Monday, February 20, 2012

நூல் அறிமுகம் - இமையம்

மனித மனத்தின் விசித்திரங்களை. . .


தூக்கத்தைத் தொலைத்தவர்களுடைய கதைகளைச் சொல்கிறது துயில் நாவல். ஒரு மனிதனின் கதையோ, ஒரு குடும்பத்தின் கதையோ- வாழ்க்கையோ விவரிக்கப்-படவில்லை. நூற்றுக்கணக்கான மனிதர்களின் கதை-வாழ்க்கை நாவலினூடாக விரிகிறது. அவரவர் கதையை-வாழ்க்கையை வாக்கு மூலங்களாக அவரவர்களே சொல்கிறார்கள். நோய், துயரம், கசப்பு-மனிதர்களை வாய்விட்டுக் கதற வைக்கிறது. நாவல் ஒரே நேரத்தில் மூன்று விதமாக வளர்கிறது. இது தமிழிற்குப் புதிது. தெக்கோடு என்ற சிறுகிராமத்தில் நடக்க இருக்கிற துயில்தரு மாதாகோயிலின் பத்து நாள் திருவிழாவில் கடற்கன்னி ஷோ நடத்தபோகும் அழகர், சின்னராணி, திருச்செல்வி ஆகியோர் அடங்கிய சிறு குடும்பத்தின் வழியே நாவல் சொல்லப்படுகிறது. இரண்டாவது தெக்கோடு செல்லும் பயணிகள் தங்கிச் செல்லும் இடமாக இருக்கிற எட்டூர் மண்டபம். மூன்றாவது தெக்கோடு கிராமத்திற்கு 1873 -1874 இல் மருத்துவம் செய்ய வந்த ஏலன்-லாகோம்பே இருவரின் கடித உரையாடல்களின் வழியே சொல்லப்படுகிறது. அழகரின் குடும்பம் தெக்கோடு செல்வதற்காக ரயிலுக்குக் காத்திருப்பதில் தொடங்கி, திருவிழா முடிந்த மூன்றாம் நாள் தெக்கோட்டைவிட்டுக் கிளம்பி ரயிலுக்காக காத்திருப்பதில் நாவல் முடிகிறது. நாவலின் நிகழ்காலம் பதினைந்து நாட்கள் மட்டுமே 1982 மே மாதத்தில்.

தெக்கோடு சிறு கிராமம். பெரிய ஊரல்ல. புனித தலமுமல்ல. தென் தமிழகத்தில் இருக்கிறது. அங்கு நூறு ஆண்டுக்கு முன்பு கட்டப்பட்ட பிரமாண்டமான துயில் தருமாதா கோயில் இருக்கிறது. கோயில்தான் விசேஷம். அதைவிட விசேஷம் வெயில். ஒவ்வொரு ஆண்டும் கோவிலில் பத்து நாள் திருவிழா நடக்கும். திருவிழாவில் கலந்துகொள்ள நாட்டின் பல பகுதிகளிலிருந்தும் மக்கள் திரள் திரளாகப் பயணிக்கிறார்கள். பயணத்தில் தங்களுடைய கதைகளை அல்ல-வாழ்ககையைச் சொல்கிறார்கள். வேறுவேறுபட்ட மனிதர்கள். வேறுவேறுபட்ட வாழ்க்கை முறைகள். குறைந்தது நாவலுக்குள் நூற்றுக்கும் மேற்பட்ட மனிதர்களுடைய, குடும்பங்களுடைய கதைகள் இருக்கிறது. எல்லாருடைய கதையும் தெக்கோட்டை மையமாக வைத்து சொல்லப்-படுகிறது. தெக்கோடு மனச்சுமையை இறக்கி வைக்கிற இடமாக, மனம்விட்டு பேசுவதற்-கான, கூச்சமில்லாமல் அழுவதற்கான இடமாக, நோய்களை ஏற்றுக்கொண்டு தூக்கத்தை, சிரிப்பை யாசிக்கிற இடமாக இருக்கிறது. தெக்கோடு ஊராகத் தெரியாமல்-தண்ணீர் நிறைந்த பிரதேசம்மாதிரி-அதில் குளித்து-கழுவி-உடற்நோய்களை, மனநோய்களைப் போக்கிக்கொள்ள விரும்புகின்றனர். மொத்த பயணிகளின் நோக்கத்திலிருந்து முற்றிலும் வேறுபட்டது அழகர் குடும்பத்தின் நோக்கம். அவர்கள் ஏமாற்றுவதற்காகப் போகிறார்கள். சாதாரண பெண் கடற்கன்னியாக வேஷமிட்டு ஏமாற்றி பிழைப்பதுதான்-அவர்களுடைய தொழில்-வாழ்க்கை நெறி. அழகர் குடும்பம்-மாதிரி வித்தைக்காட்டி ஏமாற்றுவதற்-காகவே பலர் தெக்கோட்டிற்கு வருகிறார்கள்.

