நரசய்யா
டி. எஸ் சொக்கலிங்கம், வ. ரா வைப்பற்றி எழுதுகையில் (வ. ரா. மணிமலர்) சொல்வார்: “1934 தமிழ்நாட்டிற்கு ஒரு முக்கியமான காலம். அதில் ஏற்பட்ட மாறுதல்களை எப்போதும் மறக்கமுடியாது. இன்று தமிழ் நாட்டில் தமிழ் மொழியிலும் புத்தக வளர்ச்சியிலும் ஏற்பட்டிருக்கும் அபிவிருத்திகள் எல்லாம் அந்த மணிக்கொடி காலத்திற்குப் பின்னதாக ஏற்பட்டதுதான். அந்த மாறுதல்களை ஏற்படுத்தியதற்கான முக்கிய பங்கு வ. ரா.வைச் சேரவேண்டும்” அவ்வாறு தனது உழைப்பால் முன்னிறுத்திய மணிக்கொடியை விட்டு வ. ரா விலகியது சோகக் கதை. இவ்வளவு சிறந்த நண்பர்களுள் என்ன கருத்து வேற்றுமை இருந்திருக்கலாம் எனத் தெரியவில்லை.
தொடர்ந்து வ. உ. சியின் உந்துதலால் கொழும்பு சென்று அவ்வூரிலிருந்து வெளிவந்து கொண்டிருந்த பத்திரிகையான வீரகேசரியில் சேர்ந்தார். (வ. ரா வுக்கு 1935, மே மாதம் 8 ஆம் தேதி, வ. உ. சி எழுதிய கடிதத்தில் இவ்வாறு குறிப்பிடுகிறார்: “தேசத்திற்கு சேவை செய்ய வெளிக்கிளம்புக. கொழும்பு ‘வீரகேசரி’ தினசரிக்குத் தலைமை ஆசிரியர் தேவை. அப்பதவியைத் தாங்கள் வகித்து தேசத்திற்கு சேவை செய்ய வேண்டுமென்பது எனது விருப்பம். அதன் அதிபர் எனது நண்பர். நல்ல தேசாபிமானி. என் சொல் படி தங்கள் செலவுக்குப் பணம் கொடுப்பார்.... கடவுள் துணை. தங்கள் அன்பன் வ. உ. சிதம்பரம்.”)
வீரகேசரி தலைப்புக் கடிதக் காகிதத்தில் (Letter head) 31.2.1935 அன்று, வ. ராமஸ்வாமி ஐயங்கார், கு.ப. ராஜகோபாலனுக்குக் கொழும்புவிலிருந்து கடிதம் எழுதுகிறார்: அதில் அவர் சென்னையை விட்டுச் சென்றதைப் பழங்கதை என்று குறிப்பிடுகிறார். “முதலில் நான் சற்று வருத்தப்பட்டதுண்டு. ஆனால் என்னையே நான் தேற்றிக் கொண்டுவிட்டேன்” என்றும் சொல்கிறார்.
அக்கடிதம் எழுதுவதன் காரணம் விகடனில் வெளியிடப்பட்ட கடிதங்கள் தாம்! “நெல்லை நேசன் செய்த வேலையைப் பார்த்தீர்களா? ஆள் சேர்க்க எத்தனித்து, ஆனந்த விகடனுக்குப் பகிரங்கக் கடிதம் எழுதியிருப்பதையும் அதற்கு ரா.கி. பதில் கொடுத்திருப்பதையும் பார்த்திருப்பீர்கள். ஆனந்த விகடனை ‘ஆட்சேபித்து’ யாரேனும் பத்திரிகையில் எழுதுவார்களோ என்று பார்த்துக் கொண்டிருந்தேன் ஒருவரையும் காணோம். கடைசியாக நானே ஒருவாறு ஒரு மறுப்பு எழுதி சுதேசமித்திரனுக்கு அனுப்பினேன். அது நவம்பர் மாதம் 30 ஆம் தேதி சனிக்கிழமை பத்திரிகையில் வெளியாகியிருப்பதை, நேற்று கொழும்பில் படித்து ஒருவாறு மன நிம்மதி அடைந்தேன். ரா. கி இவ்வளவு அநாகரீகமாக எழுதுவார் என்று நான் நினைக்கவேயில்லை.”
