Saturday, November 5, 2011

கடைசி பக்கம்: மீண்டும் பாரதி

இந்திரா பார்த்தசாரதி



போன ‘கணையாழி’ இதழில் நான் எழுதியிருந்த கட்டுரையை ஒட்டி, ஒரு நண்பர் என்னைக் கேட்டார், நான் தாகூரைவிட பாரதி உயர்ந்த கவிஞராகக் கருதுகின்றேனா என்று. தாகூர் கவிதைகளையும், பாரதி கவிதைகளையும் துலாக் கோல் கொண்டு ஆராய்ந்து இருவரிலே யார் உயர்ந்தவரென்றூ மதிப்பீட்டு முடிவு எதுவும் கூறவில்லை. தாகூருக்கு இருந்த அதிர்ஷ்டம் பாரதிக்கு இல்லையென்றுதான் கூறியிருந்தேன். ஆனால் பாரதியை நான் தமிழில் படிக்கும் போது எனக்கு ஏற்படுகின்ற பரவசமும் நிறைவும் தாகூரை ஆங்கிலத்தில் படிக்கும்போது எனக்கு உண்டாகவில்லை. காரணம், பாரதி மொழி, தமிழ்க் கலாசாரப் பாரம்பரியத்தின் பிரிக்கவொண்ணாத அம்ஸம்.

இதைப் பற்றி எம்.டி. முத்துக்குமாரஸ்வாமியும் குறிப்பிட்டிருக்கிறார்.
‘தேனை மறந்திருக்கும் வண்டும்
ஒளிச் சிறப்பை மறந்து விட்ட பூவும்’
எனும்போது, கம்பனும், சங்கப் புலவர்களும் என் மனக் கண்முன் வந்து போகிறார்கள்.’

ஒளிச் சிறப்பை மறந்து விட்டப் பூவும்’ என்ற வரி என் ரஸனை உணர்வைத் தூண்டிப் பளிச்சென்று விளக்கேற்றி வைப்பது போல், இவ்வரியினை ஆங்கில மொழியாக்கம் செய்துவிட முடியுமா? ‘ஓராயிரம் வருடம் ஓய்ந்து கிடந்த பின்னர் வாராது போல் ‘வந்தவர் மஹாகவி பாரதி என்பதைப் பற்றி எனக்கு எந்தவிதமான சந்தேகமும் இல்லை/ மற்றவர்களிடமிருந்து கேட்டுத் தெரிந்து கொள்ளவும் விரும்பவில்லை. காரணம், நான் வள்ளுவன் படித்தவன், கம்பன் படித்தவன், இளங்கோ படித்தவன். பக்தி இலக்கியங்கள் பற்றியும் தெரியும்.

பாரதியின் ‘குயில் பாட்டு’ ஒன்று போதும், உலக இலக்கியத்தில் அவர் தகுதியை நிலை நிறுத்த. அதைப் படித்து ரஸிக்க நமக்கு இந்திய இலக்கியப் பாரம்பரிய இலக்கியத் தேர்ச்சியோடு மட்டுமல்லாமல், மேலை இலக்கியக் காற்றும், நம் ரஸனைச் சாளரங்களில் வீசிக் கொண்டிருக்க வேண்டும். ‘குயில் பாட்டு’ குறிஞ்சித்திணையில் அமைந்த அகத்துறைக் கவிதை என்பதோடு மட்டுமல்லாமல், சமஸ்கிருத நாவலாகிய (உலக இலக்கியங்களின் முதல் நாவல். எட்டாம் நூற்றாண்டு, ஆசிரியர் பாணபட்டர்) ‘காதம்பரியின்’ பாதிப்பும் உண்டு. ’காதம்பரியில்’ கிளி கதை சொல்லும், பாரதி, குயில் காதல் கதையைச் சொல்வதாகப் பாடுகிறார்...பாரதிக்கு இரு குரல்கள் எப்பொழுதுமே இருந்திருக்கின்றன. ஒன்று, அந்தரங்கக் குரல், இன்னொன்று பகிரங்கக் குரல். இதைத்தான், சங்க காலத்தில், ‘அகம், ‘புறம்’ என்று பிரித்திருக்க வேண்டுமென்று தோன்றுகிறது. புறநானூற்றுக் கபிலரின் குரல் பகிரங்கக் குரல், புறம் பற்றிய பாடல்கள். ‘குறிஞ்சிப் பாட்டு’க் கபிலரின் குரல் அந்தரங்கக் குரல்.,அகம் பற்றிய பாடல்கள். பாரதியின், நாட்டுப் பாடல்கள், சமூகச் சீர்திருத்தப் பாடல்கள் யாவும் அவர் பகிரங்கக் குரல்(புறம்). தனிமை பற்றிய பாடல்கள், வசன கவிதை, குயில்பாட்டு, ஆன்மிகப் பாடல்கள் அவருடைய அந்தரங்கக் குரல்(அகம்).