நாவலில் வருகிற நூற்றுக்கணக்கான மனிதர்கள் தங்களுடைய வாழ்க்கையை ஒளிவுமறைவின்றி சொல்கிறார்கள். எத்தனை விதமான வாழ்க்கை முறைகள்? நாம் இதுவரை அறிந்திராத வாழ்க்கை முறைகள். பரந்துப்-பட்ட வாழ்க்கை அனுபவத்தைத் துயில் தருகிறது. இதுதான் நாவலின்-நாவலாசிரியர் எஸ்.ராமகிருஷ்ணனின் வெற்றி. அழகர், சின்னராணிகூட தங்களுடைய கதையை-வாழ்க்கையை அவர்கள்தான் சொல்கிறார்கள். நினைவோட்டமாக. தாயை இழந்த அழகர் இட்லி கடைக்கார கிருஷ்ணனின் மனைவி-யோடு தன் தந்தை உறவுக்-கொள்வதைப் பார்க்கிறான். அதனால் சொந்த தகப்பனாலேயே விரட்டியடிக்கப்பட்டு லாரி டிரைவரின் உதவியால் பழனி வருகிறான். பேரின்பவிலாஸ் ஹோட்டலில் வேலை செய்கிறான். அங்கிருந்து ஜிக்கியுடன் சேலம் செல்கிறான். கொஞ்ச காலம் விபச்சாரிகளோடு வாழ்கிறான். ராமி என்ற விபச்சாரியுடன் ஓடுகிறான். அவள் வேறு ஒருவனோடு ஓடிவிட சின்னராணியைக் கட்டிக்கொண்டு அவன் வாழ்வதற்காக கடைசியாக தேர்ந்தெடுக்கிற கடற்கன்னி ஷோகூட ஊர் ஊராக அலைகிற வாழ்க்கைதான். ஓரிடத்தில் நில்லாத வாழ்க்கை.

நாவலில் நிறைய பெண்கள் வருகிறார்கள். எல்லாப் பெண்களுமே திருவிழாவில் காணாமல்போன குழந்தைகள்மாதிரி பரிதவித்து நிற்கிறார்கள். வெளிநாட்டிலிருந்து சேவை செய்ய வந்த ஏலன் குதிரை ஓட்டியால் கொல்லப்படுகிறாள். இரண்டு மகள்களை உயிரோடு வைத்து வாழ வழிதெரியாமல் சூசனா தற்கொலை செய்து கொள்கிறாள். ரோமி அடுத்தடுத்து ஆட்களை மாற்றிக்-கொண்டே போகிறாள். டோலி காதல் என்ற பெயரில் ஏமாந்து ஐந்து ரூபாய் கிராக்கியாகி நடுத்தெருவில் செத்து அனாதை பிணமாகக் கிடக்கிறாள். சின்னராணி அழகரிடமிருந்து தப்பிக்க வழியின்றி கடற்கன்னியாகி கூண்டுக்குள் அடைப்பட்டு காட்சிப்பொருளாகி கிடக்கிறாள். அமுதினி மட்டும்தான் தன் ஆசையை, விருப்பத்தை நிறைவேற்றிக்-கொள்கிறவளாக இருக்கிறாள். ஆனால் அவளும் அமைதியாக இல்லை. கிடைத்த வாய்ப்பு பறிப்போய்விடுமோ என்ற கவலையில் மனநோயாளியாகி எல்லாரையும் இம்சிக்கிறாள். கொண்டலு அக்கா-பிறர் சொல்வதையெல்லாம் அலுக்காமல், முகம் சுளிக்காமல் கேட்டுக்கொண்டு ஜடம்மாதிரி இருக்கிறாள். ஜிக்கி-பாவம் கிழவியாகி-விட்டாள். ஒரு கிளாஸ் சாராயத்திற்கு கையேந்தி நிற்கிறாள். திருச்செல்வி ஊனமான குழந்தை. குழந்தை பிறக்கவில்லை என்பதால் தனிமைப்-படுத்தப்படுகிறாள் கோமகள். கல்யாணமாகாததாலேயே நங்கா தற்கொலை செய்துகொள்கிறாள். சென்னகேசவபெருமாளின் தங்கையும், அவளுடைய மருமகளும் வாசகர் மனதில் என்றும் இருப்பார்கள். பசியை தாங்க முடியாமல் தாழ்த்தப்பட்ட சாதியினரிடம் கூழ்வாங்கிக் குடித்ததற்காக கர்ப்பிணியைக் கொன்று தானும் தற்கொலை செய்து-கொள்கிறாள் கிழவி. சாவதிலும் சாதி பெருமை. நாவலில் வருகிற பெண்கள் சராசரியான எளிய வாழ்வைக்கூட வாழ முடியமல் தத்தளிக்கிறார்கள். அமைதியாக ஒருசில பொழுதுகளைக்கூட அவர்களால் நகர்த்த முடியவில்லை. ஆண்களாவது நல்லவிதமாக இருக்கிறார்களா, தூங்குகிறார்களா என்றால் அதுவுமில்லை. பெண்களைவிட அவர்கள்தான் கொண்டலு அக்காவிடம் வாய்விட்டு கதறி அழுகிறார்கள். பெண்கள் தங்களுக்குள்ளாகவே அழுகிறார்கள். ஏன் யாருமே அமைதியாக இல்லை. இதுதான் நாவல் வாசகர்முன் வைக்கும் முக்கியமான கேள்வி. இதைத்தான் நாவலாசிரியர் நாவல் முழுக்க திரும்பத்திரும்ப ரகசியமாக கேட்டுக்கொண்டேயிருக்கிறார். ஒரு விதத்தில் நம்முடைய கடவுள்கள் கல்லாகவும், மண்ணாகவும், மரமாகவும் இருப்பது நல்லதுதான். கூடைகூடையாக கொட்டப்படும் மனச்சுமைகளை, நோய்க்கிருமிகளை அவர்கள் மட்டும் எப்படி தாங்க முடியும் என்ற கேள்விக்குக் கடைசியாக எஸ்.ராமகிருஷ்ணன் வந்து விடுகிறார்.