இக்கடிதத்தில் இரு விஷயங்கள் தெளிவாகின்றன. இக்கடிதம் எழுதுகையில் கூட ‘இலக்கிய மாணாக்கன்’ என்ற பெயரில் எழுதியது நெல்லை நேசன் என்பவர் பி. ஸ்ரீ. ஆசார்யா தான் என வ. ரா. நம்பினார். (கல்கி அதை எழுதியது நெல்லை நேசன் இல்லை என்றுதான் சொன்னாரே ஒழிய யாரெழுதியது எனக் கூறவில்லை. சிட்டி அதுவும் கல்கி எழுதியது தான் என நினைப்பதாக என்னிடம் கூறினார். இதைக் குறித்து, வ.ரா. சுதேசமித்திரன் டிசம்பர் 14, 1935 இல் எழுதிய கட்டுரையில் விவரிக்கிறார்: “நெல்லை நேசன் இலக்கிய மாணாக்கன் என்ற பெயருடனும் கட்டுரை எழுதுவதுண்டு. அந்த அனுபவத்தைக் கொண்டு இலக்கிய மாணாக்கன் என்ற பெயர் பூண்டு ஆனந்தவிகடனில் எழுதினார் என்று ஊகம் செய்தேன். அவ்வாறு ஊகம் செய்தது தவறு என்றும் நண்பர் நெல்லை நேசன் எழுதவில்லை என்றும் அன்பர் ரா. கி. எழுதியிருப்பதை அறிந்துகொண்டு நண்பர் நெல்லை நேசனுடைய பெயரை ஆனந்தவிகடனில் புகுத்தியதற்காக வருந்துகின்றேன். இரண்டு பேரும் ஒருவராய் இருந்தாலும், தனித்தனி பேர்வழியாக இருந்தாலும் விஷயம் மாறிப்போய்விடாது. நண்பர் நெல்லை நேசனுக்கு மனவருத்தம். எழுதி இருந்தாலும் அவர் என்னை மனப்பூர்வமாக மன்னிப்பார் என்று எனக்குத் தெரியும்”)
இரண்டாவது, கல்கியின் பதில் அவர் மனதை வெகுவாகப் பாதித்திருந்தது என்பது. ஏனெனில் ஒவ்வொரு மணிக்கொடி இதழும் வந்தவுடன், ஆரம்ப நாட்களில் கல்கி மணிக்கொடி காரியாலயத்திற்கு வந்து பாராட்டுவார் என ராமையா கூறியுள்ளார்.
இந்தக் கடிதத்தில் தொடர்ந்து அவரெழுதியிருப்பது: “ரா. கி.யின் வேலை எளிது. நம்முடைய வேலை கொஞ்சம் கஷ்டமானது. ஏனெனில் ஜனங்களின் உள்ளத்தில் அறிவுத் தாகமும் நியாய உணர்ச்சியும் அதிகமாக ஏற்படவில்லை.” முடிக்குமுன்னர் இவ்வாறு சொல்கிறார்: “இன்னும் நாலைந்து மாத காலம் கொழும்பில் இருப்பேன். ஒரு வருஷ ஒப்பந்ததத்தின் பேரில் இங்கு வந்தேன். அது முடியுமுன்னரே இந்தியாவுக்குத் திரும்பி வந்து விடவேண்டும் என்று துடித்துக் கொண்டிருக்கிறேன். ஏதோ பக்குவமான வேலை இந்தியாவில் செய்யலாம் போல அறிகுறிகள் காணப்படுகின்றன. விபரமாக, அதைப் பற்றி எழுத முடியாவிட்டாலும் நேரில் வந்து சொல்கிறேன். இந்தக் கடிதம் ‘இரட்டையர்களாகிய’ உங்கள் இருவருக்கும் எழுதியது என்பதை நினைப்பூட்டத் தேவையில்லையே? உங்கள் அன்புள்ள வ. ராமஸ்வாமி” என்று முடித்துள்ளார்.
சாதாரணமாக இலக்கிய இரட்டையர் களாக அறியப்பட்டவர்கள் கு. ப. ரா வும், ந. பிச்சமூர்த்தியும் தான். ஆனால் வ. ரா வின் வாக்கைத் தெய்வ வாக்காக எடுத்துக் கொண்டது, முக்கியமாக சிட்டிதான்! ஆகையால் இங்கு சிட்டியும் கு. ப. ரா வும் இரட்டையர் ஆகிவிட்டனர்.
