
ஈரோடு தமிழன்பன்
எந்தக் கவிதையும்
இந்தப் பகலில் கனவுகாண முடியாது
வார்த்தைகளின்
வெப்ப தட்ப நிலைகளைப் பொருத்தமாகப்
பராமரிக்க முடியவில்லை;
குளிரூட்டும் யாப்பு உறுப்பு எதையும்
யாப்பிலக்கணக்காரன்
கண்டுபிடித்துத் தரமுடியவில்லை
அர்த்தம் ஆவியாகப் போய்விடாமல்
பாதுகாப்பதற்குக் கவிஞனாலும் வழிசொல்ல
முடியவில்லை.
இன்று பகல் உணவுக்கு உன் வீட்டுக்கு
நீ சொன்னபடி வரமுடியவில்லை நண்பனே!
பகலை எழுத எழுதக்
காலம் கூடத் தனது கையைச்
சுட்டுக் கொள்கிறது
மரத்தின் அடியிலிருந்து வெளியே வர
அஞ்சுகிறது நிழல்
பறவைக் கூடுகள் சட்டிகளாக அவற்றுள்
வெயில்
வெள்ளைக் கிழங்குகளை வேகவைக்கிறது
இரவின் தூதர்கள் கைது செய்யப்பட்டும்
பூடகக் கவிதைகளுக்குள்ளும்
கடவுள் தரகர்களின் உதடுகளுக்குள்
ஒடுங்கியிருக்கும் உச்சாடனங்களிலும்
அடைக்கப்பட்டனர்.
எங்கிருந்து எதிர்ப்புக் கிளம்பும் என்று
வெப்பத் துப்பாக்கிகளோடு
வேவு பார்த்துக் கொண்டிருக்கிறது பகலின்
உளவுப் படை
இன்று பகல் உணவுக்கு உன்வீட்டுக்கு
நீ சொன்னபடி வரமுடியவில்லை நண்பனே!
பகல் தாள்களில்
பதிப்பிக்கப்பட்டிருக்கும் கோடை உத்தரவுகளால்
பச்சை உடைகள் களையப்பட்டுப்
பரிசோதிக்கப் படுகின்றன வனங்கள், காடுகள்,
மலைச்சரிவுகள்
கிணறு குளங்களின் திரவ வாழ்க்கை மீது
விசாரணைகள் நடத்தப்படுகின்றன
கருத்த காகங்கள் மேலும் கரித்து
கரைதல் தடைசெய்யப்பட்ட அச்சத்தில்,
உடைய இருக்கும் கிளைகள் மீது
உட்காருவதும் எழுவதுமாய் உள்ளன.
ஈரம் பறிமுதல் செய்யப்பட்ட
உரையாடல்களின் விக்கல்களுக்குள்
புழுங்கிப் புதைகின்றனர் மக்கள்
நதிகளின் ஓடைகளின் ஏரிகளின்
வெறுமைகளுக்குள் இருந்து மனிதர்களை
விழுங்க
ஒரு பெரிய சமாதியாக வாய்திறக்கிறது
பகல்
ஒருவேளை அங்கு நாம் பார்த்துக் கொள்ளலாம்
இன்று பகல் உணவுக்கு உன்வீட்டுக்கு
நீ சொன்னபடி வரமுடியவில்லை நண்பனே!
No comments:
Post a Comment