நாவலில் மனிதர்கள் ஓயாமல் ஓடிக்கொண்டேயிருக்கிறார்கள். வாழ்க்கையின் நெருக்கடிகள் துரத்திக்கொண்டேயிருக்கிறது. நோய், பிடுங்கல்கள், மனச்சிக்கல்கள் எல்லாவற்றையும் தொலைத்துவிட்டு ஓட நினைக்கிறார்கள். அதற்கான நம்பிக்கையைத் தருகிற இடமாக இருப்பது தெக்கோடு. விடுதலையை அல்ல -தற்காலிக நம்பிக்கையைத் தருகிறது. அதற்காக மனிதர்கள் பயணிக்கிறார்கள். மனச்சுமையிலிருந்து, உடல், மன நோயிலிருந்து விடுபடுவதற்கான பயணத்தில்-முடிவு என்ன என்பதை நாவல் சொல்லவில்லை. அவ்வாறு சொல்வது நாவலின் வேலையும் அல்ல. பயணமும், பயணத்திற்கான நோக்கம்தான் முக்கியம். துயில் தரு மாதா -மரண தேவதையாகக்கூட இருக்கலாம். மனித பயணத்தின் முற்றுப்புள்ளி-தெக்கோடாக இருக்கலாம். இந்து முறைப்படி வடக்கு நோக்கிய பயணம்-மரணம். வனப்பிரஸ்தம்.
“இரவில் உறக்கமற்றுபோனவர்கள் பெருகினார்கள்” (139) இதுதான் நாவலின் மையம். நாவலில் வரக்கூடிய நூற்றுக்-கணக்கான மனிதர்களுக்கு சுமக்க முடியாத பாரமாக இருப்பது-நேற்றுவரையிலான வாழ்க்கைப்பற்றிய நினைவுகள்தான். அந்த பாழும் நினைவுகளிலிருந்து விடுபடவும், துண்டித்துக்கொள்ளவும் முயல்கிறார்கள். ஆனால் இன்றைய வாழ்விற்கான ஆற்றலை நேற்றைய வாழ்வுதான் அளிக்கிறது என்று எஸ்.ராமகிருஷ்ணன் பூடகமாக உணர்த்துகிறார். ஒவ்வொரு மனிதனும் மன அமைதியைத் தேடி அல்லது தூக்கத்தைத் தேடி அலைகிறார்கள். கொண்டலு அக்காவிடம் தங்களுடைய கதைகளைச் சொல்கிற சீயென்னா, சிவபாலன், கூட்டுறவு துறையின் உயர் அதிகாரி, கோமகள் போன்ற பலரும், அவர்களுடைய அமைதியை, தூக்கத்தைத் தொலைத்தவர்கள் அவர்கள்தான். அதைத் தேடுபவர்களும் அவர்கள்தான். பொதுவாக மனித வாழ்க்கையில் நாளை என்பதுதான் பிரதானம். ஆனால் துயில் நாவல் முன்வைப்பது நேற்று என்பதை. நேற்றைய வாழ்க்கையைச் சொல்வதற்காகத்தான் இன்று இருக்கிறது.