அக்கடிதம் சிட்டி கைகளுக்கு வந்தபோது, ரா. கி வின் ‘பகிரங்கக்’ கடிதம் சுதேசமித்திரனில் வெளிவந்திருந்தது. வ. ரா. வின் நான்கு பக்கக் கடிதத்தைமணிக்கொடி காரியாலயத்தில் சிட்டி படித்துக் காட்ட நண்பர்களிடையே பேச்சு நடந்தது. அங்கு (1935 செப்டம்பர்) ராமையா, புதுமைப் பித்தன், ஆர்யா, செல்லப்பா ஆகியோர் இருந்தனர். சி சு. செல்லப்பா “அந்த விவகாரம், தனக்கும் கல்கிக்கும் உள்ள கருத்து மோதல் இல்லை; மற்றவர்களும் அதில் ஈடுபடவேண்டும் என்று எதிர்பார்ப்பது போல அமைந்திருந்ததாக எனக்கு ஞாபகம்” என்கிறார் ஆகையால் சிட்டிதான் பதில் எழுதவேண்டும் என்று வலியுறுத்தினார். உடனே சிட்டியின் முகத்தில் பிரகாசம் தெரிந்த்தாக செல்லப்பா கூறுவார். “நான் சொல்றேன் நீ எழுது” என்றாராம் சிட்டி! அவ்வாறு அக்கட்டுரை எழுதி முடிக்கப்படுகையில் நள்ளிரவு தாண்டிவிட்டது. அடுத்த வாரமே அது சுதேசமித்திரனில் வெளிவந்தது. (சிட்டி சாதாரணமாக எதற்கும் உணர்ச்சி வசப்படுபவர் இல்லை. ஆனாலும் இப்பகுதியை அவர் எனக்கு விளக்கிக்கொண்டிருக்கையில், அந்நாளைக்கே அவர் சென்று விட்டது போல எனக்குத் தோன்றியது!)
பின்னர் ராமையாவும் புதுமைப் பித்தனும் தினமணியில் இரண்டு கட்டுரைகள் எழுதினார்கள். ஆனால் அவை கல்கியைத் தாக்கியே எழுதப்பட்டவை! இதைப் பற்றி விவரமாகவே ஆய்ந்துள்ளவர்கள் சிவத்தம்பியும் மார்க்சும். (பல வருடங்களுக்குப் பின்னர், இதை நினைவூட்டி, கா. சிவத்தம்பி சிட்டிக்கு எழுதிய கடிதமும் எனக்குக் கிடைத்துள்ளது. அவர்கள் சொல்வது போல, அப்போது தமிழ் இலக்கிய ஜாம்பவான்கள் இரு கோஷ்டிகளாகப் பிரிந்துவிட்டனர். மணிக்கொடி கோஷ்டியில் சிட்டி ஒருவர் தான், இலக்கியத் திறனாய்வு முறையில், விருப்பு வெறுப்பு இன்றி, பாரதி எழுத்துகளை ஆராய்ந்தார். அவருக்கு உறுதுணையாக இருந்தவர்கள் கு. ப. ரா, செல்லப்பா, பிச்சமூர்த்தி ஆவர். மற்றவர்கள், எழுதுகையில் காழ்ப்புணர்ச்சியே மிகுந்திருந்தது. ஆனால் அது அக்காலத்தில், மணிக்கொடி வாரிசு இளைஞர்களை எவ்வளவிற்குப் பாதித்திருந்தது என்பதைக் காட்ட மற்றொரு உதாரணம் பார்க்கலாம். வி. ரா. ராஜகோபாலன் என்றவொரு திருச்சி இளைஞர்; கலாமோஹினி என்ற பத்திரிகையை திருச்சியிலிருந்து நடத்திக் கொண்டிருந்தார். மணிக்கொடி வாரிசாக அறிவித்துக் கொண்டவர். அவர் கல்கி குழுவில் இருந்தவர்களைச் சுலபமாக விட்டு வைக்கவில்லை! இந்த விவகாரம் முடிந்து சில வருடங்களுக்குப் பிறகுகூட கல்கியில் எழுதுவோரை விமர்சனம் செய்துள்ளார்! சாலிவாஹனன் என்ற பெயரில் எழுதுவார். 1942 ஆம் வருடத்தில், டி. கே சிதம்பரநாத முதலியாரை அவரது ராமாயணத் தொடருக்காக விமர்சித்தார். அத்தொடரில் கம்பனின் சில கவிதைகளை டி கே சி மாற்றி எழுதியிருப்பதாக அறிந்து அவரைத் தாக்கினார். (அப்போது சிட்டி ஆங்கிலத்தில் இவ்வாறு எழுதியிருந்தார்: "This is an index of the righteous indignation, the Manikkodi group felt, when the Kalki TKC group arrogated to itself the preservation of Tamil letters"1)
கலாமோஹினியில் வி. ரா. ரா. எழுதிய கவிதை (சாலிவாஹனன் என்ற பெயரில்):
“கங்கு கரையற்ற கலவைக் கம்பன் பாட்டை
கழித்தொழித்துக் கூட்டித்தன் கலப்பைச் சேர்த்து தங்களிடம் உள்ள பெரும் புன்மைப் புத்தித்
தான் தோன்றித்தனம் செருக்கு எல்லாம் தோன்ற
இங்கிவை தான் கமபனுடைக் கனிந்த பாடல்
இவற்றையவன் இவ்வாறே பாடக்கேட்டோம்
எங்களுக்கே தெரியுமவன் கவிதைப் பண்பு
என உணர்த்தி திரிகிறதோர் விஷமக் கூட்டம்..”
