீடுகள் எரிக்கப்பட்டன’.



நம் அரசியல்வாதிகள் பிலாட்டோ-வையோ, வில்டூரன்டையோ படித்திருக்கக்-கூடிய வாய்ப்பில்லை. கிரேக்க, ரோமானிய வரலாறுகளை அவர்கள் அறிந்து வைத்திருப்பர்கள் என்றும் அவர்கள் மீதுகுற்றம் சாட்ட முடியாது.

ஆனால் சரித்திரம் அலுப்பு, சலிப்பு இல்லாமல் எப்படித்திரும்ப நடக்கிறது?

ரோமவரலாற்றில், தொல்குடிச்செல்வந்தர்கள் (Aristocrats), பாம்பி (Pompey) யை அழைத்துச்சட்டத்தை நிலைநாட்டச்-சொன்னார்கள். சாதாரண மக்கள் இதற்கு ஜூலியஸ்ஸீஸரை நாடினார்கள். ஸீஸரால் தான் ஜனநாயகம் பிழைக்கும் என்று ஒரு சாதாரணக் குடிமகன் நம்பினான்.
ஜனநாயகத்தின் பேரில் பதவிக்கு வந்த ஸீஸர் விரைவில் சர்வாதிகாரியானான்! அவன் முடியை நாடுகிறானென்று குற்றம் சாட்டப்பட்டுக் கொலை செய்யப்பட்டான். பிறகு என்ன நடந்தது? அவன் சகோதரியின் மகன்அகஸ்டஸ், மக்களின் ஒப்புதலுடன் மாமன்னனாக முடிசூட்டிக் கொண்டான்! பிலாட்டோவின் சக்கரம், வட்டமாகச் சுற்றிபழைய நிலையிலேயே வந்துநின்றது!

இந்தியா ஒரு முடியரசாகவும், தில்லியை ஆளுகின்றவர் சக்கரவர்த்தியாகவும், மாநில முதல்வர்கள் குறுநில மன்னர்களாகவும் அறிவிக்கப்-படக்கூடிய சாத்தியக்கூறுகள் இல்லாமலில்லை. மன்னர்கள் காலத்துப் போர்க்காலச் சூழ்நிலைபோல், இப்பொழுது தமிழ்நாட்டில் ஒருரூபாய்க்கு அரைடஜன் ‘தளபதிகளும்’ ‘இளையதளபதிகளும்’ எல்லாத்துறைகளிலும் விரவிக்கிடக்கிறார்கள் என்பதுதானே உண்மை?
பிஜுபட்நாய்க்கை ஞாபகம் இருக்கிறதா? அவர் ஒருசமயம் கூறினார்: ‘ஜெயின் டயரியில் (ஹாவாலாபுகழ் ஜெயின்) மன்மோகன்சிங் பெயர் இடம் பெறவில்லை.

ஆகவே அவர்தான் இந்தியாவி ன் பிரதமாராக இருக்கத்தகுதியானவர்’ என்று. அது அப்படியே நடந்தும் விட்டது, வேறு பல அரசியல் நிர்ப்பந்தங்களினால். பட்நாய்க் சொன்ன காரணம், இந்திய அரசியல்-வாதிகளில், லஞ்சம் வாங்காதவர்கள் யாருமே இருக்கமுடியாதென்று. லஞ்சம் வாங்கா-விட்டாலும், மற்றவர்கள் லஞ்சம் வாங்குவதைப் பற்றிக் கவலைப்படாமல் ஒரு பிரதமர் இருக்கலாமா என்பது வேறு கேள்வி. நேருவுக்கே இந்தப் பிரச்சினை இருந்0-திருக்கிறது.

ஜெயின்டயரியில் பெயர் இடம் பெறவில்லை என்பதுதான் தகுதி என்றால், இந்தியாவின் அரசியல்வாதிகளைத் தவிர இந்தியக்குடிமக்கள் அனைவருமே பிரதமராவதற்குத் தகுதி பெற்றவர்கள் என்று இதற்கு விளக்கம் கூறப்பட்டது! ஜெயினுக்குப் பதிலாக பிறகு டெல்கி!
டெல்கியினால் ஆதாயம் பெறாத அரசியல், அதிகாரவர்க்கத்தினர் என்று பட்டியலிட்டால், அந்த லிஸ்ட் மிகக் குறுகியதாகத்தான் இருக்கும் என்றார்கள் ரோமுக்கும் இந்தியாவுக்கும் வரலாற்றில் மட்டுமல்ல, இப்பொழுதும் உறவுவகையிலும் ஒரு நெருங்கிய பிணைப்பு இருக்கின்றது என்பது நம் அனைவருக்கும் தெரிந்த விஷயந்தான்!

1 comment:

  1. இ பா சுட்டிக்காட்டும் இந்திய--கிரேக்க அரசியல்இணை கவனத்துக்கும் கவலைக்கும் உரியது.
    ஆனால் ஒன்று.
    பண்டைய கிரேக்க ஜனநாயகத்தின் எல்லைகள் மிகக் குறுகலானவை. எனவே எளிதில் சீர்குலையும் தன்மை வாய்ந்ததாகவும் சர்வாதிகாரிகளுக்கு இடம் கொடுப்பதாகவும் இருந்தது. பின்னாளில் உருவாகி வளர்ந்த மேலை ஜனநாயகம் வேறு வகைப்பட்டது. அது சரியாக இயக்கப்பட்டால் சர்வாதிகாரிகள் உருவாக மாட்டார்கள். அல்லது உருவானாலும் நீடித்து ஆதிக்கம் செலுத்தமுடியாமல் வீழ்த்தப்படுவார்கள்.
    இந்த நவீன ஜனநாயகமுறை பண்டை கிரேக்கத்தில் இருந்ததில்லை. பண்டைய இந்தியாவில் இருந்ததாக தேசியப்பார்வை கொண்ட இந்திய வரலாற்று அறிஞர்கள் பீற்றுவதில் பொருள் இல்லை. ராஜராஜனின் குடவோலை முறையை சுட்டிக்காட்டி நம் முதுகில் நாமே தட்டிக்கொள்ளவேண்டாம்.

    நம் நாட்டின் பிரச்சினை அளவுக்கு அதிகமான ஜனநாயகம் அல்ல. அண்ணல் அம்பேத்கர் எச்சரித்ததுபோல் ஜனநாயகத்தை வளர்த்தெடுப்பதற்கு பதில் கருகவிட்டுவிட்டோம்.
    இதன் காரணமாக ஏற்கனவே 1970 களிலேயே முதல் சர்வாதிகாரி சுதந்திர இந்தியாவில் தோன்றினார். அவர்தான் இந்திரா காந்தி. மெல்ல வளர்ந்து வந்த ஜனநாயக அமைப்பை அவர்தான் திரிபுக்கு ஆளாக்கினார். விளைவுகள் பூதாகாரமாக வளர்ந்து இன்று இபா கூறுவதுபோல் மூலைக்கு மூலை சிறிதும் பெரிதுமான ஆதிக்கவாதிகள் நாளுக்கு நாள் பெருகி வருகிறார்கள்.

    எனவே ஷேக்ஸ்பியர் சொன்னது போல் குற்றம் நட்சத்திரங்களிடம் இல்லை. நம்மிடம்தான் உள்ளது. குற்றம் அதிகமான ஜனநாயகத்திடம் இல்லை, குறைவான வளர்ச்சியால் கருகிப்போன ஜனநாயகத்திடம்தான் உள்ளது.

    மருதமுத்து

    ReplyDelete