நாவலில் இவர்தான் முக்கியமான பாத்திரம் என்றில்லை. இதுதான் துயில் நாவலின் சிறப்பு. ஒரு ஊர் நாவலின் மையமாகி இருக்கிறது. அதாவது மண். மனித வாழ்க்கை மண்ணை அடிப்படையாகக் கொண்டதுதானே. பிரமாண்டமான வீட்டில் எது முக்கியம், எது முக்கியமல்ல என்பதைக் கூற முடியாது. எல்லாமும் முக்கியம் வீட்டிற்கு. அது போன்றதுதான் துயில் நாவலில் வரும் பாத்திரங்கள்.

மனித மனத்தின் விசித்திரங்களைப் படம் பிடிக்க முயன்றுள்ளார் எஸ்.ராமகிருஷ்ணன். ஒன்றின் மீது பற்றுக்கொள்வதும் சட்டென்று அதிலிருந்து விலகிவிடுவதும் மனித மனத்தின் இயல்பாக இருக்கின்றன. மனைவி பக்கத்தில் இருக்கும்போதே ரயில் பயணி பொன்னியுடன் காதல் கொள்கிறான் அழகர். முன்பின் தெரியாத மனிதனுடன் படுப்பதற்கு உடனே அவளும் சம்மதிக்கிறாள். மனிதர்களுக்குத் தங்கள் மீதோ, தங்களுடைய செயல்களின் மீதோ மதிப்போ கௌரவமோ கிடையாது. எல்லாருமே கோழைகள். வாய்விட்டுக் கதறி அழுகிறார்கள். ஆனால் வாழ்வதற்கான ஆசையை மட்டும் வளர்த்துகொண்டே இருக்கிறார்கள். இது எப்படி மனித மனதிற்குள் நிகழ்கிறது என்பதை சொல்கிறது-துயில். சூசனாவும், நங்காவும்தான் தற்கொலை செய்து கொள்கிறார்கள். அவர்களிடமிருந்த துணிச்சல் வேறு யாருக்குமில்லை.
நாவலில் ஏலன்-லாகோம்பே-கடித உரையாடல் மதிப்பு வாய்ந்தது. ஒரு நூற்றாண்டுக்கு முந்தைய தமிழகம்-மக்கள்-குணாதிசயங்கள் அனைத்தும் மிகையில்லாமல் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன. வரலாற்றைச் சொல்ல தேர்ந்தெடுத்த வடிவமும்-உரையாடலும் எஸ்.ராமகிருஷ்ணனின் திறமையை காட்டுகிறது. நாவல் எழுதப்பட்ட விதம், நாவலின் மையம், மொழி, கால குழப்பமின்மை எல்லாமும சேர்ந்து நாவலைத் தொடர்ந்து படிக்க தூண்டுகின்றன.