தொடர்ந்து சிவனையே எதிர்த்துக் குரலெழுப்பிய நக்கீரனைக் குறிப்பிட்டு,
“மங்கிவிட்ட கொஞ்ச ரச மறம் கொண்டேனும்
மாபாதச் செயலிதனை மடக்காவிட்டால்,
சிங்கமெனச் சிவன் தனையேதிர்த்த கீரன்
சீர் மிகுந்த தமிழ்ப் பெருமை அழிந்தே போகும்”
அப்போதைய காழ்ப்புணர்ச்சியை இது காட்டுகிறது. ஆனால் சிட்டி அது போன்ற உண்ர்வுகளுக்குச் சற்றும் இடம் கொடாமல், சீரிய நிலையில் நின்று வாதம் புரிந்தது, தமிழிலக்கிய உலகத்திற்கே ஒரு முன்னோடி!
ஆனாலும் கல்கி சமயம் கிடைத்த போதெல்லாம் மணிக்கொடி குழுவை நையாண்டி செய்து கொண்டு தான் எழுதிவந்தார்!
மித்திரன் வேண்டுகோளின் படி தொடர்ந்து எழுதப்பட்ட சிட்டி, கு. ப. ரா இருவரின் கட்டுரைகளும் சேர்ந்து ஒரு நூலாக, முதற் பதிப்பு சங்கு கணேசனால் பிரசுரிக்கப்பட்டது. மலிவுப் பதிப்பாக 1937 இல் ஆறணா விலை மதிப்புடன். வ.ராவின் முதல் கட்டுரையைச் சிறந்த முறையில் விவரித்தவர் செல்லப்பா; அது கண்ணன் என் கவியின் அடுத்த பதிப்பில் பின்னணியாக வெளியிடப்பட்டது.
சிட்டியுடன் சேர்ந்து பல ஆய்வுகளைப் பிற்காலத்தில் செய்த சோ. சிவபாத சுந்தரம், இந்த இரண்டாவது பதிப்புக்கு அணிந்துரை எழுதினார். அது 1981 இல் வந்தது (பாரதியின் நூற்றாண்டு விழாவையொட்டி) ஆக, முதற் பதிப்புக்கும் இரண்டாவது பதிப்புக்கும் இடைவெளியே 40 ஆண்டுகளுக்கும் மேலே!
சிவபாத சுந்தரம் இலங்கையில் முதன் முதலாக வ. ரா வைச் சந்தித்தார். தனியாக ஒரு அறையில் இருந்த அவருடன் சௌந்தரராஜன் என்ற நண்பரும் தங்கியிருந்தார். அவர் வ. ரா. வை சோ. சி க்கு அறிமுகம் செய்து வைத்து, “இவர் எனது அம்மான்சேய். வீரகேசரிக்கு ஆசிரியராக வந்திருக்கிறார். இப்போதைக்குத் தங்குவதற்கு வசதியான இடம் கிடைக்கவில்லை. நம்மோடு தங்கலாமா?” எனக் கேட்டாராம்.
அது சிவபாத சுந்தரத்திற்கு மட்டற்ற மகிழ்ச்சியைக் கொடுத்ததாம்! முப்பதுகளின் ஆரம்ப நாட்களிலேயே அப்போது அங்கு கல்வி அதிகாரியாக இருந்த யாழ்ப்பாணம் தி, சதாசிவ அய்யர், முயற்சியால், பாரதி வரலாறும் (வ. ரா. எழுதியது: இது தான் பாரதியைப் பற்றிய முதல் நூலாகக் கருதப் படுகிறது) அவர் கவிதைகளும் பாட நூல்களில் சேர்க்கப்பட்டுவிட்டன. ஆகையால் வ. ரா. அங்கு அறியப்பட்டிருந்தார்.
1- சாதாரண மனிதன் பக்கம் 74 – 75
No comments:
Post a Comment