ஆன்மிகம் அகத்துறை ஆகுமா என்ற கேள்வி எழக்கூடும். ஏன் ஆகக் கூடாது? சங்க அகத்துறை அடிப்படையில்தானே பக்தி இலக்கியங்களில் நாயகநாயகி பாவம்(bridal mysticism) உருவாகியது?

ஐந்து வயதில் இழந்த தம் தாயைத்தாம் பாரதி வாழ்நாள் முழுவதும் தேடியிருக்கிறார். விடுதலை வேட்கை மிகும்போது, அவர் தாய் பாரதமாதா. காதல் மிகும்போது, கண்ணம்மா. பக்திப் பரவசத்தில் பராசக்தி. ‘குயில் பாட்டு’, கோல்ரிட்ஜின் ‘குப்ளாகான்’ போல், ‘பாவலர்க்குப் பட்டைப் பகலில் தோன்றுவதாம் ஒரு நெட்டைக் கனவு.’ ‘In Xanadu did Kublakhan in stately dome decree’என்று ஆரம்பிக்கும் வரிகளை ஷெல்லி படித்த போது ஆழ்ந்த பரவசத்தில் மயக்கமுற்று விழுந்தாராம்.விக்கிராமாதிதன் கதைகள், ‘அரபு இரவு’ கதைகள் போல், கதைக்குள் கதை, கனவுக்குள் கனவு, எது கனவு, எது நிஜம் என்ற தோற்ற, யதார்த்த தத்துவச் சிக்கல்கள்!. சால் பெல்லோவின் நாவல்களைப் பற்றிக் கூறும் போது, ‘wheel within a wheel’என்பார்கள்.தமிழில் தோன்றியிருக்கும் மகத்தான இலக்கியங்களில், ‘குயில் பாட்டு’க்கு ஒரு தனி இடமுண்டு. ‘புல்லை நகையுறுத்திப் பூவை வியப்பாக்கி ‘ என்பதற்கு ஈடான வரிகளைக் கம்ப சித்திரத்தில்தான் என்னால் தேட முடியும். ‘குயில் பாட்டை’ப் பற்றி ஒரு விரிவான ரஸனை அநுபவ நூல் ஒன்று எழுத நான் திட்டமிட்டிருக்கிறேன்.

1 comment:

  1. Yes, it is a reverie indeed. I had to reread it several times to understand the import. Bharathi is so enamored of that kuyi that he names her differently each time---neeli, kuyili, neelakkuyil, karunguyili, cinnakkuyili, etc. . He really gets into loving that kuyil and when he sees the kuyil with the monkey and the bull, he is jealous and calls the kuyil as poykkuyil, neecakkuyil, kuttippisaasakkuyil, etc., He swings a sword at the monkey and the bull unable to bear the supposed rivals. This is at once a classic poem as well as a novel. If it were written today it is a sure bet for a SAhitya Academy Award winner.

    ReplyDelete