அறிந்ததிலிருந்து அறியாதவற்றுக்கு, தெரிந்ததிலிருந்து தெரியாதவற்றுக்கு இட்டு செல்வதே இலக்கியப் படைப்பின் அடிப்படை அலகு. நாவல் என்பது கதை சொல்வதுதான். அதே நேரத்தில் கதை சொல்வது மட்டுமே அல்ல. தகவல்கள் கட்டாயம் இருக்க வேண்டும். ஆனால் தகவல் களஞ்சியமாக இருக்கக்கூடாது. வாழ்க்கை அனுபவங்களைத் தகவல்களாக இல்லாமல் வாழ்க்கை அனுபவங்களாக மாற்றுகிற நுட்பம்தான் ஒரு படைப்பின் வெற்றியாக இருக்கும். ஒரு சிறந்த படைப்பு வாசகனின் சிந்தனைக்கும், அவன் இட்டு நிரப்புவதற்கும் இடம் தரும். அப்படியான சந்தர்ப்பத்தைத் துயில் தரவில்லை. நாவலாசிரியர் பேசிக்கொண்டே இருக்கிறார். ஓயாத பேச்சு. நாவலில் வருகிற அனைவருமே நவீன கவிதை மொழியில் தத்துவமாகப் பேசுகிறார்கள். தன் இயல்பில் பேசிய ஒரே பாத்திரம்-பொன்னி மட்டும்தான். குழந்தையான திருச்செல்விக்கூட அல்ல. கொண்டலு அக்காவிடம் பேசுகிறவர்களில் ஒரு ஆள்கூட சாதாரணமாகப் பேசவில்லை. வாழ்க்கை வேறுவேறாக இருக்கிறது. எஸ்.ராமகிருஷ்ணன் மிகைநாடிய கலைஞனாக இருக்கிறார். கால் ஊனமாக திருச்செல்வி நாவல் முழுக்க ஓடிக்கொண்டேயிருக்கிறாள். விபச்சாரியான ரோமி சிறுவனான அழகருடன் படுக்க ஆசைப்படுவது விநோதம். நூற்றுக்கணக்கான ஊர்களின் பெயர்கள் வருகின்றன. வெறும் பெயர்களாக. எந்த அடையாளமும், தனித்துவமும் இல்லை. ஊர்கள்தான் ஒவ்வொரு மனிதனுக்கும் தனித்த அடையாளத்தை வழங்குகின்றன.
ஒரு இளம் எழுத்தாளனுக்கு மொழி மீதான கவர்ச்சி இருக்கலாம். எஸ்.ராமகிருஷ்ணனுக்கு அவ்வாறு இருப்பது நியாமில்லை. அலங்காரமான சொற்களின் மீதான கவர்ச்சி படைப்பாளியை வீழ்த்திவிடும். மொழியைக் கையாள்வதில் சிக்கனமும், கூடுதல் கவனமும் அவசியம். அவ்வாறு இல்லாதப்பட்சத்தில் அதுவே பலகீனமாகிவிடும். அதுதான் துயில் நாவலில் நிகழ்ந்திருக்கிறது. “துண்டிக்கப்பட்ட பல்லியின் வால் தனியே துடித்துக்-கொண்டிருப்பதுபோல தங்களின் கண்முன்னே பகல் துடித்து கொண்டிருப்பதை அவர்கள் பார்த்தபடியே இருந்தார்கள் (27)”, “மேய்ச்சலுக்குப்போன ஆடுகளை ஒட்டிக்-கொண்டு போவதுபோல யாரோ தெற்காக மேகங்களைக் கொண்டு-போய்க்-கொண்டிருந்தார்கள். (139)”, “அப்பாவின் நினைவு தண்ணீரில் நகர்ந்து செல்லும் மேகம்போல சத்தமில்லாமல் ஜிக்கிக்குள் ஊர்ந்து செல்லத்துவங்கியது.” (296)”, “அப்பாவின் சம்பாத்தியத்தில்தான் அம்மாவின் தங்கைகள் யாவரும் திருமணம் செய்துபோனார்கள்.” (301), “அந்த மழை திருடனைத் துரத்தி ஓடும் ஊர் மக்களின் ஆவேசத்தைப் போலிருந்தது.” (439), “தண்டவாளங்கள் மீது கம்பளி பூச்சி ஊர்ந்து செல்வதுபோல மெதுவாக முக்கி முக்கி சென்று கொண்டிருந்தது-ரயில் ” (23), “சூடு தாங்கா ரயில்வே கிராதிகள் முறுக்கேறி திமிறிக்கொண்டிருந்தன.”(23), “புழுதி படிந்து கசங்கிகிடந்த காகிதம் ஒன்று வெயில் தாளாமல் நடுங்கியபடி இருந்தது” (23), “ரயில் சீற்றத்துடன் பெருமூச்சிட்டபடி நின்று-கொண்டிருந்தது” (58), “நாங்கள் மழையின் முதுகைக்கூட பார்க்கவில்லை” (455), இதுபோன்ற கவித்துவமான ஆனால் பொருள் தராத அல்லாத முரண்பட்ட பொருள் தருகிற வாக்கியங்கள் நாவல் முழுவதும் நிறைந்து இருக்கின்றன. இப்படியான வாக்கிய அமைப்புகள் நாவலுக்கு வலு சேர்ப்பதற்குப் பதிலாக பலகீனத்தை உண்டாக்கும்.

---------------துயில்,
-எஸ்.ராமகிருஷ்ணன்

உயிர்மை பதிப்பகம், 11/29, சுப்ரமணியம் தெரு, அபிராமபுரம், சென்னை - 18, விலை 350/-

No comments:

Post a Comment