Friday, October 7, 2011

கடைசிப்பக்கம்

தாகூரும் பாரதியும்
இந்திரா பார்த்தசாரதி

தாகூருக்கு எந்தவிதத்திலும், கவிதைப்-படைக்கும் ஆற்றலிலோ, ரசனையிலோ, சிந்தனை வீச்சிலோ, உலகளாவியப் பார்வையிலேயோ குறைவில்லாதவர் பாரதி. இருப்பினும், இந்திய இலக்கிய உலகம், பாரதி கவிஞர் என்ற முறையில் அவருடைய முழுப் பரிமாணத்தை உணர்ந்த-தாகத் தெரியவில்லை.தாகூர் இந்த வகையில் அதிர்ஷ்டம் செய்தவர். செல்வம்மிக்க குடும்பத்தில் பிறந்தவர். நோபல் பரிசைக் குறிக்கோளாகக் கொண்டு அதை அவரால் அடையவும் முடிந்தது. வெற்றி தரும் வெற்றியைப் போல் வேறுஎதுவுமில்லை. நோபல் பரிசு தாகூரை இந்தியாவின் இலக்கிய icon ஆக அடையாளம் காட்டியது.

பாரதிக்கு இவ்வகையில் எந்தவிதமான அதிர்ஷ்டமுமில்லை. இந்தியாவின் தெற்குக்-கோடியில் தமிழ்நாட்டில் பிறந்து, கவிஞன் வாழ்க்கையை மேற்கொண்ட அவர், உலகளாவிய விருது எதனையும் இலட்சியக் கோட்பாடாகக் கொள்ளவில்லை. நாமகள் சொல்வளம் கொடுத்தாளே தவிர, சோற்றுவளம் கொடுக்கவில்லை. வாழ்நாள் முழுவதும் வறுமையிலேயே உழன்றார்.

திருமகளின் செல்வக் குழந்தையாய்ப் பிறந்து, உலகம் முழுவதையும் பன்முறைச் சுற்றி வருவதற்கான வசதிகள் இருந்து, இலக்கியம் படைத்த தாகூரையும், வயிறு காய்ந்தாலும் கவிதையே மூச்சாகக் கொண்டு வாழ்ந்த பாரதியும், இவர்கள் இருவருக்கும் அமைந்துவிட்டச் சமூகப் பின்னணியில் பார்க்கும்போதுதான், பாரதியின் இலக்கியமேன்மை நமக்கு விளங்கும்..
தாகூர் குடும்பம் சர்வதேச அளவில் கலை உலகத் தொடர்பு உடையது. தாகூர் நோபல் பரிசு பெறுவதற்கு எட்டுமாதம் முன்புதான், கலை உலக விற்பன்னராகிய ஸ்வீடிஷ் இளவரசர், தாகூர் இல்லத்தில் தாகூர் குடும்ப விருந்தினராக இரண்டு மாதங்கள் தங்கியிருந்திருக்கிறார். கலைபற்றிய அறிவார்ந்த விவாதங்கள் அன்றாட நிகழ்ச்சி நிரல்.மேல் நாட்டுக்கலாசார இலக்கியச் சூழ்நிலையைப் புரிந்துகொள்ள இந்தப் பரிவர்த்தனைகள் உதவின.
கீதாஞ்சலி வங்கமொழியில் பிரசுரமானபோது. கடுமையான விமர்சனத்துக்கு உள்ளாகியது. தாகூர் அதை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார். வங்காள மொழியிலிருந்த கவிதைகள் 157. அவற்றில், பலகவிதைகளைத் தவிர்த்துவிட்டு, ‘மேல்நாட்டு இலக்கிய ரசனை நுண்ணுணர்-வுக்கேற்ப’’ புதிய 53 கவிதைகள் சேர்த்து (அவர் முதலில் இவற்றை ஆங்கிலத்தில் எழுதிய பிறகுதான் வங்கமொழியில் அவற்றைப் பெயர்த்தார் என்றும் கூறுவதுண்டு) அவற்றைப் பிரசுரத்துக்காக லண்டன் எடுத்துச் சென்றார். நோபல்பரிசு நோக்கி வைத்த முதல் அடி இது.
நோபல்பரிசு பெற்றிருந்த டபில்யூ.பி. யீட்ஸ் என்ற ஐரிஷ் கவிஞரின் முன்னுரையுடன் ‘கீதாஞ்சலி’ பிரசுராமாக வேண்டுமென்று அவர் விரும்பினார். ஒரு பொது நண்பர் மூலம் இது சாத்தியமாயிற்று.

யீட்ஸுக்கு இக்கவிதைகள் ஒருபுதிய உலகத்தை அறிமுகம் செய்து வைத்தன. தமிழ்நாட்டுப் பக்தி இயக்கக், கவிஞர்கள் (நாயன்மார்கள், ஆழ்வார்கள்), ஜலாலுதீன்ரூமி, கபீர், சூர்தாஸ் போன்றவர்களின் mysticism பரிச்சயமானவர்களுக்குத் தாகூரின் ‘கீதாஞ்சலி’ ஒரு புதிய வரவாகத் தெரியாது. ஆனால் யீட்ஸுக்கு அவை புதியவையாக இருந்தன. நீண்ட முன்னுரை எழுதினார். நோபல் பரிசை நோக்கி வைத்த இரண்டாம் அடி இது. ஆனால், தாகூருக்கு நோபல்பரிசு கிடைத்ததும், ‘இந்நூலுக்கு நோபல் பரிசு கிடைக்குமென்று நான் எதிர்பார்க்க வில்லையென்று’ யீட்ஸ் கூறியிருப்பது வேறு விஷயம்.

ஒரு குறிப்பிட்ட கலாசாரத்துடன் பின்னிப் பிணைந்திருக்கும் கவிதை மொழியை வேற்றொரு மொழியில் ஆக்கம் செய்வது என்பது ஒரு பெரிய சவால்தான். பாரதியின் கவிதைகளுக்குத் திருப்திகரமான ஆங்கில மொழிபெயர்ப்பு இது வரை இருப்பதாகத் தெரியவில்லை. கம்பன், வள்ளுவன், பாரதி ஆகிய மூவரும், தமிழ்க் கலாசாரத்துக்கு உரித்தான சொல் ஆளுமையில் நிகரற்றவர்கள். வேற்று மொழியில் அவை உருப் பெறும்போது அது அம்மொழியின் தோல்வியாக முடிந்து விடுகிறது. அதனால்தான், ஏ.கே.ராமாநுஜன், ஆழ்வார்ப் பாடல்களின் கருத்துகளை உள்வாங்கிக்கொண்டு, அவற்றிற்கு ஆங்கில அவதாரம் தந்திருக்காரே தவிர மாறு வேடம் அணிவிக்கவில்லை.

பாரதி உலகளவில் அறியப்படாததற்கு இதுதான் காரணம். தாகூரின் அதிர்ஷ்டம் அவருக்கில்லை.

No comments:

Post